எங்கள் பாரம்பரியம், தமிழ்ப் பாரம்பரியம்!

Vinkmag ad

klkஎங்கள் பாரம்பரியம், தமிழ்ப் பாரம்பரியம்!
=======================================
தமிழ் முஸ்லிம்கள் இந்நாட்டு தொல்குடி மக்கள். இஸ்லாம் அவர்களதுவழி, இன்பத் தமிழ் அவர்களது மொழி.

இந்நாட்டு முஸ்லிம்கள் தங்கள் அன்றாட வாழ்வியலிலும் தமிழ்வழக்காறுகளையே பின்பற்றினர். வரலாற்று ரீதியிலானதொரு சான்று. இது ஒரு Sample மட்டும்.

300 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழனின் வானசாஸ்திர அடிப்படையில் தொழுகை நேரம் குறித்து கணிக்கப்பட்டு பள்ளிவாசல்களில் நடைமுறையில் இருந்த பழைய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

1990ம் ஆண்டு கீழக்கரையில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல், கொளச்சளல் கல்லுப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ் மாதம், மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் கண்டேன். (கல்லுப்பள்ளி என்பது தொடக்க காலத்தில் கோவில்கள் கட்டிய கலைப் பாணியில் திராவிடக்கட்டடக் கலைஅம்சத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் ஆகும்.) மேற்படி கல்வெட்டுகளை படி (பிரதி) எடுத்து படித்தேன். ஆனால் மேற்படி கல்வெட்டுகள் சொல்லும் செய்தி என்ன என்பது விளங்கவில்லை. (பார்க்க- படம்) முஸ்லிம் பெரியவர்கள் பலரையும் சந்தித்து பேசினேன். விவரம் கிடைக்கவில்லை. எனது சக கல்வெட்டு ஆய்வு நண்பர்களிடமிருந்தும் விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் இது குறித்த எனது ஆய்வு தெடர்ந்து என் மனதில் இருந்துவந்தது.

2001ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்காக “தமிழகத்தில் இஸ்லாமியக்கட்டடக் கலை“ (Islamic Architecture in Tamilnadu) என்னும் தலைப்பில் ஆய்வுரை எழுதிக்கொண்டிருந்தேன். இது தொடர்பாக தழிகத்திலுள்ள பிரபல்யமான முஸ்லிம் குடியிருப்புகளுக்கெல்லாம் சென்று வந்தேன். கீழக்கரை சென்றிருந்தபோது ஒரு நிகழ்வு!!
கீழக்கரை ஓடக்கரை கல்லுப்பள்ளி அப்போது அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கல்லுப்பள்ளியை இடித்துவிட்டு புதிய பாணி கடடுமானம் செய்ய தயார் நிலை. (கட்டிய விவரங்கள் குறித்த தமிழ்க் கல்வெட்டும் இப்பள்ளியில் உள்ளது). நமது வரலாறு சரிவதைக்காண மனம் வருந்தியது. இந்த ஊரில் பல பிரமுர்களையும் பல முறை சந்தித்து பேசினேன். அருமையான பூ வேலைப்பாடுகளெல்லாம் சுண்ணாம்பு காரை பூசி மெழுகப்பட்டு பொலிவிழந்திருந்ததால் இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டத் திட்டமிட்டதாகத் தெறிவித்தனர். தொல்லியல் துறை பழமைச் சின்னங்களை பாதுகாக்கும் முறையில் இந்த பழைய பள்ளியை புதிதுபோல் ஆக்கலாம் என்று கூறினேன். எனது ஆலோசனையை அப்பள்ளிசார்ந்த ஜமாத்தார்கள் ஏற்றனர். புதிய கட்டுமானத்திற்காக இருந்த பணம் பள்ளியின் புணர்நிர்மானப் பணிக்கு பயன் படுத்த ஏற்பாடாகியது. உரிய தொழில் நுட்ப வேலைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து நானும் அவ்வப்போது சென்று கவனித்து புதுப்பிக்கும் பணியில் உதவினேன். அங்கு வேலை நடைபெறும்போது இன்னும் ஒரு வியப்பு காத்திருந்தது!

இப்பள்ளியில் ஒரு தூணில் இருந்த சுண்ணாம்புக் காரையை அகற்றும்போது முன்சொன்ன இரண்டு கல்வெட்டுகளைப் போன்றதொரு புதிய கல்வெட்டுத் தென்பட்டது. (பார்க்க – படம்). படி எடுத்துப் படித்தபோது அதில் ஒரு புதிய செய்தி கிடைத்தது. கட்டங்களிட்ட அக்கல்வெட்டின் மேல் பகுதியில் ~அசறுக்கு அடி|, என்ற வாசகம் தென்பட்டது. மகிழ்ச்சி பொங்க மீண்டும் ஆய்வு! ஊகும்…… ஒன்றும் புலப்படவில்லை. ஒரு ஆண்டு ஓடிவிட்டது!

இந்நிலையில் ஒருமுறை கீழக்கரை சென்றிருந்தபோது, வள்ளல் சீதக்காதியின் திருமண நிகழ்வுகளைக்கூறும் “செய்தக்காதிறு மரக்காயர் திருமண வாழ்த்து“ என்னும் பாடலைப்படிக்க நேர்ந்தது. அதில் வரும் இயற்கை வருணனையில், ~துலங்கி அசருப்பூத் தொடயல் கட்டிப் பொன் போல்|, என்ற வரி என்னை ஈர்த்தது. விளக்கம் தேடினேன். இந்தப்பாடலுக்கு விளக்கம் எழுதியுள்ள கவி.கா.மு.ஷெரிபு “அசருப்பூ என்பது அந்திமந்தாரை அல்லது சாமந்திப்பூ எனலாம். இவ்வின மலர் மாலையில் சூரியன் மறைவிற்கு முன்பு பூப்;பதாகும். இந்த நேரத்தையே முஸ்லிம்கள் ~அசரு| (அஸர்) என்பதால் சாமந்திப்பூவை (அந்திமந்தாரை) அசருப் பூ என புலவர் எழுதி இருக்கிறார்.” எனக் கூறியுள்ளதைக் கண்டேன். மேலும் எனது பாட்டிமார் சில வகை மல்லிகைப்பூவை ~அசருமல்லி| என அழைத்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது. அசரு மல்லி என்பது அந்தி மல்லி.

அசறுக்கு அடி, அசருப்பூ, அசருமல்லி இவற்றைத் தொடுத்து மீண்டும் எனது ஆய்வுப்பயணம்! இருப்பினும் விளக்கம் பெற முடியவில்லை. எனது சக கல்வெட்டு ஆய்வு நண்பர் தொல்லியல் துறைச் சார்ந்த திரு ராஜ கோபால் சில முன்னோட்ட செய்திகளை அளித்தார்.

இப்போது விளங்கியது. இவை அஸர் நேரத் தொழுகையைக் குறிக்கும் கல்வெட்டுகள், என்பதையும், தமிழ் மாதம் வாரியாக இந்த நேரத் தொழுகை நேரம் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதையும் கண்டறிந்தேன். ஆம். அஸர் தொழுகை நேரம் தமிழ்மாதம் வாரியாக, தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. 13 ஆண்டு கால உழைப்பில் முகிழந்த முத்து இது!

இந்த ஆய்வில் கிட்டிய மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் கீழக்கரை ஓடக்கரை பள்ளிவாசல், தொல்லியல் ரீதியான பழமைச் சின்னங்கள் பாதுகாப்புப் பாணியில் சீரமைக்கப்பட்டு, 300 ஆண்டுகால இஸ்லாமியக் கட்டடக்கலைப் பாரம்பரிய பண்பாட்டை எடுத்துக்காட்டி, இன்று நம்முடைய வரலாற்றிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு வழக்கமான தொழுகை நடைபெறுகிறது. நமது பாரம்பரியம் காக்க ஒரு கடுகளவு வாய்ப்புக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. இந்த கல்வெட்டுகளின் ஆய்வுப் பயணத்தில் வந்த நல்ல வரவு இது.

இவ்வகைக்கு நமது வரலாற்றையும் பண்பாட்டையும் பேணி பாதுகாக்க உதவியதற்காக கீழக்கரை இப்பகுதி முஸ்லிம் ஜமாத் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். வரலாற்று மாணவன் என்ற முறையில் அவர்களுக்கு எனது அன்பின் சலாம் – குறிப்பாக கீழக்கரை தந்த பெரு மகனார் பி.எஸ்.அப்துல் ரகிமான் அவர்களது மகனார் அல்ஹாஜ் அஷ்ரப் அவர்கள் எனது சிறப்பான நன்றிக்குறியவர். அவர்தான் இ்ந்த பள்ளியின் புணர்நிர்மானப் பணியை முன்னெடுத்துச் செல்ல எனக்கு ஊக்கமளித்தவர். இந்த மரபுச் சின்னத்தைப் பாதுகாத்தது குறித்து வாய்ப்பு கிட்டும்போது இன்னொரு பதிவில் கொடுக்கிறேன்.

கல்வெட்டு கூறும் செய்தி வருமாறு.

அஸர் தொழுகை நேரம், தமிழ்மாதம் வாரியாக தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது. மாதந்தோறும் சூரியன் கதிக்கு ஏற்ப தொழுகை நேரங்கள் மாறுபட்டுள்ளதை 300 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அசறுக்கு அடி. (இது கீழக்கரை ஓடக்கரை பள்ளிவாசல் கல்வெட்டு)

தை மாசி பைங்கூனி சித்திரை வைகாசி ஆனி
11 10 9 8 7 8
10 ½ 9 ½ 8 ½ 7 ½ 7 ½ 8 ½
10 9 8 7 8 9
மார் காத்தி அற்பிசி புரட் ஆணி ஆடி

குறிப்பு.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் உத்தராயன காலம் (உத்தரம் – வடக்கு). அதாவது சூரியன் நமது தலை உச்சிக்கு சற்று வடக்குப் பக்கமாகப் பயணிக்கும்.

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயனம். (தட்சினம்- தெற்கு). சூரியன் நமது தலை உச்சிக்கு சற்று தெற்குப் பக்கமாகப் பயணிக்கும்.

அஸர் தொழுகைக்கு இதே நேரங்களே கீழக்கரை ஜுமா பள்ளியிலும், கொளச்சல் கல்லுப்பள்ளியிலும் உள்ள கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்வெட்டுகளில் அஸர் நேரத்தை, பன்னிரு தமிழ் மாதங்களில், மாலை நிழல் எத்தனை அடிகளில் இருக்கும்போது குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு, கடிகாரம் இல்லாத காலத்தில், பள்ளிவாசலில், மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத்தக்கது.

இதன்படி இந்த ஊர்களில் அசரு தொழுகை நேரம் வருமாறு.

தை மாதம் – 11 – 101/2 அடி
மாசி மாதம் – 10 – 91/2 அடி
பங்குனி மாதம் – 9-81/2 அடி
சித்திரை மாதம் – 8-71/2 அடி
வைகாசி மாதம் – 7-71/2 அடி
ஆனி மாதம் – 8-81/2 அடி
ஆடி மாதம் – 9-91/2 அடி
ஆவணி மாதம் – 8-71/2 அடி
புரட்டாசி மாதம் – 7-71/2 அடி
ஐப்பசி மாதம் – 8-81/2 அடி
கார்த்திகை மாதம் – 9-91/2 அடி
மார்கழி மாதம் – 10-101/2 அடி

நிழல் அரையடி செல்லும் நேரம் அசரு தொழுகை நேரம் ஆகும்.

‘அசறுக்கு அடி’ என்பதன் விளக்கம்.

இக்கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ள எண், அடி அளவு கணக்கீடு, குறித்த சோதனையில் நமது கவனம் சென்றது. அந்த சோதனையில், நடுப்பகல் வெயில் 12 மணிக்கு 1 அடி (காலடி) நீளமுள்ள ஒரு குச்சியை நட்டு வைத்தால் நேரம் செல்ல செல்ல குச்சியின் நிழல் மேற்கே சாய்ந்து விழுந்து கொண்டு செல்லுவதும். நிழலின் நீளத்தை அளந்து, அதற்கேற்ப அசரு தொழுகை நேரம் கணக்கிடப்பட வேண்டியதாகும் என்பதும் தெரிய வந்தது.

கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அடி அளவு, தற்போதைய கடிகார நேரத்தை ஒத்திருப்பதும் காணப்பட்டது. வியப்பு!

அஸர் நேரத்தை அறிவிக்க இந்த சூரியக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரிய ஒளியால் ஏற்படும் நிழல் எந்த அடியைத் தொடுகிறதோ அந்த அளவு, அந்தமாதத் தொழுகை நேரம் ஆகும். இது ஒரு அபூர்வமான அறிவியல் குறிப்பாகும்.

என்ன அறிவியல் அறிவுப் பார்வை! இப்போது சொல்லுங்கள்! தமிழ் முஸ்லிம்களின் முன்னோர் யார் என்பதற்கு இந்த ஆதாரத்திற்குமேல் என்ன வேண்டும்.

தமிழகத்தின் பழைய பள்ளிவால்கள் கூறும் இது போன்ற அறிய செய்திகளையெல்லாம்,ஆய்வுசெய்து “தமிழகத்தில் இஸ்லாமியக் கட்டடக்கலை“ (Islamic Architecture in Tamilnadu) என்னும் எனது ஆய்வுரையில் பதிவு செய்து எழுதியுள்ளேன். இந்த ஆய்வுரை 2004ம் ஆண்டு தமிழ் நாடு அரசு அருங்காட்சியகத்துறையினரால் நூலாக வெளியிடப்பட்டது. இந்த தலைப்பில் எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுதான். இன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்த நூல் பார்வை நூலாக (Reference Book) இருந்து, தமிழக முஸ்லிம்களின் பாரம்பரியப் பண்பாட்டினைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

– இன்னும் வரும்…..

– Dr. Raja Muhammed . Phd. Retd History Professor

News

Read Previous

கமுதி-முதுகுளத்தூர் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முகமது மீரா மரணம்

Read Next

பெரிய காணொளிகளை/ கோப்புகளை அனுப்புவதற்கான நுணுக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *