கம்யுனிகேஷன்

Vinkmag ad

Dr.Fajila Azad faj darling 2.JPG

(International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

கம்யுனிகேஷன்

— டாக்டர் பஜிலா ஆசாத்

நான் சொல்வதை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதே இன்று பலரின் ஆதங்கமாக இருக்கிறது. பெரும்பாலும் பலரும் நாங்கள் என்ன சொன்னாலுமே சண்டை சச்சரவாக போய் விடுகிறது. ஒன்றுமில்லாத விஷயங்கள் கூட பூதாகரமான பிரச்னையாக போய் விடுகிறது என்று வருந்துவார்கள். இப்படி எதை சொன்னாலும் தவறாக போனால் என்ன தான் செய்வது, எப்படி தான் சொல்லி புரிய வைப்பது என்று இயலாமையில் தவிப்பார்கள்.

சொல்பவர்களுக்கு முறையாக தெரியக் கூடிய ஒன்று கேட்பவர்களுக்கு முரணாக தெரியலாம் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொண்டால் இந்த பிரச்னைக்கே இடமில்லை.

பொதுவாக என்ன சொல்கிறீர்கள் என்பதை விட எப்படி சொல்கிறீர்கள் என்பது மிக முக்கியம். யாரிடம் பேசும்போதும் எந்த தேவைக்காக நீங்கள் இப்போது பேசப் போகிறீர்கள். அவர்களிடம் எதை நீங்கள் முன்னிறுத்த நினைக்கிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் முன்னிறுத்தப் போகும் செய்தியை உங்கள் கோணத்திலிருந்து மட்டும் பார்க்காமல் அவர்கள் கோணத்திலிருந்தும் யோசித்து அதற்கு நீங்கள் என்ன ரியாக்ஷன் எதிர்பார்க்கிறீர்கள். என்ன ரியாக்ஷன் வரக் கூடும் என்ற கவனத்தோடு ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் போது அது நேர விரயத்தையும் தவறான புரிதலையும், வீண் பிரச்னைகளையும் தடுப்பது மட்டுமன்றி நீங்கள் எதிர்பார்க்கும் பலனையும் தரும்.

ஒரு ராஜாவிற்கு வித்தியாசமான கனவொன்று வருகிறது. அதன் பலனை அறிந்து கொள்வதற்காக கனவின் பலன் சொல்வதில் தேர்ந்த நிபுணரை அவைக்கு அழைத்து வர செய்கிறார். அவை ஆர்வத்தோடு கூடியிருக்க ராஜாவும் தான் கண்ட கனவை அங்கே சொல்கிறார். கனவைக் கேட்ட அந்த நிபுணரின் உடல் இறுகி முகம் கறுக்கிறது. அதை பார்க்கும் ராஜாவிற்குள்ளும் பதற்றம் எழ, சொல்லுங்கள் நிபுணரே இந்த கனவு என்ன சொல்கிறது என்று அவரும் பதைபதைக்கிறார். அவையெங்கும் அந்த பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இப்போது படபட வார்த்தைகளோடு, உணர்ச்சி ததும்ப பரபரவென அந்த நிபுணர் சொல்கிறார்.. மன்னிக்கவும் அரசே, இந்த கனவின் பலன் அத்தனை நல்லதல்ல, உங்களுக்கு முன் உங்கள் சந்ததியினர் இறந்து விடுவார்கள். உங்களுக்கு பின் ஆட்சி செய்வதற்கு உங்கள் சந்ததியினர் இருக்க மாட்டர்கள் என்கிறார்.

அடுத்த நொடி அவையெங்கும் கூச்சலும் குழப்பமும் எழ, அத்தனை பேரும் அந்த நிபுணருக்கு எதிராக சப்தமிட, நிபுணர் சொன்ன கனவின் பலனை தாங்கிக் கொள்ள முடியாத ராஜாவும் வெகுண்டெழுந்து அந்த நிபுணரை கைது செய்ய உத்தரவிடுகிறார்.

அந்த ராஜா கண்ட கனவிற்கான பலனைதான், அதன் கணிப்பை தான் அந்த நிபுணர் சொன்னார், இல்லாத ஒன்றை அவராக கற்பனையில் சொல்லி விடவில்லை, என்றாலும் அவர் சொன்னது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக இருந்ததால் இங்கு அத்தனை பேரின் கோபமும் ஆற்றாமையும் இயலாமையும் அவர்களுக்கு முரணான செய்தியை சொன்ன அந்த நிபுணர் மேல் திரும்புகிறது. நிபுணரும் கைது செய்யப் படுகிறார். அங்கே அசாதரண சூழ்நிலை நிலவுகிறது.

வருத்தமும் குழப்பமுமாக தவித்த ராஜாவை ஆசுவாசப் படுத்த நினைக்கும் பிரதான மந்திரி வேறு ஒரு தேர்ந்த நிபுணரை அழைத்து வருவதாக நகருக்குள் சென்று உடன் அழைத்தும் வருகிறார். அரசவை பரபரப்போடு மீண்டும் கூடி இருக்க, இப்போது ராஜாவின் கனவு அந்த புதிய நிபுணரிடம் சொல்லப் படுகிறது. அரசவை முழுதும் ஆவலோடு காத்திருக்க அந்த புதிய நிபுணர் மிக மகிழ்ச்சியோடு சொல்கிறார். அரசே வந்தனம்! நீங்கள் மிக சிறப்பான கனவைக் கண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மிக நீண்ட ஆயுள். அதைக் கேட்கும் ராஜாவின் உடல் சிலிர்க்கிறது. மனம் மகிழ்கிறது. அதைக் கண்ட அவையினர் அத்தனை பேரும் ராஜவை புகழ்ந்து வாழ்த்தி கரவொழி எழுப்பி சந்தோசிக்கின்றனர். அந்த இடமே விழாக்கோலம் பூண நிபுணர் தொடர்கிறார்… உங்கள் சந்ததியினருக்கு பின்னும் நீங்கள் மிக சிறப்பாக அரசாள்வீர்கள். இந்த கனவின் பலன் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்ததில் நான் மிகப் பெருமைப் படுகிறேன். வாழ்க அரசர். வளர்க நாடு.

இங்கே என்ன நடந்தது என்று கவனித்தீர்களா?! இருவருமே ஒரே பலனை தான் சொன்னார்கள், யாரும் இல்லாத ஒன்றை சொல்லவில்லை. இரண்டின் (presupposition)ப்ரீசப்போஸிஸனும் ஒன்று தான். இரண்டுமே ஒரே கருத்தை தான் சொல்கிறது. அதாவது ராஜாவின் கண்ணுக்கு முன்னாடி அவர்கள் சந்ததியினர் இறந்து விடுவார்கள் என்றும் அதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ராஜா அவர்கள் சந்ததியினருக்கு பின்னாலும் வாழ்வார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இங்கு இதை இந்த சபைக்கு எப்படி சொல்ல வேண்டும் என்ற அலசல் தான், அக்கறைதான், பிரச்னைக்கும் தீர்வுக்குமான இடைவெளி.

ஒரு சென்சிட்டிவான விஷயத்தில் முதலாமவர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஒரு நெகிழ்வான விஷயத்தில் மற்றவர் கவனம் செலுத்தி விட்டார். ஒருவர் நெகடிவான விஷயத்தை முன்னிறுத்தினார். மற்றவர் பாஸிட்டிவான விஷயத்தை முன்னிறுத்தினார். ஒருவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தன் உணர்ச்சிகளை சீர் செய்யாமல் அப்படியே தன் கருத்தை வெளியிடுகிறார். மற்றவர் தெளிவாக உறுதியாக அரசருக்கு பிடித்தமான வகையில் அதை எடுத்து சொல்கிறார். ஒருவர் அந்த அவைக்கு விரும்பாத பொருத்தமற்ற ஒன்றை பேசி அந்த சூழலையே தனக்கு எதிராக தானே திருப்புவதை அறியாமல், எதையுமே கணக்கிடாமல் பட்டென்று மனதில் பட்டதை பேசி தானும் உணர்ச்சி வசப்பட்டு மற்றவர்களையும் சங்கடப்படுத்தி விடுகிறார். ஆனால் மற்றவர் நேர்மறையாக, நிதானமாக அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி, எதை ஃபோகஸ் பண்ணி சொன்னால் நங்கூரமாக மற்றவர்கள் கவனத்தை இழுத்து நிறுத்துமோ அதை முன்னிறுத்தி அந்த சூழலையே தன் கைவசப் படுத்தி எந்த தொனியில் பேச வேண்டுமோ அந்த தொனியில் பேசி அத்தனை பேர் உள்ளத்தையும் கொள்ளை கொள்கிறார், செய்தி ஒன்றுதான். அதில் முன்னிறுத்தப்பட்டது வேறு. சொல்லப் பட்ட விதம் வேறு,  இரண்டின் விளைவு நேர் எதிரானது.

