ஏரோசால் தெளிப்பதால் அதிகரிக்கும் மழைப்பொழிவு

Vinkmag ad

அறிவியல் கதிர்

ஏரோசால் தெளிப்பதால் அதிகரிக்கும் மழைப்பொழிவு
பேராசிரியர் கே. ராஜு

பருவ மழை வருவதற்கு முன் காற்றுமண்டலத்தில் ஏரோசால் (aerosol – சிறு திவலைகளாக வெளியேற்றப்படும் திட திரவத் துகள்கள்) தெளிப்பது பருவமழையின் அளவைக் குறைத்துவிடும் என்றே விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் இதற்கு மாறாக, 2002-லிருந்து 2013 வரை செயற்கைக் கோள்கள் அளிக்கும் தகவல்களை ஆராய்ந்த கான்பூர் ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள், ஏரோசால் தெளிப்பதால் மழை வருவது சற்று தாமதப்பட்டாலும் அதிக மழைப்பொழிவை மத்திய இந்தியாவிலும் வட இந்தியாவிலும் ஏரோசால் தெளிப்பால் பெற முடிந்திருக்கிறது எனக் கண்டறிந்துள்ளனர். ஒரு மழைத்துளியின் பொதுவான அளவு 14 மைக்ரான்கள் (ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி)) இருக்கும். அது இந்த அளவை அடையும்வரை, நீராவி உறைவதன் காரணமாக மேகத்தில் உள்ள நீர்த்துளிகளின் அளவு கூடிக் கொண்டே வரும். ஏரோசால் துகள்கள்  அதிகமாக இருக்கும்போது அணுக்கருவாக்கதிற்கான   வாய்ப்பு கூடுவதால் நீர்த்துளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால், நீர்த்துளிகளின் அளவு அதிகரிப்பதற்கு சிறிது காலம் ஆகிறது.
ஏரோசால் துகள்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது நீராவி மேகத்துகள்களின் மீது உறைவதும் அதிகரிக்கிறது. ஆனால் அதே சமயம், நீர்த்துகள்களின் ஆரம் குறைந்துவிடுகிறது என்கிறார் கான்பூர் ஐ.ஐ.டி. சிவில் பொறியியல் துறையைச் சேர்ந்தவரும் ஆய்வுக்குழுவைச் சேர்ந்தவருமான சச்சிதா என்.திரிபாதி. மேகங்கள் அமைப்பின் உருவாக்கம் பல்வேறு வானிலை அளவுக்கூறுகளைப் பொறுத்து மாறும் என்றாலும், கோடைக்காலத்தின்போது மேக அமைப்பினை வெகுவாக மாற்றியமைக்கும் திறன் ஏரோசால்களுக்கு உண்டு என்கிறார் குழுவின் முதன்மை ஆய்வாளரான சந்தன் சாரங்கி.
வெப்பசலனம் காரணமாக மேகம் உருவாகத் தொடங்கும்போது நீர்த்துளிகளின் மீது கீழ்நோக்கிய புவிஈர்ப்பு விசையும் வெப்பசலனம் காரணமாக மேல்நோக்கிய இன்னொரு விசையும் செயல்படுகின்றன. ஏரோசால் துகள்கள் அதிக எண்ணிக்கையில் தெளிக்கப்படும்போது, அளவில் சிறிய நீர்த்துளிகள் வெப்பசலன மண்டலத்தில் மேல்திசை நோக்கி எழுகின்றன. அப்படி மேலே போகும்போது அவை ஐஸ் துகள்களாக மாறுகின்றன. நீர்த்துளிகள் ஐஸ் துகள்களாக மாறும்போது வெளியாகும் உள்ளுறை வெப்பம் வெப்பசலனத்தை ஊக்குவிக்கிறது. மேகங்களின் உயரம் அதிகரிக்கிறது. ஏரோசால் தெளிப்பினால் மேகங்களின் உயரமும் அகலமும் கூடுவதாக செயற்கைக் கோள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகங்களின் உயரம் கூடும்போது மேகங்களின் மேல்பகுதியில் உள்ள ஐஸ் துகள்களுக்கு நீர்த்துளிகளுடனும் பிற ஐஸ் துகள்களுடனும் தொடர்பு ஏற்பட்டு அவற்றின் அளவு கூடுகிறது. ஒட்டுமொத்தமாக, மேகத்தில் ஐஸ் எடை கூடி அவை புவிஈர்ப்பு விசையினால் கீழே விழும்போது அதிக மழைப்பொழிவைக் கொணர்கிறது. மழை வருவது தாமதப்பட்டாலும், பின்னர் மழை பெய்யத் தொடங்கும்போது அது மேலும் பரந்த நிலப்பரப்பில் விழுகிறது.. பொழிவின் அளவும் கூடுகிறது என்கின்றனர் திரிபாதியும் சாரங்கியும்.
மேகங்கள் இல்லாதபோது, ஏரோசால் துகள்கள் சூரிய ஆற்றலை உள்வாங்கிக் கொண்டு வெப்பசலனத்தைத் தடுப்பதால் மேகங்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது. இதனால் பருவமழைக்கு முன்னதாக ஏரோசால் தெளிப்பதால் பருவமழைப் பொழிவு குறைந்துவிடுகிறது என்றே இதுவரை விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ஆனால் ஏரோசால்-மேகம் பற்றிய நுண்இயற்பியல் தரும் தகவல்களிலிருந்து அதிக அளவில் ஏரோசால் தெளிப்பது வெப்பசலன மழைப்பொழிவின் அளவை அதிகரிக்கிறது என்பதே உண்மை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேற்கண்ட ஆய்வு மழைப்பொழிவை நம்மால் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. நல்ல செய்திதானே?
( நன்றி : 23-04-2017 ஆங்கில இந்து நாளிதழில் ஆர்.பிரசாத் எழுதிய கட்டுரை)

News

Read Previous

உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்!

Read Next

மே நாள் – கோவைக்கோதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *