திண்டுக்கல் செக்கு கல்வெட்டு

Vinkmag ad

திண்டுக்கல் அருகே 10-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு 

http://www.maalaimalar.com/News/State/2017/02/27112255/1070680/Pandya-10thcentury-invention-of-period-inscription.vpf

திண்டுக்கல் அருகில் உள்ள சித்தரேவு பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால எண்ணை செக்கு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தரேவு அருகே வடமேற்கில் 5 கி.மீ தொலைவில் ஓவா மலை உள்ளது. இங்கு போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உதயகுமார், பாண்டீஸ்வரன், ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று செக்கு உரலில் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த செக்கு உரல் கல்வெட்டில் வட்டெழுத்துகள் தமிழ் மொழியாக மாறிய நிலையில் எழுத்து பொறிப்புகள் காணப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர் சாந்தலிங்கம் தெரிவிக்கையில்,

ஓவா மலையில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி. 910-ம் நூற்றாண்டைச் சேரந்த எண்ணை செக்கு உரலில் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது அறியப்பட்டுள்ளது. இதனை வெண்பி நாட்டின் குறண்டி எனும் ஊரைச் சேர்ந்த சோமன் அருளன் உருவாக்கியதாக வெட்டப்பட்டுள்ளது.

குறண்டி என்பது மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டில் ஆவியூருக்கு அருகில் இருக்கும் ஊராகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க பராந்கபர்வதம் என்னும் மலையில் ஸ்ரீவல்லம் பெரும்பள்ளி, திருக்காட்டாம்பள்ளி என்ற பெயர்களில் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது.

பாண்டியர் காலத்தில் மாராயன் என்பது அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் பட்டமாகும். அந்த வகையில் இந்த கல்வெட்டில் மாராயன் என்ற அதிகாரிக்கு இந்த செக்கு மூலமாக எண்ணை வழங்க வேண்டாம் என்று யாரேனும் சொன்னால் அவர்கள் பாவத்திற்கு உட்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டதற்கான எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பகுதியில் மக்கள் அரசு நிர்வாகத்துடன் வாழ்ந்துள்ளதையும், அரசு அதிகாரிகளுக்கு கொடைகள் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பாதுகாப்பு இல்லாத இந்த வட்டெழுத்து கல்வெட்டை தொல்லியல் துறையினர் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

கல்வெட்டுப் பாடம்:

ஸ்ரீ வெண்பிநாட்டுக் குறண்டிக் காமன்  அருளன் இடுவிச்ச செக்கு இதில் துட

வெண்ணை மன்றத்து மாராயனுக்கு  அட்டு(க) வேண்டவென்பான் இ ன் பாவம் கொழ்க. – துரை சுந்தரம்

வெண்பிநாடு –  ஒரு ஆட்சிப் பகுதி,  குறண்டி – ஊர்ப் பெயர்;  காமன்  அருளன் – கொடையாளி இடுகுறிப்பெயர்; இடுவிச்ச – உண்டாக்கிய, கொடுத்த; செக்கு – எண்ணெய் பிரிக்கும் பொறி,  துடவு- ஓர் அளவு (liquid); எண்ணெய் – செக்கில் ஆட்டியநெய்; மன்றத்து – ஊர்மக்கள் கூடும் பொதுவிடம்;  மாராயம் (அன்) – பெண் பூப்பு எய்திய நற்செய்தியை சுற்றத்தாரிடம் சொல்பவன்; அட்டு(க) – நீர்கொண்டு தாரை வார்க்க, நீரட்டுதல், தானமாக கொடுக்க;  வேண்டவென்பான் – கூடாது என்று தடுப்பவன், கொழ்க  – கொள்க. இ ன் – இதன் என்பதில் இடையெழுத்து ‘த’ தேய்ந்து போயிருக்கலாம்.

எனது கருத்து: இக்கல்வெட்டில் ‘ஸ்ரீ’ இடம்பெறுவதும், பாவம் அடைவார் என்ற சொற்றொடர் வழக்கும் தமிழ்க் கல்வெட்டுகளில் 8 ஆம் நூற்றாண்டில் தான் இடம்பெறுகின்றன எனும்போது கல்வெட்டின் காலத்தை வட்டெழுத்து தோன்றிய 5 – 6 ஆம் நூற்றாண்டிற்கு ஒப்பிடுவது கல்வெட்டு வெட்டியவர் காலத்தைத் தேவையின்றி 300- 400 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளி வரலாற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்த்து இருக்க வேண்டும். பாண்டிய நாட்டில் அமைந்த வெண்பி நாட்டின் சமண ஊரான குறண்டி என்ற ஊரைச்சேர்ந்த காமன் அருளன் என்பான் நேர்த்திக் கடனை நிறைவேற்ற கல்செக்கு ஒன்றை செதுக்கிக் கொடுத்து அவ்வூரின் கண் உறையும் மாராயனான பெண் பூப்பெய்திய நற்செய்தியை ஊர்ப் பொது  இடங்களில் மக்களுக்கு அறிவிக்கின்றவனுக்கு துடவளவு எண்ணெய் தானமாக கொடுக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்துகிறான். அப்படி துடவளவு எண்ணெய் மாராயனுக்கு கொடுக்கலாகாது என்று தடுப்பவன் இதற்கான பாவம் அடைவான் என்றும் கல்வெட்டில் அரைந்துள்ளான்.

நேர்த்திக்கடனாக துடவு எண்ணெய் தானமாகக் கொடுக்கபடவும் அதை வாங்கவும் தகுதியால், மதிப்பால் குறைந்தவன் அல்லன் மாராயன் என்ற உயரிய பட்டத்தை வேந்தனிடம் பெற்ற ஆட்சியாளன் / அரசன் (மா +அரையன் > மாராயன்) என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது ஆட்சியாளரோடு மக்கள் தொடர்புடைய கல்வெட்டு அல்ல என்பது புரியும். துடவு எண்ணெய் கொடுப்பது பூப்பு சடங்கின் போதோ அல்லது அன்றாடம் என்றோ ஏற்பாடாக இருக்க வேண்டும். ஆட்சியாளனான, அரசனான மாராயனுக்கு தானம் கொடுக்கக்கூடாது என்று எளிய மக்கள் எவரேனும் துணித்து சொல்வரா என்று ஈண்டு எண்ணிப்பார்க்க வேண்டும். மன்றம் என்ற சொல்லும் மாராயன் என்ற சொல்லும் நெருங்கிய தொடர்புடையனவாக இக்கல்வெட்டில் உள்ளன. மன்றம் பெயர் உரிச்சொல்லாக (adjective) மாராயனுக்கு உள்ளது. எனவே விளக்கம் கொடுத்தவர் மன்றம், மாராயன் என்ற சொற்களுக்கு தவறான கருத்தை பொருளாகக் கொண்டுள்ளார் என்பது விளங்கும். அதனால் வரலாற்றுச் செய்தி தப்பும் தவறுமாக பதிவாகிறது.

கேள்வி என்பதை கேழ்வ என்றும், கேள் என்பதை மலையாளத்தில் கேழ் எனக் குறிப்பிடுவதை கவனிக்க. கொழ்க என்ற சொல்லாட்சி, வழக்கு 10 ஆம் நூற்றாண்டில் மதுரைப் பகுதியில் ழகரம் தெளிவாக வழங்கியதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் இன்று ழகரம் ளகரமாக வழங்குகிறது. இது பாண்டியர் கன்னடப் போசளரோடு மணவுறவு கொண்டதன் பின் இதாவது, 13 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றமாகத் தெரிகிறது. தமிழர் இந்த ழகரக் கொலையை உடனடியாகக் கைவிடவேண்டும் அது கன்னடர் தொடர்பால் ஏற்பட்டது.

இக்கால் பல கல்வெட்டு ஆர்வலர்கள் கல்வெட்டுகளை தேடிப் போய்க் கண்டுபிடித்து ஓரு கல்வெட்டு அறிஞரை அமர்த்தி அதன் எழுத்துகளை படிக்கவைத்து செய்தியை மட்டும் நாளேடுகளில் வெளியிடுகின்றனர். ஆனால் கல்வெட்டு பாடத்தை உள்ளது உள்ளபடியே கொடுக்க மறுக்கின்றனர். இதனால் தவறான பொருள் திருத்தப்பட வாய்ப்பில்லாமல் அப்படியே தவறான விளக்கத்துடன் நூலில் அச்சாகிறது. 50 ஆண்டுகள் ஆனாலும் அதே தவறான விளக்கம் தான் வெளிநாட்டார்க்கும், உள்நாட்டருக்கும் கிடைக்கிறது. இது ஏனென்றால் கல்வெட்டுச்  செய்திகளை பதிவிட்டு நூலாக வெளியிடுவோர் கல்வெட்டுப் பாடம் வேறு எந்த பதிவிலும் வெளியாகி யிருக்கக் கூடாது என்ற தவறான கட்டுப்பாட்டை வைத்துள்ளனர். இப்படி தவறான செய்தியை அவர்கள் பதிவதால் அவரது முயற்சி வீணாகிறது. இப்படி தவறான செய்தியை நூலாக வெளியிடுவதற்கு வெளியிடாமலே இருக்கலாம். கல்வெட்டுகளை தேடிக் கண்டுபிடிப்போர் இத்தகு வெளியீட்டாளர்களை புறக்கணிக்க வேண்டும். செய்தித் தாள்களிலேயே கல்வெட்டுப் பாடத்தைக் கொடுத்தால் இலட்சக் கணக்கானோர் படிப்பர். இதில் தவறானச்  செய்தியை எவரேனும் திருத்த வாய்ப்பிருக்கும். அதைவிட்டுவிட்டு வெறும் 200 – 500 நூல்களை வெளியிடுவோரிடம் கொடுத்தால் 200 – 500 மக்கள் தான் வாங்கிப் படித்துப் பயன் பெறுவார். அவர்களும் தவறான செய்தியைத் தான் படிக்க நேரிடும்.

http://www.tamilvu.org/library/ldpam/ldpam07/ldpam071/html/ldpam071ind.htm (பக்: 351,352 & பக்: 444, 445) ஓவா மலை

இக்கல்வெட்டில்  உள்ள தமிழ்ச் சொற்களின் பொருள் அறிய  செந்தமிழ்ச்   சொற்பிறப்பியல் பேரரகரமுதலி  http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm  உதவியது.

https://www.youtube.com/watch?v=9LyM47Fvs34

News

Read Previous

பேச்சு – சில உளவியல் ஆலோசனைகள்…!

Read Next

மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

Leave a Reply

Your email address will not be published.