கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார்

Vinkmag ad

ஒப்பற்ற கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் பிறந்த நாள் செப்டம்பர் ஐந்து…

சில நினைவுகள் அவரை பற்றி..

தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு.

1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார்.

சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை..

சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார்.

அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை.

சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது.

தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை.

“இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் ”

என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்..

அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார்.

 

ஹாஜி பக்கீர் முகமது :-
வ.உ.சிதம்பரனார் அவர்கள் கப்பல் வாங்கும்போது , தனது சொந்த பணத்தைக் கொண்டு மட்டும் வாங்கி விடவில்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வசூல் செய்து தான் வாங்கினார். இதற்காக, பங்குகளை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிப்பும் வெளியிட்டார். கப்பல் கம்பெனியின் பங்குகளில் பெருவாரியானவற்றை ரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தர் அவர்கள் கொடுத்து உதவினார். ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களின் அடக்கு முறையால், கப்பல் கம்பெனி நஷ்டமான போதும், தனது பங்குத்தொகை எதையும் திருப்பி தர தேவையில்லை என்றும் பெருந்தன்மையாகத் தெரிவித்து விட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்து வ.உ.சி. எழுதிய கடிதம் தூத்துக்குடியில் உள்ள தமிழ்ப் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியனிடம் இருக்கிறது. தியாகிகளை நினைவு கூறும் அரசாங்கம் ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தரை ஏன் நினைவு கூற தயங்குகிறது என்பது தெரியவில்லை. ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தரை அவரது தியாகத்துக்கான அங்கீகாரத்தை அவ்வளவு தொகையைத் தாரைவார்த்த அவரது குடும்பத்தினர் கேட்கிறார்கள்.
வ.உ.சி.சிலை திறப்பின் போது, இந்த விபரங்கள் அனைத்தும் தெரிந்த வ.உ.சி.யின் வாரிசுகளிடம் உத்தமபாளையத்துக்காரரைப் பற்றி மேடையில் பேசும் போது குறிப்பிடுங்கள் என்று முஸ்லிம் பெரியவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதனை சொல்ல அவர்களுக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை உலகுக்கு சொல்லாமல் மறைத்தனர்.
வ உ சி யின் கப்பல் கம்பெனியில் ,
  • ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ் கெளரவ செயலாளராகவும்
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளராகவும், இருக்க
  • வழக்கறிஞர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்
  • திருநெல்வேலி வழக்கறிஞர் கே.ஆர்.குருசாமி அய்யர்
  • கோழிக்கோடு வழக்கறிஞர் எம்.கிருஷ்ண நாயர்
  • தூத்துக்குடி வழக்கறிஞர் டி.எல்.வெங்கு அய்யர்
  • ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

கம்பெனியின் இயக்குநர்களாக 15 முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டனர். அவர்களுள் புகழ்மிக்க வர்த்தகக் குழுவான ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ், முகமது ஹகீம் சேட், சி.வ. கப்பல் கம்பெனியைச் சேர்ந்த சி.வ.நல்லபெருமாள் பிள்ளை ஆகியோரும் அடங்குவர்.
http://adirainirubar.blogspot.ae/2014/02/blog-post_22.html

 

News

Read Previous

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் !!- உங்களுக்காக

Read Next

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *