சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்

Vinkmag ad

இன்றைய சிந்தனை.
………………………………………………..

” சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்..”
…………………………………………….

நம் எல்லோருக்குமே விரும்பாத ஒன்றைத்தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டு கின்றன.

அதன் மூலம் நம்முடைய தனித் திறன்கள் என்ன என்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன் முதலாகத் தெரிய வருகிறது.

ஒரு செயலில் இறங்க வேண்டுமா? என்ற தயக்கம் எழுகிற போது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும் என்றுதான் உள் மனது சொல்லும்.

ஆனால் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம் புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது.

எந்தச் சூழலிலும் துணிவாக முடிவு எடுப்பதும், தெளிவாக செயல் படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸி சிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்து வந்த இளைஞன் ஒருவனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலை பார்த்தார்.

விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் மகிழ்ச்சியான வேலையாக இல்லை..

ஓரிடத்தில் நின்று கொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும், வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஆனால் அந்த இளைஞன் மன உறுதியுடன் செயல்பட்டான். செங்கற்கள் கைகளில் வந்து விழுகிற போது எல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரம் ஏறிக் கொண்டு இருந்தது.

ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும் போதும் வாழ்வில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று உறுதி கொண்டான் அந்த இளைஞன்.

கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாக தான் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய் வார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக் கனவு நனவானது.

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞன்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட “நட்சத்திரங்களுடன் ஒரு நடனம்” (Dancing with the Stars) தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவரை அறிந்து கொண்டு இருந்தார்கள்.

தன் வாழ்வில் தன்னைப் பிழிந்த வறுமையைத்தான் பிழிந்து சாரம் எடுத்து, சாறு குடித்து,வெற்றி வேட்கை யைத் தணித்துக் கொண்ட ஜெர்ரி ரைஸ்,தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது சொன்னவை வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்..

ஜெர்ரி ரைஸ் சொல்கிறார்..,

என்னை நோக்கி வீசப்பட்ட செங்கல் களைப் பிடிப்பது வேறு வழி இல்லாத வேலை. ஆனால் பலர் வெட்டி வேலை என்று விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் அந்த வலி மிகுந்த நேரத்தில் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டு எதிர்காலத்தின் வரை படத்தை இதயத்தில் வரைந்து கொண்டேன்..

அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் என்னுள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர் கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன.

கொளுத்தும் வெய்யிலில் அசராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்து இருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது.

நான் சிறந்த கால்பந்தாட்ட வீரராக வருவது என்று முடிவு எடுத்ததுமே, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் தூரம் மலைப் பகுதியில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டேன்..

உடலுறுதியை எவ்வளவு தூரம் வளர்த்து எடுக்கிறோமோ அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதுதான் என் உள் மனம் சொல்லியது.

இந்தக் கூடுதல் தகுதியை நான் வளர்த்து கொண்டதால் கால்பந்தாட்டத்தில் என்னால் தனித் தன்மையுடன் விளங்க முடிந்தது..

ஆம்.என் அன்பு நண்பர்களே.

மிகப்பெரிய சாதனை ஆளராக வளர வேண்டும் என்று விரும்பி விட்டால் குறிக்கோள் நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும்.

கூடுதல் தகுதிகளை வளர்க்க வேண்டும். சவால்களையே சந்தர்ப்பமாக்கி வெற்றி காண வேண்டும்.

ஜெர்ரி ரைசுக்கு மட்டுமல்ல. இது ஒவ்வொருவருக்குமே வாழ்க்கை தருகிற வெற்றிச் சூத்திரம்…..(ஆக்கம் உடுமலை சு.தண்டபானி……)

News

Read Previous

ஆ. பூவராகம் பிள்ளை

Read Next

இணை (த )யத்தில் வாழும் எம் தமிழ் !

Leave a Reply

Your email address will not be published.