தமிழர்கள் பேசும் சில கெட்ட வார்த்தைகள் ( வசவுச் சொற்கள் )

Vinkmag ad

தமிழர்கள் பேசும் சில கெட்ட வார்த்தைகள் ( வசவுச் சொற்கள் )

====    சொல்லும் தோற்றமும்   ====

தமிழர்கள் பேசுகின்ற வசவுச் சொற்கள் பலவற்றையும் உருது, தெலுங்கு, பெர்சியன் என்று ஏதேதோ மொழிகளைச் சேர்ந்தவை என்று கூறி வருகின்றனர். இக் கருத்து அடிப்படையிலேயே தவறான ஒன்றாகும். தூய தமிழ்ச்சொற்களே மக்கள் நாவில் திரிந்து கொச்சையாக வசவுச் சொற்களாக வழங்கப்படுகின்றன. அப்படி தமிழர்கள் வழங்கும் சில வசவுச் சொற்களையும் அவை எவ்வாறு தமிழில் இருந்து திரிந்தன என்றும் கீழே பார்க்கலாம்.

  1. பேமாணி, பேமானி :

கேடு கெட்டவன் அல்லது பெருமை இழந்தவன் என்ற பொருளில் சொல்லப்படும் சொல் இது. இது தமிழ்ச்சொல் தான். இச்சொல் உண்டான முறையைக் கீழே காணலாம்.

வே (=அழி) + மாண் (=பெருமை) + இ = வேமாணி >>> பேமாணி >>> பேமானி = பெருமை அழிந்தவன்.

  1. கசுமாலம், கசுமலம், கச்`மாலம் :

அருவருக்கத்தக்க கழிவுப் பொருள் என்ற பொருளில் ஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல் இது. இதுவும் தமிழ்ச்சொல் தான் என்பதைக் கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து அறியலாம்.

காய் (=வெறு, அருவரு) + மலம் (=கழிவு) = காய்மலம் >>> கச்`மாலம் >>> கசுமாலம் >>> கசுமலம் = அருவருக்கத்தக்க கழிவுப் பொருள்.

  1. டகாட்டி, டகால்டி :

நம்பிக்கைத் துரோகி / ஏமாற்றுபவன் என்ற பொருளில் ஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படும் சொல் இது. இதுவும் தமிழ்ச்சொல் தான் என்பதைக் கீழ்க்காணும் சொல்பிறப்பு முறையே காட்டிவிடும்.

இடம் + காட்டி = இடங்காட்டி >>> டகாட்டி >>> டகால்டி = இருப்பிடத்தைக் காட்டிக் கொடுப்பவன் = நம்பிக்கைத் துரோகி / ஏமாற்றுபவன்.

  1. டுபாக்கு, டுபாக்கூர் :

இட்டுக்கட்டி பேசுபவன் / பொய் சொல்பவன் என்ற பொருளில் பயன்படுத்தப் படுகின்ற சொல் இது. கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து இதுவும் ஒரு தமிழ்ச்சொல் தான் என்று அறியலாம்.

இடு (=இட்டுக்கட்டு) + வாக்கு (=சொல்) = இடுவாக்கு >>> டுபாக்கு >>> டுபாக்கூர் = இட்டுக்கட்டிச் சொல்பவன் / பொய் சொல்பவன்.

  1. கம்மனாட்டி, கம்முனாட்டி :

கீழான / இழிந்த செயலைச் செய்பவன் என்று ஒருவரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சொல் இது. இதுவும் தமிழ்ச்சொல் தான் என்பதனைக் கீழ்க்காணும் சொற்பிறப்பு முறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கயமை (=கீழ்மை, இழிவு) + நாட்டு (=செய்) + இ = கயமைநாட்டி >>> கம்மனாட்டி >>> கம்முனாட்டி = கீழான / இழிவான செயல் புரிபவன்.

ஆய்வாளர்: திருத்தம் பொன். சரவணன்.

News

Read Previous

கம்பராமாயணத்தில் சொல்வள வளர்ச்சி வீதம்

Read Next

சூழலியல் – உயிரியல் புறக்கணிப்பு: மறைக்கிறோமா, மறைந்துபோகிறோமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *