திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

Vinkmag ad

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)

4

 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 )
மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு.
நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால் சூடாக்க அல்லது உருக்க உருக்கத்,  தேவையில்லாப் பொருள்கள் அகற்றப்படுகின்றன. கழிவுகள் நீங்கியதும் தங்கம் ஒளி விடுகிறது.
இவ்வாறு பொன்னைச் சுட்டு அணிகலன்கள் செய்து தருவதைச்  சங்க இலக்கியம்,
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்       
(மதுரைக் காஞ்சி 512)
எனக் கூறுகிறது.
இவ்வாறு தங்கத்தை நெருப்பிலிட, நெருப்பிலிட அதன் ஒளி மிகுதியாகிறது என்னும் உண்மையை மக்கள் நன்கறிந்துள்ளனர். எனவேதான் திருமணத்தை முன்னிட்டு மணமகளுக்குத் தாலி செய்வதற்காக மணமகன் வீட்டார் பொற்கொல்லரிடம்  தங்கம் தருவதைத் தங்கத்தை உருக்கும் சிறப்பு நிகழ்வாக நடத்துகின்றனர். இவ்வாறு மக்கள் நெருப்பிற்கும் தங்கத்திற்கும் உள்ள அறிவியல் தொடர்ப நன்கு அறிந்துள்ளமையால் திருவள்ளுவர் அதனை உவமையாகக் கொண்டு ஓர் உண்மையை விளக்குகிறார்.
நாம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளப் பொறுத்துக் கொள்ள சுடச்சுட ஒளிரும் பொன்போல் ஒளிவீசலாம் என்கிறார்.
திருவள்ளுவர் ‘தவம்’ என்னும் அதிகாரத்தில் இதனைக் கூறுவதால் தவத்தோர்க்கு மட்டும் இது பொருந்தும் எனத் தவறாக எண்ணக் கூடாது. அனைவருக்குமே பொருந்தும். துன்பம் வர, வர அஞ்சாது எதிர்கொண்டால் வாழ்வில் பொன்போல் ஒளிவிடலாம் என்று நாம் உணரவேண்டும்.
நெருப்பு அறிவியலும் மாழை(உலோக) அறிவியலும் உணர்த்தும் அறிவியல் செய்தியைப் பயன்படுத்தித் திருவள்ளுவர் நமக்குத் துன்பத்தைத் தாங்கும்  ஆற்றலுடன் திகழ அறிவுறுத்தும் சிறப்பைப் பின்பற்றுவோமாக!
மக்களுக்கு எதிரான ஆள்வோரின், ஊழல்வாதிகளின் துன்புறுத்தும் செயல்களையும் நாம் இப்படித்தான் பொறுத்துக் கொள்கிறோமோ?!

இலக்குவனார் திருவள்ளுவன்

News

Read Previous

நண்பனா? எதிரியா?

Read Next

புல்வெளியில் ஒரு புது வசந்தம்

Leave a Reply

Your email address will not be published.