காட்டுயிர்களுக்கு ஆபத்து

Vinkmag ad

 காட்டுயிர்களுக்கு ஆபத்து

வாழ்க்கை, உலகம், சூழலியல் எனப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு சுழற்சிமுறைக்கு உட்பட்டது. இதில் ஒரு கண்ணி அறுபடுவதால் தோன்றும் பாதிப்புகள் அது தொடர்புள்ள அனைத்துக்குமே ஏற்படும்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் 1600 கி.மீ. தூரத்திற்குப் பரவியுள்ளது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்.  இங்குள்ள காட்டுயிர்கள் மற்றும் தாவர வகைகளில் இப்பகுதிக்கு மட்டுமே உரியவை பல. பூக்கும் தாவரங்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இங்கு உண்டு. நீரிலும் நிலத்திலும் வாழும் இனங்களில் இங்குள்ள 120 வகைகளில் 90 வகைகளும், ஊர்வனவற்றில் இங்குள்ள 190 வகைகளில் 95 வகைகளும் உலகிலேயே இங்கு மட்டுமே காணப்படுபவை. எலி வகைகள் உள்ளிட்ட சிறு பாலூட்டிகளில் பல இப்பகுதிக்கு மட்டுமே உரியவை. இம்மலைத் தொடரில்தான் தமிழகத்தின் முக்கிய ஆறுகளான காவிரி, வைகை, தாமிரபரணியும் மேலும் 65 சிற்றாறுகளும் உற்பத்தியாகின்றன. காடுகள், மலைகளில் உள்ள இயற்கை உயிர்ச்சத்துக்களால் இந்த ஆறுகள் தாங்கள் பாயும் பகுதிகளையெல்லாம் செழிக்கச் செய்கின்றன.

அற்புதமான இந்த இயற்கை வளத்திற்கு ஆபத்து தோன்றி 200 வருடங்கள் ஆகிவிட்டன. இங்குள்ள காடுகள் அழிக்கப்படுவதால் அங்கு வாழும் விலங்கினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆராய்ந்த ஒரு குழு நமக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்களைத் தந்துள்ளது. “பணப்பயிர் பயிரிடல்” என்ற பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. 1920ஆம் ஆண்டு முதல் 1940 வரையிலான 20 ஆண்டுகளில் மட்டும் இங்கிருந்த 40 சதவிகிதக் காடுகள் காணாமற் போயின.

காடுகள் அழிவதால் ஏற்படும் முதல் பாதிப்பு காட்டுயிர்களுக்குத்தான். காடுகளைக் கட்டமைப்பதிலும் காப்பதிலும் காட்டுயிர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. அவற்றின் உணவும் வாழிடமும் அழிக்கப்படும்போது அவற்றின் வாழ்வும் முடிந்து விடுகிறது. இப்பகுதிக்கு மட்டுமே உரிய அரியவகை விலங்குகள் அழிந்து வருகின்றன. இருக்கிற உயிரினங்களையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்க அரசு கொள்கை முடிவுகள் எடுத்து அவற்றைக் கறாராக அமுல்படுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

விலங்குகளின் அதிசய உலகம்

மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் தங்கமீன்கள் மிகக் குறைவான நினைவுத்திறன் கொண்டவையாம். தங்க மீனால் 4 அல்லது 5 விநாடிகளுக்கு முன்னர் நடந்ததை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியுமாம். நமக்கு இப்படி ஒரு நினைவாற்றல் மட்டுமே இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். வீட்டில் மனைவியைப் பார்த்து சதா “நீ யாரு?” என்று கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீடு எப்படி இருக்கும்? நல்ல வேளையாக நம்முடைய நினைவாற்றல் மோசமாக இல்லை. அதே சமயம் மறக்க வேண்டிய சில விஷயங்களை மறக்காவிட்டாலும் மனநிம்மதி இருக்காது. எனவே நம்முடைய நினைவாற்றலைத் தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டியுள்ளது.

யானைக்கு நினைவுத்திறன் அதிகம். காட்டு யானைகள் தண்ணீருக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. யானைக் கூட்டத்திற்கு முதுமையான பெண் யானைதான் தலைமை தாங்கி சரியான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.  இதற்கு முக்கியத் தேவை நினைவுத் திறன். காடுகள் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டவை. எனவே, யானைகளுக்கு தாகம் ஏற்படும்போது, எப்போதோ பார்த்த ஏரியையோ குளத்தையோ நினைவில் வைத்திருந்து அங்கே அழைத்துச் செல்ல வேண்டியது யானைத் தலைவியின் கடமையாகிறது.

பாம்புகள் குளிர்ரத்தப் பிராணிகள். எனவே மற்ற மனிதர்களைப் போலவோ, மற்ற விலங்கினங்களைப் போலவோ உடலைச் சூடாக வைத்திருக்க அதிக உணவு அவற்றுக்குத் தேவை இல்லை. உடல் சூடாக இருக்க வேண்டும் என்று அவை நினைக்கும்போது சூரிய ஒளியில் உடலைக் காயவிடும். அவ்வளவுதான். நகர்வதற்கு மட்டுமே சக்தி தேவை என்பதால் அவை மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறையே உண்கின்றன. ஆனால் ஹம்மிங் பறவை (காற்றில் பறந்தவாறே மலர்களில் இருந்து தேனைக் குடிக்கும்போது இறக்கைகள் எழுப்பும் சத்தம் ஹம்மிங் செய்வதைப்போல் இருப்பதால் இந்தப் பெயர்) தனது உடல் எடையில் பாதியளவுக்கு தினசரி தேனைக் குடிக்கிறது. ஒரு நொடிக்கு 70 முறை இறக்கையை அடித்துப் பறப்பதால் இந்த அளவு சக்தி அதற்குத் தேவைப்படுகிறது.

நத்தைகள் மிக மெதுவாக நகர்ந்து செல்லக் கூடியவை என்பது நமக்குத் தெரியும். வாழ்நாள் முழுவதும் நகர்ந்தாலும்  கிராமத்தின் ஒரு கோடியில் புறப்பட்ட ஒரு நத்தை கிராமத்தின் மறுகோடியைத் தொட்டிருக்காது. ஆனால் ஸ்விஃப்ட் பறவை (உழவாரன்) ஒரு சர்வதேசப் பயணி. பூமிப் பந்தின் வடபகுதியில் குளிர்காலம் தொடங்கியவுடன் அது கண்டம் விட்டுக் கண்டம் பறக்கத் தொடங்கி விடும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குக் கூட அவற்றால் பறந்து கொண்டே இருக்க முடியும்.

(உதவிய நூல் : கானுயிரும் சுற்றுச் சூழலும்-பாரதி புத்தகாலய வெளியீடு)

News

Read Previous

மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே!

Read Next

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *