திற – குறும்படம்

Vinkmag ad

திற – குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி..

2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம்
வெளிவந்திருக்கிறது. மதக்
கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும்,
அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது
இக்குறும்படம். சதக் ஹசன் மண்ட்டோ என்பவரின் ஹோல்டோ என்னும் சிறுகதையை
அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினையின் போது
நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. அதை குஜராத்
கலவரக் களத்தோடு பொருத்திப் படமாக்கியிருக்கிறார் பிரின்ஸ் என்னாரெசு
பெரியார். இவர் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்.

முகாமில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறார் பெரியவர் சிராஜுதின்.
நடந்து முடிந்த கலவரத்தில் மனைவி யாஸ்மின் இறந்ததும், 18 வயது மகள்
சஹீனாவையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவளை இழுத்துக் கொண்டு
ஓடியதும், வழியில் கருகிக்கிடந்த உடலின் மீது தடுக்கி விழுந்து தான்
மயங்கிப்போனதும் நினைவுக்கு வர, மகளின் பெயரைச் சொல்லிப் புலம்பியபடியே
தேடியலைகிறார். பெயர்ப் பட்டியலில் மகளுடைய பெயர் இல்லை.

அவர் இருக்கின்ற முகாமிற்கு, சில இளைஞர்கள் வேனில் பொருள்களைக் கொண்டுவந்து
இறக்குகிறார்கள். அவர்களிடம் போய், தன் மகளைக் கண்டுபிடித்துத் தரும்படிக்
கெஞ்சிக் கேட்கிறார். சீருடையில் இருக்கும் அந்த இளைஞர்கள் தங்களை பாரத்
சேவக் சங்கத்தின் சேவகர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். தாங்கள்
போகின்ற இடங்களில் அவருடைய மகளைப் பார்த்தால் அவரிடம் கொண்டுவந்து
ஒப்படைப்பதாகச் சொல்லிச் செல்கின்றனர்.
போகிற வழியில் அந்தப் பெண்ணைக்
கண்டு அவளுடைய தந்தை சொன்ன செய்திகளைச் சொல்லி, அவரிடம் அழைத்துப் போகிறோம்
என்று கூறி வேனில் ஏற்றிக் கொள்கின்றனர். இதற்கிடையில் ஒவ்வொரு முகாமாகச்
சென்று மகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் சிராஜுதீன்.

அப்படி ஒரு
முகாமில் அவர் தேடிக்கொண்டிருக்கின்ற வேளையில் அங்கே வரும் அந்த சேவகர்கள்
இன்னும் அவருடைய மகள் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை
வேனில் இருந்து இறக்கிவிடாமல் அப்படியே சென்றுவிடுகின்றனர்.

தேடித்தேடிச் சோர்ந்து போகும் முதியவர் சிராஜுதின், சிலர் ஒரு பெண்ணை,
முகாம் மருத்துவமனைக் கட்டிடத்திற்குத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்து
தன் மகளாக இருக்குமோ என்று பதைத்து ஓடுகிறார். அங்கே இங்கே
தேடியலைந்ததற்குப் பிறகு ஒரு அறையில் பலகையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும்
மகளைப் பார்க்கிறார். அவள் சுயநினைவு இன்றி உடலெங்கும் இரத்தக்
காயங்களுடன் கிடப்பதைக் கண்டு சஹீனா…சஹீனா என்று கதறித்துடிக்கிறார்.
அவருடைய அழுகைச்சத்தம் கேட்டு அங்கு வரும் மருத்துவர் அவளுக்குச் சுத்தமான
நல்ல காற்று தேவைப்படுகிறது, எனவே மூடியிருக்கின்ற அந்த சன்னலைத் திறங்கள்
என்று சொல்கிறார். மருத்துவர் சொன்னது காதில் விழாமல் அப்படியே மகளைப்
பார்த்துப் புலம்பிக்கொண்டிருக்கும் சிராஜுதினைப் பார்த்துக் கோபமாகவும்
சத்தமாகவும் திற என்று மீண்டும் சொல்கிறார்.

அந்த சொல்லைக்
கேட்ட அடுத்த நொடி அந்தப் பெண்ணிடம் ஒரு அசைவு தெரிகிறது. சுயநினைவில்லாமல்
கிடக்கும் நிலையிலும், அவளது கைகள் மட்டும் சுடிதாரின் மேல்சட்டையை மேலே
சுருட்டி, கால் சட்டையின் நாடாவை அவிழ்க்கத் தொடங்குகின்றது. அவளை வேனில்
ஏற்றிச் சென்ற சேவகர்கள் திற திற என்று சொல்லி அவளை அடித்து உதைத்து
கற்பழித்த காட்சிகள் அவளின் ஆழ்மன நினைவில் வந்து வந்து போகின்றன. கைகள்
தன்னிச்சையாக நாடாவை அவிழ்க்கத் தொடங்குகிறது. மருத்துவர் அதிர்ச்சியில்
உறைந்து போய் நிற்கிறார். திரையில் எழுத்துகள் ஓடத் தொடங்குகின்றன,
பின்னணியில் ஒலிக்கிறது ஒரு கூச்சல்,
இது எங்கள் இந்துஸ்தான், முஸ்லீமே பாகிஸ்தானுக்குப் போ
மதவெறியின் கோரமுகத்தை வசனங்களால்கூட அல்ல காட்சிகளாலேயே பதிவு
செய்திருக்கிறார் இயக்குனர்.

சிராஜுதீன் பாதுகாத்து வைத்திருக்கும் துப்பட்டாவும் ஒரு பாத்திரமாகவே
இறுதிவரை வருகிறது. சிராஜுதீனாக நடித்திருக்கும் பெரியவர் சதாசிவம் அந்தக்
கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தகப்பன்களின் பரிதவிப்பை அப்படியே
பிரதிபலிக்கிறார். உயிரோட்டமான நடிப்பு. இயக்குனர் உள்பட இதில்
பணியாற்றியவர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்கள்.
வன்முறைகளும், கலவரங்களும் எப்போதும் பெண்களைத்தான் மிக அதிகமாகக்
காயப்படுத்தி வந்திருக்கின்றன.

“திற” குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி..

-KeelThisaikkatru

(via -Abbas Al Azadi)

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DYlghGxHtLw

News

Read Previous

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

Read Next

பாங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *