கனியிருப்பக் காய்கவர்ந்தற்று….

Vinkmag ad
எது கனியென நான்கு தலைமுறைமுறையினரான யாருக்குமே சொல்லித்தரவில்லை. பின் எப்படி காய் தின்பவனை நோகமுடியும். எனக்கு எல்லாம் தெரியும். எனக்குத் தெரியாதது எது? யார் சொல்லி நான் கேட்க வேண்டும். நான் சாப்பிடுகிறேன். பதவியில் இருக்கிறேன். மகிழ்வாக வாழ்கிறேன். எனக்கு என்ன குறை? நான் எதற்காக ஆய்ந்து ஆய்ந்து தேட வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலிருந்தே அனைத்தையும் பார்த்து அதையே பேசி, விளக்கி, விமர்ச்சித்து, இறுதிவரை வாழ்ந்து இறுதியில், இறந்தும் போய்விடுகின்றனர்.
உட்கருவின் குரோமோசோம்களில் பல தலைமுறைக்கு முன்பு வீரியமாக இருந்து, இன்று அதன் தொடரியாக ஒருவர் மிகச் சரியாகச் சொன்னாலும், அதைச் சரி என்று அவர் போலவே உள்வாங்கிச் சொல்லுகிற மக்கள் கூட்டம் இல்லாமையால் அவர் சொன்னது அப்படியே இருந்து, இறுதியில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மறைமலை, பாவாணர், பெருஞ்சித்திரனார் என்போர் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்தவை கூட வெறும் சொற்களாகவே முடங்கிக் கிடக்கின்றன. அன்றைய சூழலில் அவர்களால் இயன்றவரை, இறுதிவரை இயங்கிப் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய சூழலில் அவர்கள் கண்டறிந்தவைகளை அப்படியே புரட்டிப் போட்டு, ஒரே நாளில் மாபெரும் மலையை உருவாக்கி, உலகுக்கே அதன் ஆழத்தைக் காட்ட இயலும்.
இணையமும், தேடுபொறியும், மின்நூல்களும், ஒரு நொடியில் உலகையே சென்றடையும். அறிவேற்றம் செய்யும். அதற்கு வழி அமைக்காது எம் தமிழ் மக்கள், தனித்தனித் தீவுகளாக நிற்கிறார்கள். கணினி எனக்குத் தெரியாது என்றும், நான் செய்ய வேண்டிய பணி நிறைய உள்ளது என்றும் விலகியே நிற்கிறார்கள்.
இன்றைய சூழலில் நாம் திட்டமிட வேண்டியது 3 நிலைகளில் உள்ளன.
1) விரும்புகிறவர்களுக்குத் தமிழ் கற்பித்து அவர்களைத் தெளிதமிழுடன் எழுதுகிற ஆற்றலுள்ள தமிழாளர்களாக, பயிற்சி கொடுத்து ஆக்குதல், பரப்புதல், படிக்க வைத்தல் ( இதற்கு ஆசிரிய மனநிலை உடையவர்கள் + கணினி தொடர்பாக வடிவமைப்பவர்கள் + கணினியில் இயங்குபவர்கள் வேண்டும் )
2) தமிழின் அனைத்து ஆக்கங்களையும் (அகராதி, இலக்கணம், இலக்கியநூல்கள் ) 19 ஆம் நூற்றாண்டுவரை வெளிவந்தவைகளைப் பட்டியலிடுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் அடங்கும் ( இதற்கு கணினியை இயக்கத் தெரிந்து, தன் நேரத்தை ஒதுக்கி இயங்குபவர்களும் வேண்டும் )
3) தமிழ்க் கல்வி = தமிழின் மொழிப் புலமை + தமிழ்க்கலையின் அறிமுகமும் நுட்பம் உணர்தலும். அன்றைய சூழலில் 64 கலைகள் இருந்தன. இன்றைய சூழலில் கலைகளின் பட்டியல் 100க்கு மேற்படும். அன்றைய பட்டியலில் யானைஏற்றம், குதிரையேற்றம் இருந்தன. இன்று சரக்குந்து ஏற்றம், துள்ளுந்து ஏற்றம் என்று மாற்றி அது தொடர்பான அனைத்தையும் தமிழில் ஆக்கி படித்து இயங்க படி அமைக்க வேண்டும். (உலகம் முழுவதும் கண்டறிந்த கலைகள் அனைத்தையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து முதலில் அடிப்படை அறிவையும் அதன் தொடரியாக ஆழ்நிலை அறிவையும் அறிய வகை செய்ய வேண்டும்) (மொழிபெயர்த்து எழுதுகிற ஆற்றலுள்ளவர்கள் எழுதலாம்.) (100 பக்கங்களுக்கு மிகாத எந்த நூலையும் தமிழம்.வலை தன்னுடைய சொந்த செலவிலேயே அச்சாக்கித்தர விரும்புகிறது,) (கதை எழுதாமல் கருத்து விளக்க வரிகளாக இருந்தால் அந்த நூல் வணங்குதற்குரியதாகும்)
எனவே ஆய்ந்து ஆய்ந்து கொள்ளுகிற ஆற்றலுள்ள நம் தமிழ் மக்கள் கூட்டத்தை உருவாக்குவோம். நீங்கள் உங்கள் இடத்திலிருந்தே இயங்குங்கள். மின் அஞ்சல் செய்தால் இதுவரை உள்ளவற்றை பகிர்ந்து கொண்டு விடுபட்டதை தொடரலாம்.
அன்புடன்
பொள்ளாச்சி. ம.நடேசன் – தமிழம்.வலை – தமிழம்.பண்பலை – தமிழ்கல்வி (http://www.tamilteaching.in/)
தொடர்புக்கு : 9788552061 Skype ID : pollachinasan1951 Mail ID : pollachinasan@gmail.com


தமிழ்க்கனல்-  பேச: 9788552061  –  www.thamizham.net

 

News

Read Previous

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

Read Next

மாயாஜாலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *