உணவை வீணாக்காதீர் !

Vinkmag ad

உணவை வீணாக்காதீர் !

திருச்சி A.முஹம்மது காசிம்

ஜித்தா –சவூதி அரேபியா

trichykhasim@gmail.com

வீண்விரயம் செய்வதிலேயே மிகவும் மோசமானது உணவுப் பொருட்களை வீண்விரயம் செய்வதுதான். வீண் விரையம் என்பது நாம் பயன்படுத்தும் உணவுகள் யதார்த்தமாக மிஞ்சுவது. அல்லது வேண்டுமென்றே வகை வகையாக சமைத்து உண்ண முடியாமல் குப்பையில் கொட்டுவது ஆகியனவாகும்.

உணவை வீண் விரையம் செய்வதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று இங்கு பார்ப்போம்.

இதோ பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “ உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று .(அல்குர்ஆன்7:31)

பொதுவாக இன்றைய காலக் கட்டங்களில் திருமணம், பிறந்தநாள் ஆகிய வீட்டு விழாக்களிலும் ,அரசியல் விழா,பள்ளி, கல்லூரிகள், கேளிக்கை விடுதி, நட்சத்திர ஹோட்டல், சுற்றுலாதளங்களிலும் உணவுகள் வீணாக்கப் படுகிறது.

இதுமட்டுமின்றி  உணவு திருவிழா ஆகியனற்றிலும்  போஸ்டர் அடித்து அழைப்பு கொடுப்பது, உணவு சமைக்கும் கூடம், சாதனைக்கும்,பெருமைக்கும் உணவு தயாரிப்பது,சினிமா படப்பிடிப்பிற்காக, உணவு பொருட்களில் தோரணம் கட்டுவது,உணவு பொருட்களில் ஒவியம் செதுக்குவது, மேற்கத்திய கலாச்சாரமான பபே சிஸ்டம் என பல வகையான பெயர்களில்  உணவை வீண்விரயம் செய்வதை கண்கூடாக இன்று நாம் பார்க்கிறோம்.

ரஷியர்கள்,சீனர்கள்,அமெரிக்கர்கள்,மற்றும்  ஐரோப்பியர்கள் பைத்தியகார  கலாச்சார விழாக்களான தக்காளிதிருவிழா, சாக்லைட் திருவிழா என்று  பல்வேறு பெயர்களில் உணவை வீணாக்குவதை அன்றாட செய்திகள் மூலம் நாம் அறிகிறோம்.

பல வகை உணவுகளை தயார் செய்து அளவுக்கு மீறிப் பரிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அன்றாட வழக்கமாகி விட்டது.

இதோ குர்ஆன் கூறுகிறது “ அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்(அல்குர்ஆன் 4:36)

வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)

ஒரு பருக்கை உணவைக் கூட வீணாக்குவதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கையில் தட்டுகள் முதல் தேக்க்ஷாக்கள் வரை உணவை சமைத்து வீணாக்குவது எந்த அளவுக்கு கடுமையான குற்றமாக இருக்கும்?.

நபிகள் நாயகம (ஸல்..)கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்” என்று நபி (ஸல்…)அவர்கள் அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி..) அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி)

ஆபிரிக்காவில் பெரும்பாலான நாடுகள் வறுமையில் உள்ளன. குறிப்பாக  சோமாலியா, நைஜீரியா, தன்சானியா, உகண்டா, எரித்திரியா, , எதியோப்பியா, சியராலியோன் ஆகிய நாடுகளில்  கடும் பஞ்சம் காரணமாக ஏராளமான குழந்தைகள், பொதுமக்கள் பரிதாபமாக இறந்தார்கள்.இன்றும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆம் கொடுமையிலும் மிகக்  கொடுமை வறுமை தான்.

சியராலியோன் நாட்டில் (Sierra Leone) 50 சதவீதமான மக்கள் 40 வயதுக்கு குறைவான காலமே உயிர் வாழ்கின்றனர். 66 சதவீதமானவர்களுக்கு சுத்தமான தண்ணீர் வசதி இல்லை. 64 சதவீதமானவர்களுக்கு சுகாதார சேவை இல்லை. 89 சதவீதமானவர்களுக்கு எந்தவிதமான அடிப்படைத் தேவைக்குமான வசதியும் இல்லை. 68 சதவீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள்.இது ஐ.நா வின் புள்ளிவிபரங்கள்.

இந்தியாவைவிட பெரிய நாடனா சீனாவில் வறுமை காரணமாக பல ஆயிரம் பேர் இறந்து இருக்கலாம். ஆனால் சீனாவில் நடக்கும் நிகழ்வுகள் அதிகம் வெளி உலகுக்கு செய்திகள் வருவதில்லை அங்குள்ள அரசின் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறையே இதற்கு காரணம்.

பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்க மற்றும் ரஷ்யா  நாடுகளின் ஆக்ரமிப்பு,நடக்கும் உள்நாட்டு  போர்கள் மற்றும் குழப்பங்கள் , அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் காரணமாக குறைவான உணவு மற்றும்   உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பங்களாதேஷில் அதிகம் வேலை நிறுத்ததின் காரணமாக உணவு உற்பத்தி அதிக பாதிக்கப்ட்டுள்ளது.உணவுப் பற்றாக்குறையினால் அதிக மக்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் அங்கே மக்கள் உழல்கிறார்கள்.

உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இங்கு ஊழல், விவசாயம் புறக்கணிக்கப் பட்டது மற்றும் சாதி மதக் கலவரங்கள்  ஆகியவற்றின் காரணமாக முப்பது கோடிக்கும் அதிகமான மக்கள் உணவின்றி வறுமையில் வாடுகின்றனர். இதற்கு அரசிடம்   முறையான உணவு பகிர்வு முறை இல்லாமல் இருப்பது   அல்லது பகிர்ந்து அளிகாமலே இருப்பது மேல் வர்க்கத்தின் அதிகாரப் போக்கு,அரசியல், பதுக்கல்,மேல் நாட்டு விவசாய முறை என பல காரணங்கள் இருக்கின்றன.

செல்வந்த நாடான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் நாடுகளின்  அருகில் இருக்கும் பலஸ்தீன் மக்கள் வறுமையில்இருப்பதை நாம் அன்றாட  செய்திகளிலிருந்து அறிந்துக்கொள்கின்றோம். இதற்கு மற்றொரு காரணம் அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்ரமிப்பும், வெளிநாடுகளில் இருந்து  கப்பலில் வரும் உணவு பொருட்களை இஸ்ரேல் தடுப்பதுமே ஆகும்

இப்போது சிரியா மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டு மட்டும் விரட்டப்பட்டு  அகதிகளாய் வாழும் நாடுகளில்  உணவுக்கு,தண்ணீருக்கு உறைவிடத்துக்கு படும் அவலங்களை அறியும் போது நெஞ்சே உறைந்து விடும் போல் இருக்கிறது

பூகம்பம், சுனாமி,தீ ,புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவால்  பாதிப்புக்குள்ளாகி உணவுக்கு மக்கள் நிவாரண முகாம்களில் அலைமோதுவதை, வழி அனைத்தும் அடைக்கப் பட்டு வெள்ளத்தால் தனித்து விடப்பட்டு  வானத்தை நோக்கி  உணவு பொட்டலங்களுக்கு என்று எங்குவதை அன்றாடம் செய்திகளாக நாம் பார்க்கிறோம்.

 

திருமண வீட்டில் உணவுக்காக வந்து நிற்க்கும் யாசிப்போர் திருமண வீட்டாரை  கண்ணீர் மல்க கைகளை ஏந்தி  பார்க்கும் போது ஒரு விலங்கை விரட்டுவதைப் போல கருணையின்றி அவர்கள் விரட்டப்படுவதும் அதன் பின்னர் மிஞ்சிய உணவுகள் குப்பையில் கொட்டப்படுவதும் மிகக் கொடூரமானதாகும்.

நம்மை சுற்றி உள்ள பிராணிகள்,விலங்குகள் கூட நாம் அளிக்கும் உணவுகளை விரயம் செய்வதில்லை.

நமக்கெல்லாம் கஷ்டம் எதுவும் இல்லாமல் உணவு  கிடைத்துவிடுகிறது. எனவே வீண்விரயம் செய்வது ஒன்றும் பாவமான விஷயமாக தெரிவதில்லை

 

மனித பிரபஞ்சத்தில்  பெரும்பாலான மக்கள்      ஒரு கவளம் உணவு கூட கிடைக்காமல்  கோடிக் கணக்கில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டே மனிதர்கள்   அகங்காரம் மற்றும் ஆடம்பரம் கொண்டு  வீண் விரயம் செய்கிறார்கள்.

 

ஒருவன் காணமால் போன  பொருள் மீண்டும் கிடைத்தால் அவன் எவ்வளவு சந்தோஷம் அடைவானோ அது போல் அவன் தனக்கு கிடைத்த உணவை கருத வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்..)அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு கீழ் இருப்பவர்களை பாருங்கள். உங்களைவிட மேல் இருப்பவர்களை பார்க்காதீர்கள்.அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். நூல்:முஸ்லிம்

சராசரியாக ஒரு மனிதன் தன் வயிற்றிற்கு எவ்வளவு உணவு சாப்பிட முடியும். அதிக வகையிலான உணவுவகைகள் வைத்திருப்பதால் அனைத்தையும் சாப்பிட முடியுமா? சரி என்னவென்று பார்க்கலாமே என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் உணவுகள் எச்சிலிலையில் ஏராளமாக குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றது. இது யாரை யார் திருப்தி செய்யவதற்கான ஏற்பாடு.உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் உங்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ளத்தானே வருகிறார்கள். அல்லது உங்கள் வீட்டு விருந்தில் எவ்வளவு வகையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்பதை பார்க்கவா வருகிறார்கள்.சரி உணவு மிஞ்சி விடுகிறது, என்ன செய்வது ? அருகில் இருக்கும்  முதியோர் இல்லங்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், இயலாதவர்களுக்கும் அதை கொடுத்து விடுங்கள்.வீண் விரயத்தை தவிற்கும் நிலையும்  அன்பு செலுத்தியதன் நன்மையும் உங்களுக்கு கிடைக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்..)அவர்கள் கூறினார்கள்: மனிதர்களுக்கு அன்பு காட்டாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான். (நூல் :முஸ்லிம். )

திருமண சொற்பொழிவுகள்,விருந்து நடக்கும் இடம்கள்,பள்ளிவாசல்,கோயில் மற்றும் பள்ளிக்கூடம்,கல்லூரிகள் மூலம் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் . வீண் விரயத்தை  தவிர்ப்போம்.! வறுமையை ஒழிப்போம்!! மனிதம் காப்போம்!!!

_____________________________________________________________________________________

News

Read Previous

எல்லோர்க்கும் உதவிடுவோம் !

Read Next

குளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *