எங்கே போனது மனித நேயம் ?

Vinkmag ad

எங்கே போனது மனித நேயம்??????

200 ரூபாய் சேர்க்கும் வரை சாப்பிட மாட்டேன்’ – வெள்ளரி விற்கும் மூதாட்டி

கொளுத்தும் கோடை வெயிலால் இளசுகளே வீட்டை விட்டு வெளியில் வராமல் முடங்கிக் கிடக்கும் நிலையில், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் கால்கள் தளர்ந்து, கண்கள் மங்கி, மேனி சுருங்கிய சுமார் 85 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி தள்ளாத வயதில் தலை மீது வெள்ளரிக் கூடையை சுமந்து கொண்டு வியாபாரம் செய்து வந்தது. ஆச்சர்யத்தையும் பெரும் வியப்பையும் ஏற்படுத்தியது. வண்டியை ஓரங்கட்டி விட்டு அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

பாட்டிக்கு காதும் மந்தமாக இருந்ததால் கத்தி பேச வேண்டிய நிலை இருந்தது.

பாட்டி… வெள்ளரி பிஞ்சு எவ்வளவு,

“நான் யாருக்கிட்டையும் காசு கேட்பதில்லை. நீங்க எடுத்துட்டுக் கொடுப்பதைக் கொடுங்க சாமீ..

.” சரி எங்க மிளகாய்ப் பொடி,

“யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க சாமீ” என்று கண்ணீர் விட்டார். அவரை ஆசுவாசப்படுத்தி அருகில் உள்ள மரத்தின் நிழலின் அமர வைத்து விசாரித்த போது, “என் பேரு பழனியம்மாள். எங்க வீட்டுக்காரர் பேரு சின்னண்ணன். எங்களுக்கு தங்கம்மாள், நாகம்மாள் என ரெண்டு பிள்ளைகள். எல்லோரும் செத்துப் போயிட்டாங்க. இந்த உசுரு மட்டும் தான் போகாம இழுத்துட்டு கிடக்குது. எல்லோரும் வயதாகி நோய் வந்து செத்துட்டாங்க. என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்த பிறகு இறந்தாங்க. சின்னப் பொண்ணுக்கு குழந்தைகள் இல்லை. பெரிய பொண்ணுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு இருந்தது. அவுங்க எங்க இருக்காங்க. என்ன பண்ணுறாங்கன்னு எந்தத் தொடர்பும் இல்ல.

எனக்கு இப்ப யாருடைய ஆதரவும் இல்லை. நான் எருமாபாளையம் பெருமாள் கரட்டுப் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்துட்டு இருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே இந்தக் கூடையை சுமந்து வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினேன். அந்த பழக்க தோசம் என்னை விட்டுப் போகவில்லை. விடியற்காலை 4 மணிக்கு எழுந்திருச்சு,
7 கி.மீட்டர் நடந்து வந்து மார்க்கெட்ல 200 ரூபாய்க்கு வெள்ளரிப் பிஞ்சு வாங்கிட்டு சேலம் டவுனைச் சுற்றி விற்றுட்டு வருவேன். அடுத்த நாள் பழம் வாங்க 200 ரூபாய் சேர்க்கும் வரை சாப்பிட மாட்டேன். அதுக்கு மேல பத்து ரூபாய் கிடைத்தாலும் சின்ன ஹோட்டல் கடையில் கிடைத்ததை வாங்கி சாப்பிட்டு விட்டு பஸ் ஏறிப் போயிடுவேன். வீட்டுக்குப் போனதும் இலவச அரிசி இருக்கு. ஒரு கிளாஸ் போட்டு சாப்பாடு, குழம்பு வச்சு இரவு சாப்பிடுவேன். விடியற்காலை நேரம் பார்க்கத் தெரியாது. நானே ஒரு குத்து மதிப்பா எழுந்து நடந்து வந்திடுவேன்.

இது எனக்குச் சிரமமாக தெரியல. உடம்புல உசுரு இருக்கும் வரை இந்த வேலையைச் செய்வேன். செத்துட்டா இந்த உடம்ப எடுத்துப் போட ஆள் இல்லை. பேரக்குழந்தைகளான நீங்களெல்லாம் கொஞ்சம் வந்து எடுத்துப் போட்டுருங்க சாமீ… இந்த கட்டை தாங்காது. இன்னும் கொஞ்ச நாளில் போயிடுவேன்” என்று நம்மை நெகிழ வைத்து விட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.

நன்றி
விகடன்:

News

Read Previous

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?

Read Next

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *