சட்டமன்றத் தேர்தல் கூட்டணிஜுரம்! ———— சேமுமு

Vinkmag ad
சட்டமன்றத்  தேர்தல் கூட்டணிஜுரம்!             ———— சேமுமு
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது; அரசியல் மேடையில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்புப் பெற்று வருகின்றன; பெயர் தெரியாக்கட்சிகளும் பிரபலப்படுத்திக் கொள்ளும் காலமிது; லெட்டர்பேடு கட்சிகளும் பலமான கட்சிகளாகக் காட்டிக் கொள்ளும் நேரமிது; இட பேரத்தில்
மும்முரமாக அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சமயமிது; மொத்தத்தில் தேர்தல் ஜுரத்தில் கட்சிகள் பலவும் கை, கால் நடுங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது.
          வழக்கம்போலவே தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஓர் அணி; அ.தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி; ஆக இவ்விரண்டு அணிகளுக்கிடையேதான் மோதல் அமையும்; மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு இன்றைய சூழலில் மிகக் குறைவாகவே தென்படுகிறது;
தவறிப் போய் மூன்றாம் அணி உருவானாலிம் அது சாதிக்கப்போவது பெரிய அளவில் ஒன்றுமில்லை.
          தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இலவச வீடு, நிலம், பட்டா, டி.வி., சைக்கிள், கேஸ், அடுப்பு, 1 கிலோ 1ரூ.அரிசி, அரசு ஊழியர் சம்பள உயர்வு, போனஸ், இலவசக் காப்பீடு, இலவச ஆம்புலன்ஸ்
உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அடிமட்ட மக்களைச் சென்று சேர்ந்திருக்கும் சாதனைகளை முன் நிறுத்தி வரும் சட்டமன்றத் தேர்தலைத் தி.மு.க. எதிர்நோக்கும்.
            அ.தி.மு.க. அணியில் வலது மற்றும் இடது கம்யூனிஸ்டுகள், த.மு.மு.க.வின் ம.ம.க. முதலிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விலைவாசி ஏற்றம், அலைக்கற்றை விவகாரம், மின் தடை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு முதலியவற்றை முன் நிறுத்தித் தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. அணி 
வியூகம் அமைக்கும்.
            பா.ம.க. இப்போதும் அதிக சீட்டுகள் பெறுவதற்காகக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது; தி.மு.க. அணியில் “இருக்கிறோம் ஆனால் இல்லை”, “இல்லை ஆனால் இருக்கிறோம்” என்பதுபோல ஆட்டம் காட்டுவது ஏற்கனவே இற்றுப் போயிருக்கிற அந்தக் கட்சியின் நம்பகத்தன்மையை மேலும் குலைக்கவே செய்யும்.நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஆய்ந்து பார்த்துப் பக்குவமாகச் செயல்பட்டால்தான் பா.ம.க. இந்தத் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை எய்தமுடியும். பா.ம.க.வைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.வின் கதவு அடைபட்டுப் போயிற்று என்றே
கூறலாம். ஒருவேளை விஜயகாந்த் விலகிக் கொண்டால் அ.தி.மு.க. வின் பார்வை பா.ம.க. மீது விழக் கூடும். பா.ம.க.வின் “கூட்டணி ஆட்சியில் இடம் பெற்று அனுபவிப்பது, தேர்தல் நேரத்தில் அணி மாறுவது” போன்ற தன்மைகளைக் காங்கிரஸ் விரும்பவில்லை. தி.மு.க. அணியில் அதைச்
சேர்த்துக் கொள்ளக்கூடாதென்று காங்கிரஸ் கருதுவது இன்றைய தேர்தல் சூழலில் சரியானதாக இருக்கமுடியாது.
             விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுவது ஏறகுறைய உறுதியாகிவிட்ட ஒன்றுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எத்தனை சீட்டுகள் என்பதில்தான் இழு-பறி நிலை நீடிப்பதாகக் கூறுகிறார்கள். “மக்களுடன் தான் கூட்டணி” என்று புறப்பட்ட விஜயகாந்த் இப்போது
அரசியல் எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதே நேரத்தில் “கட்சியை அடகு வைக்கமாட்டேன்”  என்பதிலும் கவனமாக இருக்கிறார். ஆகவே பலமான ஒரு கட்சியாக வளர்த்துக் கொள்வதில் அவரது கவனம் முழுமையாக உள்ளதால் “எடுத்தேந்கவிழ்த்தேன்” என்றில்லாமல் 
நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். பண்ருட்டி இராமச்சந்திரன் போன்றோரின் பழுத்த அரசியல் அனுபவம் அவருக்கு நன்கு பயன்படுகிறது என்றே கூறலாம். 40 இடங்களுக்கும் கூடுதலாகவே விஜயகாந்த்தின் தே.மு.தி.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
              தலித் அமைப்புகளில் தொல்.திருமாவளவன் தி.மு.க. அணியிலும், டாக்டர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க. அணியிலும் இடம் பெறுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தொல்.திருமா தமது கட்சியைப் பெருமளவில் வளர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். அந்தக் கட்சியின் செல்வாக்கும் அதிகரித்திருக்கிறது.இதனால் இரட்டை இலக்க இடங்களைத் தி.மு.க. அணியில் பெற அவர் முயற்சிக்கிறார். தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் இன்றைய நிலை மிகப் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை.அ.தி.மு.க.வில் அவரால் அதிக இடங்களைப் பெறமுடியாது என்பதே உண்மைநிலை.
             இரு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் அணிகள் மாறினாலும் அன்றும் இன்றும் ஒரே நிலைதான். அவர்களால் தமிழகத்தில் “பத்திரிகை அரசியல்” பரபரப்புக் காட்டமுடியுமே தவிர, பாமர மக்களிடையே ஊடுருவி, கட்சியைப் பலப்படுத்தமுடியாத சூழலே காணப்படுகிறது. ஏற்கனவே
அவர்கள் பலமாக இருந்த இடங்கள் இப்போது பலவீனமாகக் காட்சியளிக்கின்றன என்பதே சரியான கணிப்பாக இருக்கமுடியும். அதனால் சென்றமுறை பெற்ற இடங்களை இம்முறை பெறுவதற்கு அ.தி.மு.க. அணியில் அவர்கள் பலமான முயற்சிகளை எடுக்கவேண்டியிருக்கிறதென்று கூறுகிறார்கள்.
             கார்த்திக், சரத் குமார் போன்ற நடிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறார்கள்.நடிகர் விஜய் தந்தை சந்திரசேகர் இருமுறை அ.தி.மு.க. தலைமையைச் சந்தித்துள்ளார்.இயக்குநர் சீமான், “தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தமது இயக்கம், அதன் குறிக்கோள்,
கோட்பாடுகள்,எதிர்காலச் செயல்பாடுகள் எவற்றையுமே சீர்தூக்கிப் பார்க்காமல், அ.தி.மு.க.வை ஆதரிக்கிறார்” எனக் கவிஞர் தாமரை போன்ற அவருடைய ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள். எந்தெந்த வகையில் வந்தாலும் சரி எல்லோரையும் அரவணைத்து இந்தமுறை பலமான அணியை
அமைக்கவேண்டுமென்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடாகவுள்ளது.
               கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மணடலத்தில் 12 இடங்களில் போட்டியிட்டுச் சுமார் ஆறு இலட்சம் வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது. குறிப்பாகக் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இக் கட்சி ஓரளவு செல்வாக்குப் பெற்றுள்ளது. இம் முறை இக் கட்சி
தனித்துப் போட்டியிட்டு மற்றவர்கள் வெற்றி பெற வழி வகுக்குமா அல்லது ஏதாவது கூட்டணியிலிணைந்து சில இடங்கள் பெறுமா என்பது போகப்
போகத் தெரியும். இதுபோன்று ஆங்காங்கே உள்ள சாதிக் கட்சிகளையும் சாதாரணமாக இந்தத் தேர்தலில் எந்தப் பெரியக் கட்சியும் எடுத்துக் கொள்ள
முடியாதென்ற சூழல் இன்றைக்குத் தென்படுகிறது.
                 கூட்டணி குறித்த இன்றைய முதல் அலசல்தான் இது; தேர்தல் நெருங்க நெருங்கக் கட்சிகள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; எதிர்பாராதது நடக்கலாம்; அப்போது இன்ஷா அல்லாஹ் மீண்டும் அலசலாம்.
                 த.மு.மு.க.வின் ம.ம.க.,”234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அணியின் வெற்றிக்குப் பாடுபடுவோம்” என்று அறிவித்திருக்கிறது; “தி.மு.க.வைவீழ்த்துவது ஒன்றே எங்கள் நோக்கம்” என்றும் தெரிவித்திருக்கிறது. மாநாடுகள் மூலமாகத் திரட்டிய கூட்டத்தைக் காட்டி, அதன் அடிப்படையில் பெரும்பலம் இருப்பதாகக் கூறி அதிக இடங்களைப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ம.ம.க. பெற்ற வாக்குகளைக் காட்டி அ.தி.மு.க. அவர்களது ஆர்வத்திற்கு அணை போடக்கூடும்.
                 த.மு.மு.க. வின் ம.ம.க., அ.தி.மு.க.வை ஆதரிப்பது நியாயம்தானா? என்றெல்லாம் வினா எழுப்புவது காலம் கடந்ததாகும். “அரசியலை அரசியலாகவே சந்திப்போம்”  என்று அதன் தலைவர் அறிவித்துவிட்ட பிறகு, “இன்றைய அரசியலை இன்றைய அரசியல் தகிடு தத்தங்களோடு அணுகவும் நாங்கள் தயார்” என்ற மறைமுகமான செய்தியை உணரும்படியாகச் செய்துவிட்ட பிறகு “மோடியின் நண்பியோடு கூட்டு வைக்கலாமா?” என்று ஆராய்வதெல்லாம் வீண்செயலே. கட்சியை நிலைநிறுத்துவது ஒன்றுதான் – இந்தத் தேர்தலில் எப்படியாவது சட்டமன்றத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்ற ஒன்றுதான் – அவர்களது இலட்சியமாகத்
தென்படுகிறதென்று கூறுகின்றார்கள்.
                 டி.என்.டி.ஜே. இயக்கம், “எங்கெல்லாம் த.மு.மு.க. போட்டுயிடுமோ அங்கெல்லாம் அவர்களை வீழ்த்துவது ஒன்றே எங்கள் இலட்சியம்” என்று அறிவித்திருக்கிறது. இவ் விரண்டு இயக்கத்தைச் சார்ந்த சகோதரர்கள் வலைத் தளத்தில் குறிப்பாகத் “தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும”த்தில் மின் அஞ்சல் பரிமாற்றம் செய்துகொள்வது வேதனை தருவதாகவே இருக்கிறது. அந்தக் குழுமத்தில் வரும் அஞ்சல்களில் தமிழகத்தில் ஏறக்குறைய 50 இயக்கங்கள் இருக்கின்றன என்றும், இதனால் சமுதாயமே கூறுபட்டுக் கிடக்கிறதென்றும் சகோதரர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
                  தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும அஞ்சல்களில் காணப்படும் இயக்கங்களில் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை சமுதாய இயக்கங்கள்தாம்; அரசியல் இயக்கங்கள் அல்ல. சமுதாயத்தின் பொதுநலன் கருதிப் பொதுநலச் சேவை செய்ய எத்தனை இயக்கங்கள் வேண்டுமானாலும் தோன்றலாம்; ஆனால் அரசியல்ரீதியாகக் கட்சிகள் தோன்றுவதுதான் சமுதாயத்தைப் பொதுநிலையில்- ஆட்சி அதிகார ஆளுமையில்- வலுவிழக்கச்செய்யு
மென்பதைஅன்புச் சகோதரர்கள் உணர வேண்டியது அவசியமாகும்.
                  தனி நபர் கட்சி, லெட்டர்பேடு கட்சி, காலாவதியான கட்சி என்ற நிலையிலுள்ள கட்சிகளைச் சகோதரர்கள் இன்றைய பட்டியலில் இணைப்பது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்திவிடாது. பலமான அடிப்படை அமைக்க முயன்று கொண்டிருக்கும் பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தனது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
                  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க. அணியில் அதிக இடங்களைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறதென்கிறார்கள். சமீப காலமாக அதன் குரல் வலிமை பெற்றிருப்பதைச் சமச்சீர் கல்வித் திட்டத்தில் உருது, அரபி முதலிய மொழிகள் இணைப்பு சம்பந்தமான அரசு ஆணைகளில் தெளிவாகத் தெரிகிறது. பிரைமரி அமைத்தல் மற்றும் அமைப்புத் தேர்தல்கள் நடத்துதல் மூலம் மாவட்ட ரீதியாக இ.யூ.மு.லீக் தனது செல்வாக்கைப் பரவலாக்கிக்கொண்டு வருகிறது. சமுதாயத்தினர் பெரும்பாலோரின் கருத்தையொட்டியே இ.யூ.மு.லீகின் செயல்பாடுகள் அமைந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. தி.மு.க. அணியில் முன்பைக் காட்டிலும் அதிக இடங்கள் பெற்றால்தான் முஸ்லிம் லீக் மட்டுமல்ல தி.மு.க. வும் சமுதாயத்தின் நல்லெண்ணத்தைப் பெறமுடியும்.
                   சமுதாயம் பிளவுபட்டுக் கிடப்பதாகக் கருதும் சகோதரர்களுக்கு ஓர் அப்பட்டமான உண்மையைக் கூறியாகவேண்டும். நாம் நினைப்பதுபோல் சமுதாயம் பிளவுபட்டுக் கிடக்கவில்லை; சமுதாயத் தலைவர்கள்தாம் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்; சமுதாயம் 90 விழுக்காட்டிற்கும் மேலாக ஒருங்கிணைந்து ஒற்றுமையாகத்தான் உள்ளது; தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தாம் பிணக்கம் கொண்டு பிரிந்து நிற்கிறார்கள். கடந்த காலத் தேர்தல் முடிவுகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள்: “சமுதாயம் தெள்ளத் தெளிவாக ஒரே நிலையில்தான் செயல்பட்டிருக்கிறது; தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தாம் குழம்பிப் போய் வேறுபட்டிருக்கிறார்கள்” என்பது தெரியவரும். இன்றும் அதே நிலைதான். வரும் தேர்தலும் இன்ஷா அல்லாஹ் அதையே நிரூபிக்கக் கூடும்.
நன்றி: “இனிய திசைகள்’ மாத இதழ்
              பிப்ரவரி-2011.
 
  
     

News

Read Previous

திருமணமா? வேலையா? – பாத்திமுத்​து ஸித்தீக்

Read Next

எகிப்து எழுச்சி! தினமணியின் பார்வை : யுகப் புரட்சி!

Leave a Reply

Your email address will not be published.