திருவள்ளுவர் யார்?

Vinkmag ad
திருவள்ளுவர் யார்?
மா.மாரிராஜன்.
 
திருவள்ளுவர் யார்? தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக வந்திருக்கும் மிகச்சிறந்த நூலாகும். நூலின் ஆசிரியரும் மிகச்சிறந்த திறனாய்வு அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆய்வு நூல் என்றால் என்ன என்ற ஒரு வரையறையும் உள்ளது. நூலின் ஆசிரியர் சுயசார்பற்றவராக இருத்தல் வேண்டும். ஒரு வேளை சுயசார்பு இருந்தால்… அந்த சார்புக்கான குறைந்தபட்ச சான்றுகள் தரவேண்டும். இவ்விரண்டும் இல்லை என்றால் ஆய்வு நூல் என்பது பிரச்சார நூல் ஆகிவிடும்.
எனது பார்வையில் இந்நூல் ஒரு  பிரச்சார நூலாகவேத் தெரிகிறது. காரணம்… எனக்கும் ஒரு சுயசார்பு உண்டு. அந்த சார்பும் வள்ளுவர் கொடுத்ததே. திருவள்ளுவமாலையில் காணப்படும் இப்பாடல்தான் எனது சார்பு.
“ஒன்றே பொருளெனின் வேறென்பார் வேறெனினன்றென்பார் அறு சமயத்தார். நன்றென எப்பாலவரும் இயையவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி”
ஆறு வகை சமயத்தைச் சேர்ந்தவர்களும், ஒருவர் திருக்குறளைத் தனது சமயம் என்றால் மற்றொருவர், இல்லை இது எனது சமயம் என வாதிடுவார். ஆனால், அனைத்து சமயத்தினரும் நன்று என ஏற்றுக்கொள்ளும்படி முப்பாலையும் வள்ளுவர் எழுதினார். அதாவது திருக்குறளுக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் உரிமை கோரலாம். அனைத்து மதத்திற்கும் பொதுவான ஒன்றையே வள்ளுவர் எழுதியுள்ளார்.
திருக்குறள் ஒரு வேத சாஸ்திர நூலே என்று ஒருவர் எழுதினால், மறுப்போம். குறளும் கீதையும் என்று ஒருவர் வந்தால், எதிர்ப்போம். கிறித்துவ திருக்குறள், சமணத் தத்துவம், பௌத்த மார்க்கம் என்று வந்தாலும் விமர்சிப்போம். விமர்சனத்திற்குரிய சான்றுகளை வேறு எங்கும் தேடத்தேவையில்லை. திருக்குறள் பாடலே போதும்.. சுருக்கமாய் கூறினால்… குறள் மதச்சார்பற்றது. மானிட சமுதாயத்திற்கானது.
இந்த சுயசார்புடைய நிலையில்தான், இந்நூலை வாசித்தேன்.
அதற்கு முன்பாக, ஐயா அயோத்திதாசர் பண்டிதரின் முற்போக்கு சிந்தனை, தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டுகள், திருக்குறள்மேல் அவருக்கிருந்த அபிமானம் போற்றுதலுக்குரியது. தமிழ்ச் சமூகம் ஐயாவிற்கு நீண்டதொரு கடன் பட்டுள்ளது.
எல்லிஸ் அவர்கள் வியத்தகு மனிதர். தமிழ் மொழியை நேசித்து, சுவடிகளைத் திரட்டி, திருக்குறளைப் பதிப்பித்து,  இவரது ஒவ்வொரு செயலும் பரவசமானவை. இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 1819 ல் எல்லிஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.  அவர் சேகரித்த ஓலைச்சுவடிகள் அவரது அறையில் மலைபோல் குவிந்திருந்தன. அச்சுவடிகளை என்ன செய்வது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவில்லை.  அச்சுவடிகளை ஏலம் விட்டார்கள். ஏலம் எடுப்பார் யாருமில்லை. பிறகு… வெந்நீர் போடுவதற்கு அச்சுவடிகள் எரிபொருளாய் பயன்பட்டன. அனைத்து ஆங்கிலேயர்களும் எல்லிஸ் அல்ல.
இனி நூலின் பார்வை… ‘திருவள்ளுவர் யார்’ என்று தலைப்பில் கேள்விக்குறியிடாமல் இலக்கணப் பிழையுடன் ஆரம்பமாகிறது. முதல் பகுதியில் திருக்குறள் நூல் பதிப்பு பற்றிய விபரங்கள், முரண்களைப் பட்டியலிட்டு, ஒரு சில சர்ச்சைக்குரிய கேள்விகளுக்குச் சாமர்த்தியமாய் பதில் கொடுத்துக் கடக்கிறார். ஞானபிரகாசனார் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட முதல் நூலான திருக்குறளுக்கும் எல்லிஸ் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என்ற எனது தேடலுக்கு இந்நூலில் பதில் இல்லை. அக்கால வழக்கப்படி அச்சகத்தாரின் பெயர் முன்னிலை வகிப்பதால் எல்லிஸின் பெயர் விடுபட்டு இருக்கலாம் எனத்தோன்றுகிறது. இந்தப் பதில் எனக்குச் சற்று நெருடலே.
திருக்குறள்.. திரிகுறள்.. எது சரி..?   என்னும் தலைப்பில் திரிகுறளே சரி என்னும் பௌத்த சாரத்தைப் பண்டிதர் அவர்களின் எழுத்துகளிலேயே மேற்கோள் காட்டுகிறார். ஆனால், பண்டிதரின் பாட்டனார் கொடுத்த ஓலைச்சுவடியை முதன் முதன்முதலில் ஆங்கிலத்தில் பதித்த எல்லிஸ் அவர்கள் திருக்குறள் என்றே பதிவிடுகிறார். எல்லிஸ் அவர்கள் வெட்டிய கல்வெட்டிலும் திருக்குறள் என்றே கூறுகிறார். கந்தப்பனார் கொடுத்த சுவடியில் திருக்குறள் என்றே இருந்ததால், அதேபெயரில் எல்லிஸ் வெளியிடுகிறார்.  ஆக, பண்டிதர் அவர்கள் திருக்குறளைத் தனது சார்புக்காக திரிக்குறளாக உருவகப்படுத்துகிறார்.
அடுத்த பகுதியில் திருவள்ளுவர் பற்றிய புனைவுக் கதைகள் பற்றிய தொகுப்பு. காலகாலமாய் கூறப்படும் கதைகள்தான்.  இக்கதைகள் ஒரு வித தாக்கத்தை எப்போதும் ஏற்படுத்தவில்லை என்பது எனது பார்வை. அக்காலத்தில் ஏற்பட்டிருக்கலாமோ? என்றாலும் இக்காலத்தில் இக்கதைகளால் யாதொரு தாக்கமும் இல்லை. இவை கதைகள்தான்.  ஆனாலும் வைதீகத்தில் வள்ளுவர் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகப் பண்டிதர் மேற்கொண்ட போராட்டங்கள், அவரது எழுத்துக்கள் அவசியம் போற்றுதலுக்குரியது.
இனிதான்… நூலின் மையப்பகுதி… மிக முக்கியமான பகுதி…
திருவள்ளுவர் இயற்றியதாகக் கூறப்படும் பல நூல்களின் பட்டியல் நம்மிடையே உள்ளன. ஞானவெட்டியான், பஞ்சரத்தினம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, இன்னும் ஒரு சில நூல்களைத் திருவள்ளுவர் என்னும் பெயரில் இயற்றப்பட்டுள்ளது. இதில் ஞானவெட்டியான் என்னும் நூலை மட்டும் குறிப்பிட்டு இந்நூலைத் திருவள்ளுவர் எழுதவில்லை என்கிறார் பண்டிதர். இருவரும் ஒருவரே என்னும் மயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கருத்தை மறுக்கிறார் பண்டிதர். இம்மறுப்பு சரிதான். நியாயமானதுதான்.
அதேபோல், கச்சனெனுங் கூர்வேல் வழுதி என்னும் அரசனுக்கும் உபகேசி என்னும் அரசிக்கும் பிறந்தவரே இளவரசன் வள்ளுவர் என்ற பண்டிதரின் கூற்று மிகுந்த ஆய்வுக்குரியது. இதற்காக நல்லூர் வேள்வியார் எழுதிய சாற்றுக்கவிப் பாடல் ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது. பிறகு, திரிக்குறள் சாற்றுக்கவி ஒன்று. அதன் பிறகு மிக மிக முக்கியமான சான்றான பஞ்சரத்தினப்பா.  இது சுவடியாக இல்லை. அச்சு நூலாக இல்லை. வீரராகவப்பெருமாள் கோவிலில் கல்வெட்டாக இருந்தது.பிறகு … அழிக்கப்பட்டது என்கிறார். முத்துக்குமாரசுவாமி என்னும் ஒரு ஜோதிடர் பாடிக்காட்டிய பாடலை பதிவு செய்கிறார் பண்டிதர். இப்பாடல்தான் மிக முக்கிய சான்றா? அதாவது ஒரு செவி வழிப் பாடல் ஒன்றைச் சான்றாக ஏற்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
புத்தரை ஏற்று மெய்ஞானத்தை மட்டும் சிந்தித்து தன்மபீடம்சூத்திரபீடம்வினையபீடம்புனித மையத்தினை உணர்ந்த உமது முப்பால் என்னும் திருக்குறளை கற்று உணர்ந்தவர் உள்ளத்தின் குற்றங்களைக் கலைந்து  கமல நாயகனான புத்தரின் பாதங்களைக் கண்டடைவார்கள். அதனால் காட்சியினை பெறுவார்கள். அத்தகைய வழிநூல் காட்டிய வள்ளுவ நாயனார் தமது திருக்குறளை நிலை பெறச்செய்த இடம் திருவள்ளூர்.
அம்மாடி! திருக்குறளில் இவ்வளவு இருக்கா? அதாவது, திருவள்ளுவர் ஒரு பௌத்த ஞானி. பௌத்த போதனைகள்தான் குறளா? என்று யோசித்தால்; அடுத்த பகுதியில் அதுவும் இல்லை என்றாகிறது. திருக்குறள் ஒரு தனி மதம் என்கிறார் பண்டிதர். இதை வலியுறுத்தி ஆசிரியரின் விளக்க உரை. அதாவது,  திரிபிடகத்தைப் புத்த தன்ம மென்றும் திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றே கூறத்தகும்.
இந்நூலின் மையத்தைச் சுருக்கமாகக் கூறுவது என்றால்;  திருவள்ளுவர் ஒரு இளவரசர். அரச வாழ்வைத் துறந்து பௌத்த தத்துவங்களை கற்று திரிக்குறளை எழுதுகிறார். இதுதான் கட்டுக்கதைகளைக் கட்டுடைத்ததின் தீர்வு!
இந்நூலில் முழுக்கமுழுக்க என்ன இருக்கிறது என்று பார்த்தால்;  அயோத்திதாச பண்டிதரின் கட்டுரைகளின் தொகுப்பை மறுபதிப்பு செய்துள்ளனர். திருவள்ளுவமாலை முதலியக் கதைகளின் தொகுப்பையும் பதிப்பித்துள்ளனர்.
பண்டிதரின் பிரச்சார நூல்தான்….திருவள்ளுவர் யார்.

News

Read Previous

டாக்டர் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்

Read Next

துடியன்ன இமைகள் காட்டுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *