காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!!

Vinkmag ad

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15) வித்யாசாகர்!

வித்யாசாகர் <vidhyasagar1976@gmail.com>

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!!

கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் இருந்துவிடுவதில்லை. முள்குத்தி முள்குத்தி மேலும் மேலும் ஒரேயிடத்தில் ரணப்படுத்தி மனதை வலிக்கச் செய்யும் பேச்சைப் பேசுவோர் நிற்குமிடத்தில் தான் வாழ்க்கையும் நமது பிறப்பும் அந்த கடக்கும் நிமிடங்களும் இழிவுபடுத்தப் படுகிறது.

பேசுதல் என்பது உயிர்த்தல் என்பதாகும். காற்று வெளிப்பட சப்தம் பிறக்கும் இடத்தில் கத்திகளைத் தீட்டாதீர்கள். நமது ஒவ்வொரு சொல்லும் ஒரு ஆயுதம். நம்முடைய பேச்சு அத்தனையும் உருவாக்கத்தின் முன்னெடுப்பு. நாம் புரட்டிப் போடவேண்டிய ஒரு சமூகத்தின் கடமை நமது பேச்சில் கலந்துரையாடலில் உணர்வின் வெளிப்பாட்டில் தான் உள்ளது.

அதை வெறும் கோபத்திற்கு உட்புகுத்தி வாழ்வை சாபாமாக்கிக் கொள்ளல் முட்டால்தனமில்லையா? பேசுவோர் மனசு வலிக்குமென்றால் நிறுத்தாமல் பேசுவது கொலையில்லையா? கொத்தும் பாம்பின் விசத்தை பேச்சில் வைத்திருப்பவர்கள் மனிதத்திற்கு எதிரானவர்களில்லையா?

அழுதேப் பிறக்கும் மனிதன் சற்று சிரித்து வாழட்டுமே.., சிரிக்கப் பேசுங்களேன்; சற்று நிதானித்து, சிந்தனைக்குப் புரியப் பின் பேசுங்களேன். கோபம் எனைதாண்டி எப்படி வரும் (?) வராது என்று எண்ணிக்கொள்ளுங்கள்; வராது. பிறரை எப்படி நான் வார்த்தையினால் நோகடிப்பேன், ம்ம்ம் முடியாது, அப்படி மாட்டேன் என்று எண்ணிக்கொள்ளுங்கள், பேசமாட்டீர்கள். பிறகு பேசும் பேச்சினால் பாருங்கள் யார் மனசும் நோகாது. எந்தக் கல்லெறிந்தும் யார் மண்டையையும் உடைக்காது. ஆனால் அப்போதைய உங்களின் பேச்சிற்கு அத்தனை மதிப்பிருக்கும்.

எங்கிருந்து வருகிறது எல்லாம்; நமக்குள்ளிருந்துதானே? யார் செய்கிறார் எல்லாவற்றையும் நாம் தானே? பிறகு நம்மை சரிசெய்ய நாம் நினைத்தால் தானே நமது பேச்சும் சீராகும். சீராகப் பேசுகையில் குழப்பம் இராது. வாதம் எழாது. வம்பு வராது. வம்பில்லையேல் அங்கே கோபமெங்கே வர?

வந்தாலும் நிதானியுங்கள். கோபத்தை அடக்குங்கள். சட்டென கோபத்தை கைவிட முயலுங்கள். எந்தத் தருணத்தையும் உங்களுக்கு வசமாக்குங்கள். ஆகும். இரண்டுமுறை அப்படி முயற்சித்து நிதானித்துப் பேசிப்பாருங்கள், சுற்றம் நம்மை பொறுமைசாலி என்றுப் பேசத்துவங்கிவிடும்.

எல்லாவற்றையுமே; நமக்கான அத்தனை நடப்புக்களையும் அசைவுகளையும் ஏற்படுத்தும் முதல் புள்ளி என்பது நம்மிடமே இருக்கிறது. நமக்கான அத்தனை இழப்பிற்கும் வலிக்கும் நன்றாக யோசித்தால் நடுத்தரமாகத் தீர்மானித்தால் தெரியும் நாம் தான் முதல் காரணமென்று. எனவே எதையும் திருத்தமாக செய்வதெனில்கூட நம்மால் செய்யமுடியும்.

ஆனால் அதற்கு முதலில் நீங்கள் தயாராகுங்கள். பேசுங்கள்; மனம் விட்டுப் பேசுங்கள்; மலரின் இதழ்கள் விரிவதை சட்டெனக் காட்டிக்கொள்ளாத இயற்கை எப்படி நம்முன் மணக்கிறதோ அப்படி மணக்கத் தக்கவர்கள்தான் நாமும். அந்த மணம் நமது பேச்சில் நடப்பில் வாழ்க்கையில் வெளிப்படல் வேண்டும். நம் அருகாமை மனிதர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க நாம் வாழலாமெனில் வாழ்வோமே.

சிரித்துச் சிரித்துப் பேசிப்பாருங்களேன், அன்பால் மனதை வருடிப்பாருங்களேன். தாய் டேய் என்றுதானே அழைக்கிறாள், இங்கே வாடி என்று தானே சப்தம் போடுகிறாள், வலிக்கவா செய்கிறது? அன்பிருக்குமிடத்தில் வார்த்தை கூர்மழுங்கிப் போகலையா?

உண்மை புரிந்தோர் பேசுகையில் வரும் சொற்களுக்கு கை கால் முளைப்பதில்லை. மனதுள் வேர்விடும் சொற்கள் அத்தனை ஆழமானவை. ஒரு சக்தியை மாற்றி ஆக்கப்பூர்வாமாக ஆக்கும் சக்தி பேச்சன்றி வேறில்லை. பாடப்பாட கதவு திறக்குமெனில் பேசப்பேச அன்பொழுகினால் மனக்கதவென்ன மூடியாக் கொள்ளும்?

அடித்தால் திருப்பியடிக்கும் வேகத்தைவிட, பேசுகையில் பொறுத்துக்கொள்ளும் மௌனம் கனமானது. பொறுத்துப் பாருங்கள். நிதானித்துப் பாருங்கள். நிதானித்துப் பழகுங்கள். பொறுமையாகயிருந்து பழகுங்கள். பிறகு பேசுங்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பிருப்பதை பின் உணர்வீர்கள். நல்லவனின் கோபம் நாலும் செய்யுமென்பதை அப்போதறிவீர்கள்.

ஆனால் கோபப் படாதீர்கள் என்பதற்கு அர்த்தம் கோழையாய் இருங்கள் என்பதல்ல, வீரம் வெளிப்படும் தருணத்தை அளந்துக்கொள்வதற்குத்தான் கோபத்தை தவிர்க்கவேண்டியுள்ளது. யாரைப் பேசுகிறோம் என்றுப் புரிந்துக்கொள்வதற்குத்தான் கோபத்தை தவிர்க்கவேண்டியுள்ளது. என்னப் பேசலாமென்பதை தெரிந்துப் பேசுவதற்கும், சொல்ல வருவதை யாருக்கும் வலிக்காமல் சொல்வதற்கும் கோபம் கலக்காமல் பேசிப்பழக வேண்டும்.

வலி வரும் போகும்; பேசினால் வரும் வலி மட்டும் தான் போவதில்லை, காலத்திற்கும் வலிக்கிறது. எனவே பார்த்துப் பேசுங்கள். உங்கள் பேச்சினால் ஒரு மலர் புதிதாகப் பூக்காது ஆனால் வாடும். நீங்கள் பேசி ஒரு குழந்தை தானாகப் பிறக்காது ஆனால் பேசி ஒரு உயிரைக் கொல்ல இயலும். பேச்சு ஒரு ஆயுதம். வெட்டும் கத்தி மாதிரி; அதை கோபத்தை நறுக்க மட்டுமே கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேச்சு வெறும் வெளிப்படும் காற்றல்ல சப்தம் மட்டுமல்ல மின்சாரம் போன்றது; படாரென பிறரை தொட்டுவிடும், எனவே அதை மனதைத்தொட மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். பேச்சு ஒரு ரசனை, பேச்சு மனதிற்கு இதம்; அதில் காதலை அன்பைப் பூப்பித்துக் கொள்ளுங்கள்.

பேச்சு என்பது வலிமை; பலம்; அதை நிறைய நிறைய எல்லோருக்கும் கொடுக்கமுயலுங்கள். பேச்சு ஒரு வரம்; சாபமல்ல என்பதை பேசிப் பேசி புரியவையுங்கள். நம் பேச்சின் சொற்களின் உணர்வின் அசைவுகள் நன்னடத்தையை மட்டும் வளர்க்கட்டும். அதற்கான நம்பிக்கை எங்கும் பரவட்டும். பேச்சில் ஒரு குழந்தை சிரிக்கிறது. குழந்தை சிரிக்கப் பேசுகிறோம். அப்படி எல்லோரிடத்தும் பேசுவோம். எங்கும் மனிதப் பூக்கள் மலரட்டும்.. வாழ்க்கை யாவருக்கும் ஆனந்தத்தோடே வசப்படட்டும்.. முட்களில்லா சொற்களால் மூடும் இதயக் கதவுகள் இனி அன்பினால் திறக்கட்டும்.. அடுத்தவர் என்று நினைக்காத நெருக்கத்தை நமக்குள் நாமெல்லோருமே ஆக்கிக்கொள்வோம்.. நம்மைத் தொட்டுச் செல்லும் காற்று நம்மிடமிருந்து நமது நல்லவைகளை மட்டுமே கொண்டுச்செல்லட்டுமே.. அதனால் காலம் இனியதாக மாறட்டுமே..

வாழ்க; காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்!!

வித்யாசாகர்

News

Read Previous

கவுன்சிலர்கள் “ஆப்சென்ட்’

Read Next

இஸ்லாமியர்கள் வணங்கி மகிழலாமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *