கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கை வரலாறு

Vinkmag ad

கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கை வரலாறு: கற்க வேண்டிய பாடங்கள்!

source – https://minnambalam.com/public/2020/12/26/13/Biography-of-Mathematical-genius-Ramanujan

— பேரா.நா.மணி
ஈரோட்டில் உள்ள, கணித மேதை இராமானுஜன் பிறந்த வீட்டை அடையாளம் காட்ட, ஜப்பான் தலைநகரில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை தலைவர் வர வேண்டி இருந்தது. ராமானுஜனை கண்டுபிடிக்க ஹார்டி லண்டனில் இருந்து வர வேண்டி இருந்தது. ஏன் இப்படி என்ற கேள்விகளுக்கு வலுவான அறிவியல் பூர்வமான பதில்களை தேட முடியுமா? முடியும். உலகின் உன்னத இந்தியக் கணித மேதைகளில் ஒருவர் இராமானுஜன். ஆனால், ஆங்கில ஆட்சி வராமலே போயிருந்தால்? ஆங்கில ஆட்சி இருந்தாலும் ஹார்டிகள் இல்லாமல் போயிருந்தால்! இந்தக் கேள்விகளையும் இணைத்துப் பார்த்தல் வேண்டும். அறிவுச் சாகரம் எல்லை கடந்தது. அதற்கு ஆதரவும் தேச எல்லைகளைக் கடந்தது. அதனை ஊக்குவிப்போரும் மதம் , சாதி கடந்தவர்கள் என்பதே பதில்களாக இருக்க முடியும்.
இராமானுஜன் வாழ்வில் திருப்புமுனை:
ஆங்கில ஆட்சி வந்தபிறகு தான் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி உருவாயிற்று. அதில் படிக்க வந்த மாணவர்கள் இருவர், இராமானுஜன் வீட்டில் கட்டண விருந்தாளிகளாக தங்கினர். அவர்களது கணிதப் புத்தகங்களை இராமானுஜன் பார்த்தார். படித்தார். அவர்களோடு அமர்ந்து கற்றுக் கொண்டார். அவர்களது வீட்டுப் பாடத்தின் போது அவர்களுக்கே புரியாத, அவர்களால் விடைக்காண முடியாத, கணிதப் புத்தகங்களில் உள்ள தவறுகளை கண்டறிய வல்ல நிபுணத்துவத்தை எட்டினார் இராமானுஜன்.
இராமானுஜன் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய புத்தகம், ஜி.எஸ். கார் ( G.S. Carr) என்பவர் எழுதிய “எளிய மற்றும் பயன்பாட்டு கணிதத் தீர்வுகள் ஓர் சுருக்கம்” என்ற புத்தகத்தை சொல்கிறார்கள். 1880 ஆம் ஆண்டு இதன் முதல் பாகமும் 1886 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. 1903 ஆம் ஆண்டு, இந்த நூலை கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் இருந்து எடுத்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் இங்கிலாந்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முறைசாரா கணிதம் சொல்லிக் கொடுத்து வந்த ஆசிரியர் என்று அறிய முடிகிறது. முறைப்படி கணிதம் படித்தே நம்மால் குறைந்த பட்ச தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால், முறைசாரா கல்வி , சுய கல்வி மூலம் படித்து கணித மேதை ஆக முடியுமா என்பதற்கும் இராமானுஜனே எடுத்துக்காட்டு‌.
இது தெய்வச் செயல் என்போர் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கு தெரிந்த முகங்கள் தென்படலாம். அவை ஆதரவு இன்றி கருகிப் போயிருக்கலாம். தூத்துக்குடியில் டேவிட் என்று ஒரு மீனவர் இருக்கிறார். கடலுக்கு போனால்தான் வாழ்வு என்று இருக்கும் அவர், பல ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வசதி இல்லாத அவர், தொலை தூரக் கல்வி மூலம் பி.எஸ்சி கணிதம் படித்தார். எங்கும் தனிப்பயிற்சிக்கு செல்லாமல், எண்பது விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒரு தனியார் உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக கணக்கு சொல்லிக் கொடுத்தார். முறைப்படி கற்றுத் தேறிய ஆசிரியரைக் காட்டிலும் நன்கு பாடம் நடத்துகிறார் என்று பள்ளித் தாளாளர் சான்றளிக்கிறார்.
இராமானுஜனுக்கு அப்போது உதவி செய்த பலர், கணித ஆர்வலர்களாகவும் கல்விப் புலம் சாராதவர்களாகவும் இருந்துள்ளனர். இன்று அந்த நிலை ஏன் இல்லை?
தமிழ் நாட்டில் முதல் முதலாக தமிழக கணிதவியல் கழகத்தை உருவாக்கிய வி. இராமசாமி அய்யர், நாராயண அய்யர் 1910 ஆம் ஆண்டு தொடங்கி 1920 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஏழாம் நாள், இராமானுஜன் இறக்கும் வரை, அவருக்கு உற்ற துணையாக இருந்த இராமச்சந்திர ராவ் இப்படி எல்லோரும் நேரடியாக கல்விப் புலம் சார்ந்து, கல்வி நிறுவனங்களில் இறங்கியவர்கள் அல்ல. அந்த நிலை எப்போது வழக்கொழிந்து போனது.? என்ன காரணம்? இவற்றை கண்டறிவதும் மீண்டும் புனருத்தாரணம் செய்வதும் காலத்தின் தேவை.
தொடக்கப் பள்ளியில் மாவட்டத்தில் முதல் இடம் பிடிக்கும் இராமானுஜன், கணிதத்தில் ஆர்வம் தழைக்க, தழைக்க, மற்ற பாடங்களில் ஆர்வம் குறைகிறது. குறைந்த பட்ச தேர்ச்சிக்கான மதிப்பெண் எடுக்க இயலாமல் போகிறது. இது குறிப்பிட்ட பாடத்தில் ஒருவருக்கு உள்ள பேரார்வத்தின் இயல்பு போக்கு.‌ 1904 ஆம் ஆண்டு தனது புகுமுக வகுப்பை ஒத்த எஃப்.ஏ தேர்வில் தோல்வியடைந்தவர் அதன் பிறகு என்ன முயன்றும், தேர்வுமுறை என்னும் வியூகத்தில் புகுந்து, குறைந்த பட்ச மதிப்பெண்ணோடு வெளிவர முடியவில்லை.
சுய கல்வியின் வழியாக, தான் ஈட்டிய கணித அறிவு பற்றி நிச்சயமாக இராமானுஜனுக்கே ஒரு சரியான மதிப்பீடு இருந்தது. தனது கணித சமன்பாடுகள் அடங்கிய நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு சளைக்காமல், உதவி தேடி அலைகிறார். தான் கல்லூரியில் சேர்ந்த 1904 ஆம் ஆண்டு முதல், ஜி.எச். ஹார்டி தன்னை அடையாளம் காணும் வரை, அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், அவரது திறமையின் மீது அவருக்கும் அதீத நம்பிக்கை இருக்கிறது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பேரார்வம், பெருவேட்கை நிரம்பியவராகவே அவர் இருக்கிறார். இந்த விடா முயற்சி. இந்த அலைச்சல். இன்றும் கூட இளம் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
எத்தனை இராமானுஜன்களை பலி கொடுத்தோமோ?
தனது திறமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனை மேலும் செழுமை படுத்த வேண்டும். இன்னும் புதியன படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தபோதிலும், இதற்கு ஏற்ற இடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தான். இலண்டன் வர வேண்டும் என்று ஹார்டி கூறும் போது, அதனைப் பல காரணங்கள் கூறி ஏற்க மறுக்கிறார். முதலில் தனக்கு போதுமான ஆங்கில அறிவு இல்லை என்கிறார். பின்னர் தனக்கு ஏற்ற சைவ உணவு கிடைக்காது என்கிறார். பிறகு தேர்வு எழுத வேண்டி இருக்குமா என்று கேட்கிறார். ஓர் குறிப்பிட்ட பாடத்தில் மேதமை பெற்றுள்ளோர், அந்த எல்லையைத் தாண்டி பொத்தாம் பொதுவாக தேர்வு என்று வரும் போது எப்படி அஞ்சி நடுங்குகிறார்கள் என்று அறிந்து கொள்ளவும் இராமானுஜன் மிகச் சிறந்த உதாரணம். ஆனால் இன்றும் அவர் பார்த்து நடுங்கிய, அந்த தேர்வு முறைமை மாறவில்லை. இதன் மூலம் எத்தனை இராமானுஜன்களை பலி கொடுத்தோமோ? எப்படி அளந்து பார்ப்பது?
ஒரு மேதையின் மேதமை, அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பைக் காட்டிலும், அவரிடம் படிக்க வருவோரிடம் உள்ள மேதமையை கண்டறிந்து அடையாளம் கண்டு வளர்த்தெடுக்கும் விதத்தில் தான் இருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஹார்டி.
தனது இளமைப் பருவத்திலேயே தனது திறமையை இராமானுஜன் அறிந்து கொள்கிறார். அவருக்குள் கணிதம் என்னும் பெரும் கடல் கட்டுண்டு கிடக்கிறது என்பதை அறிந்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி கணிதப் பேராசிரியர் சேசு அய்யர், பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சிங்கார வேலு முதலியார், இராமசாமி அய்யர், நாராயண அய்யர், இராமச்சந்திர ராவ், நரசிம்ம அய்யர், சென்னை மாநிலக் கல்லூரி கணிதப் பேராசிரியர் மிடில் மாஸ்ட், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் பிரான்சிஸ் ஸ்பிரிங், ஆர்தர் டேவிஸ், கில்பர்ட் வாக்கர், லிட்டில் ஹயில்ஸ் ஆகியோர் பெருமுயற்சி எடுக்கின்றனர். இலண்டனில் இருந்து ஹார்டி, லிட்டில் வுட், நெவில் ஆகிய கணிதப் பேராசிரியர்கள் முழுமூச்சாக இயக்குகின்றனர். ஒரு தனித்துவமான திறமை அல்லது அமானுஷ்ய ஆற்றல் பெற்ற மனிதர் என்று அடையாளம் கண்டவுடன், ஹார்டி எடுத்த முயற்சிகள் ஒரு பாடமாகவே கூட பல்கலைக்கழக மாணவர்களுக்கு வைக்கப்பட வேண்டும்.
16.1.1913 அன்று இராமானுஜனின் முதல் கடிதம் கண்டது தொடங்கி, 17.03.1914 அன்று அரசு மரியாதையுடன் கப்பல் ஏறி இலண்டன் புறப்படும் வரை, ஓராண்டுக்கு மேலாக, அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் முதல் பகுதி. இலண்டன் சென்று சேர்ந்த பின்னர், அவரை ஆற்றுப் படுத்தி, கணித சமன்பாடுகள் வெளிவர வைத்து, மீண்டும் அவர் இந்தியா திரும்பும் வரை ஹார்டி எடுத்த முயற்சிகள் பாகம் இரண்டு. இவை இரண்டும் முழுமையாக எல்லோருக்கும் தெரியும் படி செய்ய வேண்டும். குறிப்பாக, நம் ஊரில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு.
1913 ஆம் ஆண்டிலேயே சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் சபைகள் புகுமுக வகுப்பைக் கூட முறைப் படியான கல்வி வழியாக தாண்டாத, ஆனால் கணித மேதமை நிரூபிக்கப்பட்ட இராமானுஜனுக்கு வருடம் ஒன்றுக்கு, வீட்டில் இருந்தபடியே ஆராய்ச்சி மேற்கொள்ள, 75 ரூபாய் சம்பளமும், பின்னர் இங்கிலாந்து சென்று, பயிலவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ஆண்டு ஒன்றுக்கு 600 பவுண்ட் என உதவித் தொகை வழங்க முடிந்தது. விதிகளில் திருத்தம் செய்ய முடிந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவும் முடிந்தது. ஒரு நூற்றாண்டு கடந்து விட்ட இந்நிலையில், தமிழக மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களில், இத்தகைய மாற்றங்கள் உருவாக்கப்பட்டது இருக்கிறதா? அப்படியான மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக கதவுகளை தட்டவே இல்லையா? ஒரு வேளை அப்படித் தட்டி இருந்தால் அதனைப் பரிசீலிக்க போராடும், தன்மை எத்தனை பேராசிரியர்களுக்கு இருக்கிறது? இந்தியாவில் இருக்கும் போதே, இராமானுஜன் கணித மேதமை வெளிவந்து, அவர் இங்கிலாந்து செல்லும் முன்பே அவரது புகழ், பரவத் தொடங்கியிருந்தது. இந்த தளத்தில், இந்திய கல்வி முறை இப்போதேனும் என்ன செய்ய வேண்டி இருக்கிறது? புதிய கல்விக் கொள்கையில் கூட இவர்களைத் தடுக்க வழி உண்டே தவிர ஊக்கம் ஊட்ட வழியில்லையே.
தொடக்கப் பள்ளியில் எல்லாப் பாடங்களையும் நன்கு படித்தாலும் பின்னர், கணிதம் தவிர வேறுறொன்றையும் சிந்தித்து பார்க்க இயலாத நிலை வருகிறது இராமானுஜன் இன்றும் வியந்து போற்றும் கணித மேதமையை, பங்களிப்பை 32 வயதில் வழங்கிவிட்டு சென்றுள்ளார். ஆனால், குழந்தை பருவம் முதலே ஒரு சிறிய இழப்பைக் கூட தாங்க இயலாதவராக, பொறுமை அற்றவராக இருக்கிறார். தொடக்கப் பள்ளியில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்த போதும், தனது வகுப்பில் தனது சிறந்த நண்பன், சாரங்கபாணி தன்னைவிட ஒரு மதிப்பெண் அதிகம் எடுத்ததைக் கூட தாங்க முடியாதவனாக இருக்கிறான். ஒரு நாள் காலை உணவு இல்லை. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று, கோவிலில் படுத்துக் கொள்கிறார். எஃப்.ஏ வகுப்பில் தோல்வியடைந்ததும், வீட்டை விட்டு விசாகப்பட்டினம் வரை சென்று விடுகிறார். சந்திர சட்டர்ஜி என்பவர் இன்னும் இரண்டு நண்பர்களோடு இலண்டனில் தான் தங்கியிருந்த அறைக்கு வருகிறார். இராமானுஜன் ஒரு சூப் தயார் செய்து தருகிறார். அதனை ஒருவர் வாங்கி மூன்று முறை குடிக்கிறார். மீதமுள்ள இரண்டு பேர் வேண்டாம் என்று கூறுகின்றனர்.
இதற்காக அவர்களோடு கோபித்துக் கொண்டு அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். இலண்டனில் சமர்ப்பிக்கப்பட்ட இராமானுஜனின் பல ஆய்வுக் கட்டுரைகளை ஹார்டி தான் சமர்ப்பிக்கிறார்‌. இராமானுஜன் கருத்தரங்க அரங்க அறைக்கு கூட வராமல் தவிர்த்திருக்கிறார். இலண்டனில் அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி. இந்த நுண் உணர்வுகள் இன்றும் பலரிடம் உள்ளது. அதனைப் போக்க நமது கல்வி முறை என்ன செய்துள்ளது. இலண்டனில் இருந்து இந்தியா திரும்பிய இராமானுஜனை நம்பெருமாள் செட்டி என்பவருக்கு சொந்தமான வீட்டில் தங்க வைக்கிறார். வீட்டின் பெயர் க்ரைனன்ட் ( crynant) என்று இருக்கிறது. ஆங்கிலத்தில் கிரை என்றால் ‘அழுதல்’ என்று பொருள். இதனை அபசகுனமாக கருதி வீடு மாறுகிறார். அடுத்து குடிபுகும் வீட்டின் பெயர் கோமித்திரா’ இதில் உள்ள ‘கோ’ என்ற பெயர் பசுவை குறிக்கும் என்பதை நினைத்து மங்களமாக கருதினார் ‌என்ற செய்திகள் அறிவியல் மனப்பாங்கு தேவையின் ஆழத்தை குறிப்பிடுகிறது.
இராமானுஜனுக்கு பன்னிரெண்டு வயதிலும் அவர் மனைவி ஜானகிக்கு ஒன்பது வயது இருக்கும் போது அவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. பிள்ளைப் பருவத்திற்கு முன்பே கணிதம் தன்னை காதலியாக கட்டி அணைத்துக் கொண்டதும், வறுமை, தேர்வில் தோல்வி, தனது திறமைகளுக்கு அங்கீகாரம் இன்மை, தாய் சொல்லை தட்டாத மனப் பக்குவம் இவையெல்லாம் சேர்த்து, ஜானகியை அவரது மனைவியாக, இங்கிருக்கும் வரை பாவிக்க முடியவில்லை. இங்கிலாந்து சென்ற பிறகு தன் ஜானகியின் அருமையை உணர்கிறார். அவரது அன்புக்கு ஏங்குகிறார். இந்தியா திரும்பிய பிறகு பம்பாய் துறைமுகத்திலேயே அவர் வந்திருக்க மாட்டாரா என்று ஏங்குவதையும், ஒரு கட்டத்தில் தனது மனைவியை அழைத்து வரும் படி கூறுகிறார். உடன் வைத்துக் கொள்கிறார். இது தனக்கு நோய் மிகவும் முற்றிய காலம். இதற்கு இந்திய குடும்ப முறையில் உள்ள இயல்பான மாமியார் மருமகள் உறவுமுறை, அதனால் ஏற்படும் துன்புறுத்தல், ஜானகியால் தான் மகனுக்கு இந்த சோதனைகள் என்ற தவறான நம்பிக்கை இணைந்து ஜானகியை மட்டுமல்ல, இராமானுஜனையும் பாதித்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
ஆங்கில ஏகாதிபத்திய அரசு, அதன் ஆளுநர் சட்டதிட்டங்களை திருத்தி இராமானுஜனுக்கு உதவும் படி செய்கிறார். இங்கிலாந்துக்கு கப்பல் ஏறும் போது அரசு மரியாதை தரப்படுகிறது. ஆனால், சுதந்திர இந்தியாவில் இப்படியான மேதைகள் விஞ்ஞானிகள் ஆகியோருக்கான அங்கீகாரம் என்னவாக இருக்கிறது? இன்று நாடு உள்ள நிலையில், சிறுபான்மையினர் இத்தகைய திறன்களை கொண்டிருந்தால் நம்பிக்கையோடு அரசை உதவி கேட்டு அணுகத் துணிவார்களா? அதேபோல், இராமானுஜன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் இருந்தால் ஆங்கில ஆட்சியாளர்களிடம் அவரை எடுத்துச் செல்ல ஆட்கள் இருந்திருப்பார்களா? அது இப்போது எந்தளவுக்கு மாறியுள்ளது என்ற மதிப்பீடுகள் கூட தேவையானதே.
கணித மேதை இராமானுஜன் வாழ்க்கை வரலாறு குறித்து முதல் முதலாக ரகமி எழுதிய நூல், அதனை செழுமையாக்கி த.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய நூல், ஆயிஷா நடராசன் மற்றும் பை கணித மன்றத்தை நடத்தி வரும் ஜெயராமன் எழுதிய நூல்கள் மற்றும் இராபர்ட் கனிகள் எழுதிய முடிவற்றதை கண்டறிந்த மனிதன் ஆகிய நூல்களை வாசித்திருக்கிறேன். கணித மேதை ராமானுஜனின் 135 வது பிறந்த நாளை ஒட்டி (22 .12.2020) மின்னூலாக கிடைத்த, கரந்தை ஜெயக்குமார் எழுதிய ” கணித மேதை ராமானுஜன்” என்ற நூலை வாசிக்கக் கிடைத்த போது எழுதப்பட்டது.
கட்டுரையாளர்
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

News

Read Previous

தாமதமானாலும் மறுக்கப்படாத நீதி… வரலாறு சொல்லும் பாடமும், அபயாவுக்கான நீதியும்!

Read Next

இணையப் பயன்பாட்டை மேம்படுத்த…

Leave a Reply

Your email address will not be published.