இளிச்ச வாயர்களா இஸ்லாமியர் ?

Vinkmag ad

இளிச்ச வாயர்களா இஸ்லாமியர் ?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி.

1946 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் ஆங்கிலேய அரசு ஆட்சி மாற்ற போராட்ட காலங்களில்   கிழக்கு வங்காளத்தில் நவகாளி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஹிந்து மக்கள் தாக்கப் படுவதும், வீடுகள் கொளுத்தப் படுவதும், அதேபோன்று பீகாரில் முஸ்லிம்கள் தாக்கப் படுவதும் எங்கே ஹிந்து-முஸ்லிம்கள் சிவில் யுத்தமாக மாறிவிடுமோ என்று பயந்த கவலையுடனும், அது இந்திய விடுதலைக்கு ஊறு செய்துவிடுமோ என்று பயந்த மஹாத்மா காந்தி நவகாளிக்கும், பீகாருக்கும்   முன்னாள் பீகார் முதன் மந்திரி ஷஹீத் சுஹ்ரவாடியுடன் இணைந்து இரண்டு சமுதாயத்தினையும் ஒன்று படுத்தினார். அதேபோன்ற கலவரம் மற்ற இடங்களுக்கும் பரவ இருக்கும்போது தான் சாகும்வரை உண்ணா நோன்பு இருக்கப் போகிறேன் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு செய்தி பரவியதும் சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் முயற்சி சிறிது கட்டுப் பட்டது. ஆனால் அன்றைய காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததால் இந்தியா இரண்டாக துண்டுபட்டு இருவேறு நாடுகளாக 1947 ஆகஸ்ட் மாதம் உருவானது. இந்தியா பிரிவினை காரண்மாக கிட்டத்தட்ட 20,00,000/ அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், வீடு இழந்தும், இடம் பெயர்ந்த சம்பவம் இன்னும் மறையவில்லை. இந்திய நாடு இரண்டாக பிரிந்ததிற்கு காரணம் மகாத்மா காந்தி தான் என்று தவறான கருத்தினைக் கொண்ட வலது சாரி கும்பலுக்கு பலியானார் மஹாத்மா என்ற வரலாறு உங்களுக்குத் தெரியும்.

1984ம் ஆண்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அம்ரிஸ்டரில் உள்ள பொற்கோவிலை ஒரு மிலிட்டரி கோட்டையாக்கிய தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் என்று அன்றைய பிரதமர்- இரும்பு மனுசி இந்திரா காந்தியினை அவரது பாதுகாப்பு சீக்கிய அதிகாரியே கொன்றது உங்களுக்குத் தெரியும். அதற்கும் அப்பாவி டெல்லி சீக்கிய மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று இருந்தாலும் வலது சாரி கும்பலாலும், சமூக விரோதிகளாலும் 2800 சீக்கிய மக்கள் கொல்லப்பட்டு, அவர்களுடைய வீடு, தொழில் நிறுவனங்கள் தாக்கி அழிக்கப் பட்டது இன்னும் சீக்கிய மக்களிடையே மாறாத வடுவாக உள்ளதும் உங்களுக்குத் தெரியும்.

2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் நிலைய வன்முறையினை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் 2000 முஸ்லிம் மக்களுக்கு மேல் கொல்லப் பட்டு வீடுகள், வியாபார தளங்கள் இழந்து அகதிகளாக இன்னும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கலவரங்கள் உடனுக்குடன் ஏற்படும் கலவரமாக இல்லை. மாறாக திட்டமிட்டு தாக்கப் படும் சம்பவங்களாகவே கருத வேண்டியுள்ளது. ஏனென்றால் கலவரக்காரர்கள் கலவரங்களில் ஈடுபடும்போது காவல் துறையினர் கண்டும் காணாது இருப்பதும், அவசர அழைப்புகள் ஆயிரம் வந்தாலும் கண்டும் காணாது இருப்பது அதிகார வர்க்கமே ஒரு சாரார் கண்ணசைவுக்காக இருப்பது போல் தான் நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் குஜராத்தில் கோத்ரா சம்பவத்தில் முன்னாள் எம்.பி. ஜாபிரே தனது உயிரும், தனது வீட்டில் அடைக்கலம் புகுந்த பலரின் உயிர்   போகுமுன் அரசுக்கும், அதிகாரி களுக்கும் தொடர்பு கொண்டும் எந்த உதவியும் வரவில்லை என்று தெரிவிக்கப் பட்டது.

அதேபோன்று தான் பிப்ரவரி 23-27 தேதிகளில் டெல்லியில் நடந்த கலவரமும் நடந்ததாக தெரிகிறது. ஏனென்றால் டெல்லி சிறுபான்மையினர் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் சபாருல் இஸ்லாம் கான் பிப்ரவரி 24 தேதிகளில் கலவரம் கண்டு பல அழைப்புகள் அதிகாரிகளுக்கு செய்தாலும் யாரும் செவி சாய்க்க வில்லை என்று கூறுகிறார்.

பிரிட்டிஷ் இந்தியா கொம்பனி ஆட்சியினை இந்தியாவினை விட்டு விரட்ட அனைத்து தரப்பினரும் மதம், ஜாதி மறந்து போராடினர், தங்களது இன்னுயிரை அர்பணித்தனர். ஆனால் மத்தியில் 2019ல்  ஆட்சி அறுதி பெரும்பான்மையராக பிஜேபி வந்ததும், CAA சட்டம் டிசம்பர் 11ல் நிறைவேற்ற பட்டதும் முஸ்லிம்கள் தங்களை மதரீதியான ஏன் பிரிக்கவேண்டுமென்று டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்கு அருகில் ஷாஹீன் பாக்கில் பெண்கள் திரண்டு CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக  அமைதியாக காந்திய வழியில் குரல் எழுப்பினர்.

டெல்லியினை ஆட்சி செய்த கெஜராவாலோ அல்லது மத்திய அரசோ கண்டு கொள்ளவில்லை. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகளும் நடந்தன. டெல்லியில் அரசு கெஜராவால் தலைமையானாலும் காவல் துறை மத்திய அரசு கையில் தான் இருக்கிறது. கெஜராவால் அரசில் முஸ்லிம் மக்கள் தொகை 13 சதவீதமாகும். டெல்லி அரசில் முஸ்லிம்கள் பணியாற்றுபவர் மிகவும் குறைவே. காவல் துறையில் 77, 397 பேர்கள் இருந்தாலும் முஸ்லிம் காவலர்கள் 1388 தான் அது 1.8 சதவீதமாகும்.

பிப்ரவரி 8 ந்தேதி நடந்த டெல்லி தேர்தலில் கெஜராவால் கட்சி 70 இடங்களில் 62 இடத்தில் வெற்றி வாகை சூடியது.  அதில் முஸ்லிம் எம்.எல் .ஏ 5 பேர்கள் ஆகும். முஸ்லிம்கள் கெஜராவால் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தினைப் பற்றி கருத்து சொன்னதாக தெரியவில்லை. அரவிந்த் கெஜராவால் எப்படி மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றால் 2011ம் ஆண்டு டெல்லி ராம் லீலா மைதானத்தில் 2011ம் ஆண்டு அண்ணா ஹஜாரே அவர்கள் லோக் பால் மற்றும் லோக் ஆயுத்தா சட்டம் இயற்ற போராட்டம் நடத்தியபோது அவருடன், புதுச்சேரி கவர்னர் கிரேன் பேடி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மற்றும் யோகா குரு ராம் தேவ் ஆகியோருடன் சேர்த்து போராடியவர். மத்திய அரசுடன் பல்வேறு கால கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியவர் ஆவார். அப்படி பட்ட கெஜராவால் சகீன் பாக் பக்கம் தலை காட்டியதாக தெரியவில்லையே அது ஏன் என்ற் புதிராக உள்ளது.

முஸ்லிம் பெண்கள் பல மாதங்கள் அமைதியாக போராட்டம் நடத்திய நிலையில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தெரிந்ததும், ஜாபிரபாத் மெட்ரோ நிலையம் அருகில் பிப்ரவரி 23ல் பெண்கள் திரண்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக 2019 டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பிஜேபி தலைவர் கபில் மிஸ்ரா அவர்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததோடு கலவரத்திலும் இறங்கினார்கள். அவர்கள் கலவரம் செய்த நேரத்தில் அமெரிக்க அதிபர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அது எப்படி இருந்தது என்றால் அரண்மனை  எரியும்போது நீரோ மன்னன் பிடில் என்ற வாத்தியம் வாசித்துக் கொண்டது போல இருந்தது என்றால் மிகையாகாது. பிப்ரவரி 23ந்தேதி நடந்த கலவரம் 26 வரை நீடித்தது. அதன் விளைவு 53 உயிர்கள் பலியாகி, நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து, வீடுகள், கடைகள் என்று பாராமல் தீக்கிரையாக்கி மறு நவகாளி ஆகிவிடுமோ என்ற பயம் இந்தியா முழுவதும் கவ்விக் கொண்டது. வீடு இரண்டு பட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள் அதுபோல சிவ் விஹார் என்ற பப்லிக் ஸ்கூல் சேதமடைந்தது, அத்தோடு நின்றதா வெறியாட்டம் அசோக் நகர் பள்ளிவாசல், கோகுலபுரி பள்ளிவாசல், பைஜாப்பூரி பள்ளிவால் போன்றவை சூறையாடப் பட்டது. அவைகளை படம் பிடித்து வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப் படுவதிற்காக சென்ற NDTV, CNN, Times of India, Times Now பத்திரிக்கையாளர்கள், மற்றும் போட்டோக்ராபர்கள் தாக்கப் பட்டதோடு அவர்கள் பிடித்த படங்களும் கேராக்களிடமிருந்து அகற்றப் பட்டது. சிலர் அவர்கள் ஹிந்துக்களா என்று அறிய பேன்ட் ஜிப்புகளை கழட்டி காட்டவும் செய்தார்கள் என்று சொல்லும்போது இவை அனைத்தும் திட்டமிட்டே நடத்தப் பட்ட வெறியாட்டங்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?

அது சரி மத்திய அரசுதான் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்தாலும் தன்னை நம்பி ஒட்டுப் போட்ட முஸ்லிம் மக்கள் பாதிக்கப் படும்போது 2011ல் ராம் லீலா மைதானத்தில் நடந்த ஆர்பாட்டம்போல அல்லது உண்ணா நோன்பு ஏன் டெல்லி முதல்வர் இருக்கவில்லை என்ற கேள்விக்கு  விடை தெரியா புதிராகவே உள்ளது. அல்லது மேற்கு வங்க முதல்வர் வீர மங்கை, மம்தா பானெர்ஜி, மார்ச் 2ல் , ‘டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப் பட்ட மனித வேட்டை’ என்று சொல்லவில்லையே அது ஏன் என்று தெரியவில்லை. பிப்ரவரி 24ல் மத்திய அரசு ராணுவத்தினை கலவரம் அடக்க அழைக்கப் போவதில்லை என்றது. ஆனால் டெல்லி காவல்துறை வெறும் பார்வையாளர்களாகவே இருந்தார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் பலர் பேட்டியளித்துள்ளனர். காயம்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது அவரைகளைப் பார்த்து நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று சொல்லி திருப்பி அனுப்பப் பட்டார்கள் என்று ஜான் ஸ்வஸ்திய அபியான் என்ற தன்னார்வ நிறுவனம் சொல்கிறது. டெல்லியினைச் சார்ந்த சில வழக்கறிஞர்கள் குடியுரிமை சட்டத்திற்காக போராடி கைது செய்யப் பட்டவர்களை காண சென்றபோது அவர்களையெல்லாம் திட்டி திருப்பி அனுப்பிவிட்டதாக அவர்கள் கமிஷனுக்கு தெரிவித்துள்ளார்கள். டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் அதை குமார் கலவரக் காரர்களை தலைமை ஏற்று சென்றதாக கூறப் படுகிறது.

கலவரத்தை தூண்டிய கபில் மிஸ்ரா மற்றும் இருவர் மீது ஏன் எப் ஐ.ஆர் போடவில்லை உடனே போடுங்கள் என்று உத்திரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாற்ற பட்டதும் நாடே அவர் மாற்ற பட்டது உள் நோக்கம் கொண்டது என்றது. இருந்தாலும் அந்த நீதிபதி தலை நிமிர்ந்து அரங்கமே அதிரும்படி பிரிவுசாரா விழாவில் பங்கேற்றது இன்னும் நாட்டில் நீதி செத்து முடியவில்லை என்பதினை காட்டுகிறதல்லவா?

US Commission of Religious Freedom என்ற அமைப்பு டெல்லியில் நடந்த கலவரத்தினை கண்டித்துள்ளது. அத்துடன் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்புக்கு  களங்கம் ஏற்படவில்லையா? டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் தங்களை ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று மனுவும் செய்துள்ளதே அது நமக்கு கேவலமாக இல்லையா?

மேகாலயா கவர்னர் ராய் அவர்கள் சொல்லுகிறார், ‘ எப்படி ஜனநாயகத்திற்காக போராடிய மாணவர்களை மிலிட்டரி டாங்குகள் கொண்டு நசுக்கிறார்களோ அதே போன்ற நடவடிக்கைகளை போராட்டக் காரர்கள் மீது எடுக்கவேண்டும்’ என்ற துவேசமான, சம்பந்தமில்லாத சம்பவத்திற்கு அறிவுரை கூறுகின்றார். அதேபோன்ற நடவடிக்கை ஏன் பிப்ரவரி 23-26 கலவரக்காரர்கள் மீது எடுக்கவில்லை என்று அவரோ அல்லது மற்ற ஆட்சியாளர்களோ ஏன் கேட்கவில்லை என்று புரியாத புதிராக உள்ளதல்லவா?

குறைந்தது பீம் பார்ட்டி தலைவர் சந்திரசேகர் ஆஜாத், முன்னாள் தலைமை தகவல் ஆணைய தலைவர் வஜகத் ஹபிபுல்லாஹ் மற்றும் சமூக ஆர்வலர் சயிட் அஜ்மல் நக்வி போன்றவர்கள் உச்சமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் போல ஏன் டெல்லி முதல்வர் மனுவினை தாக்கல் செய்யவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை மெஜாரிட்டி மக்களை அவர் பகைத்துக் கொள்ள விருப்பமில்லையோ என்று தெரியவில்லை.

ஆனால் குடியுரிமை எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களிடையே தங்களது உரிமைக்காக போராடும் மூன்றாம் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வீட்டைவிட்டு வெளியேறாத முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமைக்காக கடுமையான வெயில், பசி, இயற்கை உபாதைகள் என்று பாராது போராடும் நிலைக்கு உந்தப் பட்டுள்ளனர். 

2) இமாம்கள் தாங்கள் வெறும் தொழுகை நடத்தும் ஹசரத்  மார்கள் மட்டுமல்ல, மாறாக முஸ்லிம்களுக்கு இன்னல் வந்தால் தயங்காது குரலும் கொடுப்போம் என்று அவர்களுடைய எழுச்சியினை காட்டுகின்றது.

3) ஆனால் அவசியமில்லாமல் சினிமாக்காரர்களை சந்தித்து அவர்கள் ஆதரவினை பெற தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதற்குப் பதிலாக அரசியல், அரசு மற்றும் தன்னார்வ தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியிருக்கலாம்

4) காலம் காலமாக முஸ்லிம்கள் ஓட்டினை பெற்றுவரும் கட்சிகள் ஏன் வீதிகளில் இரண்டு மாதங்களாக போராடும் மக்களைச் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

5) முஸ்லிம் தலைவர்கள் இப்போதாவது விழித்துக்கொண்டு ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

6) 1962ம் ஆண்டு நடந்த இந்தோ-சீனா யுத்தம், 1965ம் ஆண்டு நடந்த இந்தோ-பாக் யுத்தங்களில் பெண்கள் தங்களது ஆபரணங்களை நாட்டிற்காக அர்பணித்ததை பலர் அறிந்திருக்கலாம். அதேபோன்று டெல்லியில் பாதித்த மக்களுக்கு தங்களது ஆபரணங்களை கழட்டிக் கொடுக்கும் காட்சி நெஞ்சை தொடுகின்றதே.

7) முஸ்லிம் மக்களிடையே குடியுரிமை சட்டங்கள் மூலம் எங்கே தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டு இரண்டாம் தர குடிமக்களாகி விடுவோமோ என்ற அச்ச உணர்வு உள்ளது. அதனைப் போக்க மத்திய அரசும், மாநில அரசும் தங்களது நடவடிக்கைகளால் நம்பிக்கை ஊட்டவேண்டிய கடமை உள்ளவர்கள் என்று பாராளுமன்றத்தில், சட்டமன்றத்திலும் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்ல கடமைப் பட்டவர்கள் தானே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் . அவர்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் சற்று அழுத்தம் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமையல்லவா? அவ்வாறு போராடும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காதவர்களை அடுத்தடுத்து வரும் தேர்தலில் புறக்கணிக்க வேண்டியதும் முஸ்லிம்கள் கடமைப் பட்டவர்கள் என்றால் மறுக்கமுடியுமா?

News

Read Previous

உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம்

Read Next

புறந்தள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *