அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )

Vinkmag ad

A.M.M. காதர் பக்‌ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A.,

 

சிரிய அரபுக்குடியரசின் தலைநகர் டமாஸ்கள் (திமிஸ்க்) மாநகரிலிருந்து 1.45 கி.மீ தெற்கே ’டராஆ’ பிராந்தியத்தில் அமைந்துள்ளது தான் ‘புஸ்ரா’ 3400 ஆண்டுகளுக்கு முன்பே இந்நகர் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதுடன் ரோமானிய பேரரசின் பிராந்திய தலைநகராக திகழ்ந்தது இப்புரதான நகர்.

அக்காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனை ஆலயங்கள், பொதுகலையரங்கம், வசிப்பிடங்கள் இன்னும் அழிவுபட்ட நிலையில் அதன் அடையாளச்சின்னங்களுடன் காட்சி தருகிறது.

அரேபிய தீபகற்பத்திலிருந்து அன்றைய ஷாம் தேசமான இன்றைய ஜோர்டான், பலஸ்தீன், சிரியா, லெபனான் மற்றும் அதன் சுற்றுப் பிராந்தியங்களுக்குச் செல்லும் வணிகர்கள் இந்த புஸ்ரா நகர் வழியே செல்வதுடன் இந்நகருடனும் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் அன்றைய அரபுமக்கள்.

சில ஆயிரம் ஆண்டாகியும் அடித்தளம் அசையாமல் அன்றைய வரலாற்று வாழ்வுக்குச் சான்று பகர்கிறது அந்த கட்டுமானங்கள் கலை அம்சத்துடன் கடின உழைப்பு செய்து நிர்மானித்தது பின்னர் என்ன ஆனது ! எத்தகைய வளமான வாழ்க்கை அலங்கார சூழல் ! அன்று வாழ்ந்தவர்கள்களின் நிலை என்ன? அவர்கள் எங்கே ! அனைத்தையும் விட்டுவிட்டு அன்றே சென்று விட்டனர் ! ஆட்சி எங்கே? ஆணவம் கொண்டு ஆண்டவர்கள் எங்கே ! அரண்மனைகளையும், அரங்கங்களையும், ஆலயங்களையும் பயணிகளின் பார்வைக்கு விட்டுச் சென்றது தான் அவர்களின் சாதனை பார்ப்பவர்களுக்கு படிப்பினையூட்டும் இப்புஸ்ரா நகரில் தான் அன்றொரு நாள் (கி.பி.582) வியாபாரத்திற்காக அபுதாலிப் அரபு வணிகக்குழுவுடன் இணைந்து ‘ஷாம்’ தேசத்திற்குப் புறப்பட்ட சமயத்தில் தமது சகோதரரின் அருமைப் புதல்வர் ஒன்பது வயது சிறுவர் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களையும் அழைத்துச் சென்றார். இவர்களின் பயணக்குழு ‘புஸ்ரா’ நகர் சென்றடைந்ததும் அங்கே ஒரு இடத்தில் முகாமிட்டனர்.

 

கிறித்துவ மதகுரு புஹைரா மடம்

இந்நகரில் ஒரு மடத்தில் பாரம்பரியமாக கிறித்துவ மதகுரு வாழ்ந்து வருவது வழக்கம் அதன்படி அக்காலத்தில் ‘புஹைரா’ எனும் மதகுரு அதில் பொறுப்பேற்று மடத்தை நடத்தி வந்தார். அங்குள்ள பழம்பெரும் ஏட்டுச் சுவடிகளும் வேதக் குறிப்புகளும் அவரது பொறுப்பிலிருந்தது. இச்சுவடுகளில் “அரபுகளிலிருந்து ஒரு இறைத்தூதர் வருவது பற்றிய முன்னறிவிப்பை ஆய்வின் மூலம் கண்ட இவர் தம் காலத்திலேயே  அந்த இறைத்தூதர் அவதரிக்கலாம் என ஆதரவு வைத்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார். அத்துடன் அரபு வியாபாரிகளைக் காணுகிறபோதும் கூர்ந்து கவனித்து வரக்கூடியவர் இருந்த நேரத்தில்…

 

மேகம் குடைபிடித்தது

சிறிய மேகம் மிகவும் தாழ்வாகவும், மெதுவாகவும் நகர் நோக்கி வரும் வணிகக் குழுவினருக்கு மேலே மிதந்து வருவதுடன் இரண்டொரு பிரயாணிகளுக்கு தொடர்ந்து நிழல் அளிப்பதாகவும் அமைந்த அற்புதக்காட்சி அவரது கவனத்தை ஈர்த்தது. பிரயாணக்குழு நின்றவுடன் மேகமும் அவர்கள் முகாமிட்ட மரத்தின் மேலே நிழலிட்டது. அம்மரத்தின் கிளைகளும் நன்கு தாழ்த்தி மேலும் நிழலிட்டது. இவ்வருமையான காட்சி – இறைத்தூதர் பற்றிய முன்னறிவிப்பு சிந்தனைகள் அக்கிருத்துவ மடாதிபதி ‘புஹைரா’ உள்ளத்தில் நிழலிட்டது.

 

அரபுகளுக்கு விருந்து

இக்காட்சிகளை அதிசயித்து ஆவலுடன் கண்ட புஹைரா இக்குழுவினர் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்து அவர்களுக்கு விடுத்த அழைப்பில் “ஓ குரைஷிகளே ! உங்களுக்கு உணவு தயார் செய்துள்ளேன். உங்களில் உள்ள பெரியவர், சிறுவர், சுதந்திரமானவர், வேலையாட்கள் அனைவரும் விருந்திற்கு வருகை தரவேண்டும் என வேண்டிக் கொண்டார்.

 

இவ்வளவும் விபரமான அழைப்பு விடுத்தும் அந்த அரபிகள் சிறுவரான அண்ணலாரை தமது ஒட்டகப் பொதிகளுடன் அங்கேயே இருக்கச் செய்துவிட்டு விருந்துக்குச் சென்றனர். இவர்களனைவரையும் கூர்ந்து கவனித்த ‘புஹைரா’ தாம் எதிர்பார்த்த அந்த அற்புதத்திற்குரியவர் அங்கில்லை என்பதை உணர்ந்து “உங்களில் எவரும் வர வேண்டியதில்லையா” என வினவினார். அதற்கவர்கள் ஒரே ஒரு சிறுவர் வரவில்லை அவர் மிகவும் இளையவர் ஆதலால் அவரை வாகனத்திற்கு அருகில் இருக்கச் செய்துவிட்டு வந்திருக்கிறோம் என்றனர். உடனே அவர், அவ்வாறு செய்ய வேண்டாம் அவரையும் அழையுங்கள். உங்களுடன் அமர்ந்து உணவருந்தட்டும் என்றார். உடன் ஒருவர் சென்று அண்ணலார் (ஸல்) அவர்களை அழைத்து வந்து அமரச் செய்தார்.

 

வேதங்களில் தாம் கண்ட அம்சங்களுடன் அண்ணலாரை உற்று நோக்க கவனித்தவராக இருந்த புஹைரா அண்ணலார் உணவருந்திய பின் அருகில் சென்று உரையாடத் துவங்கினார்.

 

அன்றைய அறியாமை கால அரபுகளின் வழக்கப்படி, ‘லாத்து’ ‘உஸ்ஸா’ வின் பிரமாணமாக கேட்கிறேன். நான் கேற்பவற்றிற்கு சரியான பதில் அளிக்க வேண்டும் என்றார். இறைவனுக்கு இணை  வைக்கும் அந்த சிலைகளின் பெயரால் பிரமாணம் செய்து குறிப்பிட்டதால் மறுத்து விட்டார்கள். அண்ணலார் அவர்கள், அதன்பின் அல்லாஹ்வின் மீது பிரமாணம் செய்து கேட்டார் அப்பொழுது அவர் கேட்ட வாழ்க்கை முறை, உறங்கும் முறை மற்றும் நடவடிக்கை பற்றிய வினாக்களுக்கு எல்லாம் விடையளித்ததுடன் அவரது வேண்டுகோள் படி தமது முதுகில் உள்ள புனிதமிகு நபித்துவத்தின் முத்திரையான மருவையும் கூட அவருக்கு திறந்து காட்டினார்கள். அது வேதங்களில் கூறப்பட்ட நபித்துவத்தின் சின்னம் என்பதையும் அவர் உணர்ந்து மேலும் உறுதி கொண்டார்.

 

புஹைராவும் அபுதாலிபும்

இத்துனை சிறப்பு அம்சங்களுடன் அறிந்து கொண்ட அவர் அபுதாலிபை நோக்கி இவர் உங்களுக்கு எப்படி முறை? என வினவினார் என் புதல்வர் என்றார் அபுதாலிப், இவர் உமது புதல்வரும் அல்லர். இவருடைய தந்தை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கவும் முடியாது என்றும் கூறினார் அந்த மடாதிபதி புஹைரா. அப்பொழுது அபுதாலிப் என் சகோதரர் புதல்வர் என்றார். அவ்வாறாயின் அவர் என்ன செய்கிறார் என்று வினவியதற்கு “இவருடைய தாயார் கர்ப்பிணியாக இருக்கையிலேயே இவருடைய தந்தை காலமாகிவிட்டார். என்றார். உண்மையை உரைத்தீர் உம்முடைய சகோதரரின் புதல்வரை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பிச் செல்லும் இவர் விஷயத்தில் யூதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவரிலிருந்து மகத்தான எதிர்காலம் இருக்கிறது. ஊருக்கு விரைந்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த கிருத்துவ மடாதிபதி.

அபுதாலிப் வியாபாரப் பொருட்களை விற்பனை செய்துவிட்டு மக்கா நகருக்கு அண்ணலார் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.

 

இந்நிகழ்வு நடைபெற்ற நகரான புஸ்ரா வில் – புஹைராவின் மடாலயம் இன்றும் பழைமை வடிவில் சுற்றுச் சுவருடன் பெரிய கூடமாக கூரையின்றி காட்சி தருகிறது. அதன் அமைப்பு அத்தனையும் கிருத்திவ மடாலய கட்டிடக்கலை அம்சத்துடன் அமைந்துள்ளது. இதிலிருந்து சில நிமிட நடை தூரத்தில் தான் அன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகங்களுடன் அமர்ந்த தளம் இப்பொழுது அங்கு நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதின் மிஃராபில் உள்ளது.

 

‘ஒட்டகம் அமர்ந்த இடமஸ்ஜித்’ என்ற கருத்துப்பட அது ‘மஸ்ஜித்’ மப்ரக்  அன் நகா என்று அழைக்கப்பட்டு பழைய கட்டிடக்கலை அம்சத்துடன் காட்சி தருகிறது. இந்நகர் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாத்தின் நிழலின் கீழ் வந்தது. அப்பொழுது முதன் முதலாக அங்கு நிர்மாணம் செய்யப்பட்ட மஸ்ஜித் இன்று ‘ஜாமிவுல் உமரி’ பெயருடன் பெரிய ஜும் ஆ பள்ளியாக அன்றைய கட்டிடக் கலை அமைப்பிலே இன்றும் காண முடிகிறது.

 

ஒரு காலத்தில் பெரும் வல்லரசாக எண்ணிக் கொண்ட ரோமானியர்களின் பிராந்தியத் தலைநகரான புஸ்ராவில் இன்று அழிவுபட்ட கட்டிடங்கள் அதன் வீழ்ச்சியின் படிப்பினை அந்நகரில் பளிச்சிடச் செய்கிறது. அத்துடன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பை அறிந்து ஆவல் கொண்டு வாழ்ந்த ஒரு தவசியின் மடமும் அண்ணலார் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த மப்ரக் அன் நகா பள்ளியினுள்ள தடமும் காட்சியும் காத்தமுன்  நபியின் புனித வரலாற்றின் தொடக்க நிகழ்வுகளும் நமது உள்ளத்தில் அருங்காட்சியாக அமைகிறது.

News

Read Previous

கேடில் விழுச் செல்வம்

Read Next

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் காஜாவுக்கு ஆண் குழ‌ந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *