ஆட்டிஸம் என்னும் பளிங்கு அறை

Vinkmag ad

ஆட்டிஸம் என்னும் பளிங்கு அறை

யெஸ்.பாலபாரதி

| ஆட்டிஸ நிலையாளர்களை இந்த உலகம் அணுகும்முறை பெரும்துயரம்

| இன்று – ஏப்ரல் 2 – உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் பூஞ்சோலையைவிட்டு வெளியேறுகிறான் என்று செல்கிறது அந்தக் காட்சி.

இதில் வரும் பளிங்கு அறை எனும் படிமம் ஆழமானது. உள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களைப் பார்க்க முடியும். ஆனால், தொடர்புகொள்ள முடியாது. வெளியே இருப்பவர்களோ உள்ளிருப்போரின் உண்மைத் தோற்றத்தைப் பார்க்க முடியாது. அவர்களின் மாறுபட்ட ஓவியங்களையே பார்க்க முடியும். ஆட்டிஸத்துக்குப் பொருத்தமானதானதாக இந்த உவமை இருக்கிறது.

ஆட்டிஸம் ஒரு நிலை

ஆம். ஆட்டிஸம் என்பதும் ஒரு பளிங்கு அறையே! அதற்குள் நிற்கும் மனிதர்களால் வெளி உலகத்தோடு சரியானபடி தொடர்புகொள்ளவோ, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தவோ முடிவதில்லை. ஆனால், வெளியிலிருக்கும் நாமோ அந்த பளிங்கு அறை காட்டும் ஓவியங்கள் போன்ற அவர்களது வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டு அவர்களை எடைபோடுகிறோம். இன்னும் சொல்லப்போனால், அவர்களைத் தவறாகவே எண்ணுகிறோம். நாம் பார்ப்பது உண்மையல்ல என்பதை உணராமலே அவர்களை நோக்கி சொல் அம்புகளை வீசுகிறோம்.

ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்பதைத்தான் சுருக்கமாக ஆட்டிஸம் என்று அழைக்கிறார்கள். இந்தக் குறைபாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இது ஒரு நரம்பியல் குறைபாடு என்கிறார்கள். ஆனாலும் இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதன்காரணமாக இதனை வராமல் தடுக்கவோ, சரிசெய்யவோ மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆட்டிஸம் நோய் அல்ல, குறைபாடுதான் என்று சொல்கிறார்கள். இன்னும் எளிமையாகச் சொல்வ தானால் ஆட்டிஸம் என்பது ஒரு நிலை என்கிறார்கள். அதோடு ஆட்டிஸத்தின் நிலைக்குள் வரும் குழந்தைகள் எல்லோருக்கும் முற்றிலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் இன்றுவரை ஏதுமில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆட்டிஸ நிலைக்குள் இவர்கள் இருந்தாலும், சுயமாகச் சிந்திக்கவும், பிறரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளவும் முடியும் என்பதை நம்மில் பலரும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

கட்டாயம் ஒன்றுமில்லை

கிருஷ்ண நாராயணன் எனும் ஆட்டிஸ நிலையாளர் நான்கு நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தனது ஒவ்வொரு செய்கைக்குப் பின் இருக்கும் காரணங்களை அவரது முதல் நூலான, Wasted Talent என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார். தத்துவம், உளவியல், அறிவியல் என அவரது வாசிப்பும் பரந்துபட்டு இருப்பதை நாம் அதில் அறியலாம்.

ஐஸ்வர்யா ஸ்ரீராம் 30 வயதைக் கடந்துவிட்ட ஆட்டிஸ நிலையாளர். ‘பஸில் க்யீன்’ என்று இவரை உலகுக்குத் தெரியும். பஸில் எனப்படும் புதிர் அட்டைகளை ஒன்று சேர்ப்பதில் அவரது திறமை அபாரம். பலரும் திணறும் 1,000 துண்டுகளுடைய பஸிலையும் அநாயாசமாகச் சேர்த்துவிடும் வல்லமை மிக்கவர்.

கடந்த வாரம் இவரது டைரிக் குறிப்புகள் நூலாக வெளியானது. அதில் தனது அன்றாட நிகழ்வுகளைச் சங்கேத மொழியில் எழுதுவதுபோலச் சுருக்கமாக எழுதி வைத்திருக்கிறார். பொதுவாகவே ஆட்டிஸ நிலையாளர்களுக்கு உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாது என்பார்கள். ஆனால், ஐஸ்வர்யாவின் டைரிக் குறிப்புகள் நூலைப் படித்தால் அந்த எண்ணம் உடைந்துபோகும். தனது துக்கம், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை அழகாக அவர் குறிப்பிடுகிறார்.

அரவிந்த். பேச இயலாத இளைஞர். ஆனால் அற்புதமான கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதுவார். அவரது கவிதைகளில் பெற்றோர் மீதான அன்பையும், உலகம் குறித்த தத்துவப் பார்வையையும் பார்க்கலாம்.

முகுந்த்துக்கு 15 வயதிருக்கும். 12-வது வயதிலேயே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு அசத்திய ஆட்டிஸ நிலையாளர். அதுபோல, தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு சுகேஷ்குட்டனையும், செந்தில்நாதனையும் நன்றாக நினைவிருக்கும். பல பாடல்களைப் பாடி இணையவெளியில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் ஆட்டிஸ நிலையாளர்கள்தான்.

திறமைகளைத் தன்னுள்ளே வைத்துக்கொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கும் ஆட்டிஸ நிலையாளர்களை இந்த உலகம் அணுகும்முறை பெரும்துயரம். இப்படிப் பல ஆட்டிஸ நிலையாளர்கள் அதீத திறமைசாலிகளாக இருப்பதென்னவோ நிஜம்தான். ஆனால், அதே நேரத்தில் அனைத்து ஆட்டிஸ நிலையாளர்களும் இப்படி ஏதேனும் ஒரு துறையில் வல்லுநர்களாக இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.”

அதிகரிக்கும் ஆட்டிஸம்

பொது இடங்களுக்கு வரும் ஆட்டிஸ நிலையாளர்களில் சிலருக்கு அந்த இடம் புதிதாக இருந்தால், ஒருவிதப் பதற்றம் ஏற்படும். இதன் காரணமாக, விநோதமாக ஓசை எழுப்புவது, கைகளைப் பலமாகத் தட்டுவது, குதிப்பது போன்று இவர்களின் நடத்தைகளில் சில மாறுதல்கள் ஏற்படலாம். கொஞ்ச நேரத்தில் அந்தப் புதிய இடம் பழகியதும் இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.

அமெரிக்காவில் பள்ளி செல்லும் 12 வயதுடைய ஈஸ்னா சுப்ரமணியன் என்ற சிறுமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆட்டிஸ நிலைக் குழந்தைகளுக்கு உதவும் ஒரு மொபைல் ஆப்ஸை சமீபத்தில் வடிவமைத்துள்ளார். சிறந்த கண்டுபிடிப்பு. இந்த ஆப்ஸை மேம்படுத்துவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. ஈஸ்னாவின் இளைய சகோதரி ஆட்டிஸ நிலையாளர்.

அமெரிக்காவில் வசிக்கும் 12 வயதுடைய குழந்தை களுக்கு ஆட்டிஸ நிலையாளர்களின் சங்கடங்களும், அவஸ்தைகளும் புரிகிறது. அவர்களுக்கு உதவுவதற்கு முனைகிறார்கள். நம்மூரில் பெரியவர்களுக்குக்கூட இந்தப் புரிதல் இங்கே இன்னும் வரவில்லை. வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

அமெரிக்காவில் இயங்கும் நோய்கள் கட்டுப்பாடு தடுப்பு மையம், உலக அளவில் 68 பேரில் ஒருவருக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருக்கலாம் என்கிறது. இதன்படி, இந்தியாவில் சுமார் 1.8 கோடிப் பேர் ஆட்டிஸம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இங்கே சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. இந்தக் கணக்கு தோராயமானதுதான். அதே சமயம் உலக அளவில் ஆட்டிஸக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்தியாவிலும், தமிழகத் திலும்கூட ஆட்டிஸக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பெற்றோர் சம்பாத்தியத்தில் 60%க்கும் அதிகமான அளவு ஆட்டிஸக் குழந்தைகளின் பயிற்சி வகுப்புகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இவர்களின் மருத்துவ / பயிற்சி செலவுகளைக் குறைக்க, ஆட்டிஸ நிலைக் குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சி வகுப்புகளை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்க வேண்டும். தினம் தினம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் இவர்களைப் பாராட்டாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. வசவுச் சொற்களின் மூலம் காயப்படுத்துவதிலிருந்து சமூகமும் உறவுகளும் வெளியே வர வேண்டும். இக்குழந்தைகளையும், இவர்தம் பெற்றோரையும் கனிவுடன் அணுக வேண்டியது சமூகத்தின் கடமை.

யெஸ்.பாலபாரதி – கட்டுரையாளர் ‘ஆட்டிசம் சில புரிதல்கள்’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்ந்து ஆட்டிஸம் விழிப்புணர்வுக்காகச் செயலாற்றி வருகிறார். > தொடர்புக்கு : yesbalabharathi@gmail.com 

யெஸ்  பாலபாரதி அவர்களது நூல் குறித்த பிரதிபலிப்புகள் 21 04 2013 அன்று தீக்கதிரில் வெளிவந்தது, உங்கள் வாசிப்புக்கு:
குறைபாடுகளை மீறி குழந்தைகளை  
நேசிக்கக் கற்றுத் தரும் நூல் 
எஸ் வி வேணுகோபாலன் 
ன்றாட வாழ்க்கையில்,  அறிந்தும் அறியாமலும் நமது சொற்களால், செய்கைகளால் யாரை அதிகம் காயப் படுத்துகிறோம் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் குழந்தைகளைத் தான் என்று தோன்றுகிறது. தாங்கள் இல்லாத இடத்தில் கூட, தாங்கள் பொறுப்பேற்க முடியாத விஷயத்திற்குக் கூட, எந்தக் காரணமும் இல்லாவிட்டாலும் கூட குழந்தைகள் நமது பேச்சில் ‘அடிபடுகின்றனர்’ (சிலேடை தற்செயலானது அல்ல). சோசலிச சோவியத் அமைப்பின் மேலான அம்சங்களைப் பட்டியலிடுவோர், குழந்தைகளையும் முதியவர்களையும் மிகவும் மதித்த சமூகம் அது என்று சொல்லக் கேட்டதுண்டு. உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நமது சமூகம் குழந்தைகளை எப்படி நடத்துகிறது என்பது உள்ளபடியே நீண்ட விவாதத்திற்குரிய பொருள்.
சாதாரணமாக உள்ள குழந்தைகளின் நிலைமை இது என்கிற போது, ‘சிறப்புக்’ குழந்தைகளை எப்படி அணுகுகிறோம் என்பது பெரும்பாலும் இன்னும் வெட்கப்படவேண்டிய விஷயமாகத் தான் இருக்கும். தங்கத்திலே ஓர் குறை இருந்தாலும் என்ற பாகப் பிரிவினை படத்தின் பாடலில் கண்ணதாசன், உடல் குறையைப் பெரிதாகப் பொருட்படுத்தாது அன்பினால் அரவணைக்க வேண்டும் என்று எழுதியிருப்பார் ஆனாலும், அன்றாடப் பேச்சுக்களில் உடல் ரீதியான குறைபாடுகள் குறித்த மோசமான எத்தனை வசவுகளை உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம்! சம்பந்தப் பட்ட மனிதர்களை அது எத்தனை பாதிக்கும் என்று கூட நாம் சிந்திப்பதில்லை.
உடல் ரீதியான குறைபாடுகளை விடவும், வேறு பல குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகளை நினைத்துப் பார்ப்போம். அவற்றின் பெற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை கொஞ்சம் சிந்திப்போம். அந்தக் குழந்தைகளுக்கும் இந்தப் பூவுலகில் ஓர் இடம் உண்டு தானே….
அந்த வகையில், ஆட்டிசம் என்ற குறைபாடு குறித்த ஓர் அருமையான புத்தகம்,   எழுத்தாளர்   யெஸ் பாலபாரதி எழுத்தில் பாரதி  புத்தகாலய வெளியீடாக சிறப்பான முறையில்   வந்திருப்பது   அண்மைக் கால நூல் வெளியீடுகளில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.  இந்தியாவில் ஆட்டிச பாதிப்புற்றவர்கள் எண்ணிக்கை இருபது லட்சம் என்று சொல்லப்பட்டு வந்ததாகவும் அண்மையில் இந்த எண்ணிக்கை 88க்கு 1 குழந்தை என்ற அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும் நூலாசிரியர் முன்னுரையிலேயே சொல்கிறார்.
அது சரி, ஆட்டிசம் என்றால் என்ன? ஒதுங்கி இருப்பது, கலந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டாதிருப்பது, காரணமற்ற சிரிப்பு, அதீதமான பதட்டம், வழியை உணராதிருப்பது…..என பலவகைகளில் வெளிப்படும் இந்தப் பிரச்னையை, தமிழில் தன் முனைப்புக் குறைபாடு என்று சொல்வது கிட்டத்தட்ட சரியான புரிதலைத் தரும் என்று சொல்கிறார் பாலபாரதி.
தங்களது குழந்தைக்கு இப்படியான ஒரு குறைபாடு இருப்பதை அறிந்த பிறகு, இது பற்றிய விவரங்களை மிகுந்த அக்கறை எடுத்து திரட்டி இருக்கிறார் அவர். மருத்துவ உலகமே இது பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை என்பது அதிர்ச்சியானது. இணையதளங்களிலிருந்தும், நூல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலமும் கற்றுக் கொண்டதைத்  தமது சொந்த மொழியில் எளிமையாக சமூகத்தின் வாசிப்புக்குப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.
ஆட்டிசம் பற்றிய செய்திகளை அறிமுகப் படுத்தும் முதல் கட்டுரையைத் தொடர்ந்து, அது குறித்து பொது புத்தியில் படிந்திருக்கும் கருத்துக்களில் சரி – தவறு என்னென்ன, பாதிப்பின் தன்மைகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள், பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள் என படிப்படியாக தேவையான விஷயங்களை அறிவியல் பார்வையோடு தொகுத்திருக்கிறார் அவர்.
ஐந்து வயதான பிறகு தான் அறியவே முடியும் என்றாலும் ஒரு சில அறிகுறிகளைக் கவனித்தால் விரைந்து சிகிச்சை தொடங்கி ஓரளவுக்கு பாதிப்புகளைக் குறைக்கமுடியும் என்கிறார் பாலபாரதி. குழந்தைகளை ஒப்பிடக் கூடாது, தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்த வேண்டும், அவர்களது சிக்கல்களை நொந்து கொள்ளாமல் கரிசனத்தோடு உதவி புரிய வேண்டும்….என அவர் சொல்வது, சாதாரண நிலையிலுள்ள குழந்தைகளை வளர்ப்போர்க்கும் பொருந்தும்.
கடைசி பகுதியில் ஆட்டிசம் பிரச்னையை மீறி சாதனை படைத்த  மனிதர்கள் குறித்த பிரமிப்பான பட்டியல் இருக்கிறது. புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் முதற்கொண்டு, நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட, சம காலத்தில் ஓர் எழுத்தாளராக வளர்ந்திருக்கும் கிருஷ்ணா நாராயணன் வரை ஆட்டிச பாதிப்போடே வரலாறு படைத்திருப்போர் என்பது உற்சாகம் அளிக்கும் பதிவாகும்.
இத்தகு குழந்தைகளை சாதாரண பள்ளிகளிலேயே அனுமதித்தால்தான் ஆரோக்கியமான முறையில் மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற நூலாசிரியரின் கருத்து உண்மையில் நியாயமான ஒன்றாகும்.
தங்களது குழந்தையின் தன்மையை உளமார ஏற்றுக் கொண்டு மேற்கொண்டு தேவையான முறையில் நடந்து கொள்வதற்கு பெற்றோர் தயாராக வேண்டும், சமூகம் இப்படியான குழந்தைகளை இயற்கையின் கொடையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மிக மிக அடிப்படையான விஷயமாகும்.
தமிழில் இப்படியான முதல் முயற்சி இது தான் என்று சொல்லத் தக்க இந்தப் புத்தகம், ஆட்டிச பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோரை மிக நெருக்கமாக அமர வைத்துக் கொண்டு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பல விஷயங்களைப் பேசுகிறது.
நூலை வாசிக்கும் யாரும், ஆட்டிசம் குறித்த புரிதலுக்கும் அப்பால், பொதுவாக குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் அணுகவேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும். ஆக்கபூர்வமான விதத்தில் தாங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் பங்களிப்பு செய்ய முடியும் என்ற உணர்வையும் பெற முடியும். குழந்தைகளை நேசிக்கும் எந்த சமூகமும் முன்னோக்கி நடை போட்டுக் கொண்டே இருக்கும்
*******************
ஆட்டிசம் – சில புரிதல்கள் 
யெஸ் பாலபாரதி 
பாரதி புத்தகாலயம். சென்னை 18
80 பக்கங்கள் விலை ரூ 50

News

Read Previous

துளசி

Read Next

கண்மாய்க்குள் முதியவர் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *