தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட அமெரிக்கா

Vinkmag ad

அறிவியல் கதிர்
தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட அமெரிக்கா
பேராசிரியர் கே. ராஜு


     கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதற்காக பல்வேறு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பற்றிய பரிசீலனை முதலில் 2020-லும் பின்னர் 2025-லும் நடக்கப்போகிறதாம். ஆனால் அந்த மாதிரி பரிசீலனை ஏதும் பாரிஸ் மாநாட்டில் ஏன் செய்யப்படவில்லை என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். மாநாட்டில் அமெரிக்காவும் பிற வளர்ந்த நாடுகளும் பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டைக் குறைப்பதில் பிரதான பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற மற்ற நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவை இந்தத் திசைவழியில் எந்த முயற்சியும் பெரிதாக எடுக்கவில்லை. நாடுகள் தாங்களாகவே ஏற்றுக்கொண்ட இலக்குகள்  வெப்பநிலையை  2 டிகிரி அளவுக்குக் குறைக்கக்கூட உதவி செய்ய மாட்டா என்று நன்கு தெரிந்த பிறகும் வளர்ந்த நாடுகள்  தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. பருவநிலை மாற்றங்களால்  முதலில் பாதிக்கப்படப் போகும் நாடுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போல் 1.5 டிகிரி இலக்கு என ஏட்டில் எழுதிவைத்தது ஒரு ஏமாற்று வித்தையே. இது வளர்ந்த நாடுகளுக்கு நன்கு தெரிந்த விஷயம்தான். இந்தியா போன்ற முதலாளித்துவப் பாதையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களின் விளைவாக வெளியேறப் போகும் பசுங்குடில் வாயுக்களின் அளவை வேகமாகக்  குறைப்பது அவ்வளவு எளிதல்ல. புதிய ஒப்பந்தத்தினால் தாங்கள் பாதிக்கப்பட இருப்பது தெரிந்தும் அவை வளர்ந்த நாடுகளின் பாரபட்சமான அணுகுமுறையை வலுவாகத் தட்டிக் கேட்க முற்படவில்லை. “பொதுவான மற்றும் மாறுபட்ட பொறுப்பு (Common but differentiated resonsibility – CBDR)” என்பதுதான் பருவநிலை மாறுபாடு மாநாடுகள் இதுவரை ஏற்றுக் கொண்ட அடிப்படைக் கோட்பாடு. இதன் பொருள் என்ன? பசுங்குடில் வாயுக்கள் வெளியீடுகளைக் குறைக்கும் பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்றாலும் வளர்ந்த நாடுகளுக்குத்தான் கூடுதல் பொறுப்பு இருக்க முடியும். காரணம், தொழிற்புரட்சிக்குப் பிறகு வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் வேகமாக முன்னேறியதன் காரணமாக வளிமண்டலத்தை பசுங்குடில் வாயுக்களால் அடர்த்தியாக நிரப்பிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் அந்த நாடுகள்தாம்.  “மாசுபடுத்தியவன்தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் (polluter pays)” என்ற நாடுகளுக்கிடையேயான சமூகநீதிக் கோட்பாடுதான் இது. இந்தக் கோட்பாட்டை 1997ஆம் ஆண்டு கியோட்டோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் முன்வைத்தபோது, அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் நிராகரித்தது. அன்றிலிருந்து தனது வர்த்தக நலனைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் புதியதொரு ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. புதிய ஒப்பந்தத்தில் நாடுகளை வேறுபடுத்திப் பார்க்கும் கோட்பாடு கைவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. கடந்த கால வெளியீடுகளை மறப்போம், இனி வருங்கால வெளியீடுகளை மட்டும் கவனிப்போம் என்பதுதான் புதிய ஒப்பந்தத்தின் சாராம்சம். கார்பன் பட்ஜெட் என்ற ஓர் அம்சத்தைப் பார்த்தால் இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். வெப்பநிலை உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டுமானால் வளிமண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்களின் அளவு 3000 கிகாடன்களுக்குள் இருக்க வேண்டும். தொழிற்புரட்சி காலத்திலிருந்து வளர்ந்த நாடுகள் இதில் 2000 கிகாடன்களை தங்களது சீதனமாகக் கொடுத்துவிட்டன. மீதி இருப்பதோ 1000 கிகாடன்கள் மட்டுமே. இதில் இன்றிருக்கும் நிலவரப்படி 2030 வரை கணக்கிட்டால், 750 கிகாடன்கள் வெளியிடப்பட்டுவிடும். மீதி இருக்கும் 250 கிகாடன்களில் வளர்ந்த நாடுகள் தங்களுக்கு மிகச் சிறிய பங்கை எடுத்துக் கொண்டு மிகப் பெரிய பொறுப்பை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது சுமத்திவிட்டன. எனவே 2030-க்குப் பிறகு நிலைமை மிக மோசமாக மாறும். மேலும், புவி வெப்பத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு தருவது, மாற்று எரிசக்திகளுக்கு மாறத் தேவைப்படும் தொழில்நுட்பம், நிதியுதவி ஆகியவற்றை வளரும் நாடுகளுக்கு அளிப்பது போன்ற அம்சங்களிலும் தேவையான அளவுக்குக் கிடைப்பதற்கான உறுதிமொழிகள் கிடைக்கவில்லை. அதனால்தான் சுற்றுச்சூழல்  வல்லுநர்களான புதுடெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண், இந்தியாவின் “தண்ணீர் மனிதன்” ராஜேந்திர சிங் ஆகியோர் பாரிஸ் மாநாட்டு முடிவுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். வளரும் நாடுகளுக்கு கடுமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

News

Read Previous

Bank Workers Unity

Read Next

‘ஸல்’ என்பதன் பொருள்

Leave a Reply

Your email address will not be published.