சிலர் நான் ரொம்ப வெளிப்படையானவன் எதையும் நேரடியாக சொல்லி விடுவேன் என்பார்கள். நேரடியாக பேசுவதில் தவறில்லை. ஆனால் நீங்கள் என்ன ரிஸல்ட்டை எதிர் பார்க்கிறீர்கள்.. அதனால் என்ன தாக்கம் எழும். அதில் என்ன விளைவை ஏற்படுத்த முனைகிறீர்கள் என்பது தான் இங்கே முக்கியம்.

மற்றவர்களுக்கு முரணாக சொல்லக் கூடாது என்றால் இங்கே உண்மைகளை மாறாக பேச வேண்டுமென்பதில்லை. உண்மைகள் (ethical)அறம் சார்ந்து சொல்லப்பட வேண்டும் தான். ஆனால் மற்றவர்களை சங்கடப் படுத்தாமல், எந்த பாதிப்பையும் பிறருக்கு ஏற்படுத்தாமல் எப்படி சொல்லப்பட வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. அதுவும் உண்மைக்கு சமமாக நாம் நிலை நிறுத்த வேண்டிய ஒன்று.

தவிர, யாராவது ஏதாவது சொன்னவுடனே சட்டென்று பேசிவிடாமல், மனதில் சுழன்று எழும் வார்த்தைகளை சூழலுக்கு ஏற்றாற் போல் புரட்டி போட்டு அந்த சூழலை சமன் செய்பவர்களை எந்த பிரச்னையும் நெருங்காது. எதிராளியை சிதைக்காமல் அவர்கள் வார்த்தகளை மட்டுமே மோதி அவர்களையும் விரும்பச் செய்யக் கூடிய வகையில் இருப்பதே தீர்வுகளைத் தரும்.

இதை (reframing)ரீஃப்ரேமிங் என்கிறது வாழ்வியல். வார்த்தைகளை இடம் பொருள் ஏவல் கருதி அதற்கேற்றாற் போல் சரியான முறையில் அமைத்து ஒன்றை பேசும்போது அல்லது மற்றவர்கள் பேசுவதை நமக்கேற்றாற்போல் ரீஃப்ரேமிங் பண்ணி எடுத்துக் கொள்ளும்போது அங்கு பிரச்னைக்கு இடமேது? மகிழ்ச்சி மட்டும் தானே இடங்கொள்ளும்.

புரிந்து கொள்ளுங்கள்:

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை விட எந்த தொனியில் பேசுகிறீர்கள் என்பதில் நீங்கள் ஒருவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உணரப்படுகிறது.. இதில் முக்கியமானது என்னவென்றால் பொதுவாக நமக்கு மிக நெருக்கமான உறவுகளிடம் தான் நாம் மிக சாதாரணமாக எந்த ஒரு ஆர்வமும் காட்டாத தொனியில் பேசுகிறோம். அதை நாம் இயல்பாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம். நமக்கு மிக வேண்டியவர்களிடம், நாம் இயல்பாக இருப்பது தவறில்லை.. ஆனால் பொறுமையில்லாமலோ அலட்சியமாகவோ அதிகாரமாகவோ எந்த ஒரு ஆர்வமும் இல்லாமலோ, எந்த ஒரு அனுசரனையும் இல்லாமலோ பேசுவது எப்படி ஒருவருடைய இயல்பாக இருக்க முடியும். அது உங்கள் இயல்பு என்பதாக, உங்களுக்கு பொருந்தக் கூடியதாக இருக்கிறதா என்று சிந்தித்து பாருங்கள்.

பிறர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட பிறர் உங்களை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பது மிக முக்கியம். உங்களுக்கு ஒருவர் வேண்டியவர் என்றால் உங்களுடைய தொனியில் அது தானே தெரிய வேண்டும். ஆனால், நீங்கள் விரும்பக் கூடியவர்களுக்கு நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பது தெரியும் அது உங்கள் ஒவ்வொரு பேச்சிலுல் செய்கையிலும் தொனிக்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொண்டு உங்கள் இயல்பை மீறி விடுகிறீர்கள். உண்மையில் எது உங்கள் இயல்பாக இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்பதை சற்றே யோசித்து அப்படி இருந்து பாருங்கள். பரஸ்பர மகிழ்ச்சி அங்கே பெருகும்.

From: Fajila Azad <fajila@hotmail.com>

News

Read Previous

அசுரன்

Read Next

உயிரை மீட்டுத் தா இறைவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *