டாக்டர் ஆனந்திபாய் ஜோஷி

Vinkmag ad

அறிவியல் கதிர்
டாக்டர் ஆனந்திபாய் ஜோஷி
பேராசிரியர் கே. ராஜு

ஆனந்திபாய் ஜோஷி இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற  பெருமைக்குரியவர். 1865 மார்ச்  31 அன்று  புனேயில் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. தந்தையின் பிரியத்துக்குரிய மகளாக வளர்ந்தார். கோபால் என்பவரிடம் சம்ஸ்கிருத பாடங்களைப் படிக்க தந்தை அனுமதித்தார். அக்காலத்தில் ஆச்சாரமான பிராமண குடும்பங்களில் பெண்களை அவர்கள் வயதுக்கு வருமுன்னரே திருமணம் செய்துவைத்துவிடுவது வழக்கம். அவ்வழக்கப்படி கோபாலுக்கே யமுனாவை மணமுடித்து வைத்தனர். கோபால் யமுனாவைவிட 20 வயது மூத்தவர். முதல் மனைவியை இழந்தவர். திருமணத்திற்கு கோபால் விதித்த ஒரே நிபந்தனை, மனைவியை அவர் விருப்பப்படி மேலே படிக்க வைக்க வேண்டும் என்பதுதான்!  மனைவிக்கு ஆனந்திபாய் என்று பெயரிட்ட கோபால் அவருக்கு மராத்தி, ஆங்கிலம், புவியியல் போன்ற பலவற்றைக் கற்பித்தார். நடைப்பயிற்சிக்கு அவர் ஆனந்தியை அழைத்துச் செல்லும்போதும் கற்பித்தல் தொடரும். இப்படி மிகவும் வித்தியாசமானதொரு கணவராக இருந்தார் கோபால். ஆனால் இதெல்லாம் ஆனந்தியின் பெற்றோர் காட்டிய எதிர்ப்பை மீறியே நடந்தன. 1878ஆம் ஆண்டில் அவர்களுக்குப் பிறந்த குழந்தை பத்தே நாட்களில் இறந்துவிட்டது.  உரிய மருத்துவக் கவனிப்பு இல்லாததால் குழந்தை இறந்ததாகக் கருதிய ஆனந்திபாய் மருத்துவம் படிக்க நினைத்தார். கோபாலும் அதற்கு ஊக்கமளித்தார். பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில்  மருத்துவம் படிக்க ஆனந்திபாயை அமெரிக்காவுக்கு அனுப்ப நினைத்தார் கோபால்.  தியடோசியா கார்பெண்டர் என்ற பெண்மணி உதவ முன்வந்தார். என்னுடைய நண்பர்களும் ஜாதியினரும் நான் அமெரிக்கா செல்வதை எதிர்த்தாலும் நான் அங்கு வந்து மருத்துவம் படிக்க விரும்பும் காரணம், திரும்பி வந்து இந்தியாவில் உரிய மருத்துவ வசதி கிடைக்காத ஏழைகளுக்கும் பெண்களுக்கும் சேவை செய்வதற்காகவே என்று ஆனந்திபாய் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். இதற்கிடையில் தலைவலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஆகிய பாதிப்புகளால் பலவீமடைந்த ஆனந்திபாய், அதைப் பொருட்படுத்தாமல் 1883ஆம் ஆண்டில் அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 600 டாலர் உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்குக் கிடைத்தது. தன்னுடைய தபால் அலுவலக கிளார்க் வேலையை ராஜிநாமா செய்த கோபால், ரங்கூன் சென்று துறைமுகத்தில் போர்ட்டர் வேலை பார்த்து பயணத்திற்குத் தேவையான பணத்தைச் சேர்த்துக் கொண்டு அமெரிக்கா சென்று மனைவியைச் சந்தித்தார். ஆனந்திபாய்  எம்.டி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். 1886 மார்ச் 11 அன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆனந்திபாய் ஜோஷி இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்று  கல்லூரித் தலைவர் இவரை அறிமுகப்படுத்தியபோது பலத்த கரவொலி எழுந்தது. ராணி விக்டோரியா இவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
ஆனால் அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது கொடிய காசநோய் பீடித்ததால் பலவீனமடைந்தார். 1886ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். ஏழைகளுக்கும் பெண்களுக்கும் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற அவரது கனவு பலிக்கவில்லை. 1887 பிப்ரவரி 26 அன்று 21 வயதிலேயே காலமானார். கல்வி பெறவேண்டும் என்ற தாகத்துடன் இருக்கும் இளம்பெண்களுக்கு இன்றும் உத்வேகம் ஊட்டும் பெண்ணாக வாழ்ந்து மறைந்தார் ஆனந்திபாய் ஜோஷி.

News

Read Previous

முதுகுளத்தூர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

Read Next

இஞ்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *