அருப்புக் கோட்டை

Vinkmag ad
அருப்புக் கோட்டை – பெயர்க்காரணம்
அருப்புக் கோட்டை – ஊரும் பேரும்

தமிழகத்தில் “கோட்டை” என்ற பெயரில் ஊர்கள் பல உள்ளன.
அருப்புக்கோட்டை என்ற பெயர் எதனால் உண்டானது?
அல்லது,  அருப்புக்கோட்டை என்றால் என்ன பொருள்?

சங்கப்பாடல்களில் அருப்பு —
“வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்” (அகநானூறு 342)
என்று மதுரைக் கணக்காயனார் பாடியுள்ளர்.
பாண்டியரின் நல்ல நாட்டில் உள்ள மண்ணினால் ஆன புற்றுடைய காட்டில் அருப்பு (அரண்) உள்ளது என்பது இந்தப் பாடல்வரியின் பொருள்.  அருப்பு என்றால் அரண் என்று பொருள்.   அருப்பு, அருப்பம் என்ற சொற்கள் 14 சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

திருக்குறளில் அரண் —
திருக்குறளில் அரண் என்று ஓர் அதிகாரமே உள்ளது.
இயற்கை அரண், செயற்கை அரண் என இரண்டுவகையான அரண்களையும் திருவள்ளுவர் அடுத்தடுத்த குறட்பாக்களில் குறிப்பிட்டுள்ளார்.
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”   (௭௱௪௰௨ – 742)
ஒரு நாட்டின் எல்லைகளாக இயற்கையாகவே நீரும் மண்ணும் மலையும் காடும் என்ற நான்கையும் கொண்டது இயற்கையான அரண் ஆகும்.
“உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவது அரண் என்றுரைக்கும் நூல்”  (௭௱௪௰௩ – 743)
‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அரியது என்ற நான்கு சிறப்புகளையும் கொண்டது செயற்கையான அரண் ஆகும்.

அருப்புக் கோட்டை –    அருப்புக்கோட்டை என்ற பெயர்ச் சொல்லானது, அருப்பு + கோட்டை என்ற இரண்டு சொற்களால் ஆனது.

அருப்பு –    அருப்பு என்றால் (பாதுகாப்பு) அரண் என்று  பொருள்.
‘இயற்கை அரண்’ ‘செயற்கை அரண்’ என்ற இருவகையான அரண்களைத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.  திருவள்ளுவர் குறிப்பிடும் செயற்கையான அரண் என்பது கோட்டை ஆகும்.

கோட்டை –   என்றால் உயரமாகவும் அகலமாகவும் திண்மையாகவும் பாதுகாப்பு மிகுந்த அரண் என்று பொருள்.  கரையான்கள் மண்ணினால் புற்று எழுப்பி அதனுள் பாதுகாப்பாக வாழ்வது போன்று, வெளியுலகத் தொடர்பு ஏதும் இல்லாமலேயே மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்காகக் கட்டியது கோட்டை ஆகும்.
அருப்புக்கோட்டை என்றால் கோட்டையை அரணாகக் கொண்ட ஊர் என்று பொருளாகிறது.  கோட்டையால் பாதுகாப்பு உடைய ஊர் என்று பொருளாகிறது.
எனவே அருப்புக்கோட்டை என்ற இந்த ஊரைச் சுற்றிலும்,  சங்ககாலத்தில் ஓர் கோட்டை இருந்திருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.  மேலும் அகநானூற்றுப் பாடலில் (அகம் 342) “தெற்கேயுள்ள கோட்டை” என்ற குறிப்பும் உள்ளது. அருப்புக்கோட்டையானது மதுரைக்குத் தெற்கே உள்ளது.  இக்  காரணத்தினால் இந்த அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பெற்றுள்ளது  கோட்டையானது இன்றைய அருப்புக்கோட்டையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

மண்மேவிய கோட்டை –    கீழடியருகே மிகப்பெரிய நகரநாகரிகமே அழிந்து மண்மேவியுள்ளது.  அதுபோன்று பாண்டியனின் கோட்டை இருந்த இந்த அருப்புக்கோட்டையும் மண்மேவிப் புதைந்துவிட்டது.  ஆனாலும் கோட்டை இருந்த காரணத்தினால் இந்த ஊருக்கு அருப்புக்கோட்டை என்ற காரணப் பெயர் மட்டும் நிலைபெற்று இன்றும் வழக்கில் உள்ளது.   சங்ககாலத்தில் கோட்டை இருந்து அழிந்து மண்மேவிய இடத்தில் இந்நாளில் அருப்புக்கோட்டை என்ற ஊர் உள்ளது என்று கருத வேண்டியுள்ளது.
அருப்புக்கோட்டை கூகுள் புவிப்படம் –   அருப்புக்கோட்டைப் பகுதியை  இளம்பச்சை நிறத்தில் கூகுள்புவிப்படத்தில் குறித்து வைத்துள்ளனர்.   இந்த இளம்பச்சை நிறப் பகுதியானது அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு சுமார் 9 கி.மீ. விட்டமும், சுமார் 31 கி.மீ. சுற்றளவும், 65 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டுள்ளது.   அருப்புக்கோட்டையைக் காட்டிடும் இந்தக் கூகுள் புவிப்படமானது அங்கே ஓர் வட்டவடிமான கோட்டை இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு ஓர் சான்றாகவும் உள்ளது.
அருப்புக்கோட்டையும் கீழடி போன்று மிகப்பெரியதொரு வட்டவடிமான ஓர் சங்ககாலத் தொல்லியல் நகரமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.  இலக்கிய அடிப்படையிலான இந்தக் கருத்து உண்மையா? எனத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிய வேண்டும்.

தொல்லியலாளர் போற்றுவோம்.
அருப்புக் கோட்டையின் தொன்மை போற்றுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்.
(அருப்பு அருப்பம் என்ற சொற்கள் அடங்கிய பாடல் வரிகள் இணைப்பில் உள்ளன)
https://kalairajan26.blogspot.com/2020/07/blog-post_14.html
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
—————————–

 

On Sun, 12 Jul 2020 at 00:07, தேமொழி <jsthemozhi@gmail.com> wrote:

On Saturday, July 11, 2020 at 12:28:22 AM UTC-7, கி. காளைராசன் wrote:

aruppukottai Sengattu Aravakottai.png
அருப்புக்கோட்டை ஓர் தொல்லியல்மேடா?
அருப்புக்கோட்டையின் பழையபெயர் “செங்காட்டு இருக்கை இடத்துவழி” என்றும்,
விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் ‘அரவகோட்டை’ என அழைக்கப்பட்டது என்றும்,
பின்னர் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது என்றும் சொல்கின்றனர்(1 சான்று இணைக்கப்பட்டுள்ளது).
அருப்பம் என்றால் அரண் (கோட்டை), மலைமேல் துருக்கம், காட்டுத் துருக்கம், வழுக்குநிலம் என்று பொருளாகும்(2 சான்று இணைக்கப்பட்டுள்ளது).

அருப்பு, அருப்பம் என்ற சொற்கள் 14 சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  அந்தப் பாடல் வரிகள் இத்துடன் இணைக்கப்பெற்றுள்ளன.
அருப்பு என்றால் கோட்டை என்ற சங்கப்பாடல்களில் பொருள் உள்ள காரணத்தினால், சங்ககாலத்தில் இந்த ஊரைச் சுற்றிலும் ஓர் கோட்டை இருந்திருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.

புதுக்கோட்டை
மலைக்கோட்டை
என்று பெயர் வைத்தால் காரணம் புரிகிறது
அருப்பு + கோட்டை
கோட்டை கோட்டை
என்று வருமாறு பெயர் சூட்டும் அளவிற்கு எந்த அளவு வாய்ப்பு உள்ளது
பழைய கோட்டை ஒன்றின் தடயங்கள் கிடைக்கக் கூடும் என்ற அறிகுறிகள் சான்றுகளுடன் தெரிந்தால் தோண்டிவிட வேண்டியதுதான்.
கோட்டை என்பது நாம் நினைப்பது போல பலம் வாய்ந்த கற்சுவர்கள் எழுப்பிய இடம் என இருக்க வேண்டிய தேவையில்லை.

படைகள் தற்காலிக அரணாக எழுப்பிய இடங்களாகவும் இருக்க வாய்ப்புண்டு என்று படித்த நினைவு.

kottai.jpg

தஞ்சை புதுக்கோட்டை பகுதிகளில் அருகருகே கோட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
கோட்டை இருந்த காரணத்தினால் இந்த ஊருக்கு அருப்புக்கோட்டை என்ற காரணப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

மேலும், அருப்புக்கோட்டைப் பகுதியை  இளம்பச்சை நிறத்தில் கூகுள்புவிப்படத்தில் குறித்து வைத்துள்ளனர்.
இந்த இளம்பச்சை நிறப் பகுதியானது சுமார் 9 கி.மீ. விட்டமும், சுமார் 31 கி.மீ. சுற்றளவும், 65 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டுள்ளது.
இந்தப் பகுதியானது மண்வளம் நிறைந்த ஒரு மேடான பகுதி என்று பொருளாகுமா?
ஆம் என்றால் அருப்புக்கோட்டை என்பது கோட்டையுடன் கூடிய ஓர் சங்ககால நகரமாக இருந்திருக்குமோ?
அருப்புக்கோட்டையும் கீழடி போன்று மிகப்பெரியதொரு தொல்லியல் நகரமாக இருக்குமோ?

அறிந்தோர் அன்புடன் விளக்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
https://kalairajan26.blogspot.com/2020/07/blog-post_10.html
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

News

Read Previous

அகரமுதலித் திட்ட இயக்ககம்

Read Next

தன்னம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *