சிந்திக்க மறந்த “சீவலப்பேரி பாண்டி”நெப்போலியன்!

Vinkmag ad
Gandhiசிந்திக்க மறந்த “சீவலப்பேரி பாண்டி”நெப்போலியன்!
நடிகர் நெப்போலியனுக்கு மகாத்மாவின் ஆன்மா எழுதும் மடல்.
ஒரு காலத்தில் திரை உலகில் நாயகனாய் ஒளிர்ந்த நடிகர் நெப்போலியனே,பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நீங்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது சரியா?
எனது நினைவாக காந்தி ஜெயந்தி என்னும் பெயரில் இந்தியா முழுவதும் எனது தியாகத்தை பற்றியும்,எனது சுதந்திர போராட்டத்தை பற்றியும் பல்வேறு நிகழ்வுகளில் மெய்சிலிர்த்து பேசிய அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,மாணவர் சமுதாயம்,பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றி.
உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து என்னை புகழ்ந்த பாஜகவினருக்கும் கூட எனது நன்றியை நான் சொன்னாலும்…நெப்போலியன் என்ற உங்களைப்போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு நான் நன்றி சொல்ல முடியவில்லை.
இயக்குனர் சுந்தர்.சி நடித்து இயக்கிய ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் ஏழுமலை என்ற பெயரில் போலீஸ் உயர் அதிகாரியாக நீங்கள் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கும் தற்போது உங்களது அரசியல் பயணத்திற்கும் எத்தனை முரண்பாடுகள்?
ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் உங்கள் கதாபாத்திரத்தின் அண்ணனாகவும்,சமூக சேவகராகவும் நடித்துள்ள நடிகர் விஜயகுமார் சாவுக்கு காரணமான வில்லன் அண்ணாச்சியை கொலை செய்வதற்காக கடப்பாரையை தூக்கி ஓங்கும் கதாநாயகன் சைதை சத்யா என்னும் சுந்தர்.சி,
அருகில் உள்ள ஆட்டோவில் எழுதப்பட்டிருந்த வாழ்க வளமுடன் என்ற வார்த்தையை படித்து விட்டு எதிரியை கொல்லாமல் கடப்பாரையை கீழே போடும் போது போலீஸ் அதிகாரியான நீங்கள் கூறிய வசனத்தை இயக்குனரே மறந்தாலும் என்னால் மறக்க முடியாது.
பெண் கலெக்டரை கொலை செய்து விட்டு அதற்கான ஆதாரங்களையும் எரித்துவிட்ட இந்த அயோக்கியனை ஏண்டா கொல்லாமல் விட்டே என்று நீங்கள் கேட்டபோது,உங்கள் அண்ணன் சமூக சேவகர் உதயமூர்த்தி(விஜயகுமார்)தான் காரணம் என்பார் கதாநாயகன்.
உங்கள் அண்ணனின் சாவுக்கு நான் காரணமாக இருந்தும் கூட அவர் என்னை பார்த்து வாழ்க வளமுடன் என்று சொன்ன அந்த அகிம்சை முறை தான் இவனை கொல்லவிடாமல் என்னை தடுத்துவிட்டது என்று கதாநாயகன் சொன்னபோது,பதிலுக்கு நீங்கள் சொன்ன டயலாக் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரன் கோட்சேவை வாழ்க என்று சொல்வதற்கு ஆள் இருக்கும் இந்தியாவில் அகிம்சையாவது கத்தரிக்காயாவது என்று நீங்கள் சொன்ன டயலாக்கை பார்த்தும்,கேட்டும் சிலாகித்தவர்கள் பலர்.
நான் கூட ஆச்சரியப்பட்டு போனேன்.என்மீது உங்களுக்கு அவ்வளவு மரியாதையா என்று?அப்போது அப்படி பேசிய நீங்கள் இன்றைக்கு என்னை சுட்டுக்கொன்ற கோட்சேவின் கூட்டத்தோடு இணைந்திருப்பதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை?
பணத்திற்காக சினிமாவில் டயலாக் பேசுவதும்,பதவிக்காக அரசியலில் நடிப்பதும் தான் உங்களது கொள்கை என்றால் அதை தடுக்க நான் யார்?
எனது இப்போதைய கவலையெல்லாம்….என்னைக்கொன்ற கோட்சேவின் கூட்டத்தில் இணைந்துள்ள நீங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கோட்சே வாழ்கன்னு கோஷம் போட்டு விடுவீர்களோ?என்பது தான்.
சிந்திக்க மறந்த சீவலப்பேரி பாண்டி நெப்போலியனே…மனசாட்சிப்படி நீங்கள் சிந்தித்தால்…பாஜகவை விட்டு உடனே வெளியேற வேண்டும்.அதை தான் எனது ஆன்மாவும் விரும்புகிறது.அன்புடன் – காந்தியடிகள்.
nepoleon
ஆக்கம்:
கீழை ஜஹாங்கீர் அரூஸி

News

Read Previous

கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி விசிட் விசா சேவை!

Read Next

அண்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *