காக்கைச் சிறகினிலே

Vinkmag ad

“காக்கைச் சிறகினிலே பாரதி – நின்றன்
சிவந்த நிறம் தோன்றுதையே பாரதி!
பார்க்கு மரங்களெல்லாம் பாரதி – நின்றன்
நேர் கொண்ட பார்வை தோன்றுதையே பாரதி!
கேட்கு மொலியிலெல்லாம் பாரதி – நின்றன்
கீத மிசைக்குதடா பாரதி!
தீக்குள் விரலை வைத்தால் பாரதி – நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா பாரதி.”

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நெருக்கடி, நண்பர்களின் ஆலோசனையின்படி 1908இல் பாண்டிச்சேரி சென்றடைந்தார் பாரதி.

அதிலிருந்து விழுப்புரத்துடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

பாரதியின் “பாஞ்சாலி சபதத்”தின் சில பகுதிகள் விழுப்புரம் இரயில் நிலையம் அருகில் இயங்கி வந்த சரஸ்வதி பிரசில் அச்சிடப்பட்டன.

நினைவில் வாழும் பாரதி ஆய்வாளர் திரு.ரா.அ.பத்மநாபன் அவர்களை 19.08.2010 அன்று, சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் நான் சந்தித்தபோது, மேற்காணும் தகவலை அவர் உறுதி செய்தார்.

1917இல் பாரதியார் தன் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்புகைப்படத்தை எடுத்தக் கலைஞர் சி.கிருஷ்ண ராஜு. இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.

சுதேசிப் பத்திரிகைகள் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால், பாரதியின் இந்தியா மற்றும் சூரியோதயம், விஜயா உள்ளிட்டப் பத்திரிகைகள், பிரெஞ்சுப் பகுதியானப் பாண்டிச்சேரியில் இருந்து இரகசியமாக சென்னை மாகாணத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

பாண்டிச்சேரியில் இருந்து இரகசியமாக இந்த இதழ்கள் சங்கர நாராயணன் (கடையநல்லூர்), நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோரால் இரயில் மூலம் விழுப்புரம் கொண்டு வரப்பட்டன.

விழுப்புரம் வந்ததும் இருவரும் விடுதி ஒன்றில் தங்குவார்கள். பின்னர் உள்நாட்டு தபால் கவர்களில் போடப்பட்டு, சுதேசி அன்பர்களுக்கு அஞ்சல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு 1910ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 1911ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை தொடர்ந்தது.

பாரதி மறைவுக்குப் பின்னும் அவரதுக் குடும்பத்தினரின் தொடர்பு விழுப்புரம் மண்ணுடன் தொடர்ந்தது.

10.09.1952இல் விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையில் பாரதி விழா நடந்தது. இதன் சிறப்பு அழைப்பாளர், பாரதியின் மகளார் தங்கம்மாள் பாரதி.

இவ்விழாவில், சிவாஜி பத்திரிகையின் ஆசிரியர் திருலோகம் சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த இடத்தில் நினைவில் வாழும் ரா.அ.பத்பநாபன் (ஆர்.ஏ.பி.) அவர்கள் குறித்துச் சொல்ல வேண்டும்.

விழுப்புரம் இரயில் நிலையத்தையொட்டியுள்ள பஜனைக் கோயில் தெருவில் இவர் வசித்து வந்த வீடு, உலகம் முழுவதும் இருக்கும் பாரதி அன்பர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு பெரும் புதையலாக இருந்த்து.

பாரதி தொடர்பான அரிய சேகரிப்புகள் ஆர்.ஏ.பி. அவர்களின் ஈடுபாட்டினாலும் கடும் உழைப்பினாலும் இங்கு இடம்பெற்றிருந்தன.

பாரதி நினைவுநாளில் இவரது நினைவையும் போற்றுவோம்.

News

Read Previous

முதுகுளத்தூரில் திமுக தெருமுனை பிரசாரம்

Read Next

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *