ஆணவக் கொலைகளைத் தடுக்க அணி திரள்வோம் !!!

Vinkmag ad

ஆணவக் கொலைகளைத் தடுக்க அணி திரள்வோம் !!!

ஜூன் 17, 2017 தீக்கதிரில்

வெளியான

கட்டுரை

—-மு.ஆனந்தன்——– ———

இச்சமூகத்தில் நிலவும் சாதியம், நம் நாட்டின் அனைத்து நல்லவைகளையும்
விரைவில் அழித்துவிடும். இது நாட்டை பிளவு படுத்திவிடும். நாம்
ஒற்றுமையாக இருந்து பல சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் சாதி
ஒழியவேண்டும். ஆகவே சாதி மறுப்புத் திருமணங்கள் சாதியை ஒழித்து தேச
நலனுக்கே வழிவகுக்கிறது. ஆனால் இத்தகைய திருமணங்கள் புரியும் இணையர்கள்
மீது வன்முறை ஏவப்படுகிறது. இது சட்ட விரோதமனது. அவ்வன்முறையாளர்கள்
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நம் நாடு சுதந்திரமான ஜனநாயக நாடு, இங்கு வயது வந்த ஆணும் பெண்ணும்
தங்கள் விருப்பம்போல் மணமுடிக்கலாம். பெற்றோர்களுக்கு இது
பிடிக்கவில்லையென்றால், தங்கள் உறவை முறித்துக் கொள்ளலாமே தவிர, சாதி, மத
மறுப்புத் திருமணம் புரிகின்றவர்கள் மீது வன்முறையை கையாள்வதையோ அல்லது
அதற்குத் தூண்டுவதையோ ஏற்க இயலாது. இக்குற்றங்கள் புரிபவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க நாடு முழுவதுமுள்ள காவல்துறைக்கு நீதிமன்றம்
அறிவுறுத்துகிறது.

இது சாதி இரத்தம் தோய்ந்த லதாசிங் – எதிர் – உத்திரபிரதேச மாநில அரசு
என்ற வழக்கில் 2006ல் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான
உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பின் முத்தாய்ப்பான வரிகள்.

ஆனால் இதற்கெல்லாம் நம்முடைய மேதமை பொருந்திய மத்திய மாநில அரசுகளின் ஆணவ
உளவியலும் கடைமையே கண்ணாயிரமான காவல் துறையின் அதிகார உளவியலும்
உசுப்பேறுமா ? சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் வன்முறையாளர்களை
தண்டிக்கவும் எந்த அரசும் எதுவும் செய்யவில்லை. மீன்பாடி வண்டிகளில் ஊழல்
வழக்குக் கட்டுகளை ஏற்றி இறக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லையாம்.
இந்தக் கொடுமையில சாதிக்கொடுமைய வேற பாரு! ஆணவக்கொலைகளைத் தடு ! என்று
சொல்வது என்ன நியாயம் ? என்ன கொடுமை சார் இது !

உச்சநீதிமன்றத்தின் நீதிச்சீற்றம்

2011ல் ஆறுமுகசேர்வை வழக்கில் உச்சநீதிமன்ற சாட்டைவாரை சுழற்றி வழங்கிய
தீர்ப்பு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பின் ஒவ்வொரு
வார்த்தைகளும் முகநூலில் பதிவேற்றி பல லட்சம் லைக்குகள் பெறத்தக்கவை.

” நமது காலகட்டத்தில் தேசம் மிக முக்கிய மாற்றங்களின் காலத்தை கடந்து
செல்கிறது. இவ்வழக்கைப் போல் பொதுமக்களை பாதிக்கும் பெரும்பிரட்சனைகளில்
நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது. தங்களின் சொந்த விருப்பப்படி சாதி,
மத மறுப்புத் திருமணங்கள் புரிவோரை ஆணவக் கொலை செய்யும் சம்பவங்கள்
வந்தவண்ணம் உள்ளன.

இக்கொலைகளில் எவ்வித கௌரவமும் இல்லை. இது கொடூர நிலபிரபுத்துவ
புத்தியுடைய நபர்களால் செய்யப்படும் காட்டுமிராண்டித்தனமான அவமானகரமான
செயல்கள் அன்றி வேறொன்றுமில்லை. அவர்களுக்கு கடுமையான தண்டனை
வழங்கினால்தான் இச்செயல்களைத் தடுக்க முடியும். தனிமனித உரிமைகளில்
தலையிடுகிற, கௌரவக் கொலைகள், வன்முறைகள் நிகழ்த்துகிற அல்லது
ஊக்குவிக்கிற காஃப் பஞ்சாயத்து, கட்ட பஞ்சாயத்துகளை சமீப காலமாக
கேள்விப்படுகிறோம்.

இவை சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கங்காரு நீதிமன்றங்களாக
செயல்படுகின்றன. இவை சட்ட விரோதமானவை தயவுதாட்சன்யம் இல்லாமல் ஒழிக்கப்பட
வேண்டியவை.” … “ இத்தகைய குற்றங்கள் நடக்கப்போவதாக முன்கூட்டியே தகவல்
கிடைத்திருந்தும் அதை தடுக்கத் தவறிய, குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலாத,
முறையாக புலன் விசாரனை செய்யாத மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், காவல்
கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் உடனடியாக தற்காலிக
பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைவாரியான தக்க நடவடிக்கைகள்
எடுக்கவேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு உத்திரவிடப்படுகிறது…”

இது உடலில் ஓட வேண்டிய இரத்தம் சாதிய வீதிகளில் ஓடுவது கண்டு
உச்சநீதிமன்றம் மீண்டும் வெகுண்டு, ஆறுமுக சேர்வை – எதிர் – தமிழ்நாடு
மாநில அரசு என்ற வழக்கில் 19.04.2011 அன்று நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ,
அசோக்குமார் கங்குலி, சுவதந்தர் குமார் இணைந்த உச்சநீதிமன்ற அமர்வு
வழங்கிய தீர்ப்பு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கு இணையானது
என்று சொல்றாங்களே. அப்படியானால் ஆண்டிற்கு 1000 ஆணவக் கொலைகள்
ஆர்ப்பரிக்கிற இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளில் 5000 மாவட்ட ஆட்சியர்கள்,
வட்டாச்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுருக்க
வேண்டுமே. அப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒத்த அதிகாரியை யாராவது காட்ட
முடியுமா ?

ஆனால் அதற்கு மாறாக நேர்மையாக விசாரணை செய்கிற அதிகாரிகளை டிரான்ஸ்பர்
செய்வதும் தற்கொலை செய்ய வைப்பதும்தான் நடந்தேறுகிறது. திருச்செங்கோடு
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை விசாரித்து வந்த பெண் டி.எஸ்.பி.
விஷ்ணுப்பிரியா தீடீர் என்று தற்கொலை செய்து கொண்டது ஏன்?

கொட்டாவி விட்ட காங்கிரஸ் அரசு ;

உச்ச நீதிமன்றமே ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வலியுறுத்தி
அடுத்தடுத்து அதிரடித் தீர்ப்புகளை அளித்ததால் அரசதிகார மையங்களில் சிறு
சலனம் ஏற்பட்டது. கடந்த காங்கிரஸ் அரசு தனது நீள் துயிலை கலைத்து நீட்டி
நெளித்து கொட்டாவி விட்டது. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனைச் சட்டப்
பிரிவு 300 ல் 5 வது பகுதியாக ஆணவக் கொலைகளை சேர்க்கவும் இந்திய
சாட்சியியல் சட்டப் பிரிவு 105 ல் புதிய பிரிவு சேர்க்கவும் உரிய
சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதாக மன்மோகன் சிங் தலைமையிலன மத்திய
அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது கடைசி வரை
செய்தியாகவே முடிந்துவிட்டது. இந்தச் சட்டத் திருத்தங்கள் போதுமானதல்ல
என்பது வேறு விசயம்.

சட்ட ஆணையத்தின் அறிக்கையும் முன்வரைவும் ;

மேற்படி தீர்ப்புகளின் அடிப்படையில் மத்திய சட்ட ஆணையம் ஆகஸ்ட் 2012 ல்
சமர்பித்த தனது 242 வது அறிக்கையில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்
சட்டம் இயற்ற வேண்டியதின் அவசியத்தையும் விரிவாக அலசியுள்ளது. அது இந்திய
தண்டனைச் சட்டம் பிரிவு 300 ஐ ஆணவக் கொலைகளை கையாளும் விதமாக திருத்துகிற
ஆலோசனையை மிகச்சரியாக நிராகரித்து விட்டது.

அதற்கு மாறாக அந்த அறிக்கையுடன் திருமண சுதந்திரத்தில் தலையீடு செய்வதை
தடுப்பதற்கான சட்டம் 2011, (Prohibition of Unlawful Assembly,
Interference with Freedom of Matrimonial Alliance Bill 2011 ) என்ற
தனிச் சட்ட முன்வரைவை உருவாக்கி மத்திய அரசுக்கு அளித்தது. இந்த வரைவு
நாடு முழுவதும் சுற்றுக்கும் விடப்பட்டது. வலிமைப்படுத்தும் ஆலோசனைகளை
வரவேற்றது. ஆனால் இதை சட்டமாக இயற்ற கடந்த காங்கிரஸ் அரசும் தற்போதைய
பிஜேபி அரசும் எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த வரைவு மத்திய அரசு குப்பைக் கிடங்கில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு
வருகிறது. ஒரு சமயம் மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றுவதாக ஏதும் பாவலா
காட்டினால், இந்த வரைவைத்தான் மீண்டும் தூசி தட்டிப் பார்ப்பார்கள். எனவே
இந்த வரைவின் முக்கிய அம்சங்கள் குறித்தும் நிறை குறைகள் குறித்து
வலுப்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்தும் நாம் விவாதித்தாக வேண்டும்.

சட்ட முன்வரைவின் முக்கிய அம்சங்கள்;

1) வயது வந்த ஆண் மற்றும் பெண்ணின் திருமணத் துணையைத் தேர்வு செய்கின்ற
உரிமை சம்மந்தப்பட்ட நபர்களைத் தவிர பெற்றோர் உள்ளிட்ட எவருக்கும்
கிடையாது.

2) எந்த ஒரு சட்டப்பூர்வமான திருமணத்தை மறுதலிப்பதும், திருமணம்
செய்தவர்கள், செய்து கொள்ள இருப்பவர்கள் அவர்கள் உறவினர்கள்,
ஆதரவாளர்கள், உதவுபவர்கள் போன்றோரை நிர்பந்திப்பது, தடுப்பது,
அச்சுறுத்துவது எதிர் மறையான சூழ்நிலைகளை உருவாக்குவது போன்ற செயல்கள்
வன்முறையாகக் கருதப்படும்.

3) சட்டப்பூர்வமாக நடைபெற்ற, நடைபெற இருக்கிற, நடைபெற விரும்புகின்ற
திருமணத்தை தனிநபர், நபர்கள், குடும்பம், சாதி, சமூகம், பாரம்பரியம்
போன்ற எதற்காவது கெளரவம் பாதிக்கப்படும் என்ற காரணத்திற்காக
அத்திருமணத்தில் தலையிடுவதற்காக கூட்டப்படுகின்ற கூட்டங்கள், கட்டப்
பஞ்சாயத்துக்கள் போன்றவைகள் சட்ட விரோதமாகும்.

4) அத்தகைய கூட்டங்கள் பங்கேற்றவர்களுக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை
சிறை தண்டனையும், அபராதமும் அத்தகைய வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு 3
வருடம் முதல் 7 வருடம் வரை சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

5) மேற்படி சட்ட விரோத கூட்டங்களின் விளைவாக நடைபெறும் வன்முறைகள்,
கொலைகள் போன்றவற்றை இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள
கொலைக்குற்ற பிரிவுகளுடன் சேர்த்து விசாரணை நடத்தப்படும்.

6) வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய கூட்டங்களில்
பங்கேற்றார் என்பதை மட்டும் காவல்துறை நிரூபித்தால் போதுமானது. தான்
குற்றமற்றவர் என்பதை குற்றம் சாட்டப்பட்டவரே நீரூபிக்க வேண்டும்.

7) குற்றங்களை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம்,

8) வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதி மன்றம்.

இந்த அம்சங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை. கட்டப்பஞ்சாயத்து என்ற
பெயரில் தனி அரசாட்சி நடத்துகின்ற கெளரவம் என்ற பெயரில் சாதி வெறியாடும்,
கொலைகாரக் கூட்டங்களை, சட்டத்தின் முன் நிறுத்த முயல்கிற முதல் முக்கிய
முயற்சியே இச்சட்ட முன்வரைவு எனலாம். இருந்தாலும் இதனை மேலும்
முழுமையானதாகவும், வலிமையானதாகவும் உருவாக்கவேண்டும்.

அ.சவுந்தரராசன் தனிநபர் மசோதா;

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 2016ல் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்த அ.சவுந்தரராசன், சாதி
ஆணவக் கொலைகளை தடுக்க தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
சட்டமன்றத்தில் யார் ஒரு மசோதாவை தாக்கல் செய்தாலும் அதை விவாதத்திற்கு
எடுத்துக்கொண்டு இறுதியில் ஓட்டெடுப்புக்கு விட வேண்டும்.
ஆனால் அந்த மசோதாவை ஆளும் கட்சி விவாதத்திற்கு கூட எடுத்துக்கொள்ளாமல்
நிராகரித்து ‘ஜனநாயகத்தை’ காப்பாற்றியது. சபாநாயகர் மசோதாவை திறந்துகூட
பார்க்காமல் பத்திரமாக திருப்பிகொடுத்து சட்டமன்ற மாண்புகளுக்கு நியாயம்
கற்பித்தார். இந்த ஜனநாயக படுகொலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளோ ஆணவக் கொலைகளே இல்லை என்று
அப்பட்டமான பொய்யுரை பசப்பினார் அப்போதைய உள்துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு சில நாட்களில்தான் ஆதிக்க சாதி கௌசல்யாவை
திருமணம் செய்ததற்காக உடுமலைப்பேட்டையில் நடுபகலில் நடுரோட்டில் தலித்
இளைஞர் சங்கர் துடிக்கத் துடிக்க வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஆணவக்கொலைகளில் இயங்கும் பிஜேபியின் இதயத்துடிப்பு;

தற்போது ஆட்சி பீடத்திலேறியுள்ள பிஜேபி அரசு கடந்த மூன்றாண்டுகளாக இந்த
சட்ட வரைவை கிடப்பில் போட்டுவிட்டது. இந்தியாவிற்கு வருவதற்கே நேரமில்லாத
நமது பிரதமருக்கு இப்படி ஒரு சட்ட வரைவு கிடப்பில் இருப்பதா
தெரியப்போகிறது. ஆணவக்கொலைகளுக்கு மூல காரணமான மனுதர்மம், சாதிய
படிநிலைகள், வர்ணாசிரமம், சாதி மத பழமைவாதம் இவைகள் தான் பிஜேபியின்
இதயத்துடிப்பு. எனவே அவர்களின் கொள்கைப்படி இந்த சட்டத்தை இயற்றுவார்களா
என்பது சந்தேகமே. ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டப்படி தனிச்சட்டம்
இயற்றவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

அரசுகளின் அரசியலமைப்புக் கடமை ;

1993ல் ஐ.நா. பொது சபையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான
பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அதில் இந்திய அரசும் ஒரு அங்கமாகும்.
இப்பிரகடனத்தின்படி இக்குற்றங்களை தடுப்பதற்கு சட்டமியற்றுவதும் வேறு
உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதும் மத்திய அரசின் கடமையாகும்.

அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசிற்கான வழிகாட்டு
நெறிமுறைகளில் சரத்து 46ன் படி அரசு பட்டியலின, பழங்குடிகள் மற்றும் பிற
ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அநீதிகளிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும்
பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே தனிச்சட்டம் இயற்ற
வேண்டியது அரசுகளின் அரசியலமைப்புக் கடமை. கேட்பது நமது உரிமை.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடைபயணம் ;

இந்தப் பின்னணியில்தான் ஜூன் 9 முதல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி
தனிச்சட்டம் இயற்றக்கோரி சாதியம் கொதிக்கும் தமிழக வீதிகளில் எழுச்சிமிகு
நடைபயணம் செல்கிறது. நடை பயணத்தில் ஆர்ப்பரிக்கும் சமத்துவ சரிநிகர்
முழக்கங்கள் அரசதிகாரத்தின் ஆணவச் செவிகளைத் தகர்த்து, துளைத்து,
ஊடுபாய்ந்து பேரதிர்வை ஏற்படுத்துகிறது. கொடுமைச் சாதியில் குளிர் காயும்
உளுத்த நாற்காலிகள் தமிழகம் முழுவதும் பற்றி எரியும் போராட்டத் தீயின்
கடும் வெம்மை கண்டு அஞ்சி, அரற்றி, சென்னையில் நுழைய தடை விதித்துள்ளது.
தடைகளைத் தகர்த்து முன்னேறுவோம்.. கொடும் சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராக
சிறப்புத் தனிச் சட்டம் இயற்றும் வரை போராடுவோம்…

தொடர்புக்கு; மு.ஆனந்தன் – 94430 49987 – anandhan.adv@gmail.com

News

Read Previous

2030-ம் ஆண்டிலிருந்து மின்சாரக் கார்கள் மட்டுமே!

Read Next

பெண்களைப் போற்றுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *