சங்க இலக்கியத்தில் ஊசி

Vinkmag ad


 

முன்னுரை

பண்டைத் தமிழகம் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலை-பண்பாடு, தொழில்துறை, உற்பத்தித்துறைகளில் சிறந்து விளங்கியுள்ளது. உற்பத்தித்துறையில் இரும்பைக் கொண்டு தமிழர் பலவித கருவிகளை உருவாக்கியுள்ளனர். இரும்பின் கண்டுபிடிப்பானது மனிதனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. ஆதிச்ச நல்லூர் மற்றும் முதுமக்கள் தாழி உள்ள இடங்களிலெல்லாம் தமிழகத்தில் அகழாய்வு நடத்தப்பட்டால் கி.மு 1500 ஆண்டு வாக்கிலேயே தமிழர் இரும்பைப் பயன்படுத்தியிருப்பதை அறிய முடியும். இரும்பின் பயனாகப் பல கண்டுபிடிப்புகள் இருப்பினும் ‘ஊசி‘ சங்கத்தமிழரின் வாழ்வில் பெரும் பங்காற்றியுள்ளது. அது குறித்து ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

இரும்பு

 

நாடோடியாக வாழ்ந்த மனிதனின் வாழ்வில் இரும்பு எனும் உலோகம் நாகரிகத்தைக் கொண்டு வந்துள்ளது. இரும்பின் பயனை அறிந்த பண்டைய தமிழ் மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இரும்பை ஒரு இன்றியமையாத பொருளாக்கிக் கொண்டனர். அரசர்களின் ஆதிக்கத்திற்கும் நாடு விரிவாக்கத்திற்கும் இரும்பே துணை நின்றுள்ளது. எனவேதான் இவ்வுலோகத்தை ‘இராஜ உலோகம்’ என்கின்றனர். வேட்டையாடல், பயிர்த்தொழில், போர்த்தொழில், நெசவுத் தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் இரும்பின் பங்கு மிக மிக அதிகம். அறிவியல் அறிவுடைய சமுதாயத்தில் இரும்பின் பயன் அதிகமாக இருக்கும். எனவேதான் பாரதி ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே’ என்றார்.

 

இரும்புத் தொழில்

 

இரும்பை மணலிலிருந்து பிரித்தெடுத்து, தூய்மைப்படுத்தி உலையில் உருக்கிய பின்னரே விரும்பிய வடிவத்திற்கு மாற்ற முடியும். முதலில், இரும்பு எளிதில் ‘துரு பிடிக்கும் உலோகம்‘ என்பதால் அதை துரு பிடிக்காத உலோகமாக மாற்ற வேண்டும். இரும்பை பிரித்தெடுத்தல், துருத்தி மூலம் காற்றைச் செலுத்தி உருக்குதல், செம்மைப்படுத்த சாணை பிடித்தல், வடிவமைத்தல், பழுது பார்த்தல், பாதுகாத்தல் முதலான தொழில்நுட்பத்தில் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்திருந்தனர். இரும்பை உருக்க துருத்தி (அகம்224.2-5), இரும்பு உலையிலிருந்து உலைக்கரி எடுக்க குறடு (பெரும் 207-208), இரும்புப் பொருட்களைச் சாணைப் பிடிக்க பட்டைக்கல் (புறம் 170.14-17),இரும்புப் பொருட்களைப் பழுது பார்க்கும் கருவி (புறம் 95 4-5) என இரும்புத் தொழிலுக்கென பலவித கருவிகளை உருவாக்கியிருந்தனர். இரும்பை உருக்குவதற்கும், கருவிகள் செய்வதற்கும் மிக அதிகமான வெப்பம் தேவை. இரும்பு தொடர்பான கருவிகளை உற்பத்தி செய்பவர்கள் அதிகமான வெப்பத்தில் வேலை செய்வதால் உடல் கருத்து காணப்படுவர். இவர்களுடைய தோற்றத்தை ஆண் கரடியோடு (அகம்.72 5-6) அகநானூறு ஒப்பிடுகிறது. இரும்பினைக் காய்ச்சி அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகள் மின்மினிபோல நாற்புறமும் ஒளிவிட்டுப் பறக்கும். இத்தீப்பொறிகள் கைகளில் தெறிப்பதால் உடலைவிட கைகள் மிகவும் கருத்திருக்கும். எனவேதான் இரும்பை உருக்கி கருவிகள் செய்பவர்களை ‘கருங்கை கொல்லன்’ (புறம் 170.15) ‘கருங்கை வினைஞர்’ (பெரும்.23) என சங்க நூல்கள் சுட்டுகின்றன. உருக்கி தூய்மைப்படுத்தப்பட்ட இரும்பு எருமையின் முறுக்கேறிய கருமையான கொம்புகள் போலவும் (அகம்.56.3) இரலை மானின் கரிய பெரிய கொம்புகள் போலவும் (அகம் 4.3-4) புன்னை மரத்தின் கரிய உருண்டுதிரண்ட கிளைகளைப் போலவும் (நற்றிணை 249.1) கருத்த நிறமுடையதாக இருக்கும். இது துருப் பிடிக்கும் இயல்புடையது. இந்த இரும்புடன் கார்பன் எனப்படும் கரியைச் சேர்க்கும்பொழுது அது பிரகாசிக்கும் நிறத்துடன் கூடிய துரு பிடிக்காத தன்மையுடைய எஃகாக மாறுகிறது. உலையிடையிடப்படும் கரியானது உருகிய நிலையிலுள்ள இரும்போடு சேர்ந்து துரு பிடிக்கும் தன்மையை நீக்குகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட இரும்பானது உடனடியாக நீரில் போடப்படுவதால் கொல்லர்கள் விரும்பும் வகையில் உறுதியான எஃகாக அது மாறுகிறது. நீரில் இரும்பு போடப்பட்டதை “இரும்பு உண்நீர்” என புறநானூறு (21.9) கூறுகிறது. வடித்தெடுக்கப்பட்ட இரும்பின் நிறமானது மின்னல் போல் பிரகாசிக்கும் என அகப்பாடல் கூறுகிறது. இரும்புடன் கரி சேர்த்து சூடாக்கப்பட்டவுடன் அது ஒளிரும் தன்மையடையும். இதை எஃகு என்ற சொல்லால் குறித்துள்ளனர். இந்த எஃகு கொண்டு செய்யப்பட்ட கருவிகள் எஃகம் என அழைக்கப்பட்டுள்ளது.      “களிறு எறிந்த முரிந்த கதுவாய் எஃகின்” (பதி-45.4) இவ்வாறு பெறப்பட்ட எஃகைக் கொண்டு படைக் கருவிகளை, மருத்துவக் கருவிகளை, தைக்கும் ஊசிகளைச் செய்துள்ளனர்.

 

ஊசியின் தோற்றம்

 

சங்கத்தமிழர் பயன்படுத்திய ஊசியின் தோற்றம் குறித்து அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து பாடல்கள் தெரிவிக்கின்றன. பாலை நிலத்தில் வாழும் செந்நாயின் பற்கள் அரவத்தால் அராவப்பட்ட ஊசியின் நுனி போன்று கூர்மையாகவும் வலிமையாகவும் இருப்பதாகக் கல்லாடனார் தெரிவிக்கிறார்.

 

“அரம்தன் ஊசித் திரள்நிதி அன்ன

திண்நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்”(அகம் 199)

 

புறநானூற்றுப் பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் பனக்குருத்தின் தோட்டோடு ஊசியை ஒப்பிடுகின்றன.

“வட்கர் போகிய வளரிளம் போந்தை

உச்சிக் கொண்ட ஊசி வெண்தோடு” (புறம் 100)

 

என்ற பாடல் வரிகள் பகைவரை அழிப்பதற்காக ஊசி போன்ற பனக்குருத்தியின் தோட்டையோடு, வெட்சி, வேங்கை போன்ற மலர்கள் சேர்த்துக் கட்டப்பட்ட மாலையை அதியமான் தலையில் சூடிக்கொண்டு போர்க்களத்திற்குச் சென்றான் என்கிறது. கையில் கொண்டு செல்லும் ஆயுதம் போலத் தலையிலும் பூக்களோடு கட்டி ஊசி போன்ற பனக்குருத்தை தற்காப்பிற்காக எடுத்துச் சென்று போரிட்டுள்ளனர் என அறியலாம்.

“வண்டுஇசை கடாவாத் தண்பனம் போந்தைக்

குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு” (பதிற்றுப்பத்து 70.7)

 

என்ற வரிகள் சேரமன்னன் பனக்குருத்தின் உச்சியிலுள்ள ஊசி போன்ற வெண்மையான தோட்டுடன் மலர்களைச் சேர்த்துக் கட்டித் தலையில் சூடிக்கொண்டு போர்க்களம் சென்றதாகக் கூறுகிறது. இவ்விரு பாடல்களிலும் பனக்குருத்தின் உச்சியிலுள்ளத் ‘தோடு‘ ஊசி போன்றிருக்கும் என உவமை கூறப்பட்டு ஊசியின் தோற்றம் புலப்படுத்தப்பட்டுள்ளது. பனக்குருத்தின் ‘தோடு‘ மற்றும் செந்நாயின் கூரிய ‘பல்‘ போன்று இரும்பு ஊசி கூர்மை பெறுவதற்குக் கொல்லர்கள் அரத்தைக் கொண்டு அதன் முனையைக் கூர்மைப்படுத்துவார்கள். இதை புறப்பாடல் கூறுகிறது.

“கருங்கைக் கொல்லன் அரம் செய் அவ்வாய்

நெடுங்கை நவியம் பாய்தலின்” (புறம் 36.6-7) கூர்வேல் எஃகம் (அகம் (372-9)

அம்பு,வாள் போன்றவற்றின் நுனியை கூர்மைப்படுத்த சாணைப் பிடித்துள்ளனர். இதை குறுந்தொகை (12.3-4) மற்றும் அகநானூற்றுப் (1.5) பாடல்கள்எடுத்துக் கூறியுள்ளன. இதிலிருந்து ஊசி போன்ற சிறிய கருவிகளைக் கூர்மைப்படுத்த அரமும், அம்பு, வாள் போன்ற பெரிய கருவிகளைக் கூர்மைப்படுத்த சாணையும் பிடித்துள்ளனர் என அறிய முடிகிறது.

 

ஊசியின் பயன்

 

உயிர்களைக் கொல்ல படைக்கருவியாகவும், உயிர்களைக் காப்பாற்ற அறுவை மருத்துவ கருவியாகவும், ஆடைகளை உருவாக்கவும், பூக்களைக் கட்டவும், கட்டில்களை பின்னுவதற்கும் ஊசி பயன்படுத்தப்பட்டுள்ளது.

“கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்”(சிலம்பு.15 212-213)

என்ற சிலப்பதிகாரப் பாடல் வரிகள் போர்க்காலங்களில் ஊசி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. கோட்டை மதிலின் மேற்புரத்தில் கூரிய ஊசிகளை சொருகி வைத்திடுவர். எதிரிகள் கோட்டை மதிலின் மீது மேல்பகுதியைப் பற்றி ஏறாவண்ணம் இதை மறைமுகமாக அமைத்திருப்பர். மதில் மீது கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து ஏறும்பொழுது, அந்த அழுத்தத்தினால் உள்ளே புதைக்கப்பட்டுள்ள ஊசிகள் வெளியே வந்து எதிரிகளின் கைகளை பொத்தல் போட்டுவிடும். எனவே தான் இவ்வூசியை ‘கை பெயர் ஊசி’ என்கிறது சிலப்பதிகாரம். போரில் தாக்குதல் ஒரு கலை. அதுபோல தாக்குதல்களைத் தடுப்பதும் ஒரு கலை. மதில்களின் மேலே தெரியாவண்ணம் அமைக்கப்பட்டுள்ள ‘கைபெயர் ஊசிகளை’ முறிக்கக்கூடிய கருவிகளையும் தமிழர் கண்டுபிடித்திருந்தனர். ஊசி முறிக்கும் கலையையும், கருவிகளையும் குறித்து ஒரு நூலே இருந்துள்ளது என்பதை யாப்பருங்கலக்காரிகையின் பழைய உரை மூலம் அறிய முடிகிறது. தமிழிலிருந்த இது போன்ற நூல்களெல்லாம் அழிந்து போய்விட்டன.

 

மருத்துவப் பயன் –  துருப் பிடிக்காத ஊசியானது மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடல், போரிடல், போர்ப் பயிற்சி மேற்கொள்ளல் போன்ற சூழல்களில் உடல் உறுப்புகளில் ஏற்படும் வெட்டுக் காயங்கள், உறுப்புச் சிதைவுகளை ஊசி கொண்டு தைத்து இணைத்துள்ளனர். ஊசியானது புண்ணின் உள்ளே செலுத்தப்பட்டு பின் மேலே எழுப்பப்பட்டு தையல் போடப்படுகிறது. இது சிரல்பறவை குளத்தில் மீன்பிடிக்க பாயும் பொழுது, அலகை கீழ்நோக்கி செலுத்தி, பின் மூழ்கி எழுகின்ற காலத்து அலகை மேல்நோக்கி எடுப்பதைப் போல இருந்தது என பதிற்றுப்பத்து கூறுகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்

சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி

நெடுவசி பரந்த வடு வாழ் மார்பின்

அம்பு சேர் உடம்பினர்” (பதிற்றுப்பத்து 3-6)

இவ்வாறு ஊசி கொண்டு தைக்கப்பட்ட இடத்தில் புண் ஆறினாலும் வடு மறையாமல் அப்படியே இருக்கிறது. இதுபோன்ற ஏராளமான வடுக்களை உடையவர்களாக சேரனின் படைவீரர்கள் இருந்தனர் என இப்பாடல் கூறுகிறது. அறுவை மருத்துவத்தில் சிறந்திருந்த தமிழர் அதற்கேற்றாற் போன்ற துருப் பிடிக்காத மெல்லிய ஊசிகளை பயன்படுத்தியிருக்கின்றனர் என அறியலாம். இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்’

“” கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு

பஞ்சியும் களையாப் புண்ணர்”(13)என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன

 

ஆடைகளைத் தைக்க –   பண்டைத் தமிழர் ஆடைத் தொழிலில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே பல வகையான ஆடை வகைகளை தைத்து அணிந்துள்ளனர். பட்டினாலும், மயிரினாலும், பருத்தி நூலினாலும் நெய்யப்பட்ட ஆடையை உருவாக்குபவர்களை ‘நுண்வினைக்காருகர்’ என சிலம்பு கூறுகிறது. ஆண்கள் மெய்ப்பை, அஞ்சுகம், காழகம், கலிங்கம் என பல வகையான ஆடைகளை உடுத்தியுள்ளனர். பெண்கள் கச்சு, வட்டுடை, புட்டகம், கொய்யகம், ஈரணி முதலான பல வகை ஆடைகளை உடுத்தியுள்ளனர். சங்க நூல் முழுதும் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. தைப்பதற்குரிய ஊசி கொண்டு இவ்வாறு பலவித ஆடைகளை தைத்து உடுத்தியுள்ளனர். பல்வேறு பூத்தையல்களையும் ஆடைகளில் தைத்து அழகுபடுத்தியுள்ளனர்.

கட்டில் பின்னுதல் – புறநானூற்றுப்பாடல், கட்டில் பின்னும் தொழிலாளி ஒருவன் மழைக்காலத்தில், ஞாயிறு மறைகின்ற வேளையில் மனைவி பிரசவ நிலையில் இருக்கும் சூழலில் மிக விரைவாக ஊசியைக் கொண்டு கட்டிலைப் பின்னியதாகக் கூறுகிறது. மிகவும் தொழிலில் தேர்ந்த அத்தொழிலாளி மிக விரைவாக ஊசி கொண்டு, அக் கட்டிலை உருவாக்குகிறான். அதுபோல கோப்பெரு நற்கிள்ளியும் துரிதகதியில் போரில் ஈடுபட்டு மிக விரைவாக போரில் வெற்றி பெறுகிறான்.

“பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினனன் கையது

போழ்தூண்டு ஊசியில் விரைந்தன்று மாதோ”(புறநானூறு 82)

எனச் சாத்தந்தையார் ஊசி கொண்டு தொழிலாளி ஒருவன் விரைவாகக் கட்டிலைப் பின்னியதைக் கூறுகிறார்.

 

பூக்களைக் கட்டுதல் –       “ஒண் செங்கழு நீர்க் கண்போல் ஆய் இதழ்

ஊசி போகிய சூழ் செய் மாலையன்”(அகநானூறு.48) என்று அகநானூற்று குறிஞ்சிப்பாட்டொன்று பூக்களை ஊசிகொண்டு கட்டியதைப் பற்றிக் கூறுகிறது. தலைவன் செங்கழுநீர்ப் பூக்களோடு, வெட்சிப் பூவையும் சேர்த்து ஊசியால் கோர்த்து அம்மாலையைத் தலையில் அணிந்திருந்தான் என்கிறது.

 

முடிவுரை

 

சங்கத்தமிழர் துருப் பிடிக்காத இரும்பினை உருவாக்கி, அதைக் கொண்டு பல கருவிகளைச் செய்துள்ளனர். அதில் ஊசியும் ஒன்று. இரும்பினால் செய்யப்பட்ட ஊசியை படைக்கருவியாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், ஆடை தைக்கவும், கட்டில் பின்னவும், பூக்களைக் கோக்கவும் பயன்படுத்தியுள்ளனர். படைக்கருவியாகப் பயன்படுத்தப்பட்ட ஊசி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்காது . அதுபோல் மருத்துவ ஊசியை கட்டில் தைக்க பயன்படுத்தியிருக்க முடியாது.  எனவே பலவகையான வடிவத்தில் ஊசிகள் பயன்பாட்டிற்கேற்ப உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற பல வடிவ ஊசிகளைக் கண்டறிந்து தயாரித்து  தொழில்நுட்ப அறிவில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

 

 

துணைநின்ற நூல்கள்

1.             பாலசுப்பிரமணியன் கு.வெ, சங்க இலக்கியம், நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை

2.             மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், உதகம், திருச்சி

 

 

 

முனைவர் ஜ.பிரேமலதா,

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசு கலைக் கல்லூரி,சேலம் -7.

 

அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர்,சொற்பொழிவாளர்,சிறுகதையாசிரியர்,மொழிபெயர்ப்பாளர்,

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர்,65ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும்,6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர்.செந்தமிழ்ச்செல்வி,மானுடம்,இதயத்துடிப்பு போன்ற இலக்கிய இதழ்களில் கட்டுரை எழுதுபவர்.தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் எட்டு முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறிகாட்டுநராக இருப்பவர்.திராவிடப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் நான்கு முனைவர்பட்ட மாணவர்களுக்கும் நெறியாளர்.

http://vjpremalatha.blogspot.com/  மற்றும் http://salem7artstamil.blogspot.in/ என்ற வலைப்பூக்களை நடத்துபவர்.

Dr.J.Premalatha,
Tamil Professor,                    
Govt.Arts College,
Salem-7.Tamilnadu
9488417411

piyupremsurya90@gmail.com

 

News

Read Previous

குழந்தைகளை ஜங்க் புட் மற்றும் பிராய்லர் சிக்கன் – லிருந்து காப்பாற்றுங்கள்!

Read Next

தக்காளி சூப்பும்! சுதந்திரமும்!!

Leave a Reply

Your email address will not be published.