அறிவியல் கதிர் : அழிந்துபோன உயிரினத்தை மீட்க முடியுமா?

Vinkmag ad

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. இன்றும் பொருத்தமாகவே உள்ளது

——————————————————————————————————————————————

அறிவியல் கதிர்  அழிந்துபோன உயிரினத்தை மீட்க முடியுமா?

2016 -ம் ஆண்டு வெளிவந்த வால்ட் டிஸ்னியின் ஜங்கிள் புக் படத்தில் மறக்க முடியாத ஒரு காட்சி. கிங் லூயி என்ற ஜைஜாண்டோபிதிகஸ் (ராட்சஸ மனிதக் குரங்கு) மோக்லி என்ற குழந்தை கதாபாத்திரத்தைப் பிடிக்க கையை நீட்டும். ஆனால் மோக்லி அதனிடம் பிடிபடாமல் தப்பித்து ஓடிவிடுவான். ஆனால் மொத்தக் கட்டடமும் மனிதக் குரங்கின் மீது விழும். ஜைஜாண்டோபிதிகஸ் ஒரு காலத்தில் இந்தியா உட்பட உள்ள ஆசிய நிலப்பரப்பில் சுற்றித் திரிந்த ஒரு இனம். அதனுடைய மிகப் பெரிய உருவத்திற்குப் போதுமான உணவு கிடைக்காததால் ஒரு கட்டத்தில் அழிந்தே போனது.  அதனுடன் நெருக்கமான மற்றொரு இனம் இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் ஒராங் ஊத்தன் என்ற மனிதக் குரங்கு (நாம் ஒராங் உட்டான் என்று தவறாக உச்சரிக்கிறோமாம்) என்பதைத் தவிர அதைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை.

விஞ்ஞானிகளிடையே ஒரு கற்பனை எழுந்தது. ஜைஜாண்டோபிதிகஸ் இனத்தை அறிவியல் உதவியுடன் இன்று மீண்டும் உயிர்ப்பித்துக் கொணர முடியுமா? இந்தக் கற்பனை அறிவியல் புனைவுக் கதையில் வரும் நிகழ்வு போலத் தோன்றலாம். ஆனால் அழிந்து போன விலங்குகளை மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் முயற்சிகள் இன்று நடந்துகொண்டிருக்கின்றன. அழிந்துபோன இனத்தின் பாதிக்கப்படாத உயிரணுக்களைக் கொண்டு அழிந்துபோன இனமான பைரேனியன் இபெக்ஸ் என்ற ஸ்பானிய மலை ஆடு இனத்தை மீண்டும் உருவாக்கும் ஆய்வுகள் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டன. 2003-ம் ஆண்டில் விஞ்ஞானிகளுக்கு வெற்றி கிடைத்தது. இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் வெள்ளாடுகளின் கருப்பைகளில் பைரேனியன் இபெக்ஸ் உயிரிநகல் கருக்களை (குளோனிங் என்ற செயற்கை முறையில்   தயாரிக்கப்பட்டவை) செலுத்தி இந்த பரிசோதனை செய்யப்பட்டது. செலுத்தப்பட்ட ஏராளமான கருக்களில் ஒரே ஒரு கரு மட்டும் கருத்தரித்த காலம் முழுமைக்கும் வளர்ந்து வந்தது. பிறக்கவும் செய்தது. ஆனால் உடனே மரித்துப் போனது. ஆனால் அழிந்துபோன விலங்கினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற பரவசமான அனுபவத்தை இந்த பரிசோதனை நமக்குக் கொடுத்திருக்கிறது.

அழிந்துபோன விலங்கினத்தின் பாதிக்கப்படாத உயிரணுக்கள் கிடைக்காதபோது அதை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய இரு வழிகள் உள்ளன. முதலாவது வழியில், அழிந்துபோன இனத்தின் மரபணுவில் உள்ள இடைவெளிகளை அதனுடன் நெருக்கமான இன்றும் உயிரோடிருக்கும் இனத்தின் மரபணுக்களைக் கொண்டு நிரப்பி அழிந்துபோன இனத்தின் மரபணுவோடு பெருமளவுக்கு ஒத்திருக்கும் ஒரு மாதிரியைத் தயாரிப்பது. இரண்டாவது வழியில், இன்றும் உயிரோடிருக்கும் நெருக்கமான உயிரினத்தின் மரபணுவின் சில பகுதிகளையும் அழிந்துபோன இனத்தின் மரபணுவின் பகுதிகளையும் பரிமாறிக்கொண்டு அழிந்துபோன இனத்தின் மாதிரியைத் தயாரிப்பது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அழிந்துபோன அந்த மகத்தான உயிரினங்களை அறிவியல் மீண்டும் உயிர்த்தெழச் செய்வதாகவே வைத்துக் கொள்வோம். சட்டரீதியாகவும், சமூக-மானுட நெறிமுறைகளின்படியும் விடையளிக்கப்படாத பல கேள்விகள் இருக்கின்றன. அவற்றில் தலையாயது: அழிந்துபோன இனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய தேவைதான் என்ன? அப்படி உயிர்ப்பிக்கப்பட்ட இனங்கள் உயிர்வாழ்வதற்குச் சாதகமான சுற்றுச்சூழலை நம்மால் உருவாக்க முடியுமா? அல்லது உயிர்த்தெழச் செய்தபிறகு, அவற்றைச் சிறைபிடித்து நம் கண்காணிப்பில் வளர்க்க வேண்டுமா?

நமக்கு நெருக்கமான நியாண்டர்தால்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டோம் என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். மேற்கண்ட சவால்களில் இல்லாத மிகப் பெரிய சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களை மிருகக் காட்சிசாலைகளில் அடைத்துவைப்பதா அல்லது நம்முடன் சகஜமாகப் பழக அனுமதிப்பதா? கடந்த காலத்தில் நியாண்டர்தால்கள் நவீன மனித இனத்துடன் கலந்து உறவாடி இனப்பெருக்கம் செய்ததற்கு சான்று இருக்கிறது. அப்படியெனில், நியாண்டர்தால்களை இன்றுள்ள மனிதர்களுடன் உறவாடி இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப் போகிறோமா? இவையெல்லாம் சாதாரண கேள்விகள் அல்ல. நமது எதிர்கால சந்ததியையே தீர்மானிக்கக்கூடிய கேள்விகள்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் சர்ச் தன்னுடைய ரீஜெனிசஸ் என்ற புத்தகத்தில் குளோனிங் செய்து உருவாக்கப்படும் நியாண்டர்தால்கள் ஆபத்தான தொற்றுநோய்களை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க நமக்குக் கற்றுத் தரலாம்.. மனித அறிவின் புதிய வடிவத்தையோ வித்தியாசமான சிந்தனைகளையோ நமக்கு அறிமுகப்படுத்தலாம் என்றெல்லாம் சில சுவாரசியமான கற்பனைகளில் நம்மை உலவவிடுகிறார்.

ஆனால் கடந்த காலத்தில் இறந்துபோன உயிரினங்களைப் புதுப்பிப்பது உடனே சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. அதுவரை, நமது கற்பனைக்குத் தீனி போடும் ஹாலிவுட் புனைவு நட்சத்திரங்களைத் திரையில் பார்த்து பொழுதைப் போக்குவோம்.

(உதவிய கட்டுரை : 2017 டிசம்பர் 31 ஆங்கில இந்து நாளிதழின் BEING பக்கத்தில் பினே பாண்டா எழுதிய கட்டுரை)

News

Read Previous

தோல்வி

Read Next

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்?

Leave a Reply

Your email address will not be published.