இந்திய மொழிகளின் அடித்தளம் திராவிட மொழிகளே: கி. நாச்சிமுத்து

Vinkmag ad

இந்திய மொழிகளின் அடித்தளமே திராவிட மொழிகள்தான் என்றார் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளர் கி. நாச்சிமுத்து.

அவர் பேசியது:

வேர்களைத் தேடுதல் என்றால் மண்ணுக்குள் இருக்கும் விஷயத்தை தேடுவது எனப் பொருள். இந்த வகையில் நம்முடைய மொழியையும், வரலாற்றையும் தேட வேண்டும். முதல் தாய்மொழி தமிழ் என்பதை தேவநேயப் பாவாணர் கூறினாலும், அதன் வரலாற்றையும், வேரையும் தேடுகிறோம்.

திராவிட மொழியியலின் தந்தை என்றழைக்கப்படும் கால்டுவெல்லின் 200 ஆம் நூற்றாண்டைக் கொண்டாடும் நம்மால் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். அவர் மீதான தவறான புரிதல்தான் நிலவுகிறது. ஆனால், அவர் திராவிட மொழிக் குடும்ப வரலாற்றை மறு கண்டுபிடிப்பு செய்தார். திராவிட மொழிகளில் மலையாளம், துளு உள்ளிட்டவை இருக்கின்றன என்பதை அவர்தான் கூறினார். எனவே, அவர் மேற்கொண்ட மறுகண்டுபிடிப்பு மகத்தானது.

வடமொழி இலக்கணத்தில் தமிழ் இலக்கணம் ஒன்று என்பதை மறுத்தவர் கால்டுவெல். இதுவும் ஒரு மறு கண்டுபிடிப்புதான். இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு அடித்தளமே திராவிட மொழிகளே. தமிழ் மொழியிலிருந்துதான் பல மொழிகள் மாறியிருக்கின்றன.

இந்தநிலையில், இப்போது தமிழும், ஆங்கிலமும் ஒன்றாகி வருகிறது. அந்த அளவுக்குச் சொல் கலப்பு, பேச்சுக் கலப்பு இருக்கின்றன. என்றாலும், தமிழில் மொழிக் கலப்பை எதிர்த்ததால் அதன் தனித்தன்மையை இழக்கவில்லை.

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் கூறிய கருத்துகளை ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும், திட்டமிட்ட சதி எனவும் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இவையெல்லாம் முற்றிலும் தவறு. திராவிடம் என்ற சொல் நமது தேசியத்தைக் குறிக்கிறது. எனவே, திராவிட தேசியம் என்பது முரணானது அல்ல. அதை அரசியல் ரீதியாகப் பேசுவதுதான் தவறு.

தமிழ் இலக்கியங்கள் மக்கள் இலக்கியங்களாக இருக்கின்றன. அது, நாட்டுப்புறக் கலை போன்று மக்கள் வாழ்வியலிலிருந்து வந்தது. ஆனால், வடமொழி இலக்கியம் நகர்ப்புறத்திலிருந்து உருவானது. தமிழ் வளர்ச்சிக்குச் சமண, பெüத்த மதங்களே காரணம். அதன் பிறகுதான் திசை மாறியது. கம்பரால் தமிழ் மொழி இந்திய மொழியாக மாறியது. உமறுப்புலவர், வீரமாமுனிவர் தமிழ் மொழியை உலக மொழியாக்கினர்.

எனவே, மொழியையும், இலக்கியத்தையும் காத்தால்தான் நாட்டைக் காக்க முடியும். இல்லாவிட்டால் நாட்டை இழக்க நேரிடும். மத்திய பாடத்திட்டக் கல்வியிலும் பிரதேச மொழிப் பாடத்தைக் கற்கச் செய்ய வேண்டும். ஆங்கில வழிக் கல்வி மோகத்தை விட வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகப் பாடுபட வேண்டும் என்றார் நாச்சிமுத்து.

News

Read Previous

இஸ்லாம் ஓர் மார்க்கம்

Read Next

கண்ணத்தானில் “அம்மா’ திட்ட முகாம்

Leave a Reply

Your email address will not be published.