குறள் சொல்லும் நீதி…!

Vinkmag ad

குறள் சொல்லும் நீதி…!
……………………………………………….

குறள்: 667
………………….

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

குறள் விளக்கம்…
……………………

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் ஏளனம் செய்து புறக்கணிக்கக்கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்…

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது…!

கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக் கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குவதற்கும் தகுதியுடையது ஆகாது, அக்கடலின் அடுத்து சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுவதற்கும் சிறந்த நீராகிறது…!

கரிச்சான் குருவி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் தன்னைவிட உருவத்தில் பெரியதுமான பறவைகள் காகம், பருந்து போன்றவற்றை ஓட ஓட விரட்டும் வல்லமை கொண்டது…!

உருவத்தில் சிறியதாக இருந்தாலும், முள்ளம் பன்றியின் உடலின் இருக்கும் முட்களை வைத்துக் கொண்டு முள்ளம் பன்றியால் சிங்கம் மட்டுமல்ல, புலி, யானை என கொடிய விலங்குகளிடம் இருந்து எளிதாக தப்பிவிட முடியும்…

மாவீரன் நெப்போலியன் உருவத்தால் குள்ளமாய் இருந்தாலும் , அவனது ஊக்கம் கண்டு உலகமே அஞ்சியது…!

ஆம் நண்பர்களே…!

உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்…!

உருவத்தால் பெரியவர், குணத்தால் சிறியராக இருப்பது உண்டு; உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியராக இருப்பதும் உண்டு…!!

ஆகையால், தோற்றத்தை வைத்து எவரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது…!!!

– உடுமலை சு. தண்டபாணி✒

News

Read Previous

சிற்றின்பம் …!! பேரின்பம்…!!!

Read Next

வெற்றியின் ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *