அழிந்துவரும் உயிரினங்கள்

Vinkmag ad
அறிவியல் கதிர்

அழிந்துவரும் உயிரினங்கள்
பேராசிரியர் கே. ராஜு

பூமியில் ஒரு காலத்தில் உயிரோடு இருந்து பின்னர் அழிந்துபோன உயிரினங்களின் நினைவாக ஒரு உலக நினைவுச் சின்னம் இங்கிலாந்து தென்கடற்கரை மீது உள்ள போர்ட்லாந்து தீவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர்  மெமோ ஆய்வுமையம் (MEMO – Mass Extinction Memorial Observatory). பல்லுயிர் இனங்கள் அழிந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  இயற்கை வரலாறு, கட்டடக்கலை மற்றும் கலைவடிவங்களை இணைத்து உருவாக்கப்படும் அழகானதொரு நினைவுச்சின்னமாக அது இருக்கும். இதற்கு முன்னர் அழிந்துவிட்ட 860 இனங்களின்   கற்சித்திரங்கள் அக்கட்டடத்தின் சுவர்களில் இடம் பெறும்.
புவியியல் அளவில்  கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில் தாவரங்களும் விலங்குகளும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஆறாவது பேரழிவின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எரிமலை வெடிப்புகள், சிறுகோள்கள் மோதல் மற்றும் பல இயற்கைப் பேரிடர்களின் விளைவாக கடந்த காலங்களில் பல்லுயிர் அழிவு நேர்ந்தது. ஆனால் தற்போதைய அழிவு வாழ்விடங்களை இழந்தது, வேகமான பருவநிலை மாற்றங்கள் போன்ற முற்றிலும் மனிதர்களால் ஏற்பட்ட அழிவு பற்றியது. இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சங்கம் (IUCN- International Union for Conservation of Nature) தரும் தகவலின்படி, பூமியில் தற்போதுள்ள 76,199 இனங்களில் 22,413 இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. தற்போது இனங்கள் அழிந்துவரும் வேகம் மிகமிக கவலைக்குரியது என்பதை ஐயுசிஎன் தரும் புள்ளி விவரத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக இயற்கையில் இனங்கள் அழிந்துவரும் வேகத்தைப் போல இது ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் மடங்கு அதிகம்.
1666ஆம் ஆண்டில் நடந்த பெருநெருப்பின் கோரதாண்டவத்திற்குப் பிறகு அழிந்துபோன லண்டனின் கட்டடங்களை மறுநிர்மாணம் செய்யும்போது போர்ட்லாந்து கற்குவாரிகளில் கிடைத்த அம்மோனைட் புதைபடிவங்களை ஆய்வு செய்த ராபர்ட் ஹூக் உயிரினங்கள் அழிவு நடந்திருப்பது பற்றி முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார். மெமோ நினைவுச்சின்னம் பிரிட்டிஷ் கட்டடவியலாளர் டேவிட் அட்ஜயே என்பவரால் வடிவமைப்பட்டு வருகிறது. கல்வித் திட்டங்கள், உயிரினப் பாதுகாப்பு முயற்சிகள், கண்காட்சிகள், மாநாடுகள் மூலம் உயிரினங்களை அழிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய மையமாக அந்த நினைவுச் சின்னம் அமைய இருக்கிறது.  ஓராண்டில் 300,000 பார்வையாளர்களை அது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பள்ளிகளும் உயிரினப் பாதுகாப்பு அமைப்புகளும் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும். உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்ற மாபெரும் வரலாறு எடுத்துரைக்கப்படும். உயிரினப் பன்மையை இழக்கமாலிருக்கத் தேவையான தீர்வுகள் முன்வைக்கப்படும். காட்சி வடிவங்கள் மூலம் வலியுறுத்தப்படும்.
அழிந்து போன உயிரினங்கள் பற்றியும் அவை ஏன் அழிய நேரிட்டது என்பது குறித்தும் தகவல்கள் பெற மெமோ நினைவுச் சின்னம் உதவும். உதாரணமாக, டோடோ (Dodo) என்ற ஒரு பறவை மௌரீஷியஸ் தீவுக்கே உரியது. பெயர்தான் பறவையே தவிர, அதனால் பறக்க இயலாது. மாலுமிகள் அதை இறைச்சிக்காக மிக அதிக அளவில் கொன்று தீர்த்ததால் ஒரு கட்டத்தில் அந்த இனமே அழிந்து போனது. பாசஞ்சர் புறா (Passenger pigeon)  இனமும் மிக அதிக அளவில் வேட்டையாடப்பட்டதால் அழிந்து போயிற்று. தங்கத் தவளை (golden frog) பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்து போனது. இப்படி அழிந்துபோன பல்வேறு இனங்களைப் பற்றிய புவியியல் பெட்டகமாக மெமோ நினைவுச் சின்னம் விளங்கப் போகிறது. அங்கேயுள்ள கல்வித் திட்டங்கள் கற்சித்திரங்கள், பல்வேறு கலைவடிவங்கள் அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்லும் பணியைச் செய்ய உள்ளன. எதிர்காலத்தில் உயிரினங்கள் அழியும்போதெல்லாம் உரத்து ஒலிக்கும் மெமோ கோவில் மணி  நினைவுச்சின்னத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சமாக இருக்கும். ஓர் உயிரினம் அழிவதை இனி படித்துத் தெரிந்துகொள்வதற்குப் பதில் அதைக் காதால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 3 மீட்டருக்கு மேல்  விட்டம் உள்ள அந்தக் கோவில் மணியின் எடை 9 டன்கள்.
இத்திட்டம் 2019-2020 ஆம் ஆண்டில் இறுதி வடிவத்திற்கு வர இருக்கிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகளும் பல்வேறு பொறுப்புகள் வகிக்கும் எடின்பர்க் பிரபு, பேராசிரியர் ஈ.ஓ.வில்சன், சர் டேவிட் அட்டென்பரோ போன்ற பிரபலங்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தர உள்ளனர்.
அனைத்து உயிரினங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த மாபெரும் முயற்சி வெற்றி பெறட்டும் என வாழ்த்துவோம்.
                       (உதவிய கட்டுரை : 2017 ஏப்ரல் மாத ட்ரீம் 2017 இதழில் மொகமது சாஜித் இட்ரிசி எழுதியது).

News

Read Previous

பெண்களைப் போற்றுவோம் !!!

Read Next

சிந்திக்கும் விலங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *