அலெக்சாண்டர் புஷ்கின்

Vinkmag ad

அலெக்சாண்டர் புஷ்கின் ருஷ்ய இலக்கிய,அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத படைப்பாளி. ஆம், அவர் சரியாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெறும் 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த,கவிஞர், நாவலாசிரியர், நாடக  ஆசிரியர் ஆவார். ஒத்துமான் பேரரசின் கிரேக்க ஆதிக்கத்தை வீழ்த்திய  காலத்தில் தன்னார்வமாய் களமாடியவர், பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த போதும் தனது எழுத்து, செயல்பாடுகளால் ஜார் அரச குடும்பத்திற்கு உறுத்தலாகவே இருந்தவர்.

சரியாக இங்கே மருது  சகோதரர்கள் போரிட்டு தோற்ற பின்பு வெள்ளையர் ஆட்சி நிலைபெற்ற போது, அங்கே  அவர்  வளர் பருவக் குழந்தை. தனது பதினைந்தாம் வயதில் முதற்  கவிதை எழுதி ருஷ்ய இலக்கிய உலகை திரும்பிப்  பார்க்கச்  செய்தவர்.

பேச்சுத் திறன், அடக்குமுறைக்கு எதிரான எழுத்து, காதலைச்  சொல்வது போல் புரட்சியை வித்திடும் உக்தி, சொல்ல  வருவதை மனதில் பதித்து அரசாங்கக்  கெடுபிடிகளை பனிமூட்டமாய் புகை  போடும் மாய மந்திர எழுத்து. இதுவே புஷ்கின் அவர்களின் வெற்றிக்கும், அவர்  தனது முதன்மை நோக்கம்  மறைத்து, ஆனால் அந்த முதன்மை  நோக்கம் எளிய மக்களிடம்  செல்ல பயன்படுத்திய சித்து வேலை.  அதுதான் பின்  நாளைய புரட்சிகளின் முதல் வித்தாக இருந்ததை யாரும் மறுக்க முடியாத, சமூகப்  பங்களிப்பாக விட்டுச்  சென்றார். ருஷ்ய இலக்கியத்தின் உச்ச  நிலைக்கு இவரே  முதல்படி.

அடிக்கல்  இருப்பது  தெரியாமல் இருந்தாலும், அந்தக்  கட்டுமானமே கோபுரத்தின் தாங்கு தளமாய் இருப்பது  போல இவரது படைப்புத் திறன் அடியுரமாய் வேலை செய்தது. காப்டன் மகள் என்ற படைப்பில் தலைவனையும் தலைவியையும் முன்னிலைப்  படுத்தி, அவர்கள் தேடப்படும் குற்றவாளியான, வில்லனையே முடிவில் கதையின்  நாயகனாக ஒளிரச் செய்யும் வித்தை புஷ்கினுக்கு மட்டுமே உண்டு.

நாடோடிகள் என்ற கவிதையில்,கட்டற்று, இயற்கையுடன் கால் போன போக்கில் வாழும் நாடோடிகளின் ஊடாக, ஒரு உடைமைவாதியின் காதலையும் புகுத்தி, அந்த உடமைவாதியின் காதலில் இருக்கும் உடைமை எண்ணத்தையும், வெறும் உடைமைப் பொருளாக மட்டுமே நினைத்து காதலிக்கும் பேதமைத் தனத்தை, ஒரு நாடோடியின் வாயிலாக சராசரி மனிதர்களின் கொள்முதல் வாழ்க்கையினை, எள்ளி  நகையாடுவதும், பார்வையாளர்களின் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும். 

அவர் காதல் என்று தொட்ட தலைப்புகளில் புரட்சியும், கவிதையாக கதை சொல்லும் போதுசமூக விமர்சனமும் கலந்து, ஒரு படைப்பாளி தான் சார்ந்த இனத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனைச் சரிவர செய்துவிடுவார். முப்பத்து ஏழு வயதில் ஒரு பன்முகப்பட்ட சிந்தனைகளுடன், ஆளுமை கொண்ட எழுத்தாற்றலுடன் காலத்தின் தேவையறிந்து, காலத்தின் தேவைகேற்ற வகையில் தனது படைப்பினையும் வெளிப்படுத்திய, முன்னோடியான எழுத்தாளர்.

தமிழ் இனமும், தமிழர்களும் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய உக்திகள் பல.

News

Read Previous

உயர் ரத்த அழுத்த நோயாளிகளே…

Read Next

இஸ்லாமிய இல்லறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *