உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை

Vinkmag ad
அறிவியல் கதிர்

உளவியலிலும் உடலியலிலும் அறிவியல் பார்வை
பேராசிரியர் கே. ராஜு

வட இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டே தூங்குவதாக அண்மையில் செய்திகள் வந்தன. எதற்குத் தெரியுமா? பேய்கள் வந்து அவர்கள் முடியை வெட்டிக் கொண்டு போகாமல் இருக்கத்தான்! பேய்களை விரட்டியடிக்க சாமியார்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் சடங்குகளும் செய்யப்பட்டனவாம். விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்துள்ள இக்காலத்திலும் பெரும்பகுதி இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் கட்டுண்டு கிடப்பதும் அறிவியல் அடிப்படையே இல்லாத வதந்திகளை நம்புவதும் எவ்வளவு துயரமானது! பெரும்பகுதி மக்கள் இப்படி வதந்திகளை நம்பி ஏமாறுவது இது முதல் முறையல்ல. விநாயகர் சிலைகள் பால் குடிக்கின்றன… ஏசு கிறிஸ்து சிலையிலிருந்து புனிதநீர் சொட்டுகிறது…ஹாஜி அலி தர்காவைச் சுற்றியுள்ள நீர் அதியற்புதமான முறையில் இனிக்கத் தொடங்கியிருக்கிறது.. என பல வதந்திகள் கடந்த காலத்தில் மக்களை அலைக்கழித்துள்ளன. 2013-ம் ஆண்டில் மழை பெய்யும்போது தீபாவளியைக் கொண்டாடவில்லையெனில் ஒவ்வொரு குடும்பமும் தனது மூத்த மகனை இழக்க வேண்டியிருக்கும் அல்லது பேரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு மத்தியப்பிரதேச மாநிலத்தின் 40 கிராமங்களில் தீபாவளியை இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே கொண்டாடிவிட்டனர்!
இப்படி ஏமாறக்கூடிய மக்கள் வரிசையில் மேலும் மேலும் கேள்வி எதையும் கேட்காமல் மக்கள் இணையும்போது அது எளிதில் ஒரு கூட்ட வெறியாக (mass hysteria) மாறிவிடுகிறது. ஒவ்வொருவரும் புத்திசாலித்தனமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக நினைத்துக்கொண்டு பகுத்தறிவுக்குப் பொருந்தாத அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர். இது ஒரு கூட்டு மயக்கம். அறிவியல் விழாக்கள், கண்காட்சிகள், பிற அறிவியல் நடவடிக்கைகளை அறிவியலாளர்கள் திட்டமிட்டு நடத்த வேண்டியுள்ளது. மிகப் பெரிய அறிவியல் இயக்கத்தை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
இது உளவியல் சார்ந்த மயக்கம் எனில், உடலியல் சார்ந்த மயக்கங்களும் நம்மிடையே உண்டு. வாழ்வியல் நோய்களைப் பற்றியும் அவற்றால் ஏற்படும் கேடுகளைப் பற்றியும் நாம் நன்கு அறிவோம். வளரிளம் பருவத்தினரும் அறிவார்கள். உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளையும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையும் (Junk foods) அவை இதயக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதைத் தெரிந்து கொண்டே இளைஞர்கள் உட்கொள்கின்றனர்.  சாதாரண மக்களைவிட கூடுதலான விழிப்புணர்வு பெற்றிருந்தும் கூட பதின்பருவ வயதினரிடையே அவர்கள் அறிந்தவற்றுக்கும் அவர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது என கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சாப்பிடுவது, வயிறு முட்ட தாராளமாகச் சாப்பிடுவது, அடிக்கடி நொறுக்குத் தீனியை உட்கொள்வது, தெருவோரக் கடைகளில் அசுத்தமான பொருட்களை உண்பது என அவர்களது உணவுப் பழக்கம் அவர்கள் படித்து அறிந்துகொண்டதற்கு நேர்மாறானதாக இருக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைகள் வேறு சில அமைப்புகளுடனும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடனும் இணைந்து நடத்திய மேற்கண்ட ஆய்வின் முடிவுகளை `பிஎம்சி பொது சுகாதாரம் இதழில் வெளியிட்டது. கொல்கத்தா மாநகரத்தில் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் 1600 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வாழ்வியல் நோய்கள் பற்றிய புரிதல், மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், உணவுப் பழக்கம் போன்ற தகவல்கள் மாணவர்களிடமிருந்து திரட்டப்பட்டன. அவர்களில் 20 சதமானோருக்கு இதயக்கோளாறுகள் உள்ள குடும்ப வரலாறு இருந்தது. பெரும்பாலானோர் இதயக்கோளாறுகள் பற்றிய விவரங்களை அறிந்திருக்கவில்லை. ஆபத்து பற்றி அறிந்தவர்களும் அறியாதவர்களும்  உணவுப் பழக்கவழக்கங்களில் மோசமாகவே நடந்து கொண்டனர். இதயக் கோளாறுகள் அண்டாமலிருக்கத் தேவையான உணவு, உடற்பயிற்சி பற்றிய திட்டங்கள் பள்ளிகளில் அவசியம் தேவை என ஆய்வு தெரிவிக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் வாழ்வியல் நடைமுறையையும் பதின்பருவத்திலேயே பதிய வைத்துவிடுவது பிற்காலத்தில் உடற்பருமன், மனஅழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறுகள், வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome), முதுகெலும்பு மற்றும் எலும்புகளில் உருவாகும் நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்யும். பள்ளிப் பாடத்திட்டத்திலேயே வாழ்வியல் நோய்கள் பற்றிய தகவல்களைச் சேர்த்துவிட வேண்டும் என்கிறார் தில்லி மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜய் மல்ஹோத்ரா.
    (உதவிய கட்டுரைகள் : செப்டம்பர் 2017 சயன்ஸ் ரிப்போர்ட்டர் தலையங்கம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பகுதி)

News

Read Previous

முதியோர் நலனில் இளையோர்க்கு அக்கறை இருக்கிறதா?

Read Next

இலக்கியச் சோலை விருது வழங்கும் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.