தடை பல தகர்த்தோம்……..

Vinkmag ad

-வெ.ஜீவகிரிதரன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பிரிவு செயல்ளாளர்) 

1948 மார்ச் 10-ம் நாள் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற தாய்ச்சபையை தொடங்கிய போது மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள், அதிர்ச்சி, ஆச்சரியம், மகிழ்ச்சி, வெறுப்பு என அனைத்து உணர்வுகளும் பிரதிபலித்தது. முஸ்லிம்களுக்கு என தனியாக ஒரு பகுதியை பிரித்துக்கொடுக்க வேண்டும் என கோரிய கட்சிதானே முஸ்லிம் லீக். பிரித்து கொடுத்த பின்னரும் இங்கே எதற்கு முஸ்லிம் லீக் என சிந்தித்தவர் கள் காவிப் படையினர் மட்டுமல்ல; அன்றைய காங்கிர சாரும்தான்.

அறியாமையிலும், பயத்திலும் மூழ்கியிருந்த முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியிலும் கூட `முஸ்லிம் லீக்’ என்ற கட்சி சுதந்திர இந்தியாவில் தேவையா? என்ற கேள்வி எழுந்தது. அத்தனைக்கும் ஒரே பதிலாக, உறுதி யான குரலில் கண்ணியமிகு காயிதெ மில்லத் அவர்கள் `ஆம், இந்தியாவில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை முஸ்லிம் லீக் இருக்கும்’ என்றார். 

இந்த சமுதாயம் ஏற்கனவே சிறுபான்மை சமுதாயம். ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளால் இச் சமுதாயம் சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு கல்வி, பொருளாதார, சமூக நிலையிலே மிகவும் கீழான நிலைக்கு தள்ளப்பட்டு, ஒடுக்கப்பட்ட ஓரம் கட்டப்பட்ட சமுதாயமாக, அதிலும் குறிப்பாக இந்த நாட்டுக்கு சம்பந்தமிலலாத அந்நியர்கள் போல், அகதிகள் போல் நடத்தப்பட்ட நிலையிலே, இம் மக்களை காப்பாற்றும் ஒற்றைக் குறிக்கோளுடன், உறுதியான அரசியல் நிலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் `முஸ்லிம் லீக்’.

அரசியல் நிகழ்வுகளில் பங்களிப்பு

உருவாக்கப்பட்ட நாள் முதல் முஸ்லிம் லீக் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் பங்கு கொண்டு தம் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கும், சட்ட மன்றங்களுக்கும் அனுப்பியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை தொடர்ந்து பாராளு மன்றத்திலே பிரதிநிதித்துவம் பெற்ற ஒரேசமுதாய அமைப்பு முஸ்லிம் லீக் மட்டுமே. காயிதெ மில்லத் முதல் இன்றைய தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப் வரை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக, முஸ்லிம் லீக் தலைவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இச் சமுதாயத் தின் குரலாக, போர்க்குரலாக சங்கநாதம் புரிந்து வருகிறார்கள். இன்று இந்திய முஸ்லிம் சமுதாயம் மானத்துடனும், கண்ணியத்துடனும் இந்த நாட்டில் வாழ முடியும் என்ற நிலையை உருவாக்கிய ஒரே அரசியல் பேரியக்கம் முஸ்லிம் லீக் என்பதை வரலாறு பறை சாற்றுகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலை தேர்தல்களிலே பங்கு பெற்ற முஸ்லிம் லீக் பாராளுமன்ற, சட்டமன்றங் களுக்கு இதுவரை நூற்றுக்கணக்கில் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் முதல் அமைச்சர் என்ற அந்தஸ்தையும் கூட அடைந்துள்ளது. இன்றைய நிலையில் கேரள மாநிலத்தில் 20 எம்.எல்.ஏக்கள், அதில் நான்கு பேர் மாநில அமைச்சர்கள் என சமுதாயத்தின் ஆதரவை பெற்றுள்ளது முஸ்லிம் லீக். மத்திய அரசிலே தாய்ச்சபையின் தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் அவர்கள் வெளிவிவகாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய இரு துறைகளுக்கான இணை அமைச்சராக உள்ளார்.

முஸ்லிம் லீக் ஒரு சமுதாய இயக்கமாக இருந்தாலும், அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கான சரிநிகர் பங்கு கிடைக்காதவரை அதன் வாழ்வும், வளமும் பெரும்பான்மை சமூகத்தின் தயவு சார்ந்ததாகவே இருக்கும் என்ற காரணத்தினால்தான், தேர்தல் அரசியலில் முஸ்லிம் லீக் பங்கெடுக்கிறது. இந்த தேர்தல்களை சந்திக்கும் போது முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு ஓரணி யில் நிற்க வேண்டுமென்பதே முஸ்லிம் லீகின் அறைகூவலாகவும் இருக்கிறது. தாய்ச்சபை தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அதேநேரத்தில், சமுதாய அமைப்பாகவும் பணியாற்றுகிறது.

தேசிய தலைமையுடன் இணைப்பு பெற்ற தனி மாநில அமைப்புக்கள்
மற்ற அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் முஸ்லிம் லீக் ஒரு தனித்துவம் பெற்ற அரசியல் கட்சியாக உள்ளது. முஸ்லிம் லீகின் கட்டமைப்பும் ஆரம்ப காலங்களில் ஒரு சமுதாய இயக்கத்திற்கான அடிப்படை கட்டமைப்பாகவே இருந்தது. நாளடைவில் தேர்தலில் பங்கு கொள்ளும் போது, தேர்தல் விதிகளுக்கேற்றவாறு முஸ்லிம் லீகின் கட்டமைப்பும் மாற்றம் பெற்றது. ஆரம்ப காலங்களில் முஸ்லிம் லீக் அகில இந்திய அளவிலே நிறுவப்பட்டாலும், அதன் மாநில அமைப்புகள் தனி அதிகாரம் கொண்ட, தனி அமைப்பு விதிகள் கொண்ட அமைப்புகளாகவும், தேசிய தலைமையுடன் இணைப்பு பெற்ற அமைப்புகளாகவே இருந்தன. அவை முஸ்லிம் லீகின் மாநில கிளைகள் எனப்படாமல், மாநில முஸ்லிம் லீகுகள் என்ற `தனியான, சுதந்திரமான அமைப்புகள்’, `தேசிய முஸ்லிம் லீகுடன் இணைப்பு பெற்ற அமைப்பு கள்’ என முஸ்லிம் லீகின் கட்டமைப்பு இருந்தது. 

அதனால்தான் தமிழ்நாட்டில் `ராஜ்ய முஸ்லிம் லீக்’ என்ற பெயரிலும் அதன்பின்னர் `தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக்’ என்ற பெயரிலும், அதன் பின்னர் `தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ என்ற பெயரிலும் நம் அமைப்பு இயங்கி வந்தது. அதுபோலவே, கேரள மாநிலத்திலும் நம் தாய்ச்சபை `முஸ்லிம் லீக் கேரளா ஸ்டேட் கமிட்டி’ என்ற பெயரில் இயங்கி வந்தது. 

அரசியல் கட்சிகள் தனி தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுவ தற்கு கட்டாயம் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் வந்தபொழுது தொடர்ந்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வந்த கேரள முஸ்லிம் லீக் தன் `ஏணி’ சின்னத்தை அதிகாரப் பூர்வமாக தனதாக்கி கொள்ள தேர்தல் ஆணையத்தில் 1989-ல் `முஸ்லிம் லீக் கேரளா ஸ்டேட் கமிட்டி’ – என்ற தன் பெயரை தனியாக பதிவு செய்து விட்டது. சட்டத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிலே வாக்குகளை பெற்று வரும் கேரள முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும், அதன் `ஏணி’ சின்னம் அங்கீகரிக் கப்பட்ட சின்னமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

கேரள மாநில முஸ்லிம் லீக் தனியாக பதிவு செய்து விட்டதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைமை ஒரு முடிவெடுத்து 1990-ல் `இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ – என்ற பெயரை தேர்தல் ஆணை யத்தில் பதிவு செய்து விட்டது. ஆனால், சட்ட வரையறையில் குறிப்பிட்டுள்ள சதவீத வாக்குகளை எந்த மாநில தேர்தல்களிலும் பெற முடியாததால் தனியாக அங்கீகரிக் கப்பட்ட சின்னம் பெற முடியவில்லை. ஆனாலும், தேர்தலில் முஸ்லிம் லீக் செயல்பட்டு வந்தது.

இடையில் வந்த சட்டத் தேவைகளுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், கேரள முஸ்லிம் லீகும் தனித் தனியே தேர்தல் ஆணையத்தின் பதிவுகளை பெற்று, தனித்தனி கட்சிகள் போல் தோன்றினாலும், அமைப்புரீதியாக கேரள முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலக் கிளையாகவே இயங்கி வந்தது. மாநில முஸ்லிம் லீகுகளின் தலைவர் மற்றும் பொதுச் செயலர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். 

அதன் அடிப்படையில் கேரள முஸ்லிம் லீகின் தலைவர், பொதுச்செயலாளரும் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுவிலே அங்கம் வகித்து வந்தனர். அத்துடன் கேரள மாநில முஸ்லிம் லீக் உறுப்பி னர்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலே தேசிய செயற் குழுவுக்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப் பப்பட்டனர்.

கேரள மாநிலத்தின் மகத்தான பங்களிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் கேரள முஸ்லிம் லீகின் பங்கு மகத்தானது. கண்ணியமிகு காயிதெ மில்லத், குலாம் மஹ்மூது பனாத்வாலா, இப்ராஹீம் சுலைமான் சேட் ஆகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர்கள் எல்லாம் கேரள முஸ்லிம் லீகின் வேட்பாளர் களாக `ஏணி’ சின்னத்தில் தேர்தல் களம் கண்டுதான் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். கேரள முஸ்லிம் லீகின் தலைவர்களுள் ஒருவரான இ.அஹமது சாஹிப் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் அவர்களின் மறைவுக்கு பின்னர் இ.அஹமது சாஹிப் அவர்கள் `இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்’ தேசியத் தலைவராக 14-9-2008-ல் தேர்ந்தெடுக் கப்பட்டு மிகச் சிறப்பாக தாய்ச்சபையை வழி நடத்தி வருகிறார்.

இவ்வாறு அமைப்புரீதியாக, இயக்கரீதியாக ஒரே இயக்கமாக, தேசிய இயக்கம், மாநில அமைப்பு என இயங்கி வந்த `இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மற்றும் `முஸ்லிம் லீக் கேரளா ஸ்டேட் கமிட்டி’ ஆகியவை தேர்தல் ஆணையத்தில் சட்ட விதிகளின் தேவைக்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனித்தனியே பதிவு செய்துவிட்ட செயலை சில ஷைத்தான்கள் தமக்கு சாதகமாக்க துணிந்தன. முஸ்லிம் லீகின் நிறுவனர் கண்ணியமிகு காயிதெ மில்லத்தின் வாரிசு என தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட `தாவூத் மியாகான்’ என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அமைப்பிலிருந்து வெளி யேற்றப்பட்ட பின்னர் நம் இயக்கத்தின் மீதும், மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் மீதும், எண்ணில டங்கா வழக்குகளை தொடுத்ததும், அவை அனைத்திலும் நீதி நிலை நாட்டப்பட்டு அவருக்கெதிராக நீதிமன்றங்கள் உத்தரவுகளை வழங்கி வருவதும் அனைவரும் அறிந்ததே. அதுபோலவே இயக்கத்தின் ஒளிவிளக்காக திகழ்ந்த பெருந்தகை சிராஜுல் மில்லத் அவர்களின் மகளார் `ஃபாத்திமா முஸப்பர்’ அவர்களும் கட்சி விரோத நட வடிக்கைகளுக்காக இயக்கத்திலிருந்து வெளியேற்றப் பட்ட பின்னர் தன்னைத்தானே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் என அறிவித்துக் கொண்டு அரசியல் அரங்கிலும், சமுதாயத்தின் மத்தியிலும் பல்வேறு குழப்பங்களை செய்து வந்தார்.

ஒரே பெயரில் ஒரே அமைப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இதனிடையில் நம் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் 14-9-2008-ல் நடை பெற்ற முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டத்திலே தேசியப் பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெ டுக்கப்பட்டார். அந்த பொறுப்பினை ஏற்பதற்கு முன் நிபந்தனையாக பேராசிரியர் அவர்கள், சட்டரீதியாக தனித்தனி கட்சிகள் எனப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கேரள முஸ்லிம் லீக் இரண்டும் ஒரே கட்சிதான் என சட்டரீதியாக நிறுவுவதற்காக நடவடிக்கை எடுக்க தேசிய தலைமை ஒப்புக் கொள்ள வேண்டும் என தேசிய நிர்வாக குழுவிடம் வற் புறுத்தினார். தேசியத் தலைமையும் அதற்கு ஒப்புதல் அளித்தது. அதன் பின்னரே பேராசிரியர் தேசியப் பொதுச் செயலர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற நாள் முதல் பேராசிரியர் அவர்கள் சிந்தனை, செயல், மூச்சு, பேச்சு என அனைத்துமே தாய்ச் சபையை வலுமிக்கதாக, சட்டரீதியாக ஒரே அமைப்பு என்ற நிலையை உருவாக்குவதாகவே அமைந்தது. அவருடைய எண்ணங்களை செயல்படுத்த அவருக்கு உறு துணையாக நின்றார் நம் தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் அவர்கள், கேரள முஸ்லிம் லீகின் தலைவர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக கேரள முஸ்லிம் லீக் தன் அனைத்து மட்ட கமிட்டிகளையும் கூட்டி கேரள முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் சட்ட ரீதியாக இணைவது என தீர்மானம் இயற்றியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன் தேசிய செயற்குழுவைக் கூட்டி அத் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு வழிமொழிந்தது.

இந்த இரு அமைப்புகளின் தீர்மானங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தோம். அதேநேரம் தாவூத் மியாகான் போன்றோரும், ஃபாத்திமா முஸப்பர் குழுவை சார்ந்தோரும் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவித்த னர. தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களை யும் சமர்ப்பித்தோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், கேரள முஸ்லிம் லீக் கமிட்டியும் ஒரே அமைப்புதான் என்பதையும், இரு தனித்தனி பதிவுகளால் இரு தனிப்பட்ட கட்சிகளாக பார்க்கப்படுகிறது என்பதையும் நிறுவினோம்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

`தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ – என்ற முதுமொழிக்கேற்ப, நம் இயக்கத்தை கவ்வியிருந்த சூதுகள் அனைத்தும் விரட்டப்பட்டன. இந்திய தேரதல் ஆணையம் 3-3-12 அன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை வெளியிட்டது. அதன்படி – `இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மற்றும் `முஸ்லிம் லீக் கேரளா ஸ்டேட் கமிட்டி’ என தனித்தனி பதிவுகளைப் பெற்ற இரு கட்சிகள் இணைக்கப்பட்டு, இனி `இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ என்ற பெயரிலேயே இயங்கும். கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும். இனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீ கரிக்கப்பட்ட தேர்தல் சின்னமாக `ஏணி’ இருக்கும் – என்பதுதான் இந்த உத்தரவு. 

காயிதெ மில்லத் தொலைநோக்கு உண்மையானது

நண்பர்களே! வீழ்த்தப்பட்ட சமுதாயத்தினை மீண்டும் தூக்கி நிறுத்திட, இந் நாட்டின் அனைத்து உரிமைகளும் கொண்ட சமூகமே இந்திய முஸ்லிம் சமூகம் என்பதை நிறுவிட, தொலைநோக்கோடு அனைத்து தடைகளையும், தளைகளையும் உடைத் தெறிந்து உருவாக்கப்பட்டது தான் `இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’. இதன் வலிமை உறுப்பி னர்களின் எண்ணிக்கையில் அல்ல; எண்ணத்தில் அடங்கி யுள்ளது. முஸ்லிம் லீகின் வாழ்வும், வளமும்தான் முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வும் வளமுமாக இருக்க முடியும். 

இந்திய துணைக் கண்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் தன் மானம் காக்கவும், கண்ணியம் காக்கவும் உருவாக்கப் பட்டு 60 வருடங்களுக்கும் மேலாக உறுதியாக நிலை நிற்கும் ஒரே அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. எந்த ஒரு தனி நபரும், அல்லது ஒரு சிறு கூட்டமும் இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தி விட முடியாது. வேண்டுமானால் காயப்படுத்தலாம். எதிரிகளின் ஆயுதங்களையே நிமிர்ந்த நெஞ்சுடன் நேர் கொண்டு எதிர் கொள்ளும் இந்த இயக்கம் துரோகிகளின் புல்லுருவித் தனங்களால் வீழ்ந்து விடுமா என்ன? சுயநல, பதவி வெறி கொண்டு தாய்ச்சபையின் கண்ணியத்தை காற்றில் பறக்க விட துணிந்த கருங்காலிகளும், கோடாரிக் காம்புகளும் இனி எந்த முகத்துடன் சமுதாயத்தை நேர் கொள்ளும். இனி இந்த சைத்தான்கள் செல்லுமிடமெல்லாம் சமுதாயமே சவுக்கால் அடிக்குமே.

கண்ணியத் தென்றல் காயிதெ மில்லத் அவர்களின் தொலைநோக்கு உண்மையாகியுள்ளது. மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் நமக்கு பங்கு உள்ளது. கேரள மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில பங்கு கொண்டுள் ளோம். தமிழக உள்ளாட்சிகளில் நூற்றுக்கணக்கில் பிரதிநிதித் துவம் பெற்றுள்ளோம். அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் லீக் அமைப்பு ரீதியாக வலுப்பெற்று வருகிறது. நமக்கிருந்த சிறு சட்ட சிக்கலும் தீர்ந்துவிட்டது. இனி நம் சிந்தனை, செயல் அனைத்தை யும் தாய்ச்சபையின் வளர்ச்சி நோக்கி திருப்புவோம். 

`நாமார்க்கும் அடிமை அல்லோம், நமனை அஞ்சோம்’ – என பீடு நடை போடுவோம். எதிர்கால சந்ததிகளுக்கு சுதந்திரமான சூழலைஉருவாக்குவோம். மனிதனாய் வாழ்வோம் எம் மக்களுக்காக வாழ்வோம். 

News

Read Previous

செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

Read Next

“இராமாயண சாயபு’ அல்ஹாஜ் தாவூத்ஷா!

Leave a Reply

Your email address will not be published.