இயல்பு வாழ்க்கையும், இயல்பற்ற வாழ்க்கையும்

Vinkmag ad
இயல்பு வாழ்க்கையும், இயல்பற்ற வாழ்க்கையும் 
எஸ் வி வேணுகோபாலன் 

னவரி எட்டாம் தேதி அன்று தமிழ் நாள் மார்கழி 23. அந்த நாளுக்கான   திருப்பாவை பாசுரம், ‘மாரிமலை முழைஞ்சில்…’ என்று தொடங்கும் ஓர் அற்புத இலக்கியத் தமிழ்.  மலைக்குகையில் படுத்து உறங்கிக் கிடக்கும் சிங்கம், அறிவுற்று நெருப்புப் பார்வை பார்த்து மெய்சிலிர்க்க எழுந்து நின்று எல்லாத் திசைகளும் அதிரும்படி ஓங்கி முழக்கமிட்டு வந்து நிற்பதை உவமையாக்கிக் கண்ணனைத் துதி செய்கிறாள் ஆண்டாள்.  தொழிலாளி வர்க்கத்தின் அப்படியான முழக்கம்தான் இந்த எட்டாம் தேதி கேட்டது.

ஆனால், ஊடகங்களில், பெரும்பாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதென்ன இயல்பு வாழ்க்கை.  அதற்கு எந்த பாதிப்பு நேராமல் போய்விட்டது?
பழைய நகைச்சுவை துணுக்கு ஒன்று உண்டு. அக்காலங்களில் கடிதம் எழுதுவோர், முதல் வரியில் நலம் நலம் அறிய ஆவல் என்று எழுதத்தொடங்கி, வீட்டில் யார் யாருக்கெல்லாம் என்ன பிரச்சனை, என்னென்ன சிக்கல்கள், எந்தெந்த மாதிரியான நோய்கள் என்பதை ஒவ்வொன்றாய் எழுதிவிட்டு, கடைசியில் முடிக்கும்போது, மீண்டும் மற்றபடி யாவரும் நலம் என்று எழுதி முடிப்பார்கள். அந்த மாதிரி ஒலிக்கிறது இந்த இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை என்ற பிரகடனம்.
130 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு பேர் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இப்படி எடுத்துக் கொள்வோம்.  ஐம்பது பேர் படிக்கும் வகுப்பில் எட்டு பேர் வரவில்லை என்றாலும் வகுப்பு நடக்கும். ஆனால் மாணவரை நேசிக்கும் ஓர் ஆசிரியர் இத்தனை மாணவர்களோ  இன்று வரவில்லை என்று சிந்திப்பார், அன்றைய நாள் முழுக்க வகுப்பு அதைப் பேசிக்கொண்டிருக்கும். அல்லது இப்படி பார்ப்போம்: ஊரில் இருக்கும் ஆறு பள்ளிகளில் ஒரு பள்ளியின் மாணவர்கள் முழுக்க பள்ளிக்குச் செல்லாமல் வெளியே நின்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற ஐந்து பள்ளிகளும் இயல்பு நிலை மாறாமல் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அந்த மாணவர்கள், அன்று முழுவதும், அந்த வார முழுவதும் வேலை நிறுத்தம் செய்த பள்ளி குறித்து மிகவும் ஆர்வத்தோடு பேசத்தான் செய்வார்கள். தாங்கள் ஏன் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போகிறோம் என்று அவர்களிலிருந்தும் மெல்ல மெல்ல கலகக்குரல் புறப்படத்தான் செய்யும்.
திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி, பெட்டிகள் நிரம்பித் ததும்புகின்றன, பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர் சொன்னது  போலவேதான், பஸ்கள் ஓடுகின்றன, ரயில் நிற்கவில்லை, எனவே இயல்பு நிலை பாதிக்கவில்லை என்று சொல்வதும்! முழுக்க முழுக்க கதவடைப்பு, ஹர்த்தால் அல்லது பந்த் என்று நடத்தப்பட்டால், போராட்டம் வெற்றி என்று சொல்வார்களா? மாட்டார்கள். அப்போது விவாதம் வேறு திசைக்கு மாற்றப்பட்டிருக்கும்.  சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருள் கிடைக்காமல் தவிக்கின்றனரே, பரிதவிக்கும் மனிதர்கள் மருத்துவமனைக்குப் போக வழியில்லையே…. இப்படி பொறுப்பற்ற போராட்டங்கள் நடத்தலாமா, பொருளாதாரம் இன்னும் மோசமாகி விடாதா என்று பேசத் தொடங்குவார்கள்!

சரி, அடிப்படையில் இயல்பு நிலை என்பதென்ன?  தாக்குண்டால் புழு கூட நெளியும் என்றானே கவிஞன் (தணிகைச்செல்வன்), அதுதான் இயல்பு வாழ்க்கை. மனிதர் உணவை மனிதர் பறிக்கும் நிலையுண்டோ, மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ என்று கொதித்தானே மகாகவி, அதுதான் இயல்பு நிலை. அநீதி கண்டு பொறாத மனம் இயல்பு. சக மனிதர் அவதியுறுகையில் அவருக்காகத் தோள்கொடுப்பது இயல்பு. நியாயத்திற்காகக் குரல் எழுப்புவதுதான் அடிப்படை மனித இயல்பு. தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன் என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். கடுகு போன்ற உள்ளமல்ல மனித இயல்பு.  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியாத தன்மையே இயல்பு வாழ்க்கை.
சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டுக் குடியுரிமை பறிக்கப்படும் சக குடிமக்கள் எங்கே போய் நிற்பார்கள் என்று கேள்வி எழுப்புவது மனித இயல்பு. பிள்ளைகள்    படிக்கும் பல்கலைக் கழகத்தினுள் பிசாசுகள் முகத்தை மறைத்துக்கொண்டு போய் பேய்த்தனமாக அடித்து நொறுக்குகையில், அய்யோ என்ன இது அராஜகம் என்று துடிப்பதுதான் இயல்பு நிலை. யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும், இலையில் உட்காருகிறேன் எனக்குச் சோற்றைப் போடு என்பது அல்ல இயல்பு நிலை.
ஆனால், உலக மயமும், சந்தைப் பொருளாதாரமும் மனிதர்களைத் தனித்தனியாக ஒற்றை ஒற்றையாகப் பிரித்துவிடுவதில் பெரு வெற்றி கண்டுவிட்டது என்று அதன் பத்தாண்டு மாற்றங்களைப் பார்த்தே வருத்தத்தோடு சுட்டிக் காட்டினார் அறிஞர் ஒருவர். உன் வரையில் பார்த்துக் கொண்டு போ, உனக்கு வேண்டியதை மட்டும் தேடு. உன்னுடையதைப் பற்றிய கவலை மட்டும் படு. என்ற புதிய வேதத்தை தாராளமய சாத்தான் ஓதிக்கொண்டே இருக்கிறது மனிதர் காதுகளில். அது மாட்டிவிட்ட ஹெட் ஃபோன்களை மனிதர்கள் ஒருபோதும் கழற்ற முடிவதில்லை.  எதிரே இருப்பவர் தண்ணீர் வேண்டும் என்றாலும், சைகை செய்து கேட்க வேண்டி இருக்கிறது. ஒருவர் பேசுவது அடுத்தவர் காதில் விழாமல் தடுப்பதற்கு எத்தனையோ கருவிகளை சந்தை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
இத்தனையையும் மீறி, சமூக உணர்வுள்ள தொழிற்சங்க அமைப்பு, மனிதர்களது ஆதிப்பண்புகளை மீட்டெடுத்துக் கொடுக்கப் போராடிக் கொண்டே இருக்கிறது. சாதி இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதர்களைத் திரட்டிப் போராட வைக்கிறது. அவநம்பிக்கையின் மண்டையில் அடித்துத் தகர்த்து, நம்பிக்கை விளக்கின் திரியைத் தூண்டிச் சுடர்விடச் செய்கிறது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று நிறுவப் பார்க்கும் ஆட்சியாளரது முனைப்புகளின் முனையை உடைத்து, எல்லாமே தப்புத் தப்பாக இருக்கிறது என்று பெருவெளியில் நின்று பெருங்குரலெடுத்து முழங்குகிறது. பறிக்கப்பட்ட வாழ்வாதாரம், சுரண்டப்பட்ட தன்மானம், பலமடங்கு ஆகிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வு, பெருகிக் கொண்டிருக்கும் வருமான இடைவெளி எல்லாவற்றுக்கும் நியாயம் கேட்டுக் கொட்டுகிறது போர் முரசினை.
அணி திரட்டப்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள், தொழிலாளிகள் எண்ணிக்கையைப்போல் பல மடங்கு அணிதிரட்டப்படாத பாட்டாளிகளும் இணைந்து நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் வீச்சு இதில் சேராமல் போனவர்களையும்  மெல்ல மெல்ல உறுத்தி எடுக்கும். அவரவர் வாழ்வினையும் வந்து கவ்வும் இருளில் பரிதவிக்கையில் சட்டென்று இதுவரை பற்றாத அடுத்தவர் கரங்களை நோக்கி நீளும் கைகள். அப்போது இயலபு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று எழுதக்கூடாது. இயல்பு வாழ்க்கையின் பரிதாபம் உணரப்பட்டுவிட்டது என்று சொல்ல வேண்டும். அப்படியே  கிடந்து காணாமல் போய்விட முடியாது என்று தெளிவு ஏற்பட்டுவிட்டது என்று பேச வேண்டும்.
மாரி மலை முழைஞ்சில் என்ற அந்தத்  திருப்பாவை பாசுரத்தின் கடைசி அடியில், ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்’ என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. பல கோடி தொழிலாளர்கள் ஆர்ப்பரித்து எழுப்பியுள்ள போர்க்குரலைக் கேட்டுச் செய்ய வேண்டியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆட்சியில் இருப்பவர்களுக்கு உண்டு. அதைப் புறந்தள்ளப் பார்த்தால், கொதிப்புகள் அடங்காது மேலும் அதிகரிக்கவே செய்யும். அது போராட்டங்களது இயல்புநிலை.
நன்றி: தீக்கதிர்: 11 01 2020

News

Read Previous

கத்திப்பேசுவது ஒரு இயலாமை

Read Next

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *