சாதனையாளர்கள் சந்திப்பு : எம். சாகுல் அமீது

Vinkmag ad

 

இறைவன் அருளிய அருட்கொடை

 

திறமை இல்லாத மனிதன் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் அருட்கொடையாக வழங்கி இருக்கிறான்.

அந்த அருட்கொடை எது – நமது திறமை எது? என்பதை நாம் அறிந்து, அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

வெற்றிக்கு விலாசம் சொல்லும் இந்த நல்லவர் எம்.சாகுல் அமீது.

குடந்தை மண்ணின் மைந்தர். கடந்த 25 ஆண்டு காலமாக அமீரகத்தில் தங்கி இருக்கும் இவர் “வெற்றிகரமான தமிழக தொழில் அதிபர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரர்.”

அபுதாபியில் நோபல் மரைன் மெட்டல் டிரேடிங் கம்பெனி, ஹலீமா பைப்ஸ் ஆகிய நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் சாகுல் அமீது, தனது வெற்றிப் பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவரது அனுபவங்களின் தொகுப்பு இதோ…

கேள்வி:- உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

எம்.சாகுல் அமீது:- வளைகுடாவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்த நாள் முதல் இந்த நாள் வரை பல்வேறு படிப்பினைகள், ஏற்ற இறக்கங்கள், பாராட்டுகள், வெற்றிகளை சந்தித்து இருக்கிறேன். இந்த நேரத்தில் ஏக இறைவனுக்கும் என்னைச் செதுக்கி வெற்றிக்கு வழிகாட்டிய சிற்பிகளையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை, லட்சியக்கனவு எல்லோருக்கும் இருக்கும். எனக்குள்ளேயும் அப்படி ஒரு லட்சியம் இருந்தது. உழைப்பை மட்டுமே முதலீடாகக் கொண்டு வாழ்வில் உயரவேண்டும் என்ற உன்னத லட்சியமே எனது வாழ்க்கையின் மூல மந்திரமாக இருந்தது.

லட்சியவாதிகள் தங்களுக்கு என தனிப்பாதை அமைத்துக்கொண்டு, தங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டு, அதன் வழியில் வெற்றி இலக்கு நோக்கி செல்வார்கள். அத்தகைய லட்சியவாதிகளில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயலில் ஈடுபட்டேன். வெற்றி என்ற சிகரத்தை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறினேன்.

கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அது உரிய நேரத்தில் உன்னைத்தேடி வரும் என்று சொல்வது போல நான் எனது கடமைகளில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தேன். லட்சியப்பயணத்தில் மட்டுமே தீவிரம் காட்டினேன். பலனை எதிர்பார்த்து மட்டும் எந்த செயலிலும் ஆர்வம் காட்டவில்லை. இன்னும் நான் கற்றுத் தேறவில்லை. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

திறமையில்லா மனிதன் என்று இங்கு யாரும் இல்லை. திறமை இல்லாதவருக்கு இங்கு எதுவும் இல்லை. எனவே திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினேன். கடினமாக உழைத்தேன். என் லட்சியக்கனவுகள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. இதில் வெற்றி “ரகசியம்” என்பதெல்லாம் கிடையாது. கடின உழைப்புக்கு கிடைக்கும் பலன் வெற்றிதான்.

கேள்வி:- இன்றைய இளம் தலைமுறையினருக்கு நீங்கள் தரும் “டிப்ஸ்” என்ன?

எம். சாகுல் அமீது :- படிக்கும் போதே நமது திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். நமது திறமை என்ன? என்பதை கண்டறிந்து அதில் முனைப்புடன் ஈடுபடவேண்டும். அதே போல வாய்ப்பு கிடைக்கும்போது தகுந்த நேரத்தில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

சரியான நேரத்தில், சரியான சூழல் நிலையில் நமது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் நமது வெற்றியின் இலக்கை நோக்கி வேகமாக நகர முடியும். வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் தற்போதைய உலக சந்தை நிலையை உன்னிப்பாக கவனித்தல் அவசியம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், மின் – வணிகம் என்று புதிய வணிக விஷயங்களை தெரிந்து கொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டவேண்டும்.

அதோடு மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய நடைமுறைகள் மற்றும் சந்தைப் பொருளாதாரங்களுக்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்ற தயாராக இருப்பது அவசியம்.

இத்தகைய அம்சங்களில் ஒருவர் கவனம் செலுத்தினால் அவர் பதிய சிந்தனைகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, அல்லது அவரது நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிப்பது போன்ற பலன்கள் தேடி வரும்.

இவை தவிர பணிச்சூழலுக்கு ஏற்ப தன்னை அதில் பொருத்திக் கொள்ளுதல் மிக அவசியம். அப்போதுதான் ஒருவராக வெற்றியாளராக திகழ முடியும்.

செய்கின்ற வேலையில், தொழிலில் ஆர்வம் காட்டி அதில் முனைப்புடன் ஈடுபடும்போது நமது பணி நிச்சயம் பாராட்டப்படும். அந்த பாராட்டுக்குரிய பலனும் நம்மைத் தேடி வரும்.

கேள்வி:- புதிய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் துறைகளில் “பயிற்சி” பெறுபவர்களுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

எம். சாகுல் அமீது :- என்ன தான் கல்வி கற்று இருந்தாலும் ஒரு வேலையில் சேரும் முன்பு அந்த வேலைக்கான பயிற்சி பெறுதல் மிக அவசியமாகிறது. எனவே பயிற்சிக் காலத்தில் நமது சிந்தனையை பயிற்சியில் செலுத்தி கற்றுக்கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும். வருங்காலத்தில் நீங்கள் “வெற்றியாளர்” ஆக வரப்போகிறீர்கள் என்பதை அடையாளம் காட்டும் இடம், பயிற்சிக்களம், எதிர்கால “வெற்றியாளர்” களை நிகழ்காலத்தில் தயார் செய்யும் வேள்விக்கூடம் தான் – பயிற்சிக்களம்.

பந்தயத்தில் ஓடும் எல்லாக் குதிரைகளும் முதல் இடத்தை அடைவதில்லை. நுட்பமான பயிற்சி முறைகளை முறையாக கற்றுத் தேறுபவர்கள், அந்த பயிற்சியில் கற்றுக்கொண்ட விஷயங்களை தான் செய்யும் வேலைகளில் முறையாக பயன்படுத்தினால் சாதனையாளர் என்ற பெயரை எளிதில் பெற முடியும்.

புரிந்து கொள்ளும் தன்மை அல்லது ஆற்றல் நம் வாழ்க்கையை மாற்றி விடும். முதலில் நாம் எதை நோக்கி போக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவில் திறமை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட வேண்டும். பின்னர் அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொன்றாக நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். மேலும் மேலும் தெரிந்து கொள்வேன் என்று ஒருவர் முயற்சி செய்தால் அந்த முயற்சி உங்களை திறமையானவனாக மாற்றும். பல முன்னேற்றங்களை அடைய அது வழி வகுக்கும்.

கேள்வி :- வெற்றியை சுவைக்க நினைப்பவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

எம். சாகுல் அமீது :- வெற்றியை சுவைக்க வேண்டுமானால் அதற்காக தீவிரமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். வெற்றியை எனது ஆலோசனைகள் இது என்று கூறுவதை விட வெற்றியாளர்கள் பின்பற்றிய வழிமுறைகள் இது என்று கூறலாம்.

* குறிக்கோளில் தெளிவாக இருப்பது

* திறமையை தீர்மானிப்பது

* சொந்த திறமையில் நம்பிக்கை வைப்பது

* திட்டமிட்டு செயலாற்றுவது

* அறிவு மற்றும் அனுபவம்

* மற்றவர்களிம் ஒத்துழைப்பை பெறல்

* மன உறுதி

* எதிர்மறை உணர்வுகளை ஓரம் கட்டுவது

* இறையச்சம்

* வெற்றி தோல்விகளை சகஜமாக்கிக்கொள்வது

 

இவ்வாறு வெற்றியாளருக்கான இலக்கணங்களை விளக்கிய சாகுல் அமீது அமீரகத்திலும், தாயகத்திலும் ஏராளமான சமூக நலப்பணிகளிலும் சமுதாய நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி :

இனிய தமிழ் தென்றல்

ஜனவரி – மார்ச் 2005

News

Read Previous

நாடு போற்றும் நல்லாசிரியர் : அல்ஹாஜ் எஸ். அப்துல் காதர்

Read Next

அமைதி தரும் இன்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *