சேமிக்கப் பழகுவோம்

Vinkmag ad

By ஜி. ஜெயராஜ்

குருவி சேர்த்தாற் போன்று…’ என்று பணத்தை சிறுகச் சிறுகச் சேர்ப்பதைப் பற்றி கூறக் கேள்விப்பட்டிருப்போம். பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தால்தான் அவசர தேவைக்கும் எதிர்காலத்துக்கும் நமக்கு பயன்படும்.

கிராமத்தில் முதியவர்கள் துணியில் காசை போட்டு முடித்து இடுப்பில் செருகி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவயதில் பாட்டியிடம் காசு கேட்டால் அந்த முடிச்சை அவிழ்த்துதான் எடுத்து தருவார்.

நமது காசை நாமே சேர்த்து வைத்துக் கொள்வதுதான் நல்லது என்ற பாடம் அதில் உள்ளது. அது பணமாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி. பூமியில் கிடைக்கும் புதையல்கூட நம் முன்னோரின் சேமிப்பு என்றுதான் கூற வேண்டும். மண்ணில் புதைத்தும் சேமிக்கலாம் என்ற உத்தி அது.

நெல்லை சேமித்து வைக்க கிராமங்களில் குலுக்கை என்ற ஒரு மண் பாண்டம் இருந்தது. சுரைக்காய் முற்றியதும் அதன் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதை வீட்டில் தொங்கவிட்டு சேமிப்புப் பெட்டகமாகப் பயன்படுத்துவதும் இருந்தது.

வயல்களின் பயிரிடும் விவசாயி விளைச்சலின்போது ஒரு பகுதியை விதைக்காகச் சேமித்து வைக்கும் பழக்கத்தை வைத்திருந்தான். சேமிப்பில்தான் இந்தியாவின் பலமே இருக்கிறது என்பார்கள். இதனால்தான் அமெரிக்காவில் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதும், நமது பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. சேமிப்பு என்பது நம் பாரம்பரியப் பழக்கம்.

சேமித்தால்தான் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பின்தங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் உழைப்பில் கிடைக்கும் தொகையை அவ்வப்போது விரயம் செய்துவிட்டால், அடுத்தவரிடத்தில் கையேந்தும் அவலத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

முன்னோர் சேமித்து வைத்ததால்தான் நாம் அதன் பலனை அனுபவிக்க முடிகிறது. அது நிலமாகவோ, பணமாகவோ, நகையாகவோ இருக்கக் கூடும். ஒரு தலைமுறை சேமித்ததை மற்றொரு தலைமுறை ஊதாரித்தனமாகச் செலவு செய்து விடுவதும் உண்டு.

ஒருகாலத்தில் பெரிய நிலச்சுவான்தாரராக இருந்த குடும்பத்தில், பின்னால் வந்த தலைமுறையினரின் தவறான பழக்கவழக்கம் காரணமாக இருந்தவற்றை இழந்து, இறுதியில் யாரிடமாவது வேலை செய்து பிழைக்கும் நிலை ஏற்படுவதையும் பார்க்கிறோம்.

மது போதைக்கு அடிமையாகி சிலர் தவறிழைக்கின்றனர். சிலர் சூதாட்டத்தில் செல்வத்தை இழந்து பரிதவிக்கின்றனர். இதெல்லாம் இல்லாவிட்டால் கூட நம்மை மறைமுகமாகச் செலவு செய்யத் தூண்டும் அம்சங்கள் உலகில் புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன.

இதில் ஒன்று கல்வி. படிப்புக்காக தங்கள் வருவாயில் ஒரு பெரும் தொகையை தெரிந்தோ தெரியாமலோ செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் பலர். அடுத்த வீட்டுக் குழந்தை படிப்பது போல் தனது குழந்தையும் படித்து பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற பேராசை நம்மை ஆட்டிப் படைத்து விடுகிறது. தரமான கல்வியை எதிர்பார்ப்பது தவறல்ல. அதற்காக வீடு, நிலத்தை விற்றும் நகைகளை அடகு வைத்தும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் படிக்க வைக்க தயாராகிவிடும்போது சேமிப்பை இழந்து போகிறார்கள்.

நமது குழந்தை படித்து பெரிய ஆளாக வந்துவிட்டால், நம் கவலையெல்லாம் தீர்ந்துவிடும் என நினைத்து இப்படி செலவு செய்கின்றனர். அதற்குள் லட்சக்கணக்கில் செலவு செய்வதோடு, பெரும் துயரப்பட்டு நிம்மதியைத் தொலைத்து விடுகிறார்கள். இந்த தொகை நமது உழைப்பு. இதே தொகையைச் சேமித்து வைத்திருந்தால் நாமே நமது குழந்தைக்கு தொழில் நடத்த உதவிசெய்து வாழ வைத்து விடலாம்.

இன்னொன்று, பொழுதுபோக்கு. வாழ்வில் என்னதான் உழைத்தாலும் சுற்றுலா சென்று வந்தால்தான் களைப்பு தீர்ந்து புது உற்சாகத்துடன் பணியாற்ற முடியும்.

வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கென ஒருதொகையை அரசு அல்லது வேலைசெய்யும் நிறுவனம் ஒதுக்கி விடுமாம். அவர்கள் சுற்றுலா செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற கட்டாயம் நம்மிடம் கிடையாது. வெளியூரைச் சுற்றிப்பார்க்க வசதி இல்லையென்றாலும், நம்மவர்கள் குறைந்த பட்சம் சினிமா தியேட்டருக்கு அல்லது அருகிலுள்ள பூங்காவுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இப்போதெல்லாம் அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. மாறாக, உலகின் பல பரிமாணங்களையும் வீட்டுக்கே நேரில் கொண்டுவந்து காட்டும் சேனல்கள் வந்துவிட்டதால், நாம் சுற்றுலாவைப் புறந்தள்ளி பல காலம் ஆகிவிட்டது.

வீட்டில் நுழைந்தவுடன் பலரும் முதலில் ஆன்செய்வது டிவி சுவிட்சைத்தான். அதில் காலையில் இருந்து இரவு வரையில் சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதில் மூழ்கி திளைக்கின்றனர் குடும்பப் பெண்கள். நாள் முழுவதும் திரைப்படங்களை அல்லது நகைச்சுவை காட்சிகளை மட்டும் காட்டுகின்ற சேனல்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலத்தைக் கழிக்கிறார்கள்.

இவற்றைப் பார்த்து முடித்துவிட்ட பின்பு தூங்கச் செல்வதற்கே நேரம் சரியாக இருக்கும். சில நேரங்களில் அது கூட சற்று தாமதமாகி நள்ளிரவையும் கடந்து விடலாம்.

டி.வி. சேனல்களில் மூழ்கி நேரத்தைத் தொலைப்பதால் பத்திரிகை, புத்தகம் படிக்கும் பழக்கமும் நின்றுவிட்டது. நேரத்தை வீணடிக்கும் டி.வி. சேனல்களால் மின்சாரச் செலவும் சேனல் கட்டணச் செலவும் மாதந்தோறும் உயர்ந்து சேமிப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இது தண்டச்செலவு என்பது மாத்திரம் அல்ல, மனதையும் உடலையும் கெடுக்கும் அபாயம் என்பதையும் மறந்துவிடுகிறோம்.

மற்றொன்று சுகாதாரம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதும் வருமுன் காப்போம் என்பதும் நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்த வழிமுறைகள்.

இதன் மகத்துவத்தை மருந்துக்குக் கூட சிந்தித்துப் பார்க்கத் தவறி விடுகிறோம். இதனால் மருந்துகளே வாழ்நாளை நிர்ணயிக்கும் அவலத்தைச் சந்திக்கிறோம்.

நோய் வந்த பின்பு மருத்துவரிடம் சென்று காட்டுகின்றனர். அவர் தரும் மாத்திரைகளை தின்பதால் தாற்காலிகமாக நோய் தீர்ந்து போனாலும், அதன் பக்கவிளைவுகளால் மேலும் ஒரு மோசமான சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்.

சுகாதார வாழ்க்கைக்குச் செலவிட மறுக்கிறோம் என்பதுதான் இதில் குறைபாடு.

இதனால், நோய்களுக்கு ஆளாகி சேமிப்பை இழப்பதுதான் இதில் வேதனை தரும் விஷயம். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பதும் ஒருவகையில் சேமிப்புதான். சேமிப்பைச் சுரண்டும் மாயாஜாலங்களைப் புறந்தள்ளி வருங்காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

News

Read Previous

ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலாம்

Read Next

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *