கேடில் விழுச் செல்வம்

Vinkmag ad

 

பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ்

எம்.ஏ., பி.டி., மதுரை

 

உடல் வளர்த்தலும், உள்ளடங்கி இருக்கும் உயிர் வளர்த்தலும், உணர்ச்சிப் பிரவாகங்களை நெறிப்படுத்தும் அறிவை வளர்த்தலும், சீரிய சிந்தனை வளர்த்தலும், இவைகளை மூலதனமாகக் கொண்டு ஆன்மீகத்தை வளர்த்தலும் பிறவிப்பயன் எய்தும் வழிமுறைகளாகும்.

 

உடலை வளர்க்க ஊட்டச்சத்துக்கள் இவையிவை என கற்றறிந்து, தெரிந்து வைத்துள்ளோம். நாள் தோறும் அதில் அதீத கவனம் செலுத்துகிறோம். சில பல ஆண்டுகளிலேயே மரணம் என்ற கோரப்பிடியில் மண்ணோடு மண்ணாக காற்றோடு காற்றாக கலந்து கரைந்து அழிந்து போகும். குணங்குடி மஸ்தான் கூறுவது போன்று, சாற்றுக்கும் உதவாத நாற்றக் கருவாடான உயிரின் தற்காலிக தங்குமிடமான உடலுக்கு, இத்தனை பேணுதல் எனின் அதன் அசைவுக்கும், ஆட்டத்திற்கும், எழிலுக்கும், எண்ணத்திற்கும் இன்றியமையாத ரூஹ் என்ற உயிரை மேம்படுத்த எந்தளவுக்கு முயற்சித்துள்ளோம் என்பது தான் முடிவுறா வினாக்குறியாகும். ரூஹ் இருக்கும் வரை தான் உடலுக்குப் பெருமை. உயிர் வெளியேறி விட்டால் உடலுக்கு எந்த மதிப்புமில்லைம், மரியாதையுமில்லை, வேலையுமில்லை. உடல் என்ற கூட்டில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் போதே ஆன்மிக ஒளி பெற முயற்சி எடுப்பவர்களே ஏற்றம் பெற்ற மேலானவர் என்பதை எல்லா சமயக் கோட்பாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன. வள்ளுவரும்

“நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை

மேற் சென்று செய்யப்படும்”

என நிலையாமை அதிகாரத்தில் நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்புக்கு முன்) நல்ல அறச்செயல்களை விரைந்து செய்தல் நன்மை பயக்கும் எனக் கூறுவார்.

 

மார்க்க அறிவு மக்களை நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ கற்பிக்கிறது. ஆன்மீக அறிவு மக்களை வானுறையும் அமரர்களாக உயர்த்துகிறது. இதனையே இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் மார்க்க அறிவு மோர் எனின் ஆன்மீக அறிவு கடைந்தெடுத்த வெண்ணெய்க்கு ஒப்பாகும்; என்பார். மனிதனின் மனிதாபிமானம் சார்ந்த முன்னேற்றங்கள் யாவும் ஆன்மீகத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் அடிகளே எனலாம்.

 

சார்பு நிலை ( THEORY OF RELATIVITY ) என்ற விஞ்ஞான உண்மையை உலகிற்கு உணர்த்திய மாபெரும் அறிவியல் அறிஞன் தன் ஆய்வுக்கூடத்திலிருந்து வெளியே வந்ததும் அங்கு அழகு கொப்பளிக்கும் ரோஜா மலர்களைப் பார்க்கிறான். உன்னைப்போல இயற்கையான மணமும், எழிலும் கொஞ்சும் மலரை என்னால் உருவாக்க முடியவில்லையே என ஏங்கினானாம். இறைவனின் இணையற்ற ஆற்றலை அந்த அறிவியல் ஞானி ஒப்புக் கொள்கிறான் என்றால் அது ஆன்மீகத்தில் அவருக்கிருந்த ஈர்ப்பு எனலாம். பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டு உலகிற்கீந்த சர் ஐசக் நியூட்டனைப் பாராட்டிய போது கடற்கரையில் கிடக்கும் சில கிளிஞ்சல்களைத் தான் நான் பொறுக்கி எடுத்துள்ளேன். ஆழ்கடலில் அமிழ்ந்து கிடக்கும் அளப்பரிய செல்வங்களை நான் அறிந்தேனில்லை எனப் பணிவுடன் கூறுகிறான் எனின் அவனும் ஆன்மீகச் சிந்தனையில் வயப்பட்டுள்ளான் என்று தானே பொருள்.

 

ஆன்மீக ஞானம் பெற இஸ்லாம் பல வழித்தடங்களை நமக்குக் காட்டுகிறது. தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல், மெளனித்திருத்தல், இறைதியானத்தில் லயித்திருத்தல் போன்றன இறைவனை ஞானிகளாக கெளரவிக்கப்படுகின்றனர். ‘தஸவ்வுஃப்’ என்ற ஆன்மீகக் கல்வியால் ஞானநிலை அடைய முடியும் என்பதும் பல ஞானவான்களின் கருத்து . ‘கடவுளைத் தேடும் கல்வியே கல்வி’ என்பர் திரு. வி. கல்யாண சுந்தரனார் அவர்கள். ஒரு பெரியவரிடம் தங்கள் வயது என்ன என்று வினவிய போது நான்கு என பதிலளித்தார். வியப்புற்று தங்கள் வயது எழுபதுக்கும் மேலிருக்கும் போலத் தெரிகிறதே என மடக்கிய போது 70 ஆண்டுகளாக அல்லாஹ்விடமிருந்து திரையிடப்பட்டிருந்தேன் 4 ஆண்டுகளாகத் தான் நான் அவனைப் பார்க்கிறேன். அவனையறிய முற்பட்டதே எனது ஒழுங்கான வயது என்றாராம்.

 

தஸவ்வுஃப் என்றால் என்ன என்று மெஞ்ஞானம் பேரரசர் பாயஸீத்    பிஸ்தாமி (ரஹ்) அவர்களிடம் கேட்ட போது “தூக்கத்தைத் துறந்து துன்பத்தை நுகர்வதாகும்” என்று பதிலளித்தார்கள். தஸவ்வுஃப் என்பதைப் பற்றி விளக்கும் போது மஹ்பூபே ஸுப்ஹானி மாஷுகே ரப்பானி அப்துல் காதர் ஜிலானி (ரஹ்) அவர்கள் சில நற்பண்புகளை அவர்களுக்கு உரித்தானதாக கோடிட்டுக் காட்டுகிறார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைப் போன்று வள்ளன்மை நிரம்பியவராகவும், இஸ்ஹாக் (அலை) அவர்கள் உள்ளதைக் கொண்டு மனநிறைவு பெற்றதைப் போன்ற பண்பு கொண்டவராகவும், ஐயூப் (அலை) அவர்களின் பொறுமையைக் கடைபிடிப்பவராகவும், ஜக்கரிய்யா (அலை) அவர்களின் மன்றாடும் தன்மையை முன்னுதாரணமாகக் கொண்டவராகயும், யஹ்யா (அலை) அவர்களின் இறையணுகு முறையை மேற்கொள்பவராகவும், மூஸா (அலை) அவர்களைப் போன்று உடல் முழுவதும் மறைக்கும் நீண்ட அங்கியணிபவராகவும், ஈஸா (அலை) அவர்களைப் போல இறைவழியில் பயணிப்பவராகவும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் போல ஏழ்மையில் இன்பம் காண்பவராகவும் இருப்பவர்கள் ஆன்மஞானக் கல்வியைப் பெற்றவராவர் என அழகிய எடுத்துக்காட்டுகளை முன் வைத்தார்கள்.

 

இத்தகு பண்புகளை நபி (ஸல்) அவர்களும், சஹாபாப் பெருமக்களும், தாபியீன்களும், தபஉத் தாபியீன்களும் போற்றி பற்றி வாழ்ந்தனர் என்பதை வரலாறு சான்று பகர்கின்றது. அவர்களை அடியொற்றி வாழ்ந்த இறைநேசச் செம்மல்கள் ஆன்மீகப் படித்தரங்களில் படிப்படியாக முன்னேற உள்ளுணர்வு எனப்படும் நஃப்ஸ்களின் தன்மையை உணர்ந்து பக்குவப்பட்டு தமக்குத் தாமே பயிற்சியளித்து பரிபூரண நிலையை எய்தினர்.

 

தீமையைத் தூண்டும் அம்மாரா நஃப்ஸை அடக்கி, தீமையின் பக்கம் சாயாதே என எச்சரிக்கும் லவ்வாமா நஃப்ஸுக்கு உடன்பட்டு, முல்ஹிமா என்ற நல்லுணர்வூட்டும் நஃப்ஸால் நன்மைகளைப் பெருக்கி, முத்மயின்னாவால் மனநிறைவு பெற்று ராழியா என்ற நஃப்ஸால் இன்பநிலை அடைந்து, மர்ழிய்யாவால் அல்லாஹுத்தஆலாவின் அன்பைப் பொருந்தி நபித்தோழர்களின் தரத்திற்கு உயர்ந்து நிற்பர். இதைத் தவிர குத்ஸியா என்ற அந்தரங்க ஆன்மீகவாதிகள் இறைவனின் பேரருளை வெளிப்படையாக அல்லாமல் மறைவிலேயே பெற்று மணமகிழ்வர். இறை தூதர்கள் காமிலா என்ற நிலையை எட்டியவர்கள். இறைக்காதலால் இதயமும், ஆன்மாவும் ஒன்றுபட்டு பேரின்பநிலை எய்தியவர்கள். இறைகட்டளைகளுக்கு முழுமையாய் பணிந்து செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இறை தியானத்தில் தன்னையே மறந்து ‘ஃபனா’ என்ற நிலையடைந்தவர்கள். நான் என்ற கர்வத்தை வேரறுத்தவர்கள். பின் இறைவனளவிலே தன்னைத்தான் அழித்துக் கொண்டு ஃபனாவுல் ஃபனா நிலைக்கு உயர்ந்தவர்கள். அதற்குமேல் இறைவனிடத்தில் தரிபட்டு பகா என்ற சாதாரண மனிதனால் எட்ட முடியாத உச்சத்தை எட்டியவர்கள். இவ்வாறாக ஆன்மமுக்தியும் அடைந்தவர்கள் இறைவனுக்குள் தன்னையும், தமக்குள் இறைவனையும் காந்தம் போல ஒட்டிக் கொள்ளச் செய்து முகம்மிலாகவும், இறைவன் ஒளியில் ஒளியாய் லயித்து விடுவதால் நூரிய்யாவாகவும் ஒளிர்ந்து விடுவர். ஆன்மீக ஞானிகளின் இந்நிலையை ஹதீதுல் குத்ஸியில் “என் அடியான் என்னை அணுகி வரும்போது நானும் அவனை நெருங்கி நேசிக்கிறேன். என் செவி கொண்டு அவன் கேட்கிறான். என் கண் கொண்டு அவன் பார்க்கிறான். என் நா கொண்டு அவன் பேசுகிறான். என் கரம் கொண்டு அவன் பணி செய்கிறான் என அல்லாஹ் சிலாகித்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இத்தகு பக்தி நெறியை பற்றிப் பிடித்து முக்தியடைந்த ஆண்கள் பலர் இறைநேசர்களாக ஆன்ம ஞானிகளாக பரிணமித்துள்ளனர். பெண்களும் ஆன்மீக ஞானத்தைப் பெற்று மாற்றுக் குறையாத தங்கங்களாக மின்னினர் என்பதையும் வரலாற்றேடுகள் எடுத்து இயம்புகின்றன. ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர், அந்த மாதரறிவை மறைக்க முயன்றார். எனினும் அதனையும் மீறி இறை காதலால் ஏற்றமடைந்து இஸ்லாமியப் பதிவேடுகளில் இடம் பெற்றுள்ளனர். இறைநேசச் செல்வியருள் முன்னணியில் இடம் பெறுபவர் ராபியத்துல் அதவிய்யா (ரஹ்) அவர்கள். அவர் “இறைகாதல் என்னை முற்றிலுமாக ஆக்கிரமித்துக் கொண்டதால் எதன் மீதும் ஆசையோ, வெறுப்போ என் இதயத்தில் இல்லை” எனக்கூறி தன் ஆன்மீக ஒளியை வெளிப்படுத்துகிறார். உபாதாவின் மனைவி உம்முஹரம், ஆயிஷா, அல்மன்னூபிய்யா, முஆதுல் அதவிய்யா, ஷவ்வானா, ஷுஹ்தா, ஸித்தி ஸகீனா, ஜைனப் பின்த் முஹம்மத், ஆயிஷா உம்மா, கதீஜா உம்மா, ஆமினா உம்மா, திருவனந்தபுரம் பீ அம்மா, ஆற்றங்கரை நாச்சியார், பரங்கிப்பேட்டை அல்குரைஷ் நாச்சியார், குடந்தை அரைக்காசம்மா, புதுக்கோட்டை ஜச்சா பீவி தென்காசி ரசூல் பீவி, கீழக்கரை சையது ஆசியா உம்மா என இஸ்லாமிய ஞானப் பெண்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. அல்லாஹ்வின் பெண்ணடியார்கள் அல்லாஹ்வின் அன்பொன்றையே இலக்காகக் கொண்டு நம் சமுதாயப் பெண்களை நல்வழிப்படுத்தி பேரொளி பரப்பியுள்ளார்கள்.

 

படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக

மனுவைப் படைத்தான் தன்னை வணங்க

என்ற தத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு எவ்வாறு வித்து முளையாகி, நாற்றாகி, செடியாகி, பூத்து, காய்த்து, கனிந்து பின் பட்டு தான் பிறந்த மண்ணிலேயே புதைந்து மண்ணோடு மண்ணாகி மாறி விடுகிறதோ அதைப்போல இறையாணைக்குக் கீழ்படிந்து, ஷரீஅத் சட்டங்களைப் பேணி, தரீகத் என்ற நல்வழியில் செயல்பட்டு, மஃரிஃபத் என்ற இறைஞானத் தேடலில் மூழ்கி, ஹகீகத் என்ற உண்மையான ஞானத்தைத் தேடி அடைந்து இறைவனிடத்திலிருந்து வந்த நாம் இறைவனிடத்திலேயே மீளுவோம் என்ற இறுதி நிலையை உறுதியாய் உணர்ந்து வாழ்ந்தால் மனிதரில் புனிதராகலாம். ”மனிதன் ஆன்ம நிறைவு காண்பதற்கு கொடுக்கப்படும் ஒரு வாய்ப்பே வாழ்வு” என்பார் தத்துவ மேதை டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள். “எவன் (பாவங்களை விட்டு தன் ஆன்மாவை) தூய்மையாக்கிக் கொண்டானோ அவன் வெற்றி பெற்று விட்டான்” என்பது வான்மறையின் வழிகாட்டல்.

எனவே கலிமாவில் கரைந்து, தொழுகையில் தோய்ந்து, நோன்பில் நுணுகி, ஜகாத்தில் தரிபட்டு, ஹஜ்ஜில் சங்கமித்து ஒல்லும் வகையான் ஓயாமல் அறவினை புரிந்து, நற்கருமங்களை நிலைநாட்டி, நாள்தோறும் நம்மை நாம் விசாரணைக்குள்ளாக்கி, நமது ஆன்மாவைத் தூய்மைபடுத்தி பேரின்ப நிலையையும், சுவனப்பேற்றையும் அடைய அல்லாஹ் பேரருள் புரிவானாக ! ஆமீன் ! ஆன்மீகம் என்ற கேடில் விழுச்செல்வத்தை நாமனைவரும் அடைய இறைவனிடத்தில் மன்றாடுவோம்.

News

Read Previous

கல்வி வானில் எழுஞாயிறு ஜமால் முஹமது கல்லூரி!

Read Next

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *