குழந்தைகளும் வாசிப்பும்

Vinkmag ad
குழந்தைகளும் வாசிப்பும்
எஸ் வி வேணுகோபாலன்

 



“டி வி ” (தொலைக்காட்சி) என்ற இரண்டெழுத்து குழந்தைகளைக் கொண்டாட்டம் கொள்ள வைக்க முடியுமானால், (ஆங்கிலத்தில்) இருபத்தாறு எழுத்துக்களோடு அவர்கள் எத்தனை வேடிக்கை விநோதங்களை அனுபவிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்…
உங்கள் குழந்தையின் கற்பனை உலகைத் திறவுங்கள். ஒரு புத்தகத்தைத் திறவுங்கள்…   


 –  யாரோ 

பேச்சு வரத் துவங்கிய புதிதில், எந்தக் குழந்தையும் சொற்களை ஒரு போராட்டத்தோடு உற்சாகமாகப் பேசிப் பழகுகிறது.  பெரியவர்கள் போலப் பேச எத்தனிக்கிறது.  அதற்கு முந்தைய மாதங்களில் கீழே கிடந்த காகிதத்தை, புத்தகத்தை எடுத்து ஓரங்களை எச்சில் படுத்தியும், கடித்துக் கத்தரிக்கத் துடித்தும் மகிழ்ந்த அதே குழந்தை இப்போது சொகுசாக உட்கார்ந்து கொண்டு, தலைகீழாக ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து “தத்தகா புத்தகா ” என்று தலையை எழிலாக இந்தப் புறமும் அந்தப் புறமும் ஆட்டியபடி மிகவும் தெரிந்த தோரணையில் குஷியாகப் படித்துக் கொண்டே போகிறது.  கடிக்கப் பழகுகிற குழந்தையிடமிருந்து எப்படி ‘சீ சீ கழுதை…’ என்று காகிதத்தைப் பறிக்கிறோமோ அப்படியே, வாசிப்பு மோகத்தில் (அதனால் முடியாது என்றாலும்) மழலை மொழியில் புத்தகத்தை சொந்தம் கொண்டாட ஏங்கும் கைகளில் இருந்தும் புத்தகத்தைப் பாதுகாப்பாகப் (?) பிடுங்கி விடுகிறோம். ஒரு சின்ன மாற்று ஆலோசனையாக, அந்தக் குழந்தையின் ஆர்வத்திற்கு அங்கீகாரம் அளித்து ‘அவர்’ ஒரு புத்தகத்தையும் என்னவும் செய்யட்டும், எப்படியும் படித்துக் கிழிக்கட்டும் (!)  என்று அவருக்கான வண்ணமயமான ஒரு வாசிப்பு உலகை அறிமுகப் படுத்திப் பாருங்கள்….விந்தையான அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்.  

 
குழந்தைகள் இயல்பிலேயே கதைப் பிரியர்கள்.  குழந்தைகளிடம் சளைக்காமல் கற்பனை சரக்கை அள்ளி விட்டுக் கொண்டே செல்பவர்கள், அவர்களது நேயத்திற்கு உரியவராகின்றனர்.  கால காலமாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களாக வீட்டின் மூத்த குடிமக்கள் இருந்து வந்தனர்.  “பாப்பா பாப்பா கதை கேளு, காக்கா நரியின் கதை கேளு”  என்ற அந்த நாளைய (எங்க பாப்பா )  திரைப்பாடலின் அடுத்த வரியே, “தாத்தா பாட்டி சொன்ன கதை, அம்மா அப்பா கேட்ட கதை” என்றுதான் போகும். காதில் விழுகிற கதையில் வரும் காடுகள் குழந்தைகளின் மனக் கண்கள் முன் விரியும். விலங்குகள் கம்பீர நடை பயிலும்.  துள்ளித் துள்ளி ஓடும். பறவைகளின் இன்னிசையும், வண்டுகளின் ரீங்கரிப்பும் கதை சொல்பவரின் வருணிப்பின் துளியிலிருந்து வெள்ளமாகப் பெருகி ஓடும்.  சில நேரங்களில், தெரிந்த கதையைக் கேட்கும் குழந்தைகள் தாமாகவே கற்பனையில் தங்களது சொந்த வேகத்தில் கதையை ஒருபுறம் அவர்களாகவே நகர்த்திக் கொண்டு சும்மா ‘உம் உம்’ கொட்டிக் கொண்டிருப்பதும் நடக்கும்.  
குழந்தைக்குச் சோறு ஊட்டும் சுகம் பெற்றவர்க்கு இருந்தாலும், குழந்தையின் வளர்ச்சிப் போக்கிற்கு இடம் கொடுத்து அவர்களாக எடுத்துப் பிசைந்து உருட்டி எடுத்து ரசித்து மென்று அரைத்து விழுங்கப் பழக்குவது போலவே, வாசிப்பின் வாசல்களையும் குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோர் வரம் பெற்றோர். 
திரைப் பாடல்களை மிக இலகுவாகக் குழந்தைகள் அதே லயத்தில், ஏன், சுருதி பிசகாமலும் கூட அப்படியே பாடுவதைக் கேட்கிறோம்.  பாடல் வரிகளை அவர்கள் மாற்றி இசைக்கவோ, திரும்பத் திரும்ப அதே அடிகளைப் பாடிக் கொண்டோ இருக்கக்கூடும். எத்தனையோ சொற்களை அவர்கள் தவறாக உச்சரிக்கக் கூடும்.  அவர்களைப் பொறுத்தவரையில் அது ஓர் இசைப் பயணம்.  தமது உள்ளத்தில் பதிந்த ஓசையை அதே கதியில் மீண்டும் அவர்கள் பிரதி எடுத்து, பெரியவர்கள் முன் வைக்கின்றனர்.  இசை கெடாமல் தங்களது சொந்த சொல்லகராதியில் இருந்து புதுப் புது சொற்களை அவர்கள் மிக நுட்பமாக எடுத்து நிரப்பி அந்தப் பாடலைப் பாடுகின்றனர். 
அது புரியாமல் நாம் ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்தது போன்ற பதட்டத்தோடு குறுக்கீடு செய்து அந்தப் பாடலில் இடம் பெறும் சொற்களை எடுத்துக் கொடுக்கும்போது கவனம் சிதறுகின்றனர் குழந்தைகள்.  ஓவியக் கனவுகளோடு குழந்தைகள் சுவர்களிலும், தரையிலும், கையில் கிடைக்கும் காகிதங்களிலும் தீட்டும் தீற்றல்களைக் காணும்போதும் சில நேரம் பெரியவர்கள் நடுவராக மாறுவதும், விமர்சகராகி திருத்துவதும் நடக்கிறது. வாசிப்பின் துவக்க நேரங்களிலும் இப்படியான குறுக்கீடு குழந்தைகளது பேரார்வத்திற்கு அணை போடுகிறது. தங்களுக்குப் படிக்கத் தெரியும் என்பது அவர்களது ஆளுமையின் பிரகடனம்.  ஒரு பெருமித அறிவிப்பு.  அதை உச்சி மோந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்களது பயணம் தொடர ஊக்கப்படுத்த வேண்டியதே பெரியவர்களது கடமை.
இயல்பாகவே வானவில்லின் காதலர்கள் குழந்தைகள், தங்களது குழந்தைமைப் பருவத்தின் தரிசனம் போலவே!  அதனாலேயே, வண்ண வண்ணப் படங்கள் நிரம்பிய – அவர்களுக்கு இலகுவாக வாசிக்கத் தட்டுப்படுகின்ற – பெரிய பெரிய எழுத்துக்களாலான –  மிக மிகக் குறைவான சொற்களைக் கொண்ட புத்தகங்களையே அவர்கள் கொண்டாடிக் களிப்பர். அதிலும் நேயமிக்க உறவுகளைக் கொண்ட கதைகள் அவர்களது விருப்பத் தேர்வில் முன் நிற்கும்.  நீதி போதனைகளைவிடவும் இயற்கையை நேசிக்கும் கதைகளும், நட்பைக் கொண்டாடும் கதைகளும் அவர்களைக் கவ்விப் பிடிக்கும்.  வீர சாகசங்களும், கற்பனைக் கெட்டாத அதிசயங்களும் அவர்களுக்கு ஏதோ பரிச்சயமான மனிதர்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் போல் மாறிவிடும்.  பிறகு புத்தகத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த கதா பாத்திரங்கள் வெளியே வந்து மீண்டும் அவர்களுக்காக அந்தக் கதையினை நடத்திக் காட்டிவிட்டு மீண்டும் புத்தகம் மூடும் போது ஓவியக் கோட்டுக்குள்ளும், சொல்லடுக்குகளுக்குள்ளும் போய் உறைந்துவிடுவதுபோல் கூடத் தோன்றும்.   அதனாலேயே கூட, குழந்தைகள் தமக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்குப் போடுவதை அனுமதிப்பதில்லை.  
வெவ்வேறு ரசனைக்குரிய நூல்கள், குழந்தைகளை விவாதங்கள்  நடத்தத் தூண்டுகின்றன. கேள்விகளை எழுப்புகின்றன.  கேள்விகளும், வாதமும், விவாதமும் குழந்தைப் பருவத்தில் வளர்ச்சிக்கு உகந்த இயற்கை உரம். எல்லாக் கேள்விகளுக்கும் தமக்கு விடைகள் தெரிந்திருக்க வேண்டும் என துடிக்கும் பெற்றோர் தோல்வியின் அச்சத்தில் கடுமையான எதிர்வினைகளைப் புரிகின்றனர். தாங்களும் கற்கிறோம் என்று சுவை உணரும் மனிதர்கள் ஆரோக்கியமான சக பயணிகளாக மாறுகின்றனர். 
கேள்விகளைப் பற்றிச் சொல்லும் போது, கல்வியாளர் அருணா இரத்தினம் ஒரு நேர்காணலின் போது இப்படிச் சொல்லியிருந்தார்:  “தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண்மணி சொல்வாராம், கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி அடைத்துவிட வேண்டியதில்லை.  சில கேள்விகள் உள்ளே நின்று உறுத்திக் கொண்டே இருக்கட்டும் – சிப்பிக்குள் விழும் துளிகளில் அரித்தெடுத்துக் கொண்டே இருக்கும் துகள் தான் பின்னர் முத்து உருவாகக் காரணமாகிறது. அதைப் போல….”.  தம்மின் தம் மக்கள் அறிவுடைமை விரும்புவோர் கொண்டாடும் இடம் இது.  
தொலைக்காட்சியின் மாய வலைக்குள்ளோ, கணினியின் மந்திர ஈர்ப்புக்குள்ளோ மணிக்கணக்கில் மயங்கி விழுந்திருக்கும் குழந்தைகளை அற்புதமான நூல்கள் மீட்டெடுக்கும் என்கிறார் குழந்தைகளின் பிரச்சனைகளை அணுகும் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர்.   குழந்தைகளுக்கு மனத் திண்மை, பண்பாட்டாக்கம், எதிர்ப்புணர்ச்சி, சிந்தனைத் திறன், படைப்பாற்றல், மன ஒருங்கமைவு, கூரிய நோக்கு, தெளிவான பார்வை, பொறுமையோடு அணுகும் தன்மை…..என எத்தனையோ நலன்கள் வாசிப்பின் வழி வந்து சேரும். 
புத்தகம் என்பது சட்டைப்பையில் நந்தவனம் போல என்கிறது சீனப் பழமொழி.  பூத்துக் குலுங்கும் வாழ்வுக்கான வழிப்பயணத்தை நூல்கள் அடையாளப் படுத்தும். அதை இளமையிலேயே கண்டறியும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கு அளிப்பது எவ்வளவு மேன்மையான விஷயம்!  நூலகங்கள் ஏற்படுத்தும் பிரமிப்பும், தனக்குகந்த இசைக்கருவியைத் தேர்வு செய்வது போல் தமக்குப் பிடித்த புத்தகத்தைத் தொட்டு எடுத்து வாசிக்கும் பழக்கமும் இளம் வயதில் வாய்க்கப் பெறுவது அவர்களது சொந்த செயல்பாடுகளின் துவக்கப் படியாக மாறும். சுயமதிப்பைக் கூட்டும். 
அறிவியல், வரலாறு, புவியியல், இலக்கியம், கணிதம், மொழி….என எத்தனையோ விதமான திறவுகோல்களைக் கொண்டுதான் மனிதர்கள் மென்மேலும் புதிய புதிய தேடல்களில் புதையல்களைக் கண்டெடுக்கின்றனர் என்பது வெவ்வேறு சாத்திரங்களையும் விருப்பு வெறுப்பின்றி கற்கும் ஆர்வத்தையும் நூல் நிலையங்கள் ஏற்படுத்தும். 
திரையரங்குகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் குடும்பத்தோடு செல்லும் மனிதர்கள் பலர், புத்தகச் சந்தைக்கும் ஏன் குழந்தைகளோடு வரக்கூடாது என்று அண்மையில் ஒரு நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அதிகாரி ஒருவர் வினா எழுப்பினார். தின்பண்டங்களுக்கும், உடை அலங்காரப் பொருள்களுக்கும் ஒதுக்கும் தொகையில் ஒரு சிறிய விழுக்காட்டை புத்தகம் வாங்க எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகின்றனர் பெற்றோர் என்று கேட்டார் வாசகர் ஒருவர். 
தாம் இன்புறுவது மற்றவர்களும் இன்புறச் செய்யச் சொல்லி மகிழும் களிப்பை வாசிப்பு அனுபவம் குழந்தைகளுக்குள் கிளர்த்தும்.  இளமையில் பயிலும் படிக்கும் பழக்கம், முதுமையை எட்டும் பருவத்தில் கூட தனிமை தம்மைத் தின்று விடாதபடி உணர்வு ரீதியாகவும் உடன் நின்று கதகதப்பை ஏற்படுத்தித் தற்காத்துக் கொள்ளச் செய்துவிடும்.
‘காலக் கடலில் செய்யும் பயணத்திற்குக் கலங்கரை விளக்கம் புத்தகங்களே’ என்றார் ஈ.பி.விப்பிள் என்னும் அறிஞர். இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை வாசிப்பைத் தூண்ட?
*************
நன்றி:புத்தகம் பேசுது – ஜனவரி 2011

News

Read Previous

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்!

Read Next

அவசரம் எனும் நோய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *