செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

Vinkmag ad

“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் இவ்வாறு சொற்சித்திரமாக வரைந்தார், கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப்.

செந்தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும் நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், தமிழ்ச் செம்மல் காயிதெ மில்லத். அது ஓர் அரிய வரலாற்றுப் பதிவு.

”1947 இல் அரசியல் நிர்ணய சபையில் நான் தமிழுக்காக, தாய்மொழிக்காக வாதாடினேன். தமிழுக்குரிய சிறப்புகள் வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று அப்போது கூறினேன்” என உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அவர் மொழிந்தார்.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. 1968 ஜனவரி முற்பகுதி. தீவுத்திடல் தமிழ்ச் சுவனமாக மாறியிருந்தது. அங்கு உருவாக்கப்பட்டிருந்த பூம்புகார் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பல நாட்டு அறிஞர்கள், மாநாட்டுப் பேராளர்கள் வந்து குவிந்திருந்தனர். ‘வளரும் தமிழ்’ எனும் தலைப்பில் ஒரு பட்டிமன்றம். அப்போதைய உணவு அமைச்சர் திரு. கே.ஏ. மதியழகன் அதற்குத் தலைமை வகித்தார்.

‘தமிழின் பொற்காலம்’ என்ற மாநாட்டு அரங்கு. காயிதெ மில்லத்தின் தலைமையில் நடைபெற்றது. “உலகின் மூத்த மொழி, தொன்மை மொழி, தமிழே என்று ஆதாரத்துடன் அவர் பேசினார். அரிய மொழி ஆராய்ச்சியாக, சமூகவியல் ஆய்வாக, காயிதெ மில்லத்தின் அன்றைய உரை அமைந்திருந்தது. அது, அவரது தமிழ்க் காதலை, தாய் மொழிப்பற்றை உணர்த்தியது. ‘தமிழின் பொற்காலம் பதினேழு ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது’ என்று அவர் அறுதியிட்டார். ‘பல மொழிகள், எங்கோ தோன்றி எப்படியோ இடம்பெயர்ந்து வந்தன. ஆனால், தமிழ் அப்படியன்று. இந்த இடத்திலேயே பிறந்த இனிய மொழி இது” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

பெரும் பேறு

அமைச்சர் மதியழகன் தமது நிறைவுரையில், ‘காயிதெ மில்லத் காட்டிய தமிழ்ப்பற்றுதான் உலகத்தமிழ் மாநாட்டின் அடிப்படை’ என்று ஆணித்தரமாக எடுத்துச்சொல்லி மக்கள் வெள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் பேச்சின் சாரம் வருமாறு :

‘வளரும் தமிழ்’ என்னும் பொருள் பற்றி இங்கு நடைபெற்ற சூடும் சுவையும் நிறைந்த விவாதத்திற்கு முடிவு கூறவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்குத் தக்க ஆற்றலும் அறிவும், சிறந்த சிந்தனையும் வாய்ந்த கண்ணியத்திற்குரிய பெருந்தலைவர் காயிதெ மில்லத் இங்கிருந்து இந்த விவாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது, நமக்கெல்லாம் பெரும் பேறு.

கண்ணியமிக்க தலைவர் காயிதெ மில்லத் அவர்களைக் குறித்து, நான் மறந்துவிட்ட ஒரு சம்பவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கந்தப்பன் இங்கு குறிப்பிட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் அதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

20 ஆண்டுகளுக்கு முன், இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்த நாட்டவர்களின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டபோது, நம் தமிழர்களின் பிரதிநிதியாக, மாண்புக்குரிய காயிதெ மில்லத் அவர்களும் அங்கிருந்தார்கள். யமுனை நதிக்கரையில், குள்ளநரிகளின் குகையில், தாமிர பரணி நதி தீரத்திலிருந்து சென்ற வீரர் காயிதெ மில்லத் அவர்கள் தம் தாய்மொழிக்காகச் சிங்கமென முழங்கிய வீர உரைகள் தான். இந்த மாபெரும் உலகத் தமிழ் மாநாட்டிற்கான அடித்தளம் என்றால் அதில் கொஞ்சமும் சந்தேகம் இருக்க முடியாது.

காயிதே மில்லத் அவர்கள், அன்று முழங்கியது என்ன? இந்த நாட்டின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி, இந்த நாட்டில் தோன்றிய ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்றால், அதற்குரிய தகுதி தமிழ்மொழி ஒன்றுக்குதான் உண்டு. இப்படி நான் கூறுவதற்குக் காரணம், தமிழ்மொழியின் தொன்மையும், நாகரிகமும், இலக்கணமும், இலக்கியமும் தான். இதுபோன்று இன்னும் ஆயிரங்காரணங்களைக் காட்ட முடியும்” என்று முழங்கினார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் காயிதெ மில்லத் அவர்கள் காட்டிய இத்தகைய தாய்மொழிப் பற்று. உலகெலாம் எதிரொலித்து, இந்த அரும்பெரும் மாநாட்டைக் கூட்டுவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டது.”

தமிழே ஆட்சிமொழி

கண்ணியத்திரு காயிதெ மில்லத் அவர்களின் அரும்பெரும் பண்புகளில் ஒன்று; தொலைநோக்கு, அரசியலில் அவர்களுக்கு இணையான தலைவர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில்கூட இருந்ததில்லை. மொழிக் கொள்கையிலும் அவ்வாறே.

இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதல் அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும் மாநாட்டு அரங்குகளிலும் நாட்டு ஒற்றுமைக்கு உகந்த மொழிக் கொள்கைகளை ஓயாது முழங்கிய தனிச்சிறப்பும் பெருமையும் காயிதெ மில்லத் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்களின் வழியொற்றியே, மற்ற தலைவர்கள் பின்னர் பேசத் தொடங்கினர்.

யாரும் எண்ணிப் பார்த்திராத காலத்தில், இந்தியப் பெருநாட்டின் தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக திகழும் சிறப்பு தமிழுக்குத்தான் உண்டு என்று அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் முழக்கமிட்டது சரித்திரம். இந்திமொழி பெறக்கூடிய தகுதியை அந்தஸ்தை எல்லா மொழிகளும் பெற்றாக வேண்டும் என்று உரிமைக்குரல் கொடுத்த பெருமகன் காயிதெ மில்லத்.

“நான் எந்த மொழியையும் வெறுப்பவனல்ல. இந்தி மொழி உட்பட எல்லா மொழிகளையும் நேசிக்கிறேன். சிறுபான்மை மொழி மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்படும்போதுதான் எதிர்க்கிறேன்.”

காயிதெ மில்லத் ஆட்சி மொழிச்சட்டத்திருத்த மசோதாவின் மீது, நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை அரிய கொள்கை உரையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் தொலைநோக்கைப் பறைசாற்றும் கருத்துரையாக நிலைத்து நிற்கிறது. ஒரு சுதந்திர நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்ற பொது நோக்கே அந்த உரையின் அடிநாதம்.

1947 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல், இந்திய நாடாளுமன்றத்தில் காயிதெ மில்லத் நிகழ்த்திய அந்த உரையைச் ‘சிந்தனைக் கருவூலம்’ என்று போற்றுகின்றார்கள் அறிஞர்கள். அவ்வரிய உரையின் ஒரு பகுதி.

“ஆட்சி மொழிப் பிரச்சினை சம்பந்தமாகப் பேசிய அநேக நண்பர்கள் காந்திஜியையும் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். காந்திஜி அவர்கள் தமது அந்திம காலத்தில் என்ன கூறினாரோ, அது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை.

அவர் கூறியது : “இந்தியாவின் ஆட்சிமொழியாக இரண்டுவித லிபிகளிலும் (நாகரி எழுத்திலும், உர்து எழுத்திலும்) இந்துஸ்தானி இருக்க வேண்டும் என்பது தான். இதைத்தான் காந்திஜி சொன்னார். அவரது கடைசிக் காலம்வரை அவர் இதைச் சொல்லிக்கொண்டே வந்தார். ஆட்சிமொழிப் பிரச்சினை பற்றி விவாதிக்கின்ற நேரத்தில் ‘இதைப் பற்றிச் சிந்திக்கட்டும்’ என்பதற்காக இதை நான் அரசியல் நிர்ணய சபையில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் காந்திஜியின் இந்தக் கருத்தை யாரும் ஆதரிக்க மறுத்துவிட்டார்கள்.

ஆட்சிமொழியாகத் தங்கள் தங்கள் சொந்த மொழி தான் இருக்க வேண்டுமென்று என் நண்பர்களில் சிலர் சொன்னார்கள். அப்படியானால் நமது நாட்டில் போற்றத்தக்க முறையில் உயர்ந்த இலக்கியங்களைக் கொண்டதும் மிகப்பழமையான மொழியுமான தமிழ் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆரம்பத்தில் மொழிப் பிரச்சினை எழுந்த வரலாறு இதுதான். அந்த நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் மிகப் பெரும்பான்மையினராக இருந்த காரணத்தினால் இந்தக் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், அப்போது இருந்தவர்கள் ஏகமனதாகவோ, பெரும்பான்மையான ஆதரவுடனோ இந்தியை ஆட்சிமொழியாக ஒப்புக்கொள்ளவில்லை. காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. அவர்களது கட்சிக் கூட்டத்தில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டார்கள்.

அரசியல் நிர்ணய சபையில்கூட இந்தி மிகப் பெரும்பான்மையானவர் களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நான் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் கூறுகிறேன். கட்சிக் கட்டுப்பாடு என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர்கள் வெளிப்படையாக இந்தியை ஆதரித்தார்கள். இதுதான் நடந்த விஷயம். நடைமுறைக்குச் சாத்தியமான காரியமல்ல. எனவே நிர்வாகத்தை நடத்துவதற்காக குறிப்பாக மத்திய நிர்வாகத்தையும், பார்லிமென்டையும், மத்திய சட்டமியற்றலையும் நடத்துவதற்காக ஆட்சிமொழி பற்றிச் சிந்திக்கப்படுகிறது. அதற்காக தேசத்திலுள்ள மொழிகளில் ஒரு மொழி பிரேரேபிக்கப்பட்டது. அந்த மொழியில் பேசுகிற நண்பர்கள், அவர்கள் மொழியே அப்படிப்பட்ட ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று இப்போது வற்புறுத்தி வருகிறார்கள்.

அந்த மொழிக்காக அவர்கள் ஏன் இவ்வளவு பலத்த ஆதரவைக் காட்டுகிறார்கள்? இந்தி மொழிக்காக ஏன் இவ்வளவு சிரமத்தோடு வாதாடுகிறார்கள். ஏனென்றால், இந்தி ஆட்சி மொழியானால் அவர்களுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. அந்தப் பயனை அவர்கள் மாத்திரம் அனுபவிக்க விரும்புகிறார்கள். அத்தகைய நன்மைகளை மற்ற மொழி பேசுகிறவர்கள் அனுபவிக்க முடியாது. ஆகையால், எல்லா மொழிகளுக்கும் மத்தியில் எவ்வாறு சமத்துவம் ஏற்படும்?

கன்னித் தமிழ்க் காவலர்

கண்ணியத்தின் திருவுருவம், கடமையின் சின்னம், கன்னித்தமிழ்க் காவலர், காயிதே மில்லத் அவர்கள் பற்றி, இப்படிப் பலமுறை மனப்பூர்வமாகப் பாராட்டியவர் கலைஞர் மு. கருணாநிதி. கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர் என்கிற முறையில் பல கால கட்டங்களிலும் காயிதெ மில்லத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர் அவர்.

“பேரறிஞர் அண்ணா அவர்கள், காயிதெ மில்லத் பற்றி அடிக்கடி குறிப்பிட்டி மகிழ்ச்சி அடைகிறார் என்றால் அதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். நீண்ட காலமாக எங்களுக்கிடையே இருந்துவரும் நெருக்கமான உறவால், நீடித்த பழக்கத்தால், காயிதெ மில்லத் அவர்களைப் புகழவில்லை.

அன்றைக்கு இருந்த அரசியல் நிர்ணய சபையிலே இந்த நாட்டின் தேசிய மொழிக் கொள்கையை வகுக்க எல்லோரும் கூடியிருந்த நேரத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் எழுந்து, மற்றவர் கண்களை அகல விரித்துப் பார்க்கும் முறையில், ‘தமிழ் தான் இந்த நாட்டின் அரசாங்க மொழியாக இருக்கத் தகுதிவாய்ந்த மொழி’ என்று அடித்துக் கூறினார்களே, இந்த அவர்களுடைய ஒரு பெருமைக்காக அண்ணா மட்டுமல்ல; தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும் அவர்களுடைய புகழைப் பாடுவதுடன் அவர்களுக்கு நன்றி செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்.

வேறு யாரும் வாய் திறக்க முடியாத நேரத்தில் வீர உள்ளம் கொண்ட காயிதெ மில்லத் அவர்கள், தமிழுக்காக வாதாடினார். டில்லியில் கூட்டணி ஆட்சி இருந்து குடியரசு தலைவர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அந்த பொறுப்பு எங்களிடம் விடப்பட்டால் அந்தப் பொறுப்புக்கு இஸ்மாயில் சாஹிப் அவர்களையே தேர்ந்தெடுப்போம். நான் இதை தற்போது உள்ள சூழ்நிலையை வைத்துச் சொல்வதாக யாரும் கருதிக்கொள்ள வேண்டாம். அது சரியல்ல; அவரும் அதை விரும்பமாட்டார்.

1972 தேர்தலுக்குப் பின்னால், டில்லியில் வெற்றி பெறுவதில் காயிதெ மில்லத்திற்கு இணையான ஒரு பெருந்தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் உள்ள வேறு எந்த நாடுகளிலும் கூட காண முடியாது. சந்திர மண்டலத்தில் மனிதர்கள் இருந்து, அங்கு ஒரு தேர்தல் நடந்தால் அங்கும் கூட செல்லாமல் வெற்றி பெற்றுவிடுவார் காயிதெ மில்லத். அந்த அளவுக்குச் செல்வாக்குப் பெற்ற மக்கள் தலைவர் அவர்.”

காயிதெ மில்லத் அவர்களின் அணுக்கத்தைப் போற்றும் வகையில் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, ‘தமிழக அரசுக்கு அரண்’ என்று நெஞ்சாரப் போன்றினார். “காயிதெ மில்லத் அவர்களின் ஞானமும், ஒழுக்கமும் நேர்மையும் கொண்டு நாமும் இந்த நாட்டு மக்கள்தான் என்று கருதி நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்: என்று குறிப்பிட்டார்.

அண்ணாவின் பொன்னுரை

காயிதெ மில்லத் மீது அண்ணாவுக்கு அடிநாளிலிருந்து அளப்பரிய அன்பும், மரியாதையும் உண்டு. அதற்கு மொழி உணர்ச்சி ஒரு முக்கியக் காரணம். தாம் அரசியலுக்கு வராத நாளிலேயே தமது குரலைப் பிரதிபலிப்பவராக காயிதெ மில்லத் இருந்தார் என்கிற பெருமிதம் அண்ணாவுக்கும் தி.மு.கழகத்தின் எல்லா தலைவர்களுக்கும் இருந்தது. அரசியல் நிர்ணய சபையில் தமிழ் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வாதிட்டவர் காயிதெ மில்லத் என்பது நாடறிந்த உண்மை.

மொழிப்பற்று குறித்து அண்ணா வலியுறுத்தாத நாள் இல்லை. காயிதெ மில்லத் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே டில்லியில் இதற்காக வாதாடினார்.

ஒருமுறை அண்ணா கூறினார்: தமிழ் மீது நாம் பற்றுவைப்பது இயற்கை நியதியாகும். ஆனால் அதற்கு மேலே அந்த மொழியை ஒப்பிட்டுப் பார்த்தாலும் தமிழ் ஒரு செம்மொழி என்பது தெரிகிறது. அந்த மொழி மீது வைக்கப்படுகின்ற பற்றின் காரணமாக அந்த மொழி எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஏற்றத்திற்குக் தடையாக ஏதேனும் வருமானால், நம்மையும் அறியாமல் உள்ளம் கொதிப்படைகிறது.

காயிதெ மில்லத்தின் உணர்ச்சியும் இது தான். ‘தமிழே ஆட்சி மொழியாகும் தகுதியுடையது’ என்று அரசியல் அரங்கில் அவர் முழங்கினார்.

அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, காயிதே மில்லத்துக்கு முதல் மரியாதை அளிப்பது போல், சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்.

அண்ணாவும், காயிதே மில்லத்தும் ஆற்றிய உரைகள் வரலாற்று ஏடுகள். அவர்கள் இருவரும் 1960 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த அடிக்கடி சந்தித்து அரசியல் நிலவரங்களைப் பரிசீலிப்பார்கள். குரோம்பேட்டையிலுள்ள காயிதே மில்லத்தின் இல்லமே சந்திப்புக்களம். அவர்கள் மணிக்கணக்கில் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள்.

காயிதே மில்லத்தின் அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் தொலைநோக்கையும் இந்தியா முழுவதும் அறிந்து கொண்ட ஆண்டு 1967. தமிழ் நாட்டில் அண்ணாவின் அரசாங்கம். 9 மாநிலங்களில் ஆட்சி மாற்றம். காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்திய அரசியலில் இந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாற்றத்திற்கும் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்தார் அவர். அண்ணாவும் காயிதே மில்லத்தும் ராஜாஜியும் 1966 இல் அமைத்த அரசியல் வியூகம். தமிழக அரசியலிலும் இந்தியாவிலும் இந்தத் திருப்பத்தை ஏற்படுத்தின.

தி.மு.கழகமும் மு.லீகும் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட பயனைச் சுட்டிக்காட்டி, “எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஆளும் கட்சியை எளிதில் வென்று விட முடியும். இதைத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன” என எடுத்துச் சொன்னார். காயிதே மில்லத். இதை முழுமையாக ஒப்புக்கொண்டார் அண்ணா. அதன்படி 1962 பொதுத் தேர்தலில் கூட்டணி உருவானது. ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் அந்தக் கூட்டணி வலுவடைந்தது.

1963 ஜனவரியில், வேலூரில் நடைபெற்ற வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீல் மாநாட்டில் காயிதே மில்லத்தும், அண்ணாவும், கொள்கை முழக்கமிட்டனர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தத்துவத்துக்கு அண்ணாவும், காயிதே மில்லத்தும் அந்த மாநாட்டில் புத்துருவம் கொடுத்தனர். காயிதே மில்லத்தின் மொழிப்பற்றை, நாட்டுப்பற்றை, கடமையுணர்வை அண்ணா மனந்திறந்து பாராட்டினார். அவருடைய எழுச்சி உரைபிணைப்பின் பிரகடனமாக அமைந்தது. 1967 இல் சரித்திரமாகச் சமைந்தது. தி.மு.கழகம் முஸ்லிம் லீக் சுதந்திரா ஆகியவற்றின் கூட்டினால் ஆட்சியை அமைத்த வரலாற்றுத் திருப்பத்தை அண்ணா பல கூட்டங்களில் எடுத்துச் சொன்னார்.

ஒளிக்கதிர்

“அரசியலிலே நேர்மையும், நாணயமும் நிலவ வேண்டுமென்ற அடிப்படையில் பாடுபடும் போற்றுதற்குரிய ஒரு தலைவராக முஹம்மது இஸ்மாயில் அவர்கள் விளங்குகிறார்கள். உங்களிலே பலருக்கு தெரியாமலிருக்கலாம். அரசியல் நிர்ணய சபையிலே ஆட்சி மொழி பற்றிய விவாதம் நடந்தபோது ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரே தலைவர், காயிதே மில்லத் அவர்கள் தாம்.

இதை நான் சட்டசபையில் குறிப்பிட்டபோது நிதியமைச்சர் சுப்ரமணியம் ‘அப்படியா’? என்று ஆச்சரியப்பட்டார். அதற்கான ஆதாரத்தைக் காட்டிய போது ‘இருக்கலாம்; அப்போதெல்லாம் நான் (பேக் பெஞ்சர்) கடைசி பெஞ்சு ஆசாமியாக இருந்தேன் என கூறினார். அப்படிப்பட்ட அரும்பெரும் அரசியல் தலைவராக காயிதே மில்லத் விளங்குகிறார். என்னை பொறுத்த வரையிலே இந்தத் தேர்தல் உடன்பாட்டை இன்பக் கனவுகளை நனவாக்கும் ஒரு அச்சாரமாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால் தேர்தலே நம் பயணத்தின் முடிவல்ல; என் பயணம் நீண்டது. அதில் தேர்தல் ஒரு மைல் கல், இந்த உடன்பாட்டின் மூலம் அரசியல் காரிருளை நீக்கும் ஒளிக்கதிர்கள் சுடரிட ஆரம்பித்து விட்டன.

இரு மாதங்களுக்கு முன்னர் குரோம்பேட்டையில் காயிதே மில்லத் அவர்களைச் சந்தித்த போது ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியும் அரசியலில், லாபத்தைக் காட்டியும், அச்சத்தைக் காட்டியும், செய்யப்படும் அநீதியைப் பற்றியும் அவர்கள் சொன்னார்கள். அப்போது அவர்கள் கண்களில் நீர் கசிந்ததை கண்டேன். அந்த அளவுக்கு அரசியலை செம்மைப்படுத்த வேண்டுமென்ற ஆர்வமுடையவர் அவர். அதற்குக் காரணம் அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் ஜனநாயகத்தைப் போதித்த அளவுக்கு வேறு எந்த நெறியும் போதிக்கவில்லை.

(30-01-1962 அன்று காஞ்சிபுரம் ஒலி முஹம்மது பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியது)

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை நகரில் 13-10-1963 ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த மாபெரும் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரை நிகழ்த்தும் போது “இந்நாட்டின் அரசியலமைப்பு தீட்டப்பட்ட காலத்தில் காயிதே மில்லத் அவர்கள் தமிழுக்காக வாதாடிய நிகழ்ச்சியை விரிவாக எடுத்துச் சொன்னார். லட்சம் மக்களடங்கிய அக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.

”இந்தி ஆட்சிமொழி என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. இந்திய அரசியல் சட்டத்தில் அது இடம் பெற்றிருப்பதைத்தான் பதினேழாவது விதி எடுத்துக்காட்டுகின்றது. இந்திய அரசியல் சட்டத்தை படித்துப் பார். அதிலே இருக்கின்ற மொழிப் பிரிவின் படி 17 ஆவது பிரிவின்படி இந்தி தான் ஆட்சி மொழியாகித் தீர வேண்டும். அதிலே மறுப்பில்லை. அதை மாற்ற முடியாது என்று சொல்கிறார்கள்.

நான் உங்களிடம் கேட்டேன். ஹிந்தி ஆட்சி மொழியாக வேண்டும் என்ற நேரத்தில் அரசியல் நிர்ணய சபையிலே தீர்மானித்து விட்டதாக இன்று காங்கிரஸ்காரர்கள் பேசுகிறார்களே தவிர, அரசியல் நிர்ணய சபையில் இதை ஏற்றுக்கொள்ள மறுத்துப் பல அறிவாளர்கள் பேசியிருக்கிறார்கள்.

அதிலே ஒருவருடையதை மட்டும் நான் உங்களுடைய கவனத்திற்கு இன்றைய தினம் படித்துக் காட்ட விரும்புகிறேன்.

அரசியல் நிர்ணய சபையிலே இருந்த உறுப்பினர் இன்றைய தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருக்கும் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள், எந்த மொழி ஆட்சி மொழியாலாம் என்ற விவாதம் நடந்த நேரத்தில் அரசியல் நிர்ணய சபையிலே உறுப்பினராக இருந்தார்.

“அவர் சொன்னது இது : (காயிதே மில்லத் அவர்களின் பேச்சைப் படித்துக் காட்டினார் அண்ணா)

அங்கே பேசியவர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில மொழி இப்பொழுது வந்த மொழி; நம்முடைய புராதன மொழி வேண்டாமா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு முஹம்மது இஸ்மாயில் கேட்டிருக்கிறார். நீங்கள் பழங்கால மொழிக்குப் போக வேண்டும் என்றால் முறைப்படி பழங்கால மொழிக்குப் போக வேண்டும் ஏன் புராதணத்திற்குப் போக வேண்டும் என்கிறோம்? தொன்மையான ஒரு மொழி வேண்டுமென்று நம்முடைய நண்பர்களிலே சிலர் எண்ணிக்கொள்கிறார்கள். அது இந்தியாவிலே உள்ள மொழியா? அல்லவா? என்று கூட கவலைக் கொள்ளவில்லை. புராதன மொழியைத் தேடுகிறார்கள். அதிலே அவர்கள் மனதிலே எண்ணிக் கொண்டிருப்பது சமஸ்கிருத மொழியை.

அவர் பேசிக்கொண்டிருந்த நாட்களில் இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அதிக வித்தியாசமில்லை என்று ஹிந்தி ஆதரவாளர்களும் நம்பினார்கள். எங்களைப் போன்றிருந்த ஹிந்தி எதிர்ப்பாளர்களும் நம்பிக்கை கொண்டிருந்தோம். அதனாலே தான் அவர் அப்படிச் சொல்கிறார். அப்படிப்பட்ட இந்தி மொழியை ஏற்றுக் கொள்வது சரியில்லை என்கிறார்.

புராதன மொழியைத்தான் வைத்துக்கொள்வது என்பதை ஒப்புக்கொள்வதானால் ஏன் தமிழை ஆட்சி மொழி ஆக்கக் கூடாது?

புராதன மொழியிலே ஒன்றை எடுத்துத் தான் ஆட்சி மொழியாக்க வேண்டுமென்றால் நான் தைரியமாகச் சொல்கிறேன்; தமிழ்மொழி (இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டுமானால்) திராவிட மொழிகள் தான் இம்மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழிகள். எந்த வரலாற்றாசிரியரும் இதை மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன். எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளனும் என்னை மறுத்துக் கூற மாட்டான் என்று நம்புகிறேன். இந்த நாட்டிலே முதன் முதலில் பேசப்பட்ட மொழி திராவிட மொழிதான். முக உயர்தரமான இலக்கியச் செறிவு கொண்டது தமிழ் மொழி; மிகப் புராதன மொழி என்றும் கூட அவர் கூறினார்.

இவைகளெல்லாம் எனக்கு அவரிடத்திலே மதிப்பு ஏற்படுத்த உதவவில்லை. அவரை நான் என்றென்றும் எண்ணி மதிக்கத்தக்க விதத்திலே அவர் கடைசியாகச் சொன்னார்: ”இது என்னுடைய தாய்மொழி” என்று முஹம்மது இஸ்மாயில் அவர்கள் அரசியல் நிர்ணய சபையிலே பேசி ஏன் தமிழை ஆட்சி மொழியாக்கக் கூடாது? என்று கேட்டிருக்கின்றார்.

என்னமோ அரசியல் நிர்ணய சபை கூடிய நேரத்தில் எல்லோருமே அதற்கு ஒத்துக்கொண்டது போல் இவர்கள் இன்று பேசிக்கொள்கிறார்கள். உங்களுக்கு தைரியமிருந்தால் மொழி விஷயத்துக்கு மட்டும் ஒரு புதிய அரசியல் நிர்ணய சபையை நீங்கள் கூட்டித் தப்பித்துக்கொண்டு வாருங்கள் பார்க்கலாம். உங்களை அறை கூவி நான் அழைக்கிறேன்.

ஆட்சி மொழி பற்றி காயிதே மில்லத் பேசுவதற்கு சபாநாயகர் இருபது நிமிடங்கள் மட்டுமே அளித்தார். ஆங்கில மொழிக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும் என்றார். காயிதே மில்லத்.

எல்லா விஷயங்களையும் அமைதியாகச் சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வருமாறு நான் நமது நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதர மொழி பேசும் மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணரும்படி தேச ஒற்றுமையின் பெயரால் இந்தி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சுதந்திர நாட்டில் அவர்கள் விரும்புவதெல்லாம் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்பதுதான்.

கடல் கடந்த நாடுகளில்

காயிதே மில்லத்தின் தமிழ்க் காதலும், தேசிய உணர்வும் கடல் கடந்த நாடுகளுக்கும் எட்டியவை. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மாவில் மட்டுமல்ல; தமிழர்கள், இந்தியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் காயிதே மில்லத்தின் தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் நன்கு அறியப்பட்டிருக்கின்றன.

ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழைக் கொலு வேற்றிருக்கும் சிங்கப்பூர் குடியரசு காயிதே மில்லத்தின் மாண்பை அறியும். மலேசியாவில் அவர்களை அறியாதவர் இல்லை. அந்த நாடுகளுக்குச் சிலமுறை சென்று மக்களின் சிந்தையைக் கவர்ந்த செம்மல் காயிதே மில்லத். பத்திரிகைகள் ஒருமுகமாக அவர்தம் மொழி, தேசியப் பற்றையும் பாங்கையும் பாராட்டியுள்ளன.

காயிதே மில்லத் – மதத்தால் நல்ல முஸ்லிம். இனத்தால் நல்ல தமிழர். தேசத்தால் நல்ல இந்தியர், சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையின் படப்பிடிப்பு இது.

தமிழினத்தின் நெஞ்சில் என்றும் நிலை பெறக்கூடிய தமிழ் மறவர் அவர் என்பதை சிங்கப்பூர் தமிழ் மக்கள் அறிவார்கள். தமிழ்முரசு 1972 ஏப்ரல் பதினைந்தாம் தேதி காயிதே மில்லத்தின் நினைவாக வெளியிட்ட கட்டுரை, அந்த மக்கள் தலைவரின் பல பரிமாணங்களையும் சித்திரித்தது.

அதிலிருந்து சில பகுதிகள் :

“இந்தியாவில் அரசியலைப்பு உருவான நேரத்தில் அரசியல் நிர்ணய சபையில் தமிழக சட்டசபை மூலம் இடம்பெற்றவர்களில் முக்கியமான அரசியல் தலைவர் இஸ்மாயில் சாகிப். சட்டசபையில் உருப்படியாகப் பங்கு ஆற்றிய ஒரு சிலரில் இஸ்மாயில் சாகிப் முதல்வர். இஸ்லாமியர்களின் மத உரிமைகள், மத போதனைச்சுதந்திரம், சட்டத்தில் இடம்பெறச் செய்தவர். இந்திய முஸ்லிம்களின் அரசியல் மத உரிமைகளின் காவலர் இஸ்மாயில் சாகிப்.

அடுத்து, எந்த மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாவதற்குரிய வளமும் தகுதியும் ஆற்றலும் உள்ள மொழி தமிழே என்று கூறி சபையை வியப்பில் ஆழ்த்தினார். இந்தி ஆட்சி மொழியாவதை எடுத்த எடுப்பிலேயே சபையில் எதிர்த்த தமிழர் இஸ்மாயில் சாகிப். அதோடு தமிழையே ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று தனிக்குரல் கொடுத்த வீரர்.

தி.மு.க. வினால் நினைக்க முடியாத (அப்பொழுது தி.மு.க. இல்லை) நேரத்தில் நினைக்க முடியாத இடத்தில் நினைத்துச் சொன்னவர் இஸ்மாயில் சாகிப். மூர்க்க முரட்டு அரசியலோ வெத்துவேட்டு அரசியலோ தெரியாதவர் அவர்.

பாரதத் திருநாட்டிலே ராஜாஜிக்கு அடுத்த நிலையிலே இருக்க வேண்டியவர்; வைத்துப் பாராட்டத்தக்கவர் நம்முடைய காயிதே மில்லத் ஆவார். இந்த நாட்டின் ஜனநாயக வளர்ச்சியைக் கருதி ஆட்சி மாற வேண்டுமென்று எண்ணி அதற்கோர் மாறுதலை ஏற்படுத்திக் கொடுத்து சரித்திரத்திலே ஒரு புனித ஏட்டை உண்டு பண்ணித் தந்தவர்கள் அவர்கள்.

இந்த நாட்டிலே கட்டிக் காத்து வரும் இஸ்லாமியப் பாரம்பரியம் இஸ்மாயில் சாகிப் அவர்களின் மூலம் இலக்கியச் செறிவுடையதாகத் திகழ்கிறது. தமிழ் நாட்டு மக்களாகிய நாம் மதத்தால் இந்து, கிறிஸ்துவன் முஸ்லிம் என்றிருந்தபோதும், மொழியால் ஒன்றாகவே நிற்கிறோம். இந்த நாட்டில் பலமொழிகள் பேசுவோர் வாழலாம் என்றார். பல மதத்தினர் வாழ்வது ஒன்றும் தப்பாகி விடாது. அப்படி வாழுகின்ற மதத்தினர் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்படுவது வகுப்புவாதம் ஆகிவிடாது. பல மொழி பேசுவோர் இந்திய அமைப்பில் ஒன்றுபட்டு வாழ்வதைப் போல் பல மதத்தைப் பின்பற்றுகிறவர்களும் ஒன்றுபட்டு வாழ முடியும்.

திறந்த புத்தகம்

திருநெல்வேலிச்சீமை தந்த ஆற்றல்மிக்க தேசபக்தர். தமிழ்ப்பற்று மிகுந்த குடும்பத்தில் வந்தவர். திறந்த புத்தகமாக, உயர்ந்த வாழ்க்கை நடத்தியவர் காயிதே மில்லத் என்று முன்னாள் அரசியல்வாதியும் தென்னகம் தினசரியின் ஆசிரியருமான எஸ்.எஸ். மாரிசாமி (1972) இரங்கல் கட்டுரையில் எழுதினார். அதன் ஒரு பகுதி:

“அன்புக்கு உறைவிடம் அவர் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். அது முற்றிலும் உண்மை. தமக்கு வசதிகள் உண்டா இல்லையா? என்று கூட கவலைப்படமாட்டார். உடன் வந்திருப்பவர்களைத்தான் கண்ணை இமை காப்பது போல் காப்பார். இத்தகைய உயர்ந்த குணமும் பண்பும் மறைந்து வரும் யுகத்தில் அன்புக்கு அண்ணலாக அவர்கள் வாழ்ந்தார்கள்.

நெல்லையை ஒட்டிய பேட்டையிலேதான் காயிதே மில்லத்தின் பூர்வீக இல்லம். அந்த நாளிலும் இன்றைய நாளிலும் அவரை நெல்லை மாவட்ட மக்கள் அன்பும் மரியாதையும் மிளிரப் ‘பேட்டை இஸ்மாயில்’ என்றே அழைப்பார்கள்.

அவர் குடும்பம் தேச பக்தி மிகுந்த குடும்பம். தமிழ்ப்பற்று மிகுந்த குடும்பம். வாரி வாரி வழங்கி கரங்களையே மெலியச் செய்து கொண்ட குபேரக் குடும்பம். அரண்மனை வாழ்வையும், அரச போகத்தையும் விட்டு வந்த கவுதமனைப் போல, தேசத்துக்கு பணியாற்ற சொத்து சுகங்களை மதியாது வெளியேறியவர் காயிதே மில்லத்.

இன்று அவரை நினைத்து எத்தகைய பேத உணர்வும் இன்றி இந்திய மக்கள் அனைவரும் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால் அது அவர் வாழ்ந்து காட்டிய தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஒரு சான்றாகும்.

காலங்கள் பிறக்கும்; ஆனால், காயிதே மில்லத் போன்ற கனிவுள்ளோர் பிறப்பது அவ்வளவு எளிதல்ல; அவர் ஒரு மாணிக்கம். அந்த மாணிக்கமே இந்தியா வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுபட்டதும் தீந்தமிழே தேசியமொழி என அரசியல் நிர்ணய சபையில் முழங்கினார்.

“இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும் ஆரம்ப காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். அதாவது திராவிட மொழியே இந்நாட்டின் புராதன மொழி என நான் துணிந்து கூறுகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட முதல்மொழி திராவிட மொழியே என்ற எனது கூற்றை எந்த வரலாற்றாசிரியராலும் மறுக்க முடியாது; எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது மிகவும் புராதன மொழி. இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இம் மொழியை நான் நேசிக்கிறேன்; இம் மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

‘செம்மொழிக் காவலர்’ கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் இம்மணிமொழியை மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

 

 

நன்றி :

சமநிலைச் சமுதாயம்

ஜுன் 2010

 

 

காயிதே மில்லத் ஒருவரே

 

”கழகம் ஆட்சியில் இல்லாத காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் சட்டமன்றத்தில் முழங்கியவர் காயிதே மில்லத் மட்டுமே”

“சட்டமன்றத்தில் நாம் இல்லாத காலத்தில் நமக்காகவும், தமிழ் மொழிக்காகவும் வாதாடிய தலைவர் காயிதே மில்லத் ஒருவரே. கழகம் ஆட்சியில் இல்லாத காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் சட்டமன்றத்தில் முழங்கியவர் காயிதே மில்லத் மட்டுமே என்பதைப் பட்டியலிட்டுச் சொன்ன அவர். 1967 பொதுத்தேர்தல் வெற்றிக்குக் காயிதே மில்லத் வழிவகுத்துத் தந்ததையும், தொகுதிக்காக வாதாட வேண்டாம் என முஸ்லிம் லீக் பிரதிநிதிகளிடம் கூறியதையும், பெருந்தன்மையுடன் ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்த தோழமை உணர்வையும் அவர் வெகுவாகப் போற்றினார்.

“தந்தை பெரியார் தலைமையில், 1938 ஆம் ஆண்டு நாம் இந்தியை எதிர்த்துப் போராடினோம். அப்போதிருந்த தமிழக அரசு, நம் மீது அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கணக்கற்ற கொடுமைகளைச் செய்தது. அந்த நேரத்தில் சட்டசபையில் நமது பிரதிநிதிகள் யாரும் இருக்கவில்லை. நமக்காக வாதாட எவரும் இல்லாத நேரம் அது. ஆனால் அப்போது நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து சட்டமன்றத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் இடி முழக்கம் செய்தது. தீரமாக வாதாடியது. நமக்காகக் குரல் கொடுத்தது. அத்தகைய நீண்ட நெடுங்கால உறவு நமக்கும் முஸ்லிம் லீகுக்கும் உண்டு.

(1968, ஆகஸ்டில், அன்றைய அமைச்சர் என்.வி. நடராசன், திருப்பத்தூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதிலிருந்து)

 

நன்றி

சமநிலைச் சமுதாயம்

ஜுன் 2010

 

News

Read Previous

சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியின் பள்ளிப் பண்

Read Next

தமிழின் பொற்காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *