திரு.வி.க. கண்டுபிடித்த “தோழர்’

Vinkmag ad

By க. வெங்கடராமன்

 

சென்னையில் ஆங்கிலேயர்களுக்காவே நிறுவப்பட்ட, பல்பொருள் அங்காடி “ஸ்பென்சர்’ அலுவலகத்தில் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் பணிபுரிந்தபோது, லண்டனில் பிரிட்டீஷ் தொழிற்கட்சியை தோற்றவித்த “கீர்ஹார்டி’ ஸ்பென்சர் வரும்போது அவருடன் பழகும் வாய்ப்பும், அவரின் கருத்துக்களை கேட்டபின், சமூகம் எனும் ஆலமரத்தின் ஆணிவேரான தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு, தான் பாடுபட வேண்டும் என்கிற எண்ணமும் எழுந்தது.

27.4.1918இல், பாரத நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தொழிற்சங்க இயக்கமான “சென்னை தொழிலாளர் யூனியன்’ வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உறுதுணையாக, ஊன்றுகோலாக உதவியவர். அதன் தலைவராக தொடர்ந்து 12 ஆண்டுகள் திகழ்ந்தவர். பல்வேறு வகையான போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தரவே, அறவழியில் நடத்தியவர்.

சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட “பார்சி’ சமூகத்தைச் சார்ந்த, பொம்மன்ஜி பெசட்டன்ஜி வாடியா, மனிதாபிமானமிக்க மாமனிதர்; அன்னிபெசன்ட் அம்மையாரை தலைவராக ஏற்றவர். “நியூ இந்தியா’ ஆங்கில இதழுக்கு ஆசிரியர். இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் தொழிலாளர் இயக்கத்தின் அழைப்பின்பேரில் சென்று, அங்குள்ள தலைவர்களுக்கு இந்தியாவிலுள்ள, குறிப்பாக சென்னை ஆலைத் தொழிலாளர்களின் அவல நிலைகளை எடுத்துக் கூறி, அவர்கள் வாயிலாக பிரிட்டீஷ் அரசை உணரச் செய்தவர்.

சென்னை திரும்பியதும், அவருக்கு உற்சாக வரவேற்பை சங்கம் நடத்தியது. திரளாக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வாடியாவின் ஆங்கில உரையை, திரு.வி.க. மொழி பெயர்த்தார். வாடியா “காம்ரேட்ஸ்’ என்று தொடங்கியதும், திரு.வி.க. அதனை “தோழர்களே’ என மொழி பெயர்த்தார். தொழிலாளர்களின் கரவொளி, விண்ணை முட்டியது. அந்த நிமிடத்திலிருந்து காம்ரேட் என்பதற்கு தோழர் என்ற சொல் வழக்கில் வந்தது.

ஆலை நிர்வாகம், தொழிலாளர்களின் தொடர் அணிவகுப்புகளையும், ஆர்பாட்டங்களையும் அடக்கவும், ஒடுக்கவும், பெண்களை வேலையில் அமர்ந்த முடிவு செய்தது. இனி பிரச்னைகள் ஏற்படாது. ஏனெனில் பெண்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று எண்ணி ஏமாந்தது. பெண்கள் பல போராட்டங்களில் முன்னின்று முழங்கினர். வேலை நிறுத்தங்களிலும் பங்கு கொண்டனர். 1.7.1926இல் இனி பெண்களுக்கு இடமில்லை என வேலையிலிருந்து நீக்கியது.

சங்கத்தை கலக்காமல், தன்னிச்சையாக செயல்பட்ட நிர்வாகத்திற்கு திரு.வி.க கண்டனம் தெரிவித்ததோடு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய தள்ளப்படுகிறார்கள் என்று எச்சரித்தார். அரசாங்கம் ஆலை அதிபர்களை அழைத்து, ஆணையே திரும்பப்பெறச் செய்ததுடன், தொழிலாளர்களின் பிரச்னைகளை சுமூகமாக தீர்க்க நிர்பந்தித்தது.

அவ்வப்போது, சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலை தூக்கின. நிர்வாகத்தில் இருந்தவர்கள் மாறும்போது, சிக்கல்களும் தொடர்ந்தன. இதனால், சங்கம், 9.6.1947 முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், திரு.வி.க.வை வீட்டுக் காவலில் வைத்து கண்காணிக்கச் செய்தார்.

விடுதலை வேள்வியில் பங்குபெற்ற தியாகிகள், ஓமந்தூராரை சந்தித்து, திரு.வி.க. அவர்களை வெளியில் விட கோரினர். தேசிய சிந்தனையாளர்களும், பத்திரிகையாளர்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். 10.8.1947இல் திரு.வி.க. விடுவிக்கப்பட்டார். ஓமந்தூரார், ஆலை நிர்வாகத்தினரை அழைத்து கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, உடனே அமல் படுத்தவும் செய்தார்.

பெரியார், திரு.வி.க.விடம் பேரன்பு பூண்டவர். ஐயா என்றே மரியாதையுடன் அழைப்பார். திரு.வி.க. ஈரோட்டில் நடைபெறும் வள்ளலார் விழாவிற்கு வருவதை அறிந்து, தனது சுற்றுப்பிரயாணத்தை ரத்து செய்து, ரயில் நிலையம் சென்று, வரவேற்று, அவரை அழைக்க வந்த விழா குழுவினரிடம், தான் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும், குறித்த நேரத்தில் மண்டபத்திற்கு அழைத்து வருவதாகவும்

கூறினார்.

திரு.வி.க.வுக்கு தனது மேற்பார்வையில் சைவ சமையல் செய்யச் செய்து, முன்னின்று பரிமாறி, ஓய்வுக்குப்பின், உறங்கும் வரை காத்திருந்து, காலை எழுந்ததும், குளிக்க சுடுநீர் தயாரித்து கொடுத்தார். சிற்றுண்டிக்குப் பிறகு, அவரை மண்டபத்திற்கு கொண்டுவிட்டு, அங்குள்ளோரின் விருப்பத்திற்கு இணங்க சிறிது நேரம், அமர்ந்து சென்றாராம். பெரியாரின் பண்பு போற்றத்தக்கதாகும்.

திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்திற்கு அறவழி முறைகளையும், நல்ல நெறிகளையும் வகுத்துக் கொடுத்தவர். தொழிலாளர்கள் இதயத்தில் ஒழுக்கத்தை விதைத்தவர். வள்ளலாரின் ஒருமைப்பாட்டு உணர்வையும் அண்ணல் காந்தியடிகளின் சிந்தாந்தத்தையும் மக்கள் மனதில் பதித்தவர். தனது எழுபதாவது வயதில் அமரத்துவம் அடைந்தாலும், மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார்; என்றும் நிற்பார்.

News

Read Previous

ராகு காலத்தில் நம்பிக்கையற்ற பெண் அமைச்சர்

Read Next

முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் பெயரில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசு

Leave a Reply

Your email address will not be published.