எல்லப்பிரகட சுப்பாராவ்

Vinkmag ad

436 Subbaraoஅறிவியல் கதிர்
எல்லப்பிரகட சுப்பாராவ்
பேராசிரியர் கே. ராஜு
     எல்லப்பிரகட சுப்பாராவ் (1895-1948) ஒரு புகழ்பெற்ற இந்திய உயிரிவேதியியல் விஞ்ஞானி. உயிரணுவின் ஆற்றல், புற்றுநோய்த் தடுப்பு ஆகிய துறைகளில் மகத்தான கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தந்து ஏராளமான மனித உயிர்களைக் காப்பாற்றியவர்.  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஆனாலும் வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்காவில் தங்கி ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர்.
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இண்டர் முடித்து மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அவரது மருத்துவப் படிப்பிற்கு நண்பர்கள் உதவி செய்தனர்.  பிரிட்டிஷ் பொருட்களைப்  புறக்கணிக்குமாறு மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று சுப்பாராவ் கதர் ஆடையை அணியத் தொடங்கியது அவரது சர்ஜரி பேராசிரியருக்குப் பிடிக்கவில்லை. விளைவாக, மருத்துவத் தேர்வில் சுப்பாராவ் சரியான விடைகளை எழுதியபோதும் அவருக்கு எம்பிபிஎஸ் பட்டம் கிடைக்கவில்லை. டிப்ளமா தேர்வுக்குரிய எல்எம்எஸ் சான்றிதழ் மட்டுமே கிடைத்தது!  படிப்பை முடித்து சென்னையில் இருந்த டாக்டர் லட்சுமிபதியின் ஆயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார் சுப்பாராவ். ஆயுர்வேத சிகிச்சை முறையை நவீன மருத்துவ உலகுடன் பொருத்தும் ஆய்வுகளில்  ஈடுபட்டார். ராக்ஃபெல்லர் அறக்கட்டளை தொடர்பாக இந்தியா வந்த ஒரு அமெரிக்க டாக்டரைச் சந்தித்த சுப்பாராவ் அத்தொடர்பின் மூலம் 1922 அக்டோபர் 1922-ல் அமெரிக்கா சென்றார். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் டிப்ளமா முடித்துவிட்டு ஹார்வர்ட் பல்கலையில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். சைரஸ் ஃபிஸ்கேவுடன் இணைந்து உடல் திசுக்களில் உள்ள பாஸ்பரஸின் அளவை மதிப்பிட ஒரு வழிமுறையைக் கண்டறிந்தார். தசைகளின் இயக்கத்தில் பாஸ்போகிரியேட்டின், அடிநோசின் ட்ரைபாஸ்பேட் (சுருக்கமாக ஏடிபி) ஆகியவற்றின் பங்கினைக் கண்டறிந்த அவரது ஆய்வு 1930-ல் உயிரிவேதியியல் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டது. அதே ஆண்டில் அவர் பி.எச்டி. பட்டமும் பெற்றார். வளர்சிதை மாற்றங்களில் ஆற்றலுக்கான முக்கியப் பங்கினை ஏடிபி வகிக்கிறது. தசைகளுக்கும் மூளைகளுக்கும் அதிக ஆற்றல் தேவைப்படும்போது அதை பாஸ்போகிரியேட்டின் அளிக்கிறது. 2013 அக்டோபர் வரை கணக்கெடுத்ததில் அவரது ஆய்வுக் கட்டுரை 22,547 தடவைகள் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டது எனில், அது மருத்துவர்களால் எவ்வளவு தூரம் மதிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பின்னர் லெடர்லே சோதனைச்சாலையில் இயக்குநராகப் பணியில் சேர்ந்து  ஃபோலிக் அமிலத்தைத் தயாரித்து ரத்தசோகைக்கு எதிரான பாதுகாப்புக் கவசமாக அதைப் பயன்படுத்தினார். புற்றுநோய் வேதிச்சிகிச்சைக்குப் பயன்படும் மீதோட்ரேக்சேட் எனும் மருந்தினைக் கண்டுபிடித்தது அவரது சாதனையாக இன்றளவும் போற்றப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் சில பகுதிகளில் யானைக்கால் என்றழைக்கப்படும் நோய் பரவலாகக் காணப்படும். கால்கள் வீங்கிவிடும்.  இந்த கொடிய நோய்க்கு மருந்தாக அவர் கண்டுபிடித்த ஹெட்ரசான் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சுப்பாராவின் வழிகாட்டுதலில் டெட்ராசைக்ளின், ஏரியோமைசின் ஆகிய ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை பெஞ்சமின் டக்கர் கண்டுபிடித்தார். ஈரல் பிழிவுகளை ஆய்வு செய்து உயிர்க்கொல்லியான ரத்தசோகை நோய்க்கு மருந்தான வைட்டமின் பி12-யும் சுப்பாராவ் கண்டுபிடித்தார். சுப்பாராவுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.  ஆனால் அவரது கண்டுபிடிப்புகள் புற்றுநோய் வேதிச்சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படும் அளவுக்கு அவரைக் கொண்டுசென்றன. சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த அவரது கண்டுபிடிப்புகளில் அவரது கற்பனைத் திறன் பளிச்சிட்டது. ஒளியியல், இயந்திரவியல் போன்ற பல்வேறு துறைகளில் தடம் பதித்த சர் ஐசக் நியூட்டனைப் போல,  உயிரிவேதியியல், மருந்தியல், நுண்ணுயிரியல், புத்தாக்கவியல், ஊட்டச்சத்துவியல் போன்ற பல்வேறு துறைகளில் சுப்பாராவும் சாதனைகளைப் படைத்தார். 1950 ஏப்ரல் மாத ஆர்கஸி இதழில் டாக்டர் எல்லப்பிரகட சுப்பாராவ் என்ற பெயரைக் கேள்விப்படாதவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் அவர் வாழ்ந்ததால்தான் நீங்கள் கூடுதல் ஆண்டுகளுக்கு உயிர் வாழ முடிகிறது என கே. அன்ட்ரிம் என்ற விஞ்ஞானி எழுதினார். உண்மைதான். அவரது சாதனைகள் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படாமல் போனதை வரலாற்றுச் சோகம் என்றுதான் கருதவேண்டும்.

News

Read Previous

இன்றும் வேண்டும் அது..

Read Next

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *