இதுவல்லவோ எங்கள் வடசென்னை!!!

Vinkmag ad
இதுவல்லவோ எங்கள் வடசென்னை!!!
——   எம்.ராஜா
            தீபாவளி, பொங்கல் தினத்தன்று வெறிச்சோடி கிடக்கும் சென்னை சாலைகளை வைத்தே அறிந்து கொள்ளலாம் சென்னையில் தற்போது வாழும் பெரும்பாலான மக்களின் பூர்விகத்தை. தன்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது சென்னை. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட நம்பிக்கையுடன் ஒரு கூட்டம் சென்னை எக்மோர், சென்ட்ரல் மற்றும் கோயம்பேட்டில் இறங்கி நம்பிக்கையுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது.
            இந்த சென்னை பட்டணத்திற்கென்று ஒரு கதை இருக்கிறது, அது இங்கு இருந்த அல்லது இருக்கும் கட்டிடங்களைப் பற்றிய கதை அல்ல;  இந்த கட்டிடங்களில் மறைந்து கிடக்கும் இந்த மண்ணின் பூர்வ குடிகளின் கதை, கறுப்பர் நகரத்தில் வாழ்ந்தவனின் உழைப்பே மதராசப்பட்டிணத்தை உலகின் ஒரு முக்கியமான தொழில் நகரமாக, நமது தலைநகரமாக உருவாக்கியது. அதன் பயனை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உருவாக்கித் தந்த மதராஸ் நகரத்திலே நாம் நமது கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கிறோம், அதற்கான நன்றி நம் எண்ணத்தில் இருப்பது நலம்.
            இதன்படி பார்த்தால் 370 வருடங்களுக்கு முன் மதராஸின் கறுப்பர் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதனுக்கும் இப்போது சென்னைக்கு ‘ஐ.டி’ (IT) வேலை தேடி வரும் இளைஞனுக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத தொடர்பிருக்கிறது. அந்த தொடர்பை நோக்கிய தேடலாகவே தமிழ் மரபு அறக்கட்டளை- பன்னாட்டு அமைப்பின்  “மரபு நடை” அமைந்தது.
            வட சென்னையின் வரலாற்று எச்சங்களை நோக்கிய பயணம் தொடங்கிய இடம் பாரிஸ் கார்னர் என்கிற பாரி முனை. பாரிமுனையில் இருக்கும் உயர்நீதிமன்றத்தின் வாகன நிறுத்தத்தில் கூடி சக பயணிகளைச் சந்தித்துக் கொண்டோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் திரு.சுபா மற்றும் வட சென்னையின் வரலாற்றை விளக்க வந்திருந்த நிவேதிதா லூயிஸ் அவர்கள் இந்த பயணத்தின் நோக்கம் மற்றும் நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினர்.
            உயர்நீதிமன்றத்தின் சுவரில் இருக்கும் எம்டன் கல்வெட்டைப் பார்வையிட்டோம். இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களை மிரட்ட எம்டன் என்னும் ஜெர்மானியக் கப்பலிலிருந்து சென்னை நோக்கி குண்டு வீசப்பட்டது. அந்த இடத்தில் அமைந்துள்ள கல்வெட்டே இது. குண்டு விழுந்த நேரத்தில் மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?!! இந்தியாவின் தெற்கு பகுதியில் இருப்பதால் அமைதி பூங்காவில் வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நமது ஊரில் வந்து ஜெர்மானியக் கப்பல் பயம் காட்டி சென்றிருப்பது ஆச்சரியமான செய்தியே. இதனால் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையின் முக்கியத்துவத்தை உணரவும் முடிகிறது.
            ஆங்கிலேயர் காலத்தில் சென்னை கறுப்பர் நகரம் மற்றும் வெள்ளையர் நகரம் எனப் பிரிக்கப்பட்டது. ஆங்கிலேயருக்குச் சேவை செய்வதற்காகக் கோட்டைக்கு வெளியே மக்கள் குடியமர்த்தப்பட்டனர். தொழில் வாரியாக தெருக்கள் பிரிக்கப்பட்டது. அதன் அடையாளமான ஸ்தூபி அமைக்கப்பட்டது. டேர் ஹவுஸ் (Dare House) கட்டிடத்தின் அருகே ஒரு மூளையில் இந்த எல்லைக் கல்லைப் பார்க்க முடிந்தது. எவ்வளவு பெரிய சமூக மாறுதலை ஏற்படுத்திய நிகழ்வின் அடையாளம் இப்படி மறைந்து கிடக்கிறது எனத் தோன்றியது.
            டாட்டா, வாடியா, கோத்ரேஜ் என இந்தியாவில் தொழில்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இவர்கள் அனைவரும் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். பல இனக்குழுக்கள் வாழ்ந்த வணிக மையம் சென்னை, இதில் பார்சிகளுக்கு முக்கிய இடமுண்டு. அப்படி வரும் பார்சி வணிகர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட சத்திரமே ” அஞ்சுமண் பாக்”. நாங்கள் சென்ற போதும் அதில் பார்சி இனத்தவர்கள் தங்கியிருப்பது தெரிய வந்தது. அந்த வளாகத்திலேயே பார்சிகளின் கல்லறை உள்ளது. அதில் புகழ்பெற்ற பெயர்கள் பல உள்ளன, நம்மைக் கவனிக்க வைத்தது “கிளப் வாலா” (clubwala) அவர்களின் பெயர். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வர்க் ஆரம்பித்தவர் இவரே. இன்று இந்த முயற்சியால் பல லட்சம் விளிம்பு நிலை மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.
            சத்திரத்திற்கு அருகிலேயே பார்சிகளின் நெருப்புக் கோவில் உள்ளது (பார்சிகள் நெருப்பை வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்). இதன் உள்ளே பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை. சென்னையில் இருக்கும் ஒரே நெருப்புக் கோயில் இதுவே. ரமலான் மாதத்தின் ஒரு நாள் இங்குள்ள இஸ்லாமியர்கள் இந்த கோவிலைச் சேர்ந்த அரங்கில் வந்து நோன்பு திறக்கிறார்கள், அன்று அது பார்சிகள் அளிக்கும்  விருந்து. ஒரு காலத்தில் பெரிய வளாகமாக இருந்த இந்தக் கோவில் தனது எல்லையைச் சுருக்கிக்கொண்டு, அருகில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கும், பள்ளிக்கும் இடமளித்துள்ளது. மதங்கள் இணையும் மகத்தான இடம் இதுவே எனத் தோன்றியது.
            யுனானி மருத்துவமனை வளாகத்தை மக்கள் கிளி பங்களா என்றும் அழைக்கிறார்கள், கிளிகள் கூட்டமாக இங்குக் கூடுவது இதற்குக் காரணம். வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை உணர முடிந்தது. மூலிகை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிட்டியது. சி.எஸ்.ஐ (CSI)  ராஜகோபால் பள்ளி 150வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. ராயபுரம் பகுதியில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பள்ளி இது. சென்னையே காலராவில் அவதிப்பட்ட பொழுது 40,000 பேருக்கு இங்கு சிகிச்சை நடந்துள்ளது ஒரு ஆச்சரியமான செய்தி.
            மிஷனரிகளாக இந்தியா வந்தாலும் பல சவால்களுக்கு இடையே அவர்கள் பல தியாகங்களைச் செய்து இந்த மண்ணின் மக்களுக்குத் தொண்டு செய்திருக்கிறார்கள் என்பதற்கு ‘ஸ்கட்டர்’ (Schudder) அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்லறையே சாட்சி. ஸ்கட்டர் அவர்களே இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையாய் விளங்கும் வேலூர் சிஎம்சி (CMC) கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் என்பது ஒரு முக்கியமான செய்தி.
            ‘நார்த்விக்’ (Northwick) பள்ளியை நாங்கள் அடைந்த போது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த மாணவர்களை வைத்தே இந்த பள்ளி எந்த மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது என உணர முடிந்தது. பள்ளியின் உள்ளே அமைந்துள்ள பழைய தேவாலயத்தைக் காண வாய்ப்பு கிடைத்தது. கடவுளிடம் தனது கோரிக்கையை வைப்பதற்காக மாணவர்கள் தேவாலய சுவரில் எழுதி வைத்திருக்கும் சில வாசகங்கள் அவர்களின் பொருளாதார, குடும்ப மற்றும் சமூக நிலையை உணர்த்தியது.
            N4 துறைமுகம்- காசிமேடு அடைந்த போது சற்று தயக்கமாக இருந்தது ஆனால் அங்கிருந்த மக்கள் மிகவும் அன்போடு எங்களை வரவேற்றனர். கப்பல் எப்படி உருவாக்கப்படுகிறது என நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. நாகூர் ஆண்டவர் கொடிமரம் காணும் வாய்ப்பு கிடைத்தது, தமிழர்கள் வாழும் கடற்புறங்களில் இந்த கொடிமரம் இருப்பது ஒரு சுவாரஸ்யமான தகவல், இது சமூக நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது.
            நிகழ்ச்சியின் இறுதியில் உண்மையான வடசென்னை மற்றும் அதன் மக்கள் பற்றி எழுத்தாளர் திரு.கௌதம சன்னா உரையாற்றினர். வடசென்னை பற்றிய பல பிம்பங்களை உடைத்தெறிந்தது அந்த உரை. சென்னையை உருவாக்கியவன் கண்ணுக்குத் தெரியாத சுவருக்கு அந்த பக்கம் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறான் என உணர முடிந்தது.
            வரலாற்று நடை முடித்து வீடு திரும்பும்போது வட சென்னை பற்றிய புரிதல் வேறாய் மாறி இருந்தது. இன்று அமீபா போல் படர்ந்து கிடக்கும் சென்னையை உருவாக்கியவர்களின் கதைகள் வடசென்னையின் ஒவ்வொரு தெருவிலும் நிறைந்திருக்கிறது என்பதை உணரச் செய்தது இந்தப் பயணம்.
தொடர்பு:
எம்.ராஜா <rajglitz@gmail.com>

News

Read Previous

தொல்காப்பியரின் பேச்சு வகைகள்

Read Next

மதுரை வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் பசீர் அகமது தாயார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *