தற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்!

Vinkmag ad
karoonதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்!

யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், ‘தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
“அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான்  என்று   கூறினார்கள்.

தற்பெருமை என்பது,

(1) உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும்
(2) மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்; அத்தியாயம்: 1, பாடம்: 1.39, எண் 131)

அன்பு சகோதர, சகோதரிகளே! மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், யாருடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கின்றதோ அவர் சுவனம் செல்ல இயலாது; மாறாக நரகத்திற்கு தான் செல்ல நேரிடும் என்பதாகும்! (அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பானாகவும்.)

(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.’ (அல்-குர்ஆன் 31:18)

நபி மூஸா(அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் சமூகத்தை சார்ந்த காரூனின் தற்பெருமை குறித்தும் அவன் அழிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அல்குர்ஆனின் அல்கஸஸ் என்ற சூராவில் 76 முதல் 82 வது வசனம் வரை அல்லாஹ் விவரித்துள்ளான்.

காரூனுக்கு அல்லாஹ் கொடுத்த கணக்கிலடங்காத செல்வங்கள் பற்றி சொல்லும் போது அவனது பொக்கிஷ பெட்டகத்தின் சாவியை மட்டுமே பல நூறு பேர் கொண்ட கூட்டம் சேர்ந்து தூக்கினால் மட்டுமே அந்த சாவியை கொண்டு காரூனின் பெட்டகத்தை திறக்க முடியுமாம்.

ஆடம்பர மாளிகைகளும் தங்க ஆபரணங்களும் பெரு மலையாய் குவிந்திருந்தன காரூனிடம். அதைக் கொண்டு இந்த பூமியில் நன்மையை செய்து நாளை மறுமைக்கான நற்கூலிக்கு உன்னை தயார் செய்துகொள் என்று காருனுக்கு நபி மூஸா(அலை) அவர்கள் மூலம் அல்லாஹ் எச்சரிக்கை செய்தான்.

நபி மூஸா(அலை) அவர்களைப் பார்த்து எனது அறிவைக் கொண்டும் திறமையைக் கொண்டும் நான் தேடிய செல்வங்கள் இவையென்று காரூன் பெருமையடித்தான். இவனது பெருமையைக் கண்ட இறைவன் ஓ…காரூனே, உனக்கு முன்னால் வாழ்ந்த சமூகத்தாருக்கு உன்னிடம் இருப்பதை விட பல மடங்கு செல்வத்தை நாம் கொடுத்து சோதித்தோம் என்று எச்சரித்தான்.

ஆனாலும் காரூன் தனது பெருமையை கைவிடவில்லை, முடிவில் ஒரு பெரும் சப்தத்துடன் பூமியை பிளக்கச் செய்து அதில் காரூனையும் அவனது ஆடம்பர மாளிகைகள்,தங்க ஆபரணங்கள்,செல்வங்கள் அனைத்தையும் புதைத்து விட்டான்.(புதையுண்ட இடத்தின் புகைப்படம் இணைத்துள்ளோம்)

மாலை நேரத்தில் காரூனின் செல்வத்தை கண்ட மக்கள் அதிகாலை எழுந்து பார்த்த போது அதன் தடயமே இல்லாது கண்டு அதிர்ச்சியடைந்தனர். நல்லவேளை அல்லாஹ் நம்மை காப்பாற்றி விட்டான் என்று தமது இறைவனுக்கு நன்றி பாராட்டினர்.

காரூனின் செல்வத்தில் பலகோடியில் ஒரு பங்கு கூட இல்லாத இன்றைய அம்பானி,அதானி,டாட்டா,பிர்லா குறித்தெல்லாம் நாம் சிலாகித்து சொல்கிறோம்.இத்தகைய பணக்காரர்களின் செல்வத்தில் கோடியில் ஒரு பங்கு கூட இல்லாத நாம் நம்மிடம் இருக்கும் அற்பமான பணம் காசு,நகைகள்,நிலங்கள்,வீடுகளை கொண்டு பெருமையடிக்கிறோம்.

எல்லாம் எனது அறிவாலும்,திறமையாலும் தான் சம்பாதித்தேன் என்று இன்றைய மனிதன் ஆணவம் கொள்கிறான். இந்த ஆணவ மனிதனுக்கும், காரூனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்தால் மட்டுமே இறை சாபத்தில் இருந்து இந்த மனிதன் தப்பிக்க முடியும்?

சொந்த பணத்தில் கார் வாங்கும் மனிதனை விட லோன்(வட்டி) என்னும் கடனுக்கு கார் வாங்கும் மனிதன் அடிக்கும் பெருமைக்கு அளவே கிடையாது. தன்னிடம் 10 ரூபாய் மட்டும் தான் இருக்கும் என்று தெரிந்தே தன்னிடம் பல கோடி ரூபாய் இருப்பதைப் போன்று பீலா விடும் மனிதனின் தற்பெருமை செயல் நமக்கே முகம் சுளிக்க வைக்கும்.

தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து பிற மனிதனை மதிக்காத பண்பும்,அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசும் போக்கும் இறைச்சாபக்கேடன் காரூனின் வாரிசுகளுக்கு மட்டுமே உரியதாகும்.

யார் ஒருவர் பெருமையை தனது மேலாடையாய் அணிந்து கொள்கிறார்களோ? நிச்சயம் அந்த மேலாடை நரகத்தின் போர்வை என்பதை உறுதி செய்யட்டும். எவர் மனதில் கடுகளவு பெருமை இருந்தாலும் அவர்களுக்கு சொர்க்கம் கிடையாது என்று அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
பெருமை கொண்டவருக்கு இவ்வுலகிலேயே பல்வேறு சோதனைகளையும் கஷ்டத்தையும் கவலைகளையும் கொடுத்து நாளை மண்ணறைக்குள்ளும் மறுமையிலும் மிகப்பெரிய வேதனையை அல்லாஹ் கொடுத்து விடுவான்.(நவூதுபில்லாஹ்) நம் அனைவரையும் தற்பெருமை என்னும் கொடிய விஷத்திலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றுவானாக ஆமீன்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

இராட்சசி

Read Next

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *