சக்கரவர்த்தியின் மனைவி

Vinkmag ad

 Rajaji ‘s history

பெங்களூரில் இருந்து மெட்ராஸ் போகிற வழியில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்கிற ஊர் ஒன்று இருக்கிறது. இப்போதும் ரயிலில் பிரயாணம் செய்யும் போது இந்த ஊரில் சில வினாடிகள் ரயில் நின்று விட்டுச்  செல்லும் போது பார்க்கலாம். இந்த ஊருக்கு அருகே உள்ள லட்சுமிபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவள் அவள். பெயர் அலர்மேலு மங்கம்மாள் (1887 – 1916). சுருக்கமாக அலமேலு என்றோ மங்கா என்றோ அழைப்பார்கள். பெயரும் ஊரும் லட்சுமிகரமாக இருந்தாலும் அவள் பிறந்த குடும்பம் என்னவோ ஏழைக் குடும்பம்.

ங்காவின் தந்தையார் திருமலை சம்பங்கி அய்யங்கார் ஊர் ஊராகச் சென்று ஹரி கதைகள் சொல்லுபவர். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கா தான் ராஜாஜி என்று நாடே புகழும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் மனைவி.

ராஜாஜி – இள வயதில்

ங்கா” வாகிய அலர்மேலு மங்கம்மாளுக்கும், ராஜாஜி ஆகப்போகிற ”ராஜனுக்கும்” திருமணம் நடக்கும் போது, பிள்ளைக்கே இருபது வயது கூட ஆகவில்லை. பெண்ணுக்கு பத்து வயது தான். அக்கால கட்டத்தில் ராஜனது குடும்பம் மங்காவின் குடும்பத்தை விட சற்றே வசதி ஆனது என்றே சொல்ல வேண்டும். வசதி என்றால் இந்த காலத்தில் பார்க்கிற வசதி எல்லாம் இல்லை. ஏனெனில் வரலாற்றில் பதிவாகி உள்ள கொடுமையான பஞ்சங்களிலும் மோசமானது என 1876 முதல் 1878 வரை இரு ஆண்டுகள் நிலவிய பஞ்சத்தைச் சொல்லலாம். அப்போதையை வைஸ்ராய் லார்ட் லிட்டன், இந்தப்  பஞ்சத்தில் பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், கொள்ளை நோய் என்று பலவகையிலும் 1,36,941 மரணங்கள் சேலம் ஜில்லாவில் மட்டுமே நிகழ்ந்ததாகப்  பதிவு செய்திருக்கிறார். அதன் பிறகு வந்த வருடங்களில் நிலைமை சற்று சீரானது என்றாலும் மக்கள் பெரும்பாலும் வறுமையிலேயே இருந்தனர்.

ராஜாஜியின் தகப்பனார் வேங்கடார்யா என்று பெயர். ஆனால் அவரை சக்கரவர்த்தி அய்யங்கார் என்றே அழைப்பார்கள். அவர் ஓசூரில் முன்சீப்பாக மாதம் ஐந்து ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். இந்த பதவியில் வருமானம் ஒன்றும் இராது, கௌரவம் தான்.  அதனால் வீட்டில் கடும் சிக்கனத்தைக் கடை பிடிப்பாராம். ஒரு சமயம் சிக்கனம் எல்லை மீறிப் போக, ராஜாஜியின் தாயார் தன் நகைகள் அனைத்தையும் துறந்து அவர் முன் வந்து அவருக்கு “அதிர்ச்சி வைத்தியம்” கொடுத்தார்களாம். வறுமை, அதனால் சிக்கனம் என்று அவர்கள் வாழ்க்கை ஒட்டினர். அதே சமயம் வெறும் பணம் வருவாய்க்காக வெள்ளையரிடம் வேலை பார்த்தார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அக்காலங்களில் அரசு ஆள்பவர், வெள்ளையாராக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, அரசரிடம் விஷ்ணுவின் அம்சம் இருப்பதாகவே மக்கள் நினைத்தார்கள். அதனால் அவர்களிடம் அண்டி வேலை பார்ப்பது தவறல்ல என்று நினைத்தார்கள்.

ப்படி அரசு அதிகாரியின் பிள்ளை என்று கனமான கௌரவம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ராஜாஜி, தன் தாயின் பிறந்த ஊரில் இருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஏழைக் குடும்பமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மங்காவைத் திருமணம் செய்து கொள்ள எண்ணினார். அதன்படி லட்சுமிபுரத்தில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் போது, “பெண்” பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டது. பெண்ணைப் பிடித்துப் போக, 1897-ம் வருடம் குப்பம் கிராமத்தில் அக்கால வழக்கப்படி ஐந்து நாள் விமரிசையாக ஆனால் அடக்கமாக திருமணம் நடந்தது. திருமணம் ஆனபின்னும் இன்னும் குழந்தையாகவே இருந்த பெண், அவள் பெற்றோருடனேயே வசித்தாள். பிள்ளையோ சட்டம் படிக்கச்  சென்னைக்குப்  போய் விட்டார். சென்னையில் சட்டப்படிப்பில் ஸீ.ஆர் (ராஜாஜி) தேறி, வக்கீலாகவே ஆஜராகும் நிலை அடைந்த நிலையில் மங்கா, தன் கணவர் வீட்டைத் தனது பனிரெண்டாவது வயதில் சேர்ந்தாள். அடுத்த வருடம் அவளது பதிமூன்றாவது பிறந்தநாளைக்கு மறுதினமே ஓர் ஆண் குழந்தை பிறந்து விட்டது. கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள். அடுத்து இரு ஆண்டுகளுக்குள்ளேயே இன்னொரு பிள்ளை ராமசாமி பிறந்தான். அவ்வளவு சின்ன வயதில் பிள்ளை பெறும், பிரசவ வேதனைகளை தன் மனைவி அனுபவித்ததை எண்ணி எண்ணி, வாழ்நாளெல்லாம் தன் மனது குடைவதாக ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜாஜி காந்தியுடன்

க்காலத்தில் ராஜாஜி வக்கீல் தொழிலில் புகழ்பெற ஆரம்பித்தார். நிறைய வழக்குகளில் வாதாடினார். விளைவாக குடும்பத்துக்கும் செல்வம் சேர்ந்தது. தொழில் ரீதியாகவே ராஜாஜி அரசியல் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தைத் துவங்கிய தாதாபாய் நௌரோஜி, ஹ்யூம், வெட்டர்பர்ன் ஆகியோரின் நட்பைப் பெற்ற, சேலம் வழக்கறிஞர்களில் முக்கியமானவரான,  ஸி.விஜயராகவாசாரியாரின் நட்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. அதன் மூலம் காங்கிரஸ் இயக்கம் பற்றி ராஜாஜிக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இதன்
பிறகு சில வருடங்களிலேயே காங்கிரஸ் பேரியக்கமாக வளர்ந்து விட்டிருந்தது. திலகர், அரவிந்த கோஷ் போன்றோர் செயலில் இருந்த காலகட்டம் அது. 1906ம் வருடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காட ராஜாஜி பதிவு செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒரு பெண் குழந்தை நாமகிரி பிறந்தாள். இதன் பிறகு 1909ல் நரசிம்மன் மற்றும் 1912ல் லட்சுமி ஆகிய குழந்தைகள் பிறந்தன.

வ்வாறு ராஜாஜி – மங்கம்மா தம்பதியினருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.  இக்காலகட்டத்தில் ராஜாஜி பெரும்புகழ் பெற்ற வக்கீலாக ஒரு வழக்குக்கு ஆயிரம் ரூபாய் வாங்கும் அளவுக்கு வளர்ந்தார். வீட்டில் சாரட் வண்டியும் அதில் பூட்ட வெள்ளைக் குதிரை ஒன்றும் கூட இருந்தது. ராஜாஜியின் வீட்டில் எப்போதும் விருந்தினர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். எந்நேரமும்
சாப்பாடு கிடைத்தது. இதற்காகவே வீட்டில் இரண்டு சமையல்காரர்களை அமர்த்தி இருந்தார். அது மட்டும் அல்லாது பொது காரியங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் ராஜாஜி வாரி வாரி வழங்கினார்.

வ்வளவு சம்பாதிக்க ஆரம்பிக்கும் முன்னரே, ஒரு முறை வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தேசிய கப்பல் நிறுவனத்துக்காக தான் சேர்த்து வைத்திருந்த பணம் ஆயிரம் ரூபாயை அப்படியே, தகப்பனார் தடுத்தும் கேளாமல் கொடுத்து விட்டாராம். தன் குழந்தைகளிடம் மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார் ராஜாஜி. அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு, இதைப் பார், அதைப் பார் என்று காட்டுவாராம். இது குறித்து 1907ல் இவ்வாறு எழுதி இருக்கிறார் “என் குழந்தையிடம் ஒரு பொருளைக் காண்பிக்கும் போது, அவன் வேறு ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு கூறுவதைக் கண்டிருக்கிறேன். இதனை நமது ஆசிரியர்கள்
தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தினர் குழந்தை ஏதோ உளருகிறது  என்றே கருதுவார்கள். ஆனால் குழந்தை தனது வியப்புக்குரிய ஞாபக சக்தியை வெளியிடுகிறது என்பதே உண்மை.”. “ஒன்றுக்கொன்று தொடர்பான அவனது சிந்தனைப் போக்கைக் காணாது, அதற்கு பதில் மனத்தைத் திரியவிடுகிறான் என்பதற்காக அவனை நான் கோபித்துக் கொண்டிருந்தால், அந்த இளம் மூளை சரியான பாதையில் செல்வதிலிருந்து எப்படி பலமாக முறித்துத் திசை திருப்பப் பட்டிருக்கும்!”

ராஜாஜி தனக்குப் பிறந்த நான்கு குழந்தைகள் மட்டும் அன்றி, அவரது சகோதரன், மனைவியின் சகோதரன் ஆகியோரின் பிள்ளைகளையும் கூடச் சேர்த்து ஏழு குழந்தைகளை வீட்டில் வளர்த்து வந்தாராம். அக்காலத்தில் இது ரொம்ப சாதாரணம். பிள்ளைகள் மட்டும் அல்லாது பல குடும்பங்களில் தூரத்துச் சொந்தமாக இருந்தாலும், வயதான பெரியவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு ரட்சித்து வந்தனர். ராஜாஜி பிள்ளைகளிடம் பழகும் முறையே வித்தியாசமாக இருக்கும். 1909ம் வருட வாக்கில், மங்காவுக்கே இருபது வயது தான். அக்காலத்தில் பிள்ளைகளில் மூத்தவருடன் மங்காவையும் சேர்த்து ஒருவர் மாற்றி ஒருவராக வீட்டின் எஜமானர் பொறுப்பை எடுத்து நடத்தச் சொல்லுவாராம். இக்காலகட்டத்தில் ராஜாஜியின் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளும்

ராஜாஜி பேரக்குழந்தைகளுடன்

அதிகரித்தன. ஒருமுறை ஐந்தாவது வர்ணம் என்று சொல்லப்பட்ட நிலையில் இருந்த
இரு சிறுவர்களை முனிசிபல் பள்ளியில் சேர்க்கப் போராடினார். பள்ளி நிர்வாகிகள், இந்த இரு மாணவர்களைச் சேர்ப்பதானால் மற்ற இருநூறு மாணவர்களும் வெளியேறி விடுவார்கள் என்று கூறினர். வேறு சிலரும் ராஜாஜிக்கு நெருக்கடிகொடுத்தனர். ஆனாலும் ராஜாஜி வெற்றி கண்டார். அவரே அந்தப் பிள்ளைகள் படிக்கச் சம்பளம் கட்ட, அந்த இரு சிறுவர்களும் பள்ளியில் சேர்ந்தனர். பிரச்னை ஒன்றும் இல்லாமல் தேறினர். இது மாதிரி இன்னொரு சமயத்தில், விதவைப் பெண்ணுக்குத் திருமணம் நடத்தி வைப்பதிலும் ராஜாஜி ஈடுபட்டார். இது அக்காலத்தில் பெரிய செய்தியாகிப் பத்திரிக்கைகளிலும் வந்தது. கணவர் பிரபலமடைந்து கொண்டிருந்த காலத்தில் மங்கா வளர்ந்த பெண்ணானாள். அவளது புகைப்படம் ஒன்றே ஒன்றுதான் கிடைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அது கூட க்ரூப் போட்டோவில் இருந்து தனித்து பிரித்து எடுத்து வைக்கப் பட்டதாம். ராஜாஜிக்குத் தன் மனைவியின் நெற்றியில் தினமும் தன் கையாலேயே திலகம் இடுவது மிகவும் பிடிக்குமாம். அவர் இடும் திலகத்தை நாள் முழுவதும் அழியாமல் பார்த்துக் கொள்ளுவதில் மங்கா கவனம் செலுத்துவாளாம். இது தவிர வேறு பெரிய அலங்காரம் ஒன்றும் இல்லை. தலையை வாரிப் பின்னிக் கூந்தலை ஒரு நாரினால் கட்டி முடிந்திருப்பாள் அவள்.

ன்னதான் கணவர் தாராளமாகச் செல்வம் ஈட்டி வந்தாலும் எளிமையாகவே வாழ்ந்தனர். கணவர் பலநாள் சேமித்து ஏதாவது நகை வாங்கித் தருவதே அவளுக்கு போதுமாக இருந்தது.
அக்கால வழக்கம், சனிக்கிழமை தர்மம் செய்யும் நாளாக கருதினார்கள். அன்று தர்ம காரியமாக மங்கா தகர டப்பாக்களில் அரிசி, தானிய வகைகளை நிரப்பி வாசல் கதவருகே வைத்து விடுவாள். பிராமணர்கள் மட்டும் அல்லாது அனைத்து சாதியைச் சேர்ந்த ஏழைகளும் அதனை பெற்றுச் செல்லுவார்கள். அக்காலத்தில் இது போன்ற எளிய தருமங்கள் செய்யும் வழக்கம் நிறைந்திருந்தது. இப்போது இருப்பது போல வீட்டு வாசலில் கிரில் கதவுகள், “நாய் ஜாக்கிரதை” போர்டுகள், ”வியாபாரிகள் உள்ளே வரக் கூடாது” வாசகங்கள், “வாகனத்தை நிறுத்தாதே” கண்டிப்புகள் அப்போது இல்லை. பெரும்பாலான வீடுகளில் வாயில் திண்ணைக் கதவு போட்டு மூடாமல் இருக்கும். நீண்ட தூரம் பிரயாணம் செய்வோர் இரவு எவர் வீட்டுத்  திண்ணையிலாவது தங்கித்  தூங்கி விட்டு செல்வர். பல சமயங்களில் வீட்டுக்குச் சொந்தக்காரரே உள்ளே அழைத்துச் சாப்பாடும் போடுவார்.

ங்காவுக்குத் தன் குழந்தை, பிறரது குழந்தை என்று வித்தியாசமே இல்லாமல் தன் வீட்டில் வளர்ந்த எல்லாச் சிறுவர்களையும் அன்போடு நடத்தினாள் என்பது தெளிவு. குழந்தைகள் விஷயத்தில் ராஜாஜிக்குக் கோபமே வராது. மங்காவே ஒரு சமயம் கோபித்துக் கொண்டு குழந்தைகளை அடிக்கப் போக ராஜாஜி அவள் கையைப் பிடித்துத் தடுத்துத் தர தரவென்று அழைத்துப் போய் அந்த இடத்தில் இருந்து விலக்கினாராம். மங்கா குழந்தைகளைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தாள். பல் தேய்க்காமல் காபி – டிபன் கிடையாது என்பது அவள் போடும் கண்டிசன்களில் ஒன்று. மங்காவின் குரல் எப்போதும் அடக்கமாக ஒலிக்கும், கணவருடன் வாதம் செய்வது மிகவும் அரிது. இருந்தும் ஏதாவது ஒரு சமயம் அவர்களுக்குள் ஊடல் வராமல் இல்லை.

ராஜாஜியின் மகன் கிருஷ்ண சாமி சொல்கிறார், “அப்பா சில சமயம் ரொம்ப நேரம் கழித்து வருவதுண்டு. அன்றைக்கு அப்படித்தான் நண்பர்களுடன் நீண்ட பேச்சு அளவளாவல் முடித்து நேரம் கழித்து வந்தார். அம்மா அவரை உள்ளே விடவில்லை. கிருஷ்ணன் (அவர் நண்பர்) வீட்டுக்குப் போய் தூங்குங்கள் என்று கூறி விட்டாள்” என்று நினைவு கூர்கிறார். ராஜாஜி கேஸ் விஷயமாக வெளியூர் செல்லும் போது, தன் மனைவிக்கு தமிழில் தான் கடிதம் எழுதுவாராம். இப்போது அந்தக் கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ராஜாஜி செல்வாக்கில் மேலும் வளர்ந்தபோது ஒரு கார் வாங்கி வைத்துக் கொண்டார். அதற்கு கௌஸ் என்ற ஒரு இஸ்லாமியரை ஓட்டுனராக அமர்த்திக் கொண்டார். மங்காவின் பெற்றோர்கள் ஆசாரம் பார்ப்பவர்கள் என்றாலும் மங்கா கணவர் வழியில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகினாள்.
கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, அவர்கள் வைணவக் குடும்பமாக
இருந்தாலும், மாரியம்மன் கோவிலுக்கும் காணிக்கை கொடுத்து அனுப்புவாள். அதே போல கௌஸிடம் பணம் கொடுத்து மசூதிக்கும் காணிக்கை கொடுப்பாள். தெலுங்கு பேசும் பெண்ணான மங்காவுக்கு ராஜாஜியே தமிழ் கற்றுக் கொடுத்தார்.

ண்ணவண்ணமாகக்  கோலங்கள் போடுவதில் மங்காவுக்கு ஆர்வம் அதிகம். நவராத்திரி
தினங்களில் தன் குழந்தைகள் எழுந்ததும் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் எழுந்திருக்கும் முன்னரே ராஜாஜி கொலு பொம்மைகளை அடுக்கி வைப்பார். அன்பான குடும்பம். கடைசிக் குழந்தை பிறந்த பின் மங்காவின் உடல் நிலை மோசமடைந்தது. அதே சமயம் ராஜாஜிக்கும் ஆஸ்துமா போன்ற வியாதிகளால் பலவீனம் அடைந்தார். கணவனுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டி, மங்கா ஏழை சுமங்கலிகளுக்குப்  பூ, சீப்பு, தங்கத் தாலி ஆகியவற்றைத் தானம் செய்தாள். இருந்தும் கணவன் மனைவி இருவருமே உடல்நலம் குன்றி இருந்தனர். 1915ம் வருடம் ராஜாஜி மிகவும் உடல்நலம் குன்றிப் போன நிலையில், அவர்களது குடும்ப டாக்டர் மத்தையஸ் ஏறக்குறைய கை விரித்து
விட்டார். மங்காவும் உடல் நலம் அற்று இருந்தாலும், குளித்து முடித்து அவர் இருந்த அறையை சுத்தம் செய்து பணிவிடை செய்தாள். தன் நகைகள் அனைத்தையும் எடுத்துப் போட்டுக் கொண்டு, நல்ல புடவை ஒன்றை கட்டிக் கொண்டு திருப்பதி வெங்கடாசலபதி படத்தின் முன் நின்று “கணவர் பிழைத்து எழுந்தால் நான் அணிந்திருக்கும் நகைகள்  அனைத்தையும் உனக்கே காணிக்கை செலுத்துகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். மங்காவின் பிரார்த்தனை ஏற்கப்பட்டதாகவே தெரிகிறது – ராஜாஜி பிழைத்து விட்டார்.

எனினும் மங்காவின் உடல்நிலை மோசமாகவே இருந்து வந்தது. இதனால் சேலத்துக்கு அருகே சூரமங்கலத்தில் சற்றே பெரிய காற்றோட்டமான வீட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அந்த வீட்டில் இருந்த அறைகளில் ஒன்று மங்காவின் படுக்கை அறை ஆயிற்று. இரவு பகலாக மங்காவுக்கு பணிவிடை செய்வதற்கே தனது வக்கீல் தொழிலை மூட்டை கட்டி வைத்து விட்டார் ராஜாஜி. சேலம் வைத்தியர்கள் ஏறக்குறைய கை விரித்து விட, பெங்களூரில் இருந்து நஞ்சப்பா என்கிற மருத்துவரை வரவழைத்தார். அவர் வந்து பார்த்தும் பயனற்று போனது. அப்போதெல்லாம், உறக்கமின்றி பல இரவுகளை ராஜாஜி கழித்திருக்கிறார். 1916ம் வருடம் ஒரு நாள் அந்த ஊர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று மங்கா ஆசைப் பட்டாள். மாலையில் ராஜாஜி அவளை எழுப்பி பார் கோவில் பிரசாதம் வந்திருக்கிறது என்று சொல்ல அவள் வெற்றுப் பார்வை பார்த்ததால் வீட்டில் எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. தாங்கமுடியாத வலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த மங்காவை ஆறுதல் படுத்த எண்ணி ராஜாஜி அவள் தலையை தம் மடியில் எடுத்து வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, கால்கள் மரத்துப் போகவே, அவள் தலையை எடுத்து படுக்கையில் கிடத்தினார். அடுத்த பத்து நிமிடத்தில் அவள் மூச்சு விடுவதை நிறுத்தி விட்டது போல தெரிந்தது. ஆமாம், அவள் உயிரை விட்டிருந்தாள்.

பிற்காலத்தில் ராஜாஜி எவ்வளவு சாதனைகள் செய்யப் போகிறார் என்று மங்கா கனவில் கூட கற்பனை செய்திருக்க நியாயம் இல்லை. சிப்பாய் கலகம்  முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு பிறந்த ராஜாஜி சுதந்திரப் போராட்டம் முழுவதும் கண்டு, அதன் பின்னரும் நீண்ட நாட்கள் வாழ்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் வரை வாழ்ந்தவர். மங்காவின் மரணம் அவரைக் குடும்ப வாழ்வில் ஈடுபாட்டைக் குறைத்து, பொது வாழ்வுக்கே தம்மை அர்ப்பணிக்கச் செய்தது என்றால் மிகையில்லை. மங்கா மறைந்த போது, ராஜாஜிக்கு வயது குறைவு தான். அக்காலத்தில் மறுமணம் செய்து கொள்வதும் சகஜம். இருந்தும் ராஜாஜி இன்னொரு துணையைத் தேடவில்லை. ராஜாஜியை எல்லாருக்கும் தெரியும். ஆனால் ராஜாஜியின் வாழ்க்கியில் சிறிய முக்கிய பங்கு எடுத்துக் கொண்ட மங்காவின்  வாழ்க்கையை எல்லோரும் அறிய வாய்ப்பில்லை. அதுவே இக்கட்டுரை வடிக்கத் தூண்டியது.

குறிப்புகள்:
திரு. ராஜ்மோகன் காந்தி அவர்கள் எழுதிய ராஜாஜி வாழ்க்கை வரலாறு, வானதி
பதிப்பகம்

News

Read Previous

மட்டன் பிரியாணி

Read Next

ரமழான் மாற்றத்திற்கான காலம்

Leave a Reply

Your email address will not be published.