குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!

Vinkmag ad

 

–    ஆடிட்டர் பெரோஸ்கான் –

வரவு செலவுகளை திட்டமிடுவதன் மூலம் ஏற்படும் பயன்கள்

(Benefits Of Budget)

ஒவ்வொரு குடும்பத்தலைவனும் குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிடுகிற போது, தானே திட்டமிடாமல் அத்திட்டமிடலில் தம் குடும்ப உறுப்பினர்களையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். தம் மனைவி, மக்களுக்கு தன்னுடைய பொருளாதார நிலையை விளங்கும் படி விவரித்துக் கூற வேண்டும்.

* இவ்வாறு செய்வதின் மூலம் அவர்களும் தங்களுடைய பொறுப்பை ஆரம்பத்திலிருந்தே உணர வாய்ப்பிருக்கும். உதவியும் ஒத்துழைப்பும் வழங்குவார்கள்.

* மேலும் தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் குறைத்து செலவுகளை முறையாகத் திட்டமிட தங்களுடைய ஆலோசனைகளை முன் வைக்கவும் இத்தகைய செயல்பாடு ஊக்குவிக்கும்.

* கணவன் மனைவியின் கூட்டுப் பொறுப்பை – உணர்த்தி தாங்கள் விரும்பியவாறெல்லாம் செலவு செய்யாமல் தேவையானதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற புரிதலை வழங்கும்.

* கூடுதல் செலவுகளால் தங்களுக்கு ஏற்படப் போகும் எதிர்காலச் சிரமங்களை சிவப்பு விளக்காக நின்று அபாய அறிவிப்புச் செய்யும்.

* திட்டமிடுதலுக்கும், எதார்த்த செலவுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்கி எதிர்காலத்தில் எச்சரிக்கையுணர்வோடு செயல்பட அது உதவும்.

ஆக, இத்தகைய பயன்பாடுகளை உள்ளடக்கிய குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்வதின் மூலம், ஒரு சிறு வியாபாரி, விவசாயி, தொழிலாளி, நடைபாதை கடை உரிமையாளர் என அனைவரும் பயனடைந்து அதன் மூலம் வாழ்வில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைய முடியும்.

வரவு செலவு திட்டம் (Budget)

* வருமானம் மற்றும் செலவுகளுக்கிடையே தொடர்ந்து ஒப்பீடு செய்வதின் மூலம் வீட்டுக்குத் தேவையான செலவுகள் பற்றிய ஒரு தெளிவான புரிதல் நமக்கு ஏற்படும். செலவிடும் போது பட்ஜெட்டில் நாம் ஒதுக்கியுள்ள பண அளவு நம் மனக்கண் முன் வந்து நம்மை ஞாபக மூட்டிக் கொண்டே இருக்கும்.

* பட்ஜெட் என்பது நாம் அன்றாடம் செய்திடும் சாதாரண செலவுகளிலிருந்து மாறுபட்டதாகும். ஒருவகையில் இது காகிதத்தில் நாம் வரைந்துள்ள ஒரு திட்டத்தின் மாதிரி வடிவம் தான். அந்தத் திட்டப்படி நாம் செயல்படுகிறோமா இல்லையா என்பதை நினைவூட்டும் ஒரு காரணியாக இந்த பட்ஜெட் அமையும்.

* பொதுவாக அரசாங்கத்திற்கும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் தான் இந்த பட்ஜெட் அவசியம் என்று வாளாவிருந்து விடாமல் நம்மைப் போன்ற நடுத்தரவாசிகளுக்கும் சிறிய வருவாய் உள்ளவர்களுக்கும் இது அவசியமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்கென நாம் பெரிதாக எதுவும் மெனக்கெடத் தேவையில்லை. இதற்கு ஒரு தாளும் ஒரு பென்சிலும் கொஞ்சம் சிந்திக்கும் திறனும் இருந்தாலே போதும். அந்த அளவுக்கு இது ஓர் எளிமையான வேலை தான்.

* எப்போதும் நீங்கள் சாதாரணமாக அறிந்து கொள்ள விரும்பும் ஒன்று தான் இந்த பட்ஜெட். ஆனாலும் தொடர்ந்து நீங்கள் தட்டிக் கழித்துக்கொண்டு வரும் ஒரு செயலும் இந்த பட்ஜெட் தான். உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் நலனில் அக்கறை கொண்டு, உங்கள் செலவை கட்டுப்படுத்தி, உங்களது பொருளாதார நிலை இன்னதுதான் என்று புரிய வைத்து உங்களுடைய வாழ்வை ஆனந்தமயமாக்கவும் மேம்படுத்தவும் அழைப்பு விடுக்கும் ஒரு சிறந்த நண்பன் தான் இந்த பட்ஜெட்.

வந்தபின் சமாளிப்பது (Tackling Crisis)

இதுவரை பொருளாதாரச் சிக்கல் வராமலிருக்க முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டோம். வந்தபின் அதை நாம் எவ்வாறு சமாளிப்பது ; எவ்விதம் எதிர்கொள்வது என்ற விவரங்களையும் அடுத்து பார்ப்போம்.

* மேற்கண்ட திட்டமிடாத வீண் செலவுகளாலோ அல்லது இடையில் ஏற்பட்ட இழப்பு மற்றும் நஷ்டத்தினாலோ ஒருவர் பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாகி விடாமல் முதலில் அவரிடம் வர வேண்டிய ஒன்று மனந்தளராமை தான். மனித வாழ்வில், லாபமும் – நஷ்டமும் இரவு பகல் போல மாறி மாறி வரக்கூடியவை. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவனே உண்மையான இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியும்.

* இரண்டாவது கட்டமாக, சிக்கல் வந்து விட்டது என்ற அறிகுறி தென்பட்டவுடனேயே ஒரு குடும்பத் தலைவன் முதலில் தன்னுடைய மனைவியை அழைத்து ஒருவரையொருவர் குறை ஏதும் கூறிக் கொள்ளாமல் திறந்த மனதுடன் உள்ளதை உள்ளபடி விளக்கிக் கூற வேண்டும். அதன் பின் இதர குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து எதையும் மூடி மறைக்காமல் பிரச்சினையை வெளிப்படையாக விளக்க வேண்டும்.

* உண்மை நிலையை உணர்ந்து கொண்ட குடும்ப அங்கத்தினர்கள் தங்களுடைய தேவைகளை உடனடியாக குறைத்துக் கொள்ள தற்காலிகமாகவாவது தயாராகிக் கொள்ள வேண்டும். மிக மிக அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற செலவுகளை தள்ளிப் போடவோ அல்லது முழுமையாக தலை முழுகவோ பழகிக் கொள்ள வேண்டும். ( நிர்ப்பந்தமான செலவு மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.)

* எடுத்துக்காட்டாக … ஒருவர் கார் வைத்திருந்தால் அதை விற்று விட்டு பேருந்தில் பயணம் செய்ய மனரீதியாகத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

* வீட்டு எடுபிடி வேலைகளுக்கு ஆள்களை வைத்திருந்தால் அவர்களை நிறுத்தி விட்டு தங்களுடைய வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளத் தயாராக வேண்டும். இப்படி அவரவர் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு பொருத்தமான முடிவுகளை அவர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

* பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், சமூகத்தில் நமது அந்தஸ்து உயரும் என்ற போலியான நம்பிக்கையிலும் வீண் செலவுகள் செய்து, உங்களை நீங்களே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு சிரமம் வரும் போது யாரும் உதவ மாட்டார்கள்.

* சொந்த வீடு பெரிய வீடாக இருந்து கடன் இருந்தால் / வட்டிக்கு அடமானம் வைத்திருந்தால் வீட்டை விற்று விட்டு சிறிய வீடாக வாங்கலாம்.

* பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை அவர்கள் பங்கிற்கு குறைத்து அவர்களையும் உணரச் செய்யலாம். (சிறு துளி பெருவெள்ளம்)

* கடைகளில் சென்று கண்டதையும் உண்டு பணத்தையும் உடலையும் வீணாக்காமல் வீட்டில் எளிய சத்தான உணவைச் சாப்பிடலாம்.

* கடன்காரனாக கட்டிலில் படுப்பதை விட, கடனில்லாமல் (கோரை) பாயில் படுப்பது மேல்.

* கடன்காரனாக பங்களாவில் வாழ்வதை விட, (நிம்மதியாக) குடிசையில் வாழ்வது மேல்.

* கடன்காரனாக காரில் செல்வதை விட, கால்நடையாக (அல்லது சைக்கிளில்) செல்வது மேல்.

* கடன் வாங்கி அவமானப்படுவதை விட, கடனில்லாமல் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வது மேல்.

* கிராம மக்கள் கொகோகோலா, பெப்சி கலாச்சாரத்தை கை விட்டு சத்தான நீர் மோரையோ, நீராகாரத்தையோ இரண்டும் இல்லாத பட்சத்தில் தண்ணீரையோ குடிக்கலாம்.

* உயர் தரமென்று (Branded Goods) உள்நாட்டுப் பொருட்களை வெளிநாட்டுப் பொருள் என விற்பார்கள். சீனாவில் 1 டாலருக்கு வாங்கி 100 டாலருக்கு உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஷு (Sports Shoes) வை அமெரிக்க பிராண்ட் என விற்பது தான் இன்றைய வியாபாரத் திறமை. இதற்கு பல கோடி விளம்பரம், ஆபாசத்தை பரப்பும் நடிகரோ போதை புழங்கும் கலாச்சாரத்தில் உள்ள விளையாட்டு வீரரோ காலில் மாட்டி நடந்ததும் நீங்கள் மெய் மறந்து போவீர்கள்.

* நகை பாத்திரம் முதலியவற்றை அடகு வைத்து கடன் வாங்குகிறீர்கள். ரூபாய் 20,000 பெறுமான பொருளுக்கு ரூ 10,000 பெறுகிறீர்கள். அசலோடு வட்டி குட்டி போடும். உங்கள் கண் முன்னால் உங்கள் பொருட்கள் பல முறை மூழ்கியும் நீங்கள் பாடம் படிப்பதில்லை. பாதி நகையை விற்று மீதி ரூ. 10,000 த்தை உங்களோடு வைத்துக் கொண்டால் நீங்கள் வட்டி கொடுக்கும் பாவத்திலிருந்து நீங்குவீர்கள். வட்டி வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தைத் தொடர்வதை மறுபரிசீலனை செய்யக்கூடும். உங்களது ரூ.10,000 காப்பாற்றப்படும். ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாட்டில் வந்து குடியேறி அப்பாவி தமிழர்கள் சொத்துக்களை வடவர்கள் அபகரித்துக் கொண்ட வரலாறு இது தான். இப்போது பெரியார் நம்மோடு இல்லை. இப்போது உள்ள திராவிடத் தலைவர்கள் அழகு தமிழில் பேசத் தெரிந்தவர்கள். தங்கள் வசதிக்கு பெரியார் பெயரைப் பயன்படுத்துவார்கள். வட்டிக்கு எதிராக மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல மனிதர்கள் அனைவர்க்கும் இதுவும் ஒரு தஃவா தான். ஏகத்துவம் இப்படித்தான் வெளிப்பட வேண்டும். தர்க்கம் செய்வதை விட்டு செயல்படலாமே.

இப்படி அந்தந்தப் பகுதிகளில் தேவையான முடிவுகளை அவரவர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் எடுக்க வேண்டும். ஏனென்றால் நிர்பந்தம் இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபடும்.

பொருளாதாரச் சிக்கல் ஏற்படுகிற போது மனரீதியான உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் பங்களா, கார் என பவிசாக வாழ்ந்த குடும்ப அங்கத்தினர்களை உடனடியாக குறைந்த அளவில் செலவிட்டுக் கொள்ளும் எளிய வாழ்வுக்கு தயார் செய்ய வேண்டும். இது ஒன்றும் கவுரவக் குறைச்சலான ஒன்றல்ல. செல்வ மேம்பாட்டிற்கும் மனித கண்ணியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பொருளாதாரத்தில் நாம் குறைவாக இருந்தாலும் கண்ணியமாக வாழ முடியும் என்பதற்கு திருக்குர்ஆன், நபிவழி, மற்றும் சமகால வழிகாட்டுதல்களை முன்னுதாரணமாகச் சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பெரும் பணக்காரர்கள் பங்குச் சந்தையில் (Share Market) நஷ்டமடைந்தவுடன் உடனடியாக எடுக்கும் முடிவு தற்கொலைதான். இதன் மூலம் சமூகத்தில் தனக்கு உள்ள தரமும் அந்தஸ்தும் தாழ்ந்து போய் விட்டதே என்ற மனரீதியான தவறான உணர்வே இத்தகைய தற்கொலைக்கான அடிப்படைக் காரணம்.

எனவே இத்தகைய மனப்பான்மையை மாற்றுவதற்கு மிகவும் பக்குவமாக ஆலோசனைகள் (Counselling) கூற வேண்டும். அவர்களுக்குள்ள தாழ்வு மனப்பான்மை எனும் தவறான சிந்தனையை (Mindset) முற்றாகக் களைய வேண்டும். இத்தகைய நம்பிக்கையூட்டல்கள் தூய மனதோடு மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். மேலும் இறையருளால் மன உறுதியும் பொறுமையும் கொண்டு நியாய உணர்வோடு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து எல்லா வகையிலும் பிரச்சினைகளை சரி செய்வதற்கு முன் வருவார்கள்.

நன்றி :

சமரசம்

1-15 டிசம்பர் 2006

News

Read Previous

இந்த மூன்று பட்ஜெட்டில் உங்களுடையது எது…?

Read Next

நாளை மறுமையின் வீட்டை நமதாக்குவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *