திப்பு சுல்தானும் ராக்கெட் போரும்

Vinkmag ad

அறிவியல் கதிர்
                                                                                                           திப்பு சுல்தானும் ராக்கெட் போரும்
                                                                                      பேராசிரியர் கே. ராஜு
     திப்பு சுல்தான் பற்றி நாட்டில் ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழலில், அவர் ஆங்கிலேயருடன் நடத்திய போர் முறை பற்றிய சில விஷயங்களை நினைவுகூற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கையாண்டதில் உலகுக்கே முன்னோடிகளாக விளங்கினர் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. மைசூரில் நடந்த போர்களில் ஆங்கிலேயருக்கு எதிராக அவர்கள் ராக்கெட்டுகளை ஏவி போரிட்டனர். இது போகிற போக்கில் அள்ளிவிடப்படுகிற செவிவழிக் கதைகளுள் ஒன்றல்ல. இந்திய விமானத் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான ரோடாம் நரசிம்மா 1985 ஆம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான அறிக்கையின் அடிப்படையில் வெளிவரும் உண்மை இது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் திப்பு சுல்தான் ஒரு முன்னோடியாக விளங்கியதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பதிவு செய்து வைத்திருக்கிறது. இதை மேதகு அப்துல் கலாம் அவர்கள் கூட தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
“மைசூரிலும் பிரிட்டனிலும் ராக்கெட்டுகள் – 1750லிருந்து 1850 வரை” என்பதுதான் 1985ஆம் ஆண்டு ரோடாம் நரசிம்மா சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் தலைப்பு. வெடிமருந்து கண்டுபிடிப்பையும் 11வது நூற்றாண்டில் சீனாவில் ராக்கெட்டுகள், நெருப்பு அம்புகள் பயன்படுத்தப்பட்டதையும் அவை பின்னர் இந்தியா உட்பட பிற நாடுகளுக்குப் பரவியதையும் ரோடாம் அதில் விவரிக்கிறார்.  மங்கோலியர்களுக்கெதிராக சீனர்கள் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினர். மங்கோலியர்கள் பதிலுக்கு சீனர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் எதிராக 13வது, 14வது நூற்றாண்டுகளில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினர். 13வது நூற்றாண்டில் பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை கூடுதல் திறன் உள்ளவையாக இருந்ததால், ராக்கெட்டுகளின் பயன்பாடு குறைந்தது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பயன்படுத்திய ராக்கெட்டுகளை ஆராய்ந்த ரோடாம், அன்று வழக்கத்தில் இருந்த மூங்கில் அல்லது காகித உறைகளுக்குப் பதிலாக அவர்கள் ராக்கெட்டுகளுக்கு உலோக உறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். உலோக உறை கொண்ட ராக்கெட்டுகள் இரண்டு கி.மீ. தூரம் வரை செல்லக்கூடியவையாக இருந்தன. இதற்கு முன்னர் இருந்த ராக்கெட்டுகள் இதைவிடக் குறைவான தூரமே சென்றன. பளுவை ஏற்றிச் செல்லும் திறனும் முன்பைவிட அதிகம். சண்டைக் கத்தியை இந்த ராக்கெட்டில் கட்டி அனுப்பி அவர்களால் எதிரியைத் தாக்க முடிந்தது. இதே கத்திகளை போர்முனையில் ஆங்கிலேய சிப்பாய்களுக்கெதிராக நேரடியாகவும் அவர்களால் பயன்படுத்த முடிந்தது. காலாட்படை, குதிரைப் படை வீரர்களுக்கெதிராகப் பயன்படுத்த இந்த ராக்கெட்டுகள் மிகவும் ஏற்றவையாக இருந்தன. திப்புவிடம் இந்த ராக்கெட்டுகள் ஏராளமாக இருந்தன. 1780ஆம் ஆண்டு பொல்லியூரில்  ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போரில் திப்புவுக்கு வெற்றியை அவை ஈட்டித் தந்தன. ஆனால் நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு கொல்லப்பட்டார். அந்தப் போரில் உபயோகப்படுத்தப்படாத ஏராளமான ராக்கெட்டுகளை ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு உல்விச் ஆயுத உற்பத்திச்சாலையில் சோதனைக்கூடத் தலைவராக இருந்த வில்லியம் காங்கிரேவ் ஐரோப்பிய ராக்கெட்டுகளை விட மைசூர் ராக்கெட்டுகள் அதிக தூரம் செல்லக் கூடியவை என அறிந்தார். அந்த தொழில்நுட்பத்தை  ஆராய்ந்த காங்கிரேவ் அவற்றை மேலும் செழுமைப்படுத்தி, நெப்போலியனோடு நடந்த போர்களிலும் அமெரிக்கர்களோடு நடந்த போர்களிலும் பயன்படுத்தி வெற்றிக்குத் துணைபுரிந்தார். சீரங்கப் பட்டணத்திலிருந்து கைப்பற்றப்பட்ட  ராக்கெட்டுகளில் இரண்டு உல்விச் ராயல் ஆர்ட்டில்லரி மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இன்றும் அவற்றைக் காணலாம். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைத்தே காங்கிரேவினால் திப்புவின் ராக்கெட்டுகளை மேம்படுத்த முடிந்தது. இந்தியாவில் அந்நாட்களில் அத்தகைய தொழில்நுட்பம் இல்லை. இஸ்ரோ நிறுவப்படும் வரை இந்தியா அந்தத் தொழில்நுட்பத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
பண்டைக்கால அறிவியலை ஆய்வுக்கு எப்படி உட்படுத்த வேண்டும் என்பதை ரோடாமின் ஆய்வு நமக்கு எடுத்துச் சொல்கிறது.
                      (உதவிய கட்டுரை : பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பிரபிர் புர்காயஸ்தா எழுதியது)

News

Read Previous

தேரிருவேலியில் மீலாது விழா

Read Next

மகாகவி பாரதியின் 134வது பிறந்ததின கவிதைப்போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *