இராட்சசி

Vinkmag ad

இராட்சசி

பொது மக்கள் பார்ப்பதற்கு … ஆஹா சூப்பர் என்று தோன்றும் , ஆனால் இதில் அத்தனை கற்பிதங்கள் .

நீங்க எத்தனைப் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்தீர்கள் என இதன் இயக்குநர் கெளதம் ராஜ் தம்பியிடம் நேற்று விவாதம் தொடங்கிய போது கேட்டேன் .

50 க்கும் மேல் என்றார். சற்றேறக்குறைய 50000 அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் இருக்கும் தமிழகத்தில் வெறும் 50 பள்ளிகளை ஆய்வு செய்து திரைக்கதையை வடிவமைத்து இருப்பது ???

முதல் காட்சியே அபத்தம் …. ஒரு அரசியல் மாநாட்டிற்குப் பள்ளிக் குழந்தைகளை அடித்து சீருடையுடன் லாரியில் ஏற்றும் பள்ளி …. இந்த 10 ஆண்டுகளில் கூட எனக்குத் தெரிந்து எங்கும் இல்லை. பொது நிகழ்வுக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்துக்கு குழந்தைகளை அனுப்பும் காட்சியாக மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. (குழந்தைகள் நல ஆணையம் என்ன செய்கிறது ?)

அடுத்து தலைமை ஆசிரியர் முதலில் பள்ளிக்குள் நுழையும் போது ஒரு வகுப்பிலும் ஆசிரியர் இல்லாமல், ஆசிரியர் ஓய்வு அறையில் மேக்கப் போடுவதும் , கதைப் புத்தகம் படிப்பதும் , வகுப்பறையில் மொபைல் பார்த்துக் கொண்டு இருப்பதுமாகக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண் ஆசிரியரை விசில் அடித்து கிண்டல் செய்யும் உதவித் தலைமை ஆசிரியர் , அதைக் கண்டுகொள்ளாமல் போகும் பெண் ஊழியர் (பெண்கள் அவ்வளவு ரோஷம் கெட்டவரா ? அல்லது ஆண் ஆசிரியர்கள் தரங்கெட்டவரா ? ) என்பதாக அடுத்தடுத்த காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதோடு இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் , இன்று கிராமங்களில் கூட காலை 9.15க்கு ஆசிரியர்களின் பயோ மெட்ரிக் , அடித்துப் பிடித்து பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுகின்றனர். ஆனால் திரையில் அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் வருவதாகவும் , வருபவர் கரண்ட் பில் கட்டப் போவதாகவும் கூறிச் செல்கிறார்.

இயக்குநர் … இன்றைய அரசுப் பள்ளியின் பயோ மெட்ரிக் முறை , அட்டென்டன்ஸ் app , Smart Class room , phonetic method , Maths lab இவற்றைக் காட்டி இருக்கலாம் .

ஒரே காட்சியில் தலைமை மேடம் சிகரெட் விற்கும் கடையை காலி செய்ய , பாட்டில் உடைத்து மிரட்டுவதாகக் காட்டியிருப்பது , ரெளடிகளை அடித்து ஓட விரட்டுவது , கலெக்டரை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு நீங்க உங்க வேலையப் பாருங்க எனக் கூறுவது என்பதான காட்சிகள்
திரைக்குக் கைத்தட்டலுக்கு உருவாக்கப்படலாம்.

எதார்த்தத்தில் எட்ட நின்று துரத்தி விடும் , இப்படத்தில் தலைமை ஆசிரியராக வரும் கீதாராணியின் பின்புலம் மிக…. பலம் வாய்ந்தது , அவர் ஆர்மியில் உயர் பதவியில் இருந்து சேவைக் காலம் முடிந்து இந்தப் பதவியை வேறு ஒரு உள் நோக்கத்துடன் தேர்வு செய்து வருகிறார் , அந்த தைரியத்தையும் துணிச்சலையும் தருவது அந்த அனுபவமே , அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே திரைப்படம் நகர்கிறது .

அரசியல்வாதிகளை எதிர்ப்பது , தனியார் பள்ளி தாளாளருக்கு தண்ணீர் காட்டுவது என இவையும் அதற்குள் அடங்கும். அதோடு உறவே இல்லாமல் தனியாகத் தந்தையுடன் வாழும் இவர் , அவர் இறந்த போதும் அரை நாள் விடுப்புடன் தன்னந்தனியாக ஈமக் கடனை முடித்து பள்ளி வந்து விடுகிறார். இறுதியில் அந்தப் பள்ளி மூத்த ஆசிரியருடன் பேசும் போது தான் தெரிகிறது. தனது காதலுக்காக , அவன் பணியேற்க வேண்டிய பள்ளியில் விபத்தால் இறந்ததால் திட்டமிட்டு இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக வந்துள்ளார் என்பதும் புரிகிறது.

அப்போ,திரைக்கதைக்காக புனையப்பட்ட இப்பாத்திரம் எப்படி வேண்டுமானாலும் தன்னை முகம் காட்டும் அல்லவா ? அதில் ஒரு போதை இருக்கிறது … அதுதான் பேசப்படுகிறது. அதுவும் ஜோதிகா நடித்ததால் சற்று கூடுதலாகப் பேசப்படுகிறது.

ஆசிரியர்கள் அனைவரும் தலைமையின் கீழ் பரிதாபப்படுவதாகவும் காட்டப்படுகிறது. புதியதாக வந்த தலைமை ஆசிரியர் , மற்ற ஆசிரியர்களை எப்போதும் விரைப்பாக இருந்தே கடந்து போவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 95% இல்லாத நிஜத்தை இருப்பதாக மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கு .

ஒரு பள்ளி நன்றாக செயல்பட, மாணவர் ஆசிரியர் உறவு சுமூகமாக இருக்க வேண்டும் என்பது போல , ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் நல்லிணக்கம் இருக்க வேண்டும். அது இறுதி வரை மருந்துக்கும் காண்பிக்கப்படவில்லை.

உணவு இடைவேளையில் மாணவிகளின் உளவியல் குறித்து தோழியாய் இருப்பதும் ,சிறு குழந்தை கீழே விழுகையில் ஓடி வந்து அரவணைத்து அவனை கவனிப்பதும் பொதுவாக 80% ஆசிரியர்களது பண்புகள் தான்.

ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு மாணவரை வர வைத்து SUNDAY BOX கொண்டாட்டம் செய்வது வரவேற்கத்தக்கது , ஆனால் எல்லா ஆசிரியரும் கீதாராணி போல தனி ஒருவரான மனிதராக வாழ்வதில்லையே … குடும்பத்துடன் பிணைந்தே வாழ்கின்றனர்.

அரசுப் பள்ளி கணக்கு
ஆசிரியர் இலக்கிய மன்ற நிகழ்வுக்கு அழைத்துச் சென்று பரிசு பெற மாணவனை தயார் படுத்தும் காட்சியில் மாணவன் கட்டிக் கொண்டதால் ஆசிரியர் நெகிழ்கிறாரே …. அந்த நெகிழ்ச்சி தான் 90% அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நிதர்சனம் .

DPI ஐ காண்பித்து அங்கு லஞ்சம் / ஊழலுக்கான வேலையை . (கல்வித்துறை எப்படி இதைக் கண்டிக்காமல் விட்டது? )
தனியார் பள்ளி ஆட்கள் செய்வதைக் காட்டிய உங்களுக்கு ஒரு SMC ஐ பள்ளியில் காட்டத் தோன்றவில்லையே …

அதோடு அரசுப் பள்ளிகளில் 82 பேரை யாரும் பெயிலாக்க விதிகளே கிடையாது. அதிக பட்சமாக 50 பேர் படிக்கும் வகுப்பில் 3 பேர் அல்லது 5 பேர் ஃபெயிலாக்குவார்கள். அப்படி எனில் இது என்ன கணக்கு ? 9ஆம் வகுப்பில் 800 பேர் படித்தார்களா ? ஏனெனில் அவ்வளவு மாணவரை தேர்ச்சி பெற வில்லை என்று கூற , 9ஆம் வகுப்பு வரை அவர்கள் எதுவும் கற்றுக் கொள்ளாமல் வைத்திருந்த ஆசிரியர் , தலைமை ஆசிரியர் , கல்வி அதிகாரிகள் BRT , RMSA என எல்லாத் தரப்பும் பதிலளிக்க வேண்டும்.

அதோடு உடனடித் தேர்வு என்ற ஒன்றை ஜூன் மாதமே நடத்தி 10 ஆம் வகுப்பிற்குள் ஈர்த்துக் கொள்ளும் நடைமுறை உண்டு தெரியுமா ?

அது கூட இப்போது 9ஆம் வகுப்பு வரைக்கும் கட்டாயத் தேர்ச்சி தான் அரசு சொல்லி இருக்கு … அந்த 3 பேரக் கூட பெயில் ஆக்க இயலாது.

தரவுகளை மட்டும் தான் எடுத்தீர்களா இயக்குநரே .. தரமான விதிமுறைகளை எக்காலத்திலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீறவே மாட்டார்கள்.

அதோடு , 82 மாணவரையும் 10 ஆம் வகுப்பில் அனுப்புவது தலைமையின் மனிதாபிமானத்தைக் காட்டினாலும் Rules ஐ பிரேக் பண்ணுவது சரியான வழிமுறையா ? எக்காலத்திலும் அரசுப் பள்ளியில் நடக்கவே நடக்காது … தனியார் பள்ளிகள் தான் இந்தத் தகிடுதத்தோம் வேலையை செய்யும்.

ஒரே நாளில் மாணவரிடம் சாதிப் பிரச்சனை ஒழிப்பது போல ஒரு காட்சி , ஆண்டாண்டு காலமாய் சமூகத்தில் பீடிக்கப்பட்ட நோய் , ஆசிரியர்களைப் பார்த்து முதல் பக்கத்தில் உள்ள தீண்டாமை பாடத்தையே இன்னும் நடத்தி முடிக்கலயா என ஏளனமாக , கோபமாக தலைமை ஆசிரியர் கேட்பது போல ஒரு காட்சி. எல்லாவற்றுக்கும் கைக்கூலிகளாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை சித்தரிக்கும் காட்சிகள்.. தவறானப் புரிதலை மக்களுக்கு வழங்கும்.

தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் , பேருந்தே செல்லாத ஊர்கள் , அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளிகள் என எல்லா இடங்களிலும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் நிறைந்து கிடக்கிறார்கள் , என்ன ஒரு வித்யாசம் , ஒருவர் கணக்கை அருமையாகக் கற்றுத் தருவார் , ஒருவர் ஆங்கிலத்தை அழகாக நடத்துவார் , வரலாற்றை நினைவில் நிற்கும் படி நடத்துவார் , ஒருவர் பள்ளிக்காக கையேந்தி பணம் பொருள் திரட்டுவர் , ஒருவர் செடி மரம் வைக்க மாணவரைத் திரட்டுவார் , ஒருவர் பள்ளிக்கு வண்ணமடிப்பார் , ஒருவர் நூலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவார் … எங்கோ ஒரு சிலர் இவை எல்லாவற்றையும் செய்வார். இப்போதும் எமது அரசுப் பள்ளிகளில் செய்து கொண்டு இருக்கின்றனர்.

இப்படத்தின் அழுத்தமான நேர்மறைக் கருத்து …. மாற்றம் ஏற்படுத்த.. தலைமைப் பொறுப்பு நினைத்தால் சாத்தியம் என்ற ஒற்றைப் புள்ளி , ஆனால் அடையும் வழிமுறைகளில் பிணக்குகள்.

இயக்குநர் சற்றே எதார்த்தசூழலை மனதில் இருத்தியிருக்க வேண்டும்.
எல்லா ஆசிரியர்களையும் மூன்று கேள்வி கேட்கும் தலைமை ஆசிரியர் போல , இயக்குநர் தன்னையே மூன்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம் ..

1.தலைமை ஆசிரியர் SMC கூட்டி தீர்மானம் போட்டு கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விழிப்புணர்வை சமூகத்திற்கு தராமல் போன தென்ன ? RTE – கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வு .. இதை முதல் கேள்வியாகக் கேட்கலாம் .

2.பள்ளிக்கூடத்திற்கு பணம் தந்தால் இங்கு கக்கூஸ் கூட மணக்கும் .. என்பதற்கு பதிலாக , மக்களிடம் கல்வி வரி வசூல் செய்வது பள்ளிகளுக்கு செலவிடப்படுகிறதா என்பதை மக்கள் புரிந்து கொள்ள காட்சிகள் அமைத்திருக்கிறோமா ? என்பதை இரண்டாவது கேள்வியாகக் கேட்டுக் கொள்ளலாம் .

3. தலைமையை பள்ளிக்கு அனுமதிக்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் , அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்த ஆசிரியர்கள் யார் என்பதைக் கேட்டதோடு ,

அரசுப் பள்ளியில் மக்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் தடையாக இருக்கும் தனியார் மயத்தைக் கண்டிக்கும் சில காட்சிகளை , அரசின் கல்விக் கொள்கைகள் , வியாபாரமாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் , அரசியல்வாதிகள் பங்குதாரர்களாக வைத்திருக்கும் கல்வி நிறுவனங்கள் , தனியார்ப் பள்ளிகளில் அரசின் தாராளமயம் இவற்றைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூற ஏன் காட்சிகள் நாம் வைக்க வில்லை என்று மூன்றாவது கேள்வியைக் கேட்டுக் கொள்ளலாம் ?
மொத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சரியில்லை என்பதாகக் கதைப் பின்னப்பட்டிருக்கு ..

அரசும் பொதுமக்களும் ஆசிரியர்களும் இணைந்தது தான் பள்ளிகள் என்பதை இப்படம் சற்று அழுத்தமாகக் காட்டி இருக்கலாம் .

பாரதி தம்பி வசனத்திற்கு பங்கமில்லை ,ரசிக்கும் படி இருக்கு , தனிக்கொடி Thani Kodi
அவர்களின் பாடலும் இசை என அனைத்தும் அருமை , ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நீங்கள் நினைப்பது போல OB ( Out of buisness) அடிப்பதில்லை மக்களே.

உங்கள் காட்சிப் பிழை ,அதைக் கருத்துப் பிழை ஆக்கி விட்டீர் , சினிமா என்பது சமூகத்தை , அதன் நிஜத்தைப் பிரதிபலிக்க வேண்டும் , ஒரு முப்பதாண்டிற்கு முன்பு இருந்த அரசுப் பள்ளியின் தோற்றமாக இது இந்த நாளில் காட்டப்பட்டுள்ளது . வீரம் வேண்டும் தான் , விவேகமும் அவசியம் .

ஆனால் இதை எதையுமே சிந்திக்காமல் எமது ஆசிரியர்களே பிம்பங்களில் வாழாதீர் .. உங்கள் பணிகளைப் பகடி செய்ய , உங்கள் தகுதிகளை தரமற்றதாக்க பல ஓட்டைகள் நிறைந்த இப்படத்திற்கு கண்மூடித்தனமாக உற்சாகம் அடையாதீர்கள். ..

எனதருமை ஆசிரியர்களும் பெற்றோர்களும் இப்படத்தை கல்வி ஒரு அரசியல் என்ற புரிதலோடு பார்த்தால் கூடுதல் தீர்வுகள் கிடைக்க வழியுண்டு .

கல்வி ஒரு அரசியல் .. இப்படத்தில் வெறும் திரைப்பட அரசியல் மட்டுமே இருக்கிறது .

உமா

News

Read Previous

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை

Read Next

தற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *