இவர்கள் சந்தித்தால்..?

Vinkmag ad
  Cartoon இவர்கள் சந்தித்தால்..?
கலைஞர், ஜெயலலிதா, அன்புமணி, விஜயகாந்த் ஆகிய நால்வரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
கலைஞர் : அம்மையாரை என் வாழ்நாளில் சந்தித்துவிடக் கூடாது என்பதால்தான் நான் சட்டமன்றத்துக்கே கூட வருவதில்லை. என்னுடைய துரதிருஷ்டம் இன்று சந்திக்கும்படி ஆகிவிட்டது…
அன்புமணி : அதிர்ஷ்டம், துரதிருஷ்டம் பத்தியெல்லாம் நீங்களும் பேச ஆரம்பிச்சுட்டீங்களா? உங்க பகுத்தறிவுக் கொள்கை என்னாச்சு?
ஜெயலலிதா :
அவர் என்னிக்கு மஞ்சத்துண்டு போட ஆரம்பிச்சாரோ, அன்னிக்கே பகுத்தறிவை மூட்டை கட்டி வச்சுட்டார்னு தமிழ்நாட்டுக்கே தெரியும்… நீங்க புதுசாக் கேட்டுக்கிட்டிருக்கீங்க? அடுத்த முதல்வராகப் போறேன்னு சொல்லிக்கறவருக்கு இது கூடத் தெரியாமப் போச்சே!
விஜயகாந்த் : 2016 தேர்தல்லே பகுத்தறிவு கூட யாராவது கூட்டணி வைக்கப் போறீங்களா? அப்புறம் ஏன் தேவையில்லாம அதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க?
அன்புமணி : என்னை முதல்வரா ஏத்துக்கற யாரோடவும் நான் கூட்டணி வைக்கத்தயார்!  இங்கே யாராவது இருக்கீங்களா? (யாரும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை).
(சிறிது இடைவெளி விட்ட பிறகு) சரி… கூட்டணி இருந்தாலும் இல்லேன்னாலும் நான் முதல்வராகப் போறதா நானும் பெரியய்யாவும் முடிவு பண்ணியாச்சு! மதுக்கடைகளை மூடணும்கற முதல் கோப்பில கையெழுத்துப் போட பேனா மூடியைக் கூட நான் திறந்து வச்சாச்சு !
ஜெ : பேனாவை நீங்க மூடிருங்க அன்புமணி.. நான் ஒருத்தி இங்கே இருக்கறவரை வேற யாரையாவது முதல்வரா அமர உட்ருவேனா..?
கலைஞர் : நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள். 1996, 2006 ஆகிய ஆண்டுகளையெல்லாம் அம்மையார் இன்றைய தினம் மறந்துவிட்டார் போலிருக்கிறது! அவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு தனது உடல்நிலையைக் கவனிக்கட்டும்! அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது!
ஜெ :
தள்ளமாட்டாத வயசிலே ஒருத்தர் தள்ளுவண்டியிலேயே போய் அரசியல் நடத்துவாராம்.. எனக்கென்ன வயசாயிட்டுது இப்ப ஓய்வெடுக்க?
அன்புமணி : நீங்க இந்த சண்டையே போட வேணாம்.. நான் உங்க ரெண்டு பேருக்குமே ஓய்வு கொடுக்கப் போறேன். “மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி “விளம்பரத்தை நீங்க பாக்கலியா?
விஜயகாந்த் :  அது என்ன விளம்பரம்? நான் பாக்கலியே? ஒரு மாசமா நான் பேப்பரே படிக்கலை.
கலைஞர் : அதை விடுங்க கேப்டன்! அவருடைய கனவை விளம்பரமாக் கொடுத்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடப் போகிறோம் என்று நானும் அறிக்கை கொடுத்து விட்டேன். அன்புமணி புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்புமணி : நல்லாவே புரியுது. ஆனா உங்க நோக்கம் நிறைவேறாது. உங்க கூட கூட்டணி வச்சுத்தான் நாங்க கெட்டுப் போனோம்.. நாங்க தனியாக் கடை போடறோம்னா பெரியவரா லட்சணமா எங்களை வாழ்த்திட்டுப் போகாம, இப்படி எங்க அடிமடியிலே கைவைக்கறீங்களே, இது நியாயமா?
ஜெ :
நான் உங்க எல்லாருக்குமே ஆப்பு வைக்கப் போறேன்.. தேர்தலுக்கு முன்னாலே மதுக்கடைகளை மூடறப் போறதா நானே ஒரு அறிக்கை குடுத்துட்டா என்ன செய்வீங்க?
அன்புமணி : அய்யய்யோ, அதை மட்டும் செஞ்சிராதீங்க! நாங்க எத்தனை வருஷமா மதுவிலக்கைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்..  அந்தக் கோப்பிலே கையெழுத்துப் போட எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க!
விஜயகாந்த் : எனக்குப் பிடிக்காத வார்த்தை “கையெழுத்து”. அன்புமணி ஏன்தான் இப்படி அலட்டிக்கிறாரோ தெரியலை… அடுத்த முதல்வரா வரப்போறது நான்தான். ஆனா முதல்வரா வந்தா என்ன செய்யப் போறேன்னு இப்ப சொல்லமாட்டேன். அதைப் பரம ரகசியமா வச்சிருக்கேன். வெளியே சொன்னா யாராவது அதைக் காப்பியடிச்சு ஓட்டு வாங்கிருவீங்க!
           (தமிழிசையும் ஈ.வி.கே. எஸ். இளங்கோவனும் உள்ளே நுழைகின்றனர்).
தமிழிசை : என்ன மதுக்கடைகளைப் பத்தித்தானே பேசிக்கிட்டிருக்கீங்க? நாங்க தமிழ்நாட்டிலே ஆட்சியைப்  பிடிச்சதும் மதுவிலக்கை அமல்படுத்தப் போறோம்!
இளங்கோவன் : ஏன், நாங்க ஆட்சியைப் பிடிக்க மாட்டமா? ஆட்சிக்கு வந்ததும் புதிய மதுவிலக்குக் கொள்ளையை, சாரி, கொள்கையை அமல்படுத்தப் போறோம். ராகுல் காந்தியே சொல்லிட்டாரு!
ஜெயலலிதா : முதல்லே நீங்க ஆட்சி செய்யற மாநிலங்கள்லே மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்திட்டு அப்புறம் பேசுங்க!
                                              (விரைப்பாக வெளிநடப்பு செய்கிறார்)
கலைஞர் : சரி.. அம்மையார் ஆட்சியைப் பத்தி நாளை விடவேண்டிய ஒரு அறிக்கையை நான் தயார் செய்ய வேண்டும்.  வருகிறேன்.
அன்புமணி : விழுப்புரம் பக்கத்திலே ஒரு கிராமத்திலே இருக்கற டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடற போராட்டம் இருக்கு.. நானும் வரேன்!
விஜயகாந்த் : சிங்கப்பூர் ஃபிளைட்டுக்கு நேரமாச்சு… நானும் வரேன்! (எல்லோரும் கலைகின்றனர்).
                                                                  கற்பனை :ராஜகுரு

News

Read Previous

ச்சீய்… – மின்னூல் – சி.சரவணகார்த்திகேயன்

Read Next

செஞ்சித் தூண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *