சூரிய ஆற்றல் மரம்

Vinkmag ad

அறிவியல் கதிர்

சூரிய ஆற்றல் மரம்
பேராசிரியர் கே. ராஜு

அந்த மரத்திற்கு கிளைகள் உண்டு, ஆனால் இலைகள் கிடையாது. அந்த மரத்திலிருந்து பழங்கள் கிடைக்காது, ஆனால் அது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அந்த மரத்திற்கு மண்ணோ தண்ணீரோ வேண்டாம். ஆனால் அது ஐந்து வீடுகளில் விளக்கேற்றி வைக்கும் அல்லது 20 தெரு விளக்குகளுக்கு வெளிச்சம் தரும்.
அதுதான் சூரிய ஆற்றல் மரம் (Solar Power Tree).  இந்த மரத்தை உருவாக்கியது சிஎஸ்ஐஆர் (Council of Scientific and Industrial Research) என்ற மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம். சூரியத் தகடுகளை வழக்கம்போல் பரந்த நிலப்பரப்பில் பரப்பி வைக்காமல் ஒரு மரத்தில் உள்ள கிளைகளைப்போல் அமைத்து நான்கே சதுர அடி பரப்பளவிலிருந்து 5 கிலோ வாட் மின்னாற்றலை உற்பத்தி செய்ய தனித்துவமான ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளது சிஎஸ்ஐஆர். இந்த ஆற்றலைக் கொண்டு ஐந்து வீடுகளுக்கு வெளிச்சம் தரமுடியும். வழக்கம்போல் சூரியத் தகடுகளை தரையில் பரப்பி வைத்து மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால் அதற்கு 400 சதுர அடி நிலப்பரப்பு வேண்டியிருக்கும்.
இந்த சூரிய ஆற்றல் மரத்தை துர்காபூரிலுள்ள சிஎஸ்ஐஆரின் இணை அமைப்பான சிஎம்ஈஆர்ஐ (Central Mechanical Engineering Research Institute) வடிவமைத்தது. இந்த நிறுவனம்தான் முதன் முதலாக ஸ்வராஜ் என்ற டிராக்டரை உள்நாட்டிலேயே தயாரித்தது.
வழக்கமான முறையில் ஒரு மெகாவாட் சூரிய ஆற்றல் மின்சாரம் உற்பத்தி செய்ய ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு வேண்டும். எனவே, 10,000 மெகாவாட் உற்பத்தி செய்ய சுமார் 50,000 ஏக்கர் நிலம் வேண்டும். ஆனால் சிஎம்ஈஆர்ஐ சூரிய ஆற்றல் மரத்தின் மூலம் உற்பத்தி செய்ய இவ்வளவு பெரிய நிலப்பரப்பு தேவையில்லை. அதைவிட மிகக் குறைவான பரப்பளவே போதும். மின்தேவை ஒருபுறம் கூடிக்கொண்டே வருகிறது. மறுபுறம் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக நிலம் கிடைப்பதும் அரிதாகிக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் மின் உற்பத்திக்கு சூரியத் தகடுகளை தரையில் பரப்பி வைக்காமல் செங்குத்தாக மரத்தின் கிளைகளைப் போல் அமைத்துப் பயன்படுத்துவது நாட்டின் ஆற்றல் நெருக்கடியைச் சமாளிக்க மிகப் பெரிய அளவில் உதவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்ல, முந்தைய முறையைவிட இந்த முறையில் 10லிருந்து 15 சதம் வரை கூடுதல் மின்ஆற்றலும் கிடைக்கும்.
துர்காபூரில் உள்ள சிஎம்ஈஆர்ஐ வளாகம், புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆரின் தலைமை அலுவலகம், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சரின் குடியிருப்பு வளாகம் ஆகிய இடங்களில் சூரிய ஆற்றல் மரங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன. பொது பூங்காக்கள், தோட்டங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற இடங்களுக்கு ஏற்ற அழகியல் வடிவங்களில் ஆற்றல் மரங்களைத் தயாரிக்கும் பணியில் சிஎம்ஈஆர்ஐ பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பகல் பொழுதில் சூரிய ஒளி விழும் இடம் மாறிக் கொண்டே இருப்பதை அனுசரித்து சூரியத் தகடுகளின் மீது ஒளி விழும்படி மரம் மெல்ல சுழன்றிவரும்படி ஆற்றல் மரத்தை அவர்கள் கட்டமைத்து வருகின்றனர். மின் அழுத்தத்தை அதிகரிப்பதற்கு இது துணை செய்யும்.
சூரியன் மறைந்தபிறகு இரண்டு மணி நேரத்திற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் பாட்டரி காப்பு செய்யப்பட்டிருக்கும். மரத்தின் மீது விழும் குப்பை கூளங்களை அகற்றி தண்ணீரைத் தெளித்து சுத்தம் செய்யும் கருவியும் மரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். 30 சூரியத் தகடுகள், பாட்டரி காப்புடன் சேர்த்து சூரிய ஆற்றல் மரத்தின் விலை 3 லட்சம் ரூபாய் ஆகிறது என்கின்றனர் பொறியாளர்கள்.
அடுத்து தாமோதர் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு தோட்டத்தில் சூரிய ஆற்றல் மரத்தை நிறுவும் பணியில் சிஎம்ஈஆர்ஐ ஈடுபட இருக்கிறது. 2017 மார்ச் மாதத்திற்குள் பல பள்ளிகளில் ஆற்றல் மரத்தை நிறுவிடும் திட்டமும் உள்ளது. விரைவிலேயே சூரிய ஆற்றல் மரத்தின் பல மாடல்கள் வீடுகளின் மொட்டை மாடிகளையும் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களையும் அலங்கரிக்க உள்ளன.
எனவே அடுத்த முறை நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது நீங்கள் சாலையோரத்தில் ஒரு விநோதமான மரத்தைப் பார்த்தீர்களானால் ஆச்சரியப்பட வேண்டாம். அது சிஎஸ்ஐஆரின் சூரிய ஆற்றல் மரமாக இருக்கக் கூடும்.

நன்றி : (2016 நவம்பர் சயன்ஸ் ரிப்போர்ட்டரில் வெளிவந்த கட்டுரை)

News

Read Previous

தி. ஞானசேகரன் அவர்களின் நேர்காணல்

Read Next

தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